Language Selection

பி.இரயாகரன் -2011
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழக மீனவர் படுகொலை என்பது, எல்லை தாண்டுவதாலான ஒரு படுகொலையல்ல. இந்தியா கடல் எல்லைக்குள்ளும், படுகொலைகள் நடந்திருக்கின்றது. ஏன் இது இரு நாட்டு மீனவர் சார்ந்த முரண்பாட்டுக்குள்ளான ஒரு படுகொலையுமல்ல. இதனால் மீனவர்களுக்கு இடையில் முரண்பாடுகள் இல்லை என்று அர்த்தமல்ல.

இது போல் இன்று பேசப்படுவது, வெறும் மீனவர் படுகொலை பற்றியதல்ல. எல்லை கடந்த மீன்பிடி பற்றியும், எப்படி மீன்பிடிப்பது என்பது பற்றியும், யார் மீன்பிடிப்பது என்பது பற்றியதுமான பல தொடர் விடையங்கள்.

இதில் ஈழ தமிழினவாதம் முன்னிறுத்துகின்ற குறுகிய இனவாத அரசியல் முதல் அதன் திரிப்பு உள்ளடங்கிய வழியில், மார்க்சிய லெனினிய இயக்கங்கள் பின்பற்றுகின்ற கொள்கைகளும் கூட இங்கு விவாதத்துக்கு உள்ளாகின்றது. இலங்கை - இந்திய மீனவர்கள் நலன்கள் மறுக்கப்பட்டு, குறுகிய ஈழ அரசியல் இங்கு இதற்குள் புகுத்தப்படுகின்றது.

படுகொலைக்கான நோக்கங்கள், புலி இருந்த காலத்தில் இருந்து இன்று மாறுபட்ட காரணங்களை உள்ளடக்கியது. இப்படியான நிலையில், இதற்கு எதிரான போராட்டங்களும், விளக்கங்களும் கூட குறுகிய அரசியல் சார்ந்தது. ஈழ தமிழினவாத விளக்கங்கள், மீனவர் நலன் சார்ந்ததல்ல. அது குறுகியது. அனைத்தையும் அதற்குள் குறுக்கிக் காட்டுகின்றது.

 

 

 

 

இதையே பின்பற்றி முன்மொழியும் ம.க.இ.க ஆதரவு பெற்ற வினவு தளம், "ஆழமானதும் அவசியமானதுமான இக்கட்டுரையைப் படியுங்கள், பல உண்மைகளைத் தெரிந்து கொள்ளலாம்" என்கின்றது. இது குறிப்பாக இலங்கையில் இருந்து வந்த பேச்சுவார்த்தைக் குழு, இந்திய பேசு;சுவார்த்தைக்குழு பற்றியதாக குறுக்கி, அதை முத்திரை குத்தி ஈழ இனவாதத்தை மீனவர் நலனாக காட்டி திரிக்கின்றனர்.

இதில் தமிழினவாதிகள் கூற முற்படுவது இதுதான். "ஈழ விவகாரத்தில் தீவிரமாக இருக்கும் சக்திகள் இதில் தலையிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று, பேச்சுவார்த்தையாளர்கள் கருதினார்கள் என்று குற்றம் சாட்டுகின்றனர். இதுதான் இதன் பின்னுள்ள எதிர்ப்பு அரசியலின் முழுச் சாரமுமாகும்;. அவர்கள் அப்படிக் கருதியதில்; என்ன தவறு உண்டு? என்ன, நீங்கள் மீனவர்கள் பிரதிநிதிகளா! சரி நீங்கள் தலையிடும், இந்த மீனவர் படுகொலை அரசியலுக்கு வெளியில், உங்கள் மக்கள் அரசியல் என்ன? தமிழக மற்றும் மீனவர்கள் சார்பான உங்கள் தீவிரமான, அரசியல் என்ன? ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து நின்று ஒடுக்கும் வர்க்கத்தை, எப்படி எல்லாம் எதிர்க்கின்றீர்கள்? சொல்லுங்கள்.

