அரசியலில் திடீர் ஞானம். இது மீனவர் நலன் சார்ந்ததல்ல. மீனவர்களை ஏமாற்ற முனையும், சந்தர்ப்பவாத திருப்பம். எந்த சுயவிமர்சனமும் அல்லாத அரசியல் மோசடி.

இதை செய்வது வேறுயாருமல்ல, இதையே தொழிலாக செய்யும் இனியொரு புதியதிசையைச் சேர்ந்த நாவலன் தான். திடீரென ஒடுக்கப்பட்ட மீனவர் பக்கம் தான் நிற்பதாக, பச்சைக் கொடி காட்டுகின்றார். அறிவு மற்றவனை ஏமாற்றவும், ஏமாளியாக்கவும் தான் என்று நினைக்கின்ற அரசியல் போக்கிரித்தனம்.

 

1. மீனவர் படுகொலையைக் காட்டி, இலங்கை மீனவர்கள் மீன்பிடித்து வாழும் உரிமையை பறிக்க பச்சைக்கொடி காட்டியவர்கள், கடல்வளத்தை சூறையாடுவதை பொய் என்றவர்கள், இன்று தாம் அதை சொல்லாதவர்கள் போன்று பாவனை செய்து ஆய்வு செய்கின்றனர்.

2. நேற்றுவரை அத்துமீறிய மீன்பிடியை வழிதவறிச் சென்ற மீனவர்களாகக் காட்டி சித்தரித்தவர்கள், இன்று அதைச் சுற்றி வளைத்து பம்மி மறுக்கின்றனர்.

3. நேற்று வரை மீன்வளத்தை அழிக்காத தமிழக மீன்பிடியாக (மூலதனத்தின் பின்) காட்டியவர்கள், இன்று மீன்வளம் அழிவது பற்றி பேசுகின்றனர்.

 

4. நேற்றுவரை இலங்கை இந்திய மீனவர்களிடையே எந்த முரண்;பாடும் கிடையாது என்றவர்கள், இன்று ஏதோதோ சொல்லிப் புலம்புகின்றனர்.

5. நேற்றுவரை ஈழத் தமிழினவாத குறுகிய அரசியல் தடத்தில் நின்று கூச்சல் எழுப்பிவர்கள், இன்று பரந்த தடத்தில் நிற்பதாக பாவனை செய்கின்றனர்.

இப்படி எத்தனை எத்தனை. கேபியை மட்டும் எதிரியாகக் காட்டி, கேபி அல்லாத புலிகளுடன் கூத்தாடும் அரசியல் கூத்துக்கள்தான் எத்தனை.

நேற்றைய நிலைக்கு மாறாக இன்று முற்றாக தலைகீழாக முன்வைக்கும் தில்லுமுல்லு அரசியல். நேற்றைய நிலையை சுயவிமர்சனமாக செய்யவில்லை. இதுதான் சந்தர்ப்பவாதத்தின் உச்சம்.

மீனவர் விடையத்தில் கூட, ஒரு சரியான அரசியல் நிலைக்காக மீண்டும் நாங்கள் மட்டும் போராட வேண்டியிருந்தது. இதுதான் அன்றைய நிலைமட்டுமல்ல, இன்றைய நிலையும் கூட. திடீரென மார்க்சியம் பேசுகின்ற கூட்டத்தால், திடீரென புரட்சி செய்வதாக பாசாங்கு செய்யும் கூட்டத்தால், என்றும் மக்களைச் சார்ந்து நின்று போராட முடியாது.

வாழ்வுக்காக மீன்பிடித்த இந்திய மீனவர் சமூகத்தை, மூலதனத்தை குவிப்பதற்காக மீன் பிடித்த கூட்டம் தான் அழித்தது. அதே கூட்டம் தான், இலங்கை மீனவர்களையும் அழிக்கத் தொடங்கியுள்ளது. இதை காணவிடாதும், கண்டும்கொள்ளாத ஈழ இனவாதத்துக்குள் படுகொலையைக் காட்டி, மூலதனக் குவிப்புக்காக கூச்சல் எழுப்பினர். இதை மூடிமறைக்க, பன்நாட்டு மீன்பிடியை மட்டும் எதிரியாக காட்டினர். இப்படி இலங்கை அரசையும், பன்நாட்டு மீன்பிடியையும் எதிரியாக காட்டினர். இந்திய மூலதனத்தின் விஸ்தரிப்புவாதத்துக்கு இதன் மூலம் உதவினர். இந்த இந்திய நலனை, தமிழரின் நலனாகக் காட்டினர். இதுதான் ஈழ தமிழ் தேசிய அரசியலின் அரசியல் உள்ளடக்கமாகும்.

