Language Selection

பி.இரயாகரன் -2011
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

"சரி, தவறு என்பதற்கெல்லாம் அப்பால் முடிந்து போன வரலாற்றில் ஈழப் போராட்டத்தின் பாதுகாப்புப் பின் தளமாக வங்கக்கடல் ஆர்ப்பரித்திருக்கிறது. தென்னகத்தின் தென்கோடிக்கரைகளுக்கும் ஈழப் போராட்டத்திற்கும் பிரிக்க முடியாத உறவு நிலவிவந்திருக்கிறது."என்ற உண்மை, இனவாதத்தை பேசுவதற்கும், அதனை பாதுகாப்பதற்குமான அரசியல் அரணல்ல. மக்களைச் சார்ந்து இருக்காத எல்லா நிலையிலும், இந்திய மற்றும் இலங்கை மக்களுக்கு எதிராகவே அது இருந்துள்ளது. "பிரிக்க முடியாத உறவு" மக்களின் வாழ்வை மேம்படுத்தி, அதை வாழவைக்கவில்லை. போராட்டத்தை வளர்க்கவில்லை. மாறாக அதை அழித்தது. "பிரிக்க முடியாத உறவு" வர்க்கம் கடந்ததல்ல. ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமையில் போராட்டம் நடந்து இருந்தால், பின்தளத்தை பயன்படுத்தல் என்பது வர்க்கம் சார்ந்து கேள்விக்குள்ளாகியேயிருக்கும். தமிழன் என்ற வர்க்கமற்ற நிலையில்தான் "பிரிக்க முடியாத உறவு" அரசியல் இனவாதத்தில் முகிழ்கின்றது.

 

இந்த உறவை பயன்படுத்தித்தான், இந்திய அரசு போராட்டத்தை பயிற்சி, பணம்… கொடுத்து திட்டமிட்டு அழித்தது. மறுபுறம் இனவாதம் சார்ந்த உறவாக, புலியின் மக்கள் விரோதத்தை பூசித்து நியாயப்படுத்தும் உறவாக அரசியல் மயமாகியது. ஒடுக்கப்பட்ட இந்திய - இலங்கை மக்களின் முதுகில் "பிரிக்க முடியாத உறவு" மூலம் குத்தினர். இப்படிப்பட்ட இனவாத சக்திகள் தயவில் நின்று கொண்டு தான், சபா நாவலன் இந்த உண்மையை தமது இனவாதத்துக்கு அரண்செய்ய முனைகின்றார்.

சரி "ஈழப் போராட்டத்திற்கும் பிரிக்க முடியாத உறவு" பற்றி கூறி, தமிழ் இனவாதிகளுடன் கூடிக் கூத்தாட முனையும் தென்னாசிய கோட்பாடுகள், சிங்கள மக்களுடன் இணைந்து முன்னெடுப்பதை ஒரு கோட்பாடாக முன்வைக்கவில்லை. தமிழினவாதம் சிங்கள மக்களை எதிரியாக பார்க்கின்றது. தமிழக இனவாதம் சிங்கள மக்களுடன் இணைந்து, இலங்கைத் தமிழ் மக்கள் போராட வேண்டும் என்ற அடிப்படை விடையத்தை முன்வைப்பது கிடையாது. அவர்களின் குறுகிய இனவாதம், அதை அனுமதிப்பதில்லை. அதனுடனும், புலியுடனும் கூட்டுச் சேர்ந்துள்ள இனியொருவும், அதை முன்னிறுத்தவில்லை.

இந்திய மார்க்சிய லெனினிய கட்சிகள் இதில் எந்த அரசியல் நிலையை முன்வைக்கின்றனர் என்பது, பொது அரசியல் தளத்தில் புதிர்தான். தமிழினவாதம் சார்ந்த சந்தர்ப்பவாதத்துக்குள் மூடி மறைக்கின்றனர். இதை தந்திரோபாயம் என்று கூறுகின்ற அரசியல் முடிச்சுகளை, நாம் தனியாக பின்னால் பார்க்க வேண்டியுள்ளது.

தமிழக மீனவர் பிரச்சனை வெறுமனே, இலங்கை தமிழ் மீனவர் சம்மந்தப்பட்டதல்ல, சிங்கள மீனவர்கள் சம்மந்தப்பட்டதும் கூட. அவர்களும் மீனவர்கள் தான். இதைவிடுத்து இனம் சார்ந்த குறுகிய தளத்தில் காட்டி அணுகுவது, இந்தக் கடலில் மீன்பிடிக்கும் அனைத்து மீனவர்களுக்கும் எதிரான கொள்கை. மீனவர்களுக்கு ஏற்ற மீனவர்கள் சார்ந்த கொள்கையை முன்வைக்காது, இனவாதம் சார்ந்த அனைத்தும் மீனவர்களுக்கு எதிரானது. இதைத்தான் இந்திய - இலங்கை அரசுகள் பெரும் மூலதனத்தடன் சேர்ந்து, இனவாதம் சார்ந்த உள்ளடக்கத்தை தன் கையில் எடுக்கின்றது. தனது சொந்த இனவாதத்தையும், குறுந்தேசிய தமிழினவாதத்தையும் பயன்படுத்தி, பெரும் மூலதனத்துக்கு ஏற்ப அதை திணிக்கின்றது. அதாவது பெரும் மூலதனத்தின் நலனுக்கு ஏற்ப, மீனவர்களைப் பிரித்தாள முனைகின்றது. இதற்கு அமைவாகவே குறுந் தமிழ்தேசியம் தன் பங்குக்கு வர்க்கமற்ற இனம் சார்ந்த மீனவர்கள் பிரச்சனையாக காட்டி, இனங்களைப் பிளந்து கூச்சல் போடுகின்றது.

"உண்மையிலேயே வடக்குக் கிழக்கில் உள்ள மீனவர்களுக்கும் தமிழ் மீனவர்களுக்கும் பிரச்சனைகள் இருந்ததா? என்றால் புலிகளின் போராட்டம் வலுப்பெற்ற காலங்களில் தமிழக மீனவர்களுக்கு புலிகள் எவ்விதமான தொல்லைகளும் கொடுத்ததில்லை. தங்களின் போராட்டத்திற்கு வலுவான பின் தளமாக உள்ள மீனவர்களுடன் அவர்கள் நல்லுறவு பேணினார்கள். அதற்கு முந்தைய காலங்களில் யாழ்ப்பாண மீனவர்கள் தமிழக மீனவர்களை மேலாதிக்கம் செய்தாலும் காலப்போக்கில் இது இல்லாது போயிருந்தது. புலிகள் அரசியல் நலனை கருத்தில் கொண்டு இந்த முரண்பாடுகளைக் களைவதில் பெரும்பங்காற்றினார்கள்;"

புலிகளைப் போற்ற, யாழ் மேலாதிக்கத்தின் உள்ளடக்கத்தை இதுவாக காட்டித் திரிக்கின்றனர். "யாழ்ப்பாண மீனவர்கள் தமிழக மீனவர்களை மேலாதிக்கம் செய்தாலும் காலப்போக்கில்" இது ஒரு கற்பனையான இட்டுக்கட்டிய புனைவாகும். 1980 களில் கரையோர சிறு மீன்பிடிகள் நிலவிய காலம். யாழ் மீனவர்கள் மேலாதிக்கம் செய்ய, அவர்கள் இந்தியக் கடலில் மீன்பிடிக்கவில்லை. இந்திய மீனவர்கள் தங்கள் கடலில் மீனின்றி, இலங்கைக் கடலில் சென்று மீன்பிடிக்கவில்லை. தமிழக மீனவர்கள் மேல் யாழ் மீனவர்கள் மேலாதிக்கம் செய்தனர் என்பது புரட்டு. மன்னார் உள்ளிட்ட யாழ் மீன்பிடி வர்க்கரீதியாக மிக பின் தங்கிய, சிறு மீன்பிடி நிலவிய காலம்;. யாழ் மீனவர்கள் இந்திய மீனவர்களை ஆதிக்கம் செய்தது என்பது பொய்யானது. 1983 களில் இந்தியா பயிற்சியும், கடல் ஊடான பயணங்களும், படிப்படியாக இலங்கை கடற்படையின் விரிவாக்கமும், இலங்கை மீனவர்களின் மீன்பிடியை இல்லாதாக்கியது. மீன்பிடி என்பது இல்லாது போனது. பல மீன்பிடிப் பிரதேசங்கள் இராணுவ பிரதேசங்களாகியது. இப்படி மீன்பிடியே அருகிவந்த காலம்;. இப்படியிருக்க, "புலிகள் அரசியல் நலனை கருத்தில் கொண்டு இந்த முரண்பாடுகளைக் களைவதில் பெரும்பங்காற்றினார்கள்" என்பது அப்பட்டமான பொய். இலங்கை மீனவர்களின் மீன்பிடி நின்று போக, இந்தியக் கரைகளின் மீன்வளத்தை பெரும் மூலதனம் அழித்துவிட்ட காலம். இது எல்லை கடந்த இந்திய மீன்பிடியை படிப்படியாக விரிவாக்கியது.

புலிகள் இந்தியக் கடத்தல்காரர் மற்றும் யுத்த வியாபாரிகளுடன் தொழில் நடத்த, இந்திய மீனவர்களின் எல்லைக் கடத்தலை விரும்பினர். இதுதான் புலிகளின் கொள்கை. இது தான் புலிகளின் தொழிலுக்கு ஏற்ற கொள்கை. தங்கள் குறுகிய நலனுக்கு ஏற்ப இலங்கைத் தமிழரை ஒடுக்கிய புலிகள், இலங்கைத் தமிழ் மீனவர்களின் நலனையும் மறுத்தனர். தங்கள் விடுதலைப் போராட்டத்தின் பெயரிலான மாபியா வர்த்தகம் செழிக்கும் கொள்கையை கடைப்பிடித்தனர். இங்கு "யாழப்;பாண மீனவர்கள் தமிழக மீனவர்களை மேலாதிக்கம் செய்தாலும் காலப்போக்கில்" இல்லாமல் போனது எனக் கூறுவது, இந்திய மீனவர்களின் எல்லைக் கடத்தலுக்கும் மீன் வளத்தை அழிக்கும் தமிழக மீனவர்களின் மீன்பிடிக்கும் எதிரான இலங்கை தமிழ் மீனவர்களின் குரல்களை ஒடுக்கியது தான். இதில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இலங்கைத் தமிழரின் குரல்களையும் புலிகள் ஒடுக்கிய காலம்;. இங்கு வடகடலில் இலங்கை தமிழ் மீனவர்களின் குரல்களை புலிகள் ஒடுக்கியதை சரி என்ற வாதத்தையே, யாழ் மீனவர்கள் பற்றிய கூற்று முன்னிறுத்துகின்றது. இன்று யாழ் மீனவர்களின் குரல்களை, பேரினவாதத்தின் குரல் என்கின்றனர். சரி பேரினவாதத்தின் குரல் என்றால், யாழ் மீனவர்களின் குரல்தான் என்ன? அவர்களின் கோரிக்கை என்ன? இதற்கு பதில் "ஈழப் போராட்டத்திற்கும் பிரிக்க முடியாத உறவு" பற்றி கூறுவது, மீனவர்களுக்கு எதிரான புளுடா அரசியல்.

உண்மையிலேயே வடக்குக் கிழக்கில் உள்ள மீனவர்களுக்கும் தமிழ் மீனவர்களுக்கும் பிரச்சனைகள் இருக்கவில்லையா? இல்லையென்ற வாதம், குறுகிய தமிழினவாதம்;. இதில் உள்ள சுய முரண்பாடு, பிரச்சனையை "யாழப்;பாண மீனவர்கள் தமிழக மீனவர்களை மேலாதிக்கம்" என்று கூறி, அதைத் திரிக்கின்றனர். புலியைச் சார்ந்து நின்று, மீனவர்கள் பிரச்சனையை மூடிமறைத்து மறுக்கின்றனர். இன்றைய இலங்கை மீனவர்களின் குரல்களை பேரினவாதக் குரலாக சோடிக்கின்றனர். இலங்கை மீனவர்களுக்கு எந்தக் குரலும் இல்லை என்று கூறி, அவர்கள் மேல் மேலாதிக்கம் செய்கின்றனர். இதை இலங்கை அரசு மட்டும் செய்யவில்லை, தமிழினவாதம் பேசும் தமிழக மற்றும் இலங்கை தமிழர்கள் அனைவரும் இதையே செய்கின்றனர். முன்பு அரசும் - புலியும் செய்ததையே மறுபடியும் செய்கின்றனர். மார்க்சிய லெனினிய கட்சிகள் இதை வினவாது, இந்த தண்டவாளத்தில் ஏறி பயணிப்பதையே மீனவர் நலனாகவும் தமிழர் நலனாகவும் காட்ட முனைகின்றனர்.

தொடரும்

பி.இரயாகரன்

08.02.2011

1. தமிழக மீனவர்கள் படுகொலைக்குள் புளுக்கும் சந்தர்ப்பவாத அரசியல் (பகுதி – 01)

2. தமிழக மீனவர்கள் படுகொலைக்குள் புளுக்கும் சந்தர்ப்பவா)த அரசியல் (பகுதி – 02)

3. தமிழக மீனவர்கள் படுகொலைக்குள் புளுக்கும் சந்தர்ப்பவாத அரசியல் (பகுதி – 03)