புலியிசம் சார்ந்த, ஈழம் சார்ந்த இனவாத எல்லைக்குள் மீனவர் விவகாரத்தை சுருக்கி அணுகும் உங்கள் அணுகுமுறை, மீனவர்களுக்கு எதிரானது. இதில் யாருக்கும் சந்தேகம் கிடையாது.

"ஈழ விவகாரத்தில் திவீரமான" சக்திகள், கடந்தகாலத்தில் என்ன செய்தனர்? புலிக்கு பின் நின்று, ஈழ மக்களை ஒடுக்க உதவினார்கள். அதைத்தானே நீங்கள் செய்து வந்தீர்கள். இதற்கு வெளியில் எந்த ஒரு மக்கள் முகமும் கிடையாது. ஈழ மக்கள் சார்ந்து நின்று, புலியை எதிர்த்து நின்றது கிடையாது. இதுதானே உங்கள் சொந்த முகம், அதாவது சொந்த அரசியல். பேரினவாத இலங்கை அரசை எதிர்க்கின்ற பொதுத்தளத்தில் ஒளித்து நின்று கொண்டு, தமிழ் மக்களை ஒடுக்க புலிக்கு உதவியவர்கள் தான் தமிழக தமிழினவாதிகள். இல்லையென்று சொல்ல உங்களிடம் ஒரு நேர்மையான அரசியல் தான் உள்ளதா! சொல்லுங்கள்! எந்தச் சுயவிமர்சனத்தையும் இது சார்ந்து செய்யாதவர்கள் தான் "ஈழ விவகாரத்தில் தீவிரமான"வர்கள்.

இன்று அதேபாணியில் தான், மீனவர் விவகாரத்தில் மூக்கை நுழைக்கின்றனர். இதில் மீனவர்கள் உங்களை புறம் தள்ளிவிட்டு பேசுவது தான் மிகச் சரியானது. இதில் பேசியவர்கள் இலங்கை - இந்திய அரசு சார்பான மீனவர்களா என்பது, இங்கு இரண்டாவது விடையம். இங்கு இதை நீங்கள் சொல்ல எந்த அரசியல் அருகதையும் கிடையாது. உங்கள் இனவாதம் சார்ந்த ஈழ அரசியல் எப்போதும் குறுகியது. கடந்த காலத்தில் புலியிசம் சார்ந்து, புலியல்லாத அனைத்தையும் அரச சார்பாக முத்திரை குத்தி தூற்றி பிழைத்த கூட்டம் தான் நீங்கள். இன்று அதைத்தான், இந்த விவகாரத்தில் மீண்டும் செய்கின்றீர்கள்.

பேச்சுவார்த்தையை நடத்தியவர்கள் யார், அவர்கள் பின்னணி என்ன என்ற விவகாரத்தில் அதிகம் எமக்கு தெரியாது. இங்கு அது முக்கியத்துவம் கிடையாது. நீங்கள் வழமை போல் அவர்களுக்கு முத்திரை குத்தியதுக்கு அப்பால், இதற்காக எந்த ஆதாரத்தையும் வைத்தது கிடையாது. இந்தியா சார்பாக பேசியவர்கள் இந்திய மீனவர்களின் பிரதிநிதிகள் அல்லவென்றால், நீங்கள் இனம் கண்ட உண்மையான அந்த மீனவர் பிரதிநிதிகள் யார்? சரி அவர்கள் எதைக் கோருகின்றனர்? அதையாவது சொல்லியிருக்கலாம் அல்லவா! இலங்கை பிரதிநிதிகள் அரச ஆட்கள் என்றால், இலங்கை மீனவர்களின் கோரிக்கைகள் என்ன? நீங்கள் வைப்பதா!, அவர்கள் கோரிக்கை. அனைத்தும் ஈழம் சார்ந்த இனவாத குருட்டுக் கண்ணுக்குள் அமிழ்ந்து கிடக்கின்றது.

இப்படி இருக்க, அவர்களால் பேசப்பட்ட விடையம் மீனவர்கள் தொடர்பானது. இப்படியிருக்க ஈழ இனவாதிகளை பின்பற்றி ம.க.இ.க ஆதரவு பெற்ற வினவு "இலங்கை அரசின் ஆதரவாளர்களோ அதை ஊதிவிட்டு இந்த பிரிவினையை முன்னெடுக்கிறார்கள்." என்கின்றனர். வினவு சொல்வதை நாம் ஏற்றுக்கொண்டால், இந்தப் பிரிவினையை ஈழ தமிழினவாதிகள் தம் பங்குக்குச் செய்யவில்லையா? வினவு இதை மறுத்தால், மறுபக்கத்தில் அதுவும் பிரிவினையல்ல. இலங்கைப் பேரினவாதம் எப்படி பிரிவினையை முன்தள்ளுகின்றதோ, அப்படித்தான் ஈழ புலியிசமும் பிரிவினையை முன்தள்ளுகின்றது. வினவு ஒன்றை மட்டும் முன்னிறுத்தி, ஈழ தமிழினவாதத்தை "ஆழமானதும் அவசியமானதுமான இக்கட்டுரையைப் படியுங்கள், பல உண்மைகளைத் தெரிந்து கொள்ளலாம்" என்று வழிகாட்டுவது தான், பிரிவினைவாதமாகின்றது.

மேலும் வினவு "இருநாட்டு மீனவர்களுக்கிடையே மோதல் என்ற கதை." பற்றி, குறிப்பாக பேசுவதை குறிப்பிடுகின்றனர். இங்கு ஆளும் வர்க்கங்கள் இதை வெறும் இரு நாட்டு மீனவர் பிரச்சனையாக சித்தரிக்க முனைவது என்பது ஒருபுறம். அது இதன் மூலம் தன்னை மூடிமறைக்கின்றது. மறுபக்கத்தில் இந்த படுகொலையின் பின்னணியில், படுகொலைக்கு அப்பால் இரு நாட்டு மீனவர்கள் விவகாரம் பேசப்படுவதை வினவு மறுக்கின்றது. அதாவது இலங்கைக் கடலில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதை வினவு மறுக்கின்றனர். அதை வழி தவறிய ஒன்றாக மட்டும் இட்டுக்கட்டி சித்தரிக்கின்றனர். இதன் மூலம் இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையில் எந்த முரண்பாடும் கிடையாது என்கின்றனர். இந்திய மீனவர்களுக்கு இடையிலான வர்க்க ரீதியான மோதலை மூடிமறைத்து, வர்க்கமற்ற தளத்தில் மீனவர்களை தமிழனாக முன்நிறுத்தி அவர்களை இலங்கை மீனவர்களின் எதிரியல்ல என்று காட்ட முற்படுகின்றனர்.

இலங்கைக் கடலில் மீன்பிடிக்கும் உரிமையை இந்திய மீனவர்கள் கோரவில்லை, அது வழிதவறிச் சென்ற மீனவர்கள் பிரச்சனை என்றால், அது வேறு. இலங்கை கடலில் மீன்வளத்தை அழிக்கும் மீன்பிடியையும், இந்திய மீன்பிடியில் உள்ள பெரு மூலதனமும் எல்லை கடந்து புகவில்லை என்றால், அது வேறு விடையம். இதையெல்லாம் மறுத்து, திரித்தும், வினவு இனவாதிகளுடன் கூடி நிற்கின்றனர்.

இலங்கைக் குழு இதை முன்னிறுத்தும் போது, அது பொய்யான இலங்கை அரசின் குரல் என்றால், அது "பிரிவினையை" திட்டமிட்டு செய்கின்றது என்றால், இலங்கை இந்திய மீனவர்கள் பேசியது என்ன? இலங்கை கடலில் 70 நாள் இந்திய மீனவர்கள் மின்பிடிக்கும் உரிமை கோரி நடத்திய பேச்சுவார்த்தையின் அரசியல் சாரம், பிரிவினையா? இது எல்லை கடந்த மீன்பிடி அல்லாத, வழிதவறிய மீனவர்கள் விவகாரமா?

இந்திய மீனவர்கள் தங்கள் சொந்தக் கடலில் மீன்பிடிப்பது பற்றி, இலங்கை மீனவர்கள் பேசுவதற்கு எதுவும் கிடையாது. எல்லை கடந்து மீன்பிடிக்கவில்லை என்றால், வழி தவறிய மீனவர்களை கையாள்வது பற்றிதான் பேச வேண்டும். ஆனால் மீனவர்கள் பேசியது, இலங்கைக் கடலில் மீன்பிடிப்பது பற்றியது. தமிழக ஈழ இனவாதிகள் "எல்லை தாண்டும் இயற்க்கை இடர்பாடு குறித்து அவர்களே நேர்மையாகப் பேசியிருப்பார்கள்." என்று, தங்கள் குறுகிய ஈழ அரசியலுக்கு ஏற்ப இதைத் திரித்து இங்கு அதை இட்டுக்கட்டி காட்டுகின்றனர். இந்திய மார்க்சிய லெனினிய குழுக்கள், இப்படி இதை தமிழினவாத எல்லைக்குள் குறுக்கிகாட்டி நிற்கும் இன்றைய நிலையில், இலங்கை மார்க்சிய லெனினிய வாதிகள் இலங்கை கடலுக்குள் அத்துமீறி மீன்பிடிக்கும் இந்திய விஸ்தரிப்பு வாதத்தை எதிர்த்து போராட நிர்ப்பந்திக்கப்பட்டு இருக்கின்றோம்.

அதேநேரம் எல்லை தாண்டுவது பிரச்;சனையல்ல என்றும் இனவாதிகள் கூறுகின்றனர். "ஆக தமிழக மீனவர்கள் குறிவைத்துத் தாக்கப்பட எல்லை தாண்டுவது ஒரு காரணமே அல்ல" என்கின்றனர். எல்லை தாண்டுவதை மறைமுகமாக ஏற்கும் இனவாதிகள் "எல்லை தாண்டும் இயற்கை இடர்ப்பாடு குறித்து அவர்களே நேர்மையாகப் பேசியிருப்பார்கள்." என்று இலங்கை மீனவர்களிடம் கோருவது அரசியல் பித்தலாட்டம். இந்த பேச்சுவார்த்தையில் 70 நாள் இலங்கை கடலில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமையையும், அன்று இலங்கை மீனவர்கள் மீன்பிடிக்கக் கூடாது என்றும் இந்திய மீனவர்கள் கோரினார்கள். இதில் ஓரளவு இணக்கம் காணப்பட்ட போதும், இதில் பிரச்சனை மீன்வளத்தை அழிக்கும் மீன்பிடி முறைமை சார்ந்த மீன்பிடியை, இலங்கை மீனவர்கள் இலங்கை கடலில் அனுமதிக்கத் தயாராக இருக்கவில்லை. இது பிரிவினையல்ல. மீனவர்களின் ஐக்கியத்தையும், இணக்கப்பாட்டையுமே அது கோரியது. இப்படி நடந்த பேச்சுவார்த்தையைத்தான் ஈழ இனவாதிகள் திட்டமிட்டு மூடிமறைக்கின்றனர். இப்படி தங்கள் கடலில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க விட்டுக்கொடுத்து பேசிய இலங்கை மீனவர்களையே, இலங்கை அரச எடுபிடிகளாக முத்திரை குத்திவிடுகின்றனர். 70 நாள் இலங்கைக் கடலில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பது பற்றியதல்ல விவகாரம் என்று கூறுகின்ற, இனவாத அரசியல் கேலிக் கூத்தைத்தான் நாங்கள் இங்கு பார்க்கின்றோம். இதைத் மூடிமறைத்து திரிக்கவே, ஒரு உண்மையை திரித்து படுகொலைக்குரிய காரணமாக முன்வைக்கின்றனர். "அவர்கள் போராடிய புலிகளின் அனுதாபிகளாகவும் உதவும் சக்திகளாகவும் இருந்தார்கள் என்பதுதான் தமிழக மீனவர்களை இலங்கைப் படைகள் தாக்கக் காரணம்." என்கின்றனர். கடத்தல்காரர்களும், வியாபாரிகளும் புலிகளுடன் நடத்திய மாபியாத் தொழிலை, இங்கு இதற்குள் திரித்து "புலிகளின் அனுதாபிகளாகவும் உதவும் சக்திகளாகவும் இருந்தார்கள்" என்று கூறிவிடுகின்றனர். கொல்லப்பட்ட அப்பாவிகளை புலி அனுதாபிகளாக முத்திரை குத்துகின்றனர். இதன் மூலம் கொல்வதற்கு ஏற்ற அரசியல் நியாயத்தைக் கற்பிக்கின்றனர்.