மீன்பிடி மூலம் மீன்வளத்தை அழித்து மூலதனத்தைக் குவித்த கூட்டம் தான், இந்த படுகொலையின் பின்னும் கொழுத்தது. அதை கொழுக்க வைக்கும் கூச்சல்தான், படுகொலைக்கு எதிரான அரசியல் சாரமாக வெளிப்பட்டது. யுத்தம் நடந்த காலம் முதல் தமிழக மீனவர் படுகொலையின் பின்னணியிலும் மூலதனத்தின் நலன்தான், ஈழத்தமிழரின் நலனாக காட்டி முதன்மைப்படுத்தப்படுகின்றது.

இந்த நிலையில் படுகொலையைக் காட்டி இலங்கை மீனவர்களின் வாழ்வை அழித்த இந்த கூட்டத்தின் பின்னால், இந்திய மார்க்சிய லெனினிய இயக்கங்கள் முதல் மார்க்சியம் பேசும் ஈழ இனவாதிகள் வரை அணிதிரண்டு நின்றனர்.

எந்தச் சந்தர்ப்பத்திலும் வாழ்வுக்காக மீன்பிடித்த சமூகத்தை சார்ந்து நின்று குரல்கள் எழுப்பவில்லை. அதே மூலதன குவிப்பால் இலங்கை மீனவர் சந்தித்த பிரச்சனையை சார்ந்து நின்று, யாரும் குரல் கொடுக்கவில்லை. இப்படி தான், ஈழ இனவாதத்தை முன்னிறுத்தி இலங்கை தமிழ் மக்களின் நலன் பற்றி நீலிக் கண்ணீர் வடித்தனர்.

இந்த நிலையில் நாம் மட்டும் முற்றிலும் மாறாக குரல்கொடுத்து சரியான ஒரு நிலையை முன்தள்ளிய நிலையில் நாம் தூற்றப்பட்டோம்; "தமிழின துரோகிகளின் அறிக்கை" என்று வினவுவில் வந்த பின்னோட்டம் தொடங்கி மயூரனின் பேஸ்புக்கில் அருள்எழிலன் திட்டுகின்ற வரை, இனவாத அரசியல் தான் தொடர்ந்து ஆட்டம் போடுகின்றது.

இனியொரு நாவலனோ நேற்றைய நிலைக்கு மாறாக திடீரென அதிரடியான கட்டுரையுடன் மீள் அவதாரம் எடுக்கின்றார். கடந்தகாலத்தில் தொடர்ச்சியான எமது போராட்டத்தை மறுத்து, திடீர் மார்க்சியவாதியாக தன்னைக் காட்டி பிழைக்கும் அனுபவம் தான் மீண்டும் இங்கு கைகொடுக்கின்றது.

இதுதான் இன்றைய ஏகாதிபத்திய அரசியல். நேற்று வரை அரபுலக சர்வாதிகாரத்தை ஜனநாயகமாகக் காட்டி பாதுகாத்த ஏகாதிபத்தியங்கள், அரபு மக்களின் கிளர்ச்சியை அடுத்து அதை ஜனநாயகத்தின் தூணாக திடீரெனக் காட்டி கிளர்ச்சியையே விழுங்கியது போன்றது தான் இதுவும். இதைத்தான் நாவலன் சார்ந்த கூட்டம் தொடர்ந்து செய்கின்றது.

கடந்த காலத்தில் தொடர்ச்சியாக போராடியவர்களை புறந்தள்ள, திடீர் மார்க்சியம் பேசியபடி தான் அனைத்தையும் இவர்கள் அரங்கேற்றினர். இப்படி ஏமாற்றுகின்ற இந்த வித்தைதான், மீனவர் விடையத்திலும். நேற்று வரை வாழ்வுக்காக மீன்பிடித்த மீனவர்களுக்கு எதிராக குறுந்தேசிய இனவாதிகளுடன் நின்றவர்கள், இன்று தலைகீழாக தன்னைக் காட்டி மீனவர்களுடன் நிற்பதாக வேசம் போடுகின்றனர்.

இது கருணாநிதி தலைமையில் கனிமொழி நடத்திய, அதே அரசியல் கூத்துத்தான். இது சூழலுக்கும், சந்தர்ப்பத்துக்கும் ஏற்ப, தங்களை மாற்றிக் கொள்கின்ற பச்சோந்திகளுக்கேயுரிய மூகமுடி வேசம். மக்களை ஏமாற்றுகின்ற மோசடி.

பி.இரயாகரன்

18.02.2011