Language Selection

செங்கொடியின் சிறகுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

“விண்வெளியில் பயணம் செய்த முதல் மனிதன் யார்?” என்று படிக்கும் குழந்தைகள் யாரிடம் கேட்டாலும் சொல்லும் பதில் ‘யூரி காக்ரின்’ என்பதாகத்தான் இருக்கும். முஸ்லீகளிடம் கேட்டாலும் இதுதான் பதில், ஆனால் அவர்கள் நம்புவது வேறு. தோராயமாக 1400 ஆண்டுகளுக்கு முன் ஒரு நாளின் இரவில் முகம்மது விண்வெளியில் பயணம் செய்து தான் பிறப்பதற்கு முன்னரே இறந்துபோன மனிதர்களிடம் பேசி ஆலோசனை செய்து அல்லாவிடம் பேரம் நடத்தி ஐவேளைத் தொழுகையை வாங்கிவந்தார் என்பது அவர்களின் நம்பிக்கை. கல்விக்கு(மெய்யாக) ஒன்று, நம்பிக்கைக்கு(கற்பனையாக) வேறொன்று.

 

 

ஓரிரு ஆண்டுகளுக்கு முன் ‘விடுதலை’ இதழில் புஷ்பக விமானமும் புராக் விமானமும் ஒன்றுதான், இரண்டுக்கும் அறிவியல் நிரூபணங்கள் இல்லை என்று ஒரு கட்டுரை வெளிவந்தது.அதை எதிர்த்து ‘உணர்வு’ இதழ் தொடற்சியாக பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை வரைந்து தள்ளியது, ஆனால் முகம்மது விண்ணில் பறந்ததற்கு என்ன நிரூபணம் என்பதை மட்டும் தொடவே இல்லை. இதன் தொடர்ச்சியாக சென்னையில் நாத்திகர்களுடன் நேரடி(!) விவாதமும் நடந்தது. என்ன காரணமோ தெரியவில்லை அவர்களும்கூட ஏதேதோ பேசினார்களே தவிர மிகக்கவனமாக அந்தக் கேள்வியை மட்டும் தவிர்த்து விட்டார்கள். பின்னர் தனியாக “முகம்மது பூமியில் மட்டுமே புராக்கில் பயணம் செய்தார், விண்வெளிக்கு புராக்கில் செல்லவில்லை” என்றொரு விளக்கம் வைத்தார்கள். அப்போதும் கூட விண்ணில் சென்றது எப்படி என்று விளக்கும் நோக்கில் எதையும் கூறவில்லை.

இந்த விண்வெளி பயணம் குறித்து குரான் இப்படி கூறுகிறது

மிகப் பரிசுத்தமானவன். அவன் தன் அடியாரை பைத்துல் ஹரமிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்…… குரான் 17:1

ஆனாலும் ஹதீஸ்களில் இன்னும் விரிவாக இந்தப்பயணம் பற்றிய செய்திகள் கூறப்பட்டிருக்கின்றன.

நான் இறையில்லத்தில் தூக்கமாகவும் விழிப்பாகவும் இருந்தபோது …. தங்கத்தட்டு கொண்டுவரப்பட்டது ….. என்னுடைய நெஞ்சில் காரையெலும்பிலிருந்து அடிவயிறு வரை பிளக்கப்பட்டது …. புராக் எனும் வாகனம் என்னிடம் கொண்டு வரப்பட்டது …. முதல் வானம் ஆதம் …. இரண்டாம் வானம் ஈசா, யஹ்யா …. மூன்றாம் வானம் யூஸுஃப் …. நான்காம் வானம் இத்ரீஸ் …. ஐந்தாம் வானம் ஹாரூன் …. ஆறாம் வானம் மூஸா …. ஏழாம் வானம் இப்ராஹிம் …. அதன் பின்னர் சித்ரத்துல் முந்தஹா …. வேர்ப்பகுதியில் நான்கு ஆறும் யானையில் காதளவு பெரிய இலைகளும் கொண்ட இலந்தை மரம் …. அல்லாவின் வஹீ, ஒரு நாளுக்கு ஐம்பது வேளைத் தொழுகை …. மூஸாவின் ஆட்சேபம் …. அல்லாவோடு பேரம் …. இதற்குமேலும் குறைக்கவா எனும் முகம்மதின் வெட்கமும் ஐவேளைத் தொழுகை இறுதியாதலும். புஹாரி 3207

குரான் இந்தப் பயணத்தை வெகுசுருக்கமாக‌ முடித்துக்கொள்கிறது. ஆனால் ஹதீஸ்கள் தான் அந்தப் பயணத்தை பேரண்டங்களைக் கடந்து விரித்துச் செல்கிறது. அதுவும் கிரிக்கெட் விளையாட்டில் ‘ரன்’ எடுப்பது போல பேரண்டங்களைக் கடந்த ‘சித்ரத்துல் முந்தஹா’ எனும் இடத்திற்கும் மூசாவின் வானமாகிய ஆறாம் பேரண்டத்திற்கும் மாறி மாறி ஓடுகிறார். அதுமட்டுமா? விண்வெளிப் பயணத்திற்கு முகம்மதை ஆயத்தப்ப‌டுத்த செய்யப்படும் அறுவைச்சிகிச்சை, புராக்கின் உருவம், எந்தெந்த அண்டங்களில் யாவர் என திரைக்கதையையே அமைத்துக் காட்டுகிறது.

முதலில் வான‌ம் என்பது என்ன? இங்கு ஏழு வானம்  ஏழு கதவு என வருகிறது கதவு என்பதை குறியீடாகக் கொண்டாலும் ஒரு தடுப்பு அல்லது ஒவ்வொரு வானமும் தனித்தனி என பொருள் வருகிறது. ஆனால் வானம் என்பது தடுக்கப்பட்டதாகவோ தனித்தனியாகவோ இல்லை. எனவேதான் மதவாதிகள் வானம் என்பதற்கு பேரண்டம் என  பொருள் தருகிறார்கள். அதாவது ஏழு தனித்தனியான பேரண்டங்கள். இந்த ஏழு பேரண்டங்களையும் கடந்து சென்றுவிட்டு ஒரிரவுக்குள் திரும்பியும் வந்திருக்கிறார் முகம்மது.

நாம் வாழும் இந்த பேரண்டம் எவ்வளவு பரந்து விரிந்தது என்பது துல்லியமாக இன்னும் மனிதர்களால் கண்டுபிடிக்கப்படவில்லை, மட்டுமல்லாது அது விரிந்து கொண்டும் இருக்கிறது. பூமி, சூரியக் குடும்பம், அதை உள்ளடக்கிய ஆகாய கங்கை எனும் பால்வீதி, இன்னும் இதுபோன்ற பல்லாயிரக்கணக்கான பால்வீதிகள், பலகோடிக்கணக்கான விண்மீன்கள், கருந்துளைகள், நெபுலாக்கள் இன்னும் பலவான விண்வெளி பருப்பொருட்களை உள்ளடக்கிய இந்தப் பேரண்டத்தின் அளவு தற்கால கணக்கீடுகளின்படி தோராயமாக 2500 கோடி ஒளியாண்டுகள். ஒரு ஒளியாண்டு என்பது ஒளித்துகளொன்று தடையாமல் தொடர்ந்து ஓராண்டுகாலம் பயணம் செய்தால் எவ்வளவு தூரத்தைக் கடந்திருக்குமோ அது தான் ஓர் ஒளியாண்டு தூரம். ஒளியின் வேகம் நொடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர். அதாவது நொடிக்கு மூன்று லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்யக்கூடிய ஒரு பொருள் தொடர்ந்து நிற்காமல் பயணம் செய்தால் நாம் வாழும் இந்த பேரண்டத்தின் மறுஎல்லையைச் சென்றடைய 2500 கோடி ஆண்டுகள் தேவைப்படும். இது ஒரு பேரண்டத்தைக் கடப்பதற்கு தேவைப்படும் காலம், இதையும், இதுபோல் இன்னும் ஆறு பேரண்டங்களையும் கடந்து சென்று மீண்டு வந்திருக்கிறார் முகம்மது அதுவும் ஓர் இரவுக்குள்.

இந்த பேரண்டத்தின் உச்சகட்ட வேகம் ஒளியின் வேகம் தான். ஒளியைவிட மிகைத்த‌ வேகத்திற்கு ஒரு பொருளை முடுக்கமுடியாது என்கிறது சார்பியல் கோட்பாடு. ஒரு வாதத்திற்காக இந்த உச்ச வேகத்தில் பயணம் நிகழ்ந்திருக்கிறது என்று கொண்டாலும், ஓர் இரவு என்பது அதிகபட்சமாக 12 மணி நேரம். இந்த நேரத்தில் உச்சகட்ட வேகத்தில் சென்றாலும் ஒருவரால் அதிகபட்சம் 1296 கோடி கிலோமீட்டர்கள் தான் பயணிக்க முடியும். அதாவது 648 கோடி கிமீ தூரத்திற்கு சென்று வரலாம். ஆனால் முகம்மது சென்று வந்திருக்கும் தூரமும், அப்படி செல்வதற்கு கைக்கொண்ட வேகமும் கற்பனைக்குக் கூட எட்டாததாயிருக்கிறது.

குரானின் சொற்களுக்கும், எழுத்துகளுக்கும் இடையில் இண்டு இடுக்களிலெல்லாம் புகுந்து அறிவியலை அள்ளிக்கொண்டுவரும் மதவாதிகள் இந்த விண்வெளிப் பயணத்திற்கு என்ன அறிவியலைக் கொண்டுவருவார்கள்? இதில் வெளிப்படையான சிக்கல் இருக்கிறது எனத் தெரிந்ததால் சில மதவாதிகள், மக்காவிலிருந்து ஜெருசலம் வரையில் தான் பயணம் அதன்பிறகு உள்ளதெல்லாம் கனவு போல ஒரு காட்சி வெளிப்பாடு என நூல் விட்டுப்பார்க்கிறார்கள். ஆனால் குரானின் அது மெய்யான பயணம் தான் என்பதை உறுதிப்படுத்துகிறது.

…..அவரைச் சந்தித்ததில் நீர் சந்தேகம் கொள்ளாதீர்……. குரான் 32:23.

ஆக நம்புவதற்குக் கூட துளியும் வாய்ப்பளிக்காத இதுபோன்ற கட்டுக் கதைகளைத்தான் எக்காலத்திற்கும் பொருந்தும் ஒரே வேதம் என முழம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மனிதர்களால் முடியாததெல்லாம் கடவுளால் முடியும் என்றெல்லாம் இதை எளிதாக குறுக்கிவிட முடியாது. அறிவியலை திணிக்க எங்கெல்லாம் வாய்ப்பிருக்கிறதோ அங்கெல்லாம் குரான் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே இன்றைய அறிவியலை கூறிவிட்டது என ஜல்லியடிப்பதும், வெளிப்படையாக‌ பல்லிளிக்கும் இடங்களில் அல்லாவின் அருள் என பதுங்குவதும் அப்பட்டமான மோசடி. என்ன மோசடியாக இருந்தாலும் எங்கள் மதம் என்பர்கள் விலகிச் செல்லுங்கள், சிந்திக்கும் திறனுள்ளவர்கள் சிந்திக்கலாம்.

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

29. மீனின் வயிற்றில் மனிதனைப் பாதுகாத்த அல்லா

28. குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா?

27. தடயமில்லாத அல்லாவின் அத்தாட்சிகள்

26. குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள்

25. நிலவை உடைத்து ஒட்டிய அல்லா

24. ஆதிமனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?

23. கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா

22. குரானின் காலப்பிழைகள்

21. குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?

20. மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?

19. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

15. விந்து குறித்த குரானின் விந்தைகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்

12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.

11. குரானின் மலையியல் மயக்கங்கள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

3. குரானின் சவாலுக்கு பதில்

2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….

 

http://senkodi.wordpress.com/2011/02/01/space-bhuraaq/