கடத்தல்காரர்களும், வியாபாரிகளும் மாபியா புலிகளுடன் நடத்திய தொழிலில், அப்பாவி மீனவர்கள் தான் இடையில் சிக்கி கொல்லப்பட்டனர். ஈழ தமிழினவாதம் முன்தள்ளும் மீனவர் பற்றிய தலையீடு, எல்லை கடந்து மீன்பிடிக்கும் மீனவர்களின் வாழ்வுக்கு வேட்டு வைக்கின்றது. இந்திய - இலங்கை மீனவர்கள் ஒரு உடன்பாடு காண்பதன் மூலம், தங்கள் ஈழ இனவாத அரசியல் வங்குரோத்தை சகிக்க முடியாது ஈழ இனவாதிகள் பினாத்துகின்றனர். "எல்லை தாண்டும் இயர்க்கை இடர்பாடு குறித்து அவர்களே நேர்மையாகப் பேசியிருப்பார்கள்." என்று கூறி, மீனவர்களிள் வாழ்வுக்கு வேட்டு வைக்கின்றனர். எல்லை தாண்டி மீன்பிடிக்க, இந்திய மீனவர்கள் 70 நாட்கள் கோரிப் பேசியதை தவறு என்று கூறுகின்றனர். இந்த ஈழ இனவாதிகளா மீனவர்களின் நண்பன்? சொல்லுங்கள்.

ஈழ இனவாதிகளின் பிரச்சனை, தங்கள் அரசியலுக்கு ஏற்ற சூழல் நிலவவேண்டும். இது எல்லைதாண்டிய மீன்பிடியல்ல என்று கூறி, எல்லைதாண்டியே மீன்பிடிக்கவேண்டும். முரண்பாடுகள் ஏற்பட வேண்டும். அப்போது தான் ஈழ இனவாதிகள் அரசியல் மீன் பிடிக்கலாம். தாங்கள் மீன் பிடிக்க, மீனவர்கள் தமக்கு இடையில் ஒரு இணக்கப்பாடு காணக்கூடாது. தங்களை மீறி இணக்கம் காண்பவர்கள் இலங்கை இந்திய அரச கைக்கூலிகள் என்ற கூறி, ஈழ இனவாதத்தை அரசியலாக விசுறுகின்றனர். இந்திய மார்க்சிய லெனினிய இயங்கங்கள் இதை முறியடிக்காமல் வால் பிடித்து, இந்திய விஸ்தரிப்புவாதத்தை அத்துமீறி மீன்பிடி மூலம் திணிக்க முனைகின்றனர்.

 

முற்றும்

 

பி.இரயாகரன்

13.02.2011

 

1. தமிழக மீனவர்கள் படுகொலைக்குள் புளுக்கும் சந்தர்ப்பவாத அரசியல் (பகுதி – 01)

2. தமிழக மீனவர்கள் படுகொலைக்குள் புளுக்கும் சந்தர்ப்பவா)த அரசியல் (பகுதி – 02)

3. தமிழக மீனவர்கள் படுகொலைக்குள் புளுக்கும் சந்தர்ப்பவாத அரசியல் (பகுதி – 03)

4. தமிழக மீனவர்கள் படுகொலைக்குள் புளுக்கும் சந்தர்ப்பவாத அரசியல் (பகுதி – 04)

5. தமிழக மீனவர்கள் படுகொலைக்குள் புளுக்கும் சந்தர்ப்பவாத அரசியல் (பகுதி – 05