Language Selection

பி.இரயாகரன் -2011
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழக மீனவர்கள் பிரச்சனையின் தனித்துவத்தை மறுப்பதுதான், தமிழக தமிழினவாத புலியிச அரசியல் உள்ளடக்கமாகும். இலங்கை இனப்பிரச்சனையை மீனவர் பிரச்சனைக்குள் உள்ளடக்கி, இலங்கை இனப்பிரச்சனையை முதன்மைப்படுத்திய தமிழினவாதம் தான் தமிழகத்து தமிழினவாதமாகும். குறிப்பாக தமிழக மீனவர்களின் (வர்க்க) அரசியல் மற்றும் சமூக பொருளாதார நலன் சார்ந்த, எந்த உள்நாட்டு அரசியலையும் கொண்டவாகள் அல்ல இவர்கள். மீனவர் படுகொலை அரசியலை முன்னிறுத்திய இனவாதம்தான், இலங்கை சார்ந்து அவர்கள் மூடிமறைத்து முன்தள்ளும் மக்கள் விரோத அரசியல். இப்படி ஒரு குறுகிய அரசியலையே, தமