Language Selection

பி.இரயாகரன் -2011
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

"முதலில் இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள், இலங்கையில் உள்ள சிங்கள, தமிழ் மீனவர்களின் பிரச்சனை என்னவென்பதை நாம் பார்த்து விடுவது நல்லது. கச்சத்தீவை இந்தியா இலங்கைக்குக் கொடுத்த போது அந்த ஒப்பந்தத்தின் சரத்துக்களில் இந்திய மீனவர்களின் நலன்கள் எங்குமே பாதுகாக்கப்படவில்லை" இப்படி இனியொருவில் இனவாதிகள் வாதிடுகின்றனர். ஈழம் (புலியிசம்) சார்ந்த தமிழினவாதிகள், மீனவர் பிரச்சனையை கச்சத்தீவு தொடர்பான ஒரு பிரச்சனையாக சுருக்கிக் காட்டுகின்றனர். தமிழக மீனவர் படுகொலைகளை மட்டும் குறிப்பாக எதிர்த்தல் என்பதற்கு அப்பால், பல பரிணாமங்களில் தமிழினவாதிகள் தமது இனவாதத்துக்கு ஏற்ப குறுகிய அரசியல் தளத்தில் அனைத்தையும் திரிக்கின்றனர். இலங்கை கடலில் மீன்பிடித்தலை நீர் ஓட்டம், எல்லை தெரியாது செல்லுதல் என்று, எல்லை கடந்த மீன்பிடித்தலாக திரித்துக் காட்டியவர்கள் (வினவு உட்பட) தான், இதை கச்சத்தீவு பற்றியதாகவும் கூட திரிக்கின்றனர். கச்சத்தீவு இன்று இலங்கையின் பிரதேசம் என்பதை, இனவாதிகள் மறுப்பதன் மூலம் அத்துமீறி மீன்பிடிப்பதை இதனூடாக குறிப்பாக நியாயப்படுத்துகின்றனர்.

கச்சத்தீவை இலங்கைக்கு இந்தியா வழங்கிய போது, இந்திய அரசுக்கு என்று குறுகிய நோக்கம் இருந்தது. இக்காலத்தில் தான் எந்த பிரஜாவுரிமை என்று தெரியாத இலங்கை வாழ் மலையக மக்களின் பாதிப்பேருக்கு, இந்தியா பிரஜாவுரிமை கொடுத்து வில்லங்கமாக இந்தியா வரவழைத்தது. இப்படி இந்திய அரசு என்றும் மக்களைச் சார்ந்த கொள்கைகளை வகுத்தது கிடையாது. கச்சத்தீவு மட்டுமல்ல, இந்திய சிறு மீன்பிடியை அழித்த இந்தியா பெரும் மூலதனம் சார்ந்த மீனவர் கொள்கையும் கூட, சாராம்சத்தில் ஒன்றிலிருந்த ஒன்று வேறுபட்டதல்ல.

இந்திய இலங்கை மீனவர்களின் நலன்களில் இருந்து, இலங்கை இந்திய அரசுகள் எந்த கொள்கைகளையும் முடிவுகளையும் எடுப்பதில்லை. இந்த வகையில் மீனவர்கள் சாhந்ததல்ல, கச்சத்தீவு தொடர்பான தமிழினவாதிகளின் கொள்கையும் நிலைப்பாடுகளும். மக்களினதோ, மீனவர்களினதோ நலனில் இருந்து, இவை எழவில்லை. தங்கள் இனவாத குறுகிய அரசியல் நலனில் இருந்து, இவை எழுகின்றது. இதை மார்க்சிய லெனினிய இயக்கங்கள் கேள்விக்குள்ளாக்கவில்லை. அதை வழிமொழிந்து வால் பிடிக்கின்றன.

அன்று கச்சத்தீவு மீன்பிடி சார்ந்த முக்கியமான துறைமுகமாக இருக்கவில்லை. இந்தியா கரையோர மீன்வளம் இருந்ததால், கச்சத்தீவு மீன்பிடியில் குறிப்பான பிரதேசமாக மாறியிருக்கவில்லை. இந்தியா கரையோர மீன்வளத்தை இந்திய பெருமூலதனமும், மீன்வளத்தை அழிக்கும் மீன்பிடி மூலமும் அழித்த போதுதான், கச்சத்தீவு சார்ந்த மீன்வளம் முதன்மை பெற்றது.

இந்திய கரையில் யார் மீன்வளத்தை அழித்து சிறு மீன்பிடியை அழித்தார்களோ, அவர்கள் தான் கச்சத்தீவு மீன்வள உரிமையைக் கோரிக்கொண்டு, இலங்கை மீள்வளத்தை அழிக்கத் தொடங்கியுள்ளனர். இங்கு மீனவர்களின் நலனில் இருந்து, பெருமூலதன மீன்பிடியையும், மீன்வளத்தை அழக்கும் மீன்பிடி முறைமையையும் தமிழினவாதிகள் எதிர்க்கவில்லை. அதை சார்ந்து நின்று தான் இன்று குரல்கொடுக்கின்றனர். மார்க்சிய லெனினிய இயக்கங்கள் இதற்கு விதிவிலக்கல்ல. இலங்கை மீனவர்களின் மையக் கோரிக்கையில் ஒன்று, மிகத் தெளிவாக மீன்வளத்தை அழிக்கும் தமிழக சில மீன்பிடி முறைமைகளை தங்கள் கடலில் நிறுத்தக் கோருகின்றனர். இதைக் கண்டு கொள்ளாத தமிழினவாதம், அதை இலங்கை அரசின் குரலாக காட்டிவிடுகின்றனர். இப்படி வர்க்கம் சார்ந்த அணுகுமுறை, இனவாதமாக கொப்பளிக்கின்றது. உண்மையில் தமிழக சிறு மீன்பிடியை அழித்த மீன்பிடி முறைமையைத்தான், இலங்கை மீனவர்கள் எதிர்க்கின்றனர். அதையும், அதன் கடந்தகால தாக்கத்தையும் பற்றி பேசாத குறுகிய தமிழினவாதத்தை தமிழினவாதம் முன்னிறுத்துகின்றது. இது புலியிசம் பேசும் இனவாதிகளின், மீனவர் விரோதக் கொள்கையாகும்.

சரி கச்சத்தீவை இந்தியா இலங்கையிடம் கொடுத்த போது, அது பெற்றுக் கொண்டது என்ன? இலங்கை மக்களின் சுயாதீனத்தையும், அதன் இறையாண்மையையும் தான் இல்லாதாக்கியது. இன்று 5000 க்கு மேற்பட்ட இந்தியப் பொருட்கள், வரிகள் இன்றி இலங்கைக்குள் புகுகின்றது. அது அழிப்பது, இலங்கை மக்களின் வாழ்வைத்தான்.

மீனவர்கள் பிரச்சனையில் கச்சத்தீவை முன்னிறுத்திய தமிழினவாதம், இலங்கையில் இந்திய மூலதனத்தின் ஊடுருவலும் அதன் ஏற்றுமதியும் அழிக்கின்ற இலங்கை மக்களின் வாழ்வைப் பற்றி எதுவும் பேசுவது கிடையாது. இங்கு குறுகிய இனவாதம் தான், கச்சத்தீவை முன்னிறுத்தி நிற்கின்றது. இந்திய பிராந்திய விஸ்தரிப்புவாத கொள்கை இலங்கையின் சுயாதீனத்தை அழிப்பதையிட்டு எதுவும் பேசுவது கிடையாது. இதுவா மீனவர் நலனில் நின்று பேசும்! தன் குறுகிய அரசியலுக்கு ஏற்ப மீனவர் பிரச்சனையை திரித்து, கச்சத்தீவை மையப்படுத்திக் காட்டுகின்றது.

அவர்களின் இந்த தர்க்கம் எந்தளவில் சரியானது? கச்சத்தீவை மையப்படுத்திய மீன்பிடியா, இந்தப் படுகொலைக்கு காரணம்? இல்லை. படுகொலைக்குரிய அரசியல் நோக்கங்கள் பல. இலங்கை தன் கடல் எல்லையை பாதுகாத்தல், மீண்டும் இலங்கைக்குள் ஆயுதம் வராமல் தடுத்தல், பெருமூலதனத்தின் மீன்பிடியை மட்டும் அனுமதித்தல், இக்கடல் எண்ணை அகழ்வு, தமிழக, இலங்கை மீனவர்கள் இடையே மோதலை உருவாக்குதல் என்று தொடங்கி இலங்கை மேலான ஆதிக்கத்தையும் இந்த எல்லையை மேலாதிக்கம் செய்யவும் இந்திய அரசே தன் கூலிப்படையைக் கொண்டு இது போன்ற திட்டமிட்ட தாக்குதலை நடத்துகின்ற எல்லைவரை, இதற்கென பல அரசியல் நோக்கங்கள் இப்படுகொலையின் பின் உண்டு.

இப்படியிருக்க கச்சத்தீவில் மீன்பிடிக்கும் உரிமையை சார்ந்து தமிழக மீனவர்கள் கொல்லப்படவில்லை. இன்றைய மீன்பிடி முறைமையும், கச்சத்தீவு சார்ந்த ஒன்றல்ல. அதைக் கடந்தது. எல்லை கடந்த மீன்பிடி, இலங்கை இந்திய எல்லையோரங்கள் முழுக்கவே நடக்கின்றது. இந்திய கரையில் மீன்வளத்தை அழித்த பின்பு, இலங்கைக் கடலில் மீன்பிடித்தல்தான், இன்று இந்திய மீனவர்களின் தெரிவாக இருக்கின்றது. இதை நீர் ஓட்டம் என்றும், எல்லைதெரியாது செல்லுதல் என்று திரிப்பது எதனால்? இந்திய தமிழக கரையோர மீன்வளம் அழிந்திருக்கின்றது. அவர்கள் எங்கு மீன்பிடிப்பது? இலங்கை கடலில் தான்.

இப்படியிருக்க இந்த அழிப்பை பற்றி வினவு தளம் ""தமிழக மீனவர்களைப் பொறுத்தவரையில் தடை செய்யப்பட்ட மடியை பயன்படுத்துவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் இந்த மடிகள் முதலில் அழித்தது மீன் வளத்தை அல்ல, ஏழை கட்டுமரக்காரனின் மீன்பிடி உரிமையை. அது உள்ளுர் சிறு கட்டுமரக்காரனின் மீன்பிடி உரிமையை நசுக்குவது உண்மைதான். ஆனால் பிரச்சனை இதுவல்ல. தங்களின் சொந்த நலனை முன்னெடுக்க விரும்பும் அரசுகள் பழியை இவர்கள் மீது போட்டு, இவர்களை மோதவிட்டு தங்களின் நலனை இராமேஸ்வரத்தில் முன்னெடுக்கின்றன.

உண்மையில் மீன் வளங்கள் இப்பிராந்தியத்தில் இல்லாது போகக் காரணம் பன்னாட்டு ஏக போக மீன்பிடி நிறுவனங்களே. மீன் வளம் பெருக வருடத்திற்கு 45 நாட்கள் மீன் பிடித்தடையை உள்ளூர் மீனவர்களுக்கு கொண்டு வந்துள்ள இரு நாட்டு அரசுகளும் தங்களில் கடல்பரப்பில் ஏக போக பன்னாட்டு நிறுவனங்களை கடல் கொள்ளையில் ஈடுபட அனுமதித்துள்ளன.""என்று எழுதுகின்றது வினவு. பன்னாட்டு மீன்பிடி குறிப்பாக படுகொலை நடக்கும் பிரதேசத்தில் இன்னும் புகவில்லை. யுத்தம் மற்றும் இந்த பிரதேசத்தில் நீடிக்கும் அமைதியற்ற சூழல்கள் இதற்கு காரணமாகும். பன்னநாட்டு மீன்பிடி உலகளாவிய கடல்வளத்தையும், சிறுமீன்பிடியையும் அழிக்கின்றது. இந்த வகையில் மீனவர்களின் பொது எதிரி என்பது உண்மை. இந்த உண்மை, மற்றொரு உண்மையை பொய்யாக்குவதில்லை. இந்திய மீன்பிடியில் உள்ள பெருமூலதனமும், மீன்வளத்தை அழிக்கும் மீன்பிடி முறைமையும், இந்திய மீன்வளத்தை அழித்ததையும் அழிப்பதையும் மறுக்கின்ற வாதம், ஒரு உண்மையல்ல. இது கடந்த காலத்தில் இந்திய சிறு மீன்பிடியையும், இந்திய கரையோர மீன்வளத்தை அழித்தது. அது தான் இன்று இலங்கை கடலுக்குள் ஆதிக்கம் வகிக்கின்றது. இதை வர்க்க ரீதியாக வகைப்படுத்தி மீனவர்களின் பொது எதிரியாக வகைப்படுத்தாத, தமிழினவாதம் தான் பன்னாட்டு மீன்பிடியை மட்டும் எதிரியாக காட்டுகின்றது. "உண்மையில் மீன் வளங்கள் இப்பிராந்தியத்தில் இல்லாது போகக் காரணம் பன்னாட்டு ஏக போக மீன் பிடி நிறுவனங்களே" என்பது, உள்நாட்டு மீனவர்களிடையேயான வர்க்க எதிரியையும், அவன் சிறுமீனவர்களின் எதிரியாக இருப்பதை மறுத்தலாகும். இப்பிராந்தியத்தில் இன்னும் பன்னாட்டு மீன்பிடி புகவில்லை. அவன் தான் மீன்வளத்தை இப்பிராந்தியத்தில் அழித்தான் என்பது, மீன்வளத்தை அழித்த உள்ளுர் வர்க்கத்தை தமிழனாக காட்டி பாதுகாக்கின்ற அரசியலாகும்.

வினவு மேலும் ""தமிழக மீனவர்களைப் பொறுத்தவரையில் தடை செய்யப்பட்ட மடியை பயன்படுத்துவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் இந்த மடிகள் முதலில் அழித்தது மீன் வளத்தை அல்ல, ஏழை கட்டுமரக்காரனின் மீன் பிடி உரிமையை. அது உள்ளூர் சிறு கட்டுமரக்காரனின் மீன் பிடி உரிமையை நசுக்குவது உண்மைதான். ஆனால் பிரச்சனை இதுவல்ல" என்று கூறி பன்னாட்டு மீன்பிடியை மட்டும் எதிரியாக காட்டுகின்ற வாதம், சிறுமீனவர்களின் எதிரியை இனவாதம் சார்ந்து பாதுகாத்தல் தான். இந்திய சிறு மீனவர்களின் எதிரியை, எல்லை கடந்து இலங்கை மீனவர்களையும் அழிக்க இது கோருகின்றது. பன்னாட்டு மீன்பிடியை மட்டும் எதிரியாக காட்டிக் கொண்டு, இவர்களுக்கு எதிரான இலங்கை மீனவர்களின் குரலை இலங்கை அரசின் குரலாக திரித்துவிடுகின்றனர்.

இந்த உண்மையை மூடிமறைக்க முனையும் வினவு ""விசைப்படகுகளால் வலைகள் கிழிக்கப்படுவதும், விரித்து வைக்கப்பட்டிருக்கும் வலைகளை விசைப்படகுகள் இழுத்துச் செல்வதும், மீன் பிடி எல்லைகளை தீர்மானிப்பதில் வரும் குழப்பங்களும் மீன்பிடித் தொழிலில் மிக மிக சாதாரணமானது. இது தொடர்பான பிரச்சினை தமிழக மீனவர்களிடையே கூட அடிக்கடி நடப்பதுண்டு. மேலும் இந்தப் பிரச்சினை உலகெங்கும் உள்ள மூன்றாம் உலக நாடுகளில் வாழும் மீனவர்கள் அடிக்கடி சந்திக்கக் கூடியதுதான்." என்கின்றது.

இது இந்திய மீன்பிடியில் பெருமூலதனமும், மீன் வளத்தை அழிக்கும் மீன்பிடி முறைiமையையும் இலங்கை கடலில் அத்துமீறி மீன்பிடிக்கும் உண்மையை மறுக்கின்றது. இதற்கு எதிரான இலங்கை மீனவர்களின் குரலை, இலங்கை அரசின் குரலாகவும், அது ஒரு பொய்யாகவும் கூட சித்தரிக்கின்றது.

சிறுமீன்பிடியை சார்ந்து நின்றும், இலங்கை சிறு மீன்பிடியை சர்hந்து நின்றும், இந்திய மீன்பிடியில் உள்ள பெருமூலதனத்தை எதிர்த்தும், மீள்வளத்தை அழிக்கும் மீன்பிடிக்கு எதிராகவும் முன்வைக்கும் குரல்தான், நாளை புகவுள்ள பன்நாட்டு மீன்பிடியை ஒன்றுபட்டு எதிர்க்கும் ஆற்றலையும் பலத்தையும் ஒற்றுமையையும் கொடுக்கும். இதை குறுகிய இனவாதம் மூலம், தமிழன் என்ற பொது அடையாளம் மூலம் அணுகி எதிர்க்க முடியாது. சிங்கள சிறுமீனவர்களின் நலனை உள்ளடக்கும் வகையில், அனைத்து பெருமூலதனத்திற்கும் எதிரான கொள்கை அவசியமானது.

இக் கடல் பரப்பில் கடல் வளம் அழிந்து போக காரணமான பெரு மூலதன மீன்பிடியை தடை செய்யவும், மீன்வளத்தை அழிக்கும் மீன்பிடியை தடைசெய்யும் வண்ணம்,

சிறுமீனவர்கள் மட்டும் மீன்பிடிக்கும் பொதுக் கொள்கை வகுப்பட வேண்டும். இதுதான் பன்நாட்டு மீன்பிடி முதல் அனைத்தும் பெரு மூலதன மீன்பிடியையும் தடுக்கும். இதுதான் இப்பிராந்தியத்தில் ஒன்றுபட்ட போராட்டத்தை கோரும். இதுதான் இக்கடலில் வரவுள்ள எண்ணை அகழ்வையும், சுற்று சூழலை அழித்து மீன்வளத்தை கொன்று ஒழிக்கும் போராட்டத்தை முன்னிறுத்தும். இனம், எல்லை கடந்த சிறு மீனவர்களின் நலனை முன்னிறுத்திய அரசியல் என்பது, இனவாதம் சார்ந்ததல்ல. வர்க்கம் சார்ந்தது. சிறுமீனவர்கள் நலன் சார்ந்துதான், மீனவர் படுகொலையை அணுகவேண்டும்.

தொடரும்

பி.இரயாகரன்

10.02.2011

 

1. தமிழக மீனவர்கள் படுகொலைக்குள் புளுக்கும் சந்தர்ப்பவாத அரசியல் (பகுதி – 01)

2. தமிழக மீனவர்கள் படுகொலைக்குள் புளுக்கும் சந்தர்ப்பவா)த அரசியல் (பகுதி – 02)

3. தமிழக மீனவர்கள் படுகொலைக்குள் புளுக்கும் சந்தர்ப்பவாத அரசியல் (பகுதி – 03)

4. தமிழக மீனவர்கள் படுகொலைக்குள் புளுக்கும் சந்தர்ப்பவாத அரசியல் (பகுதி – 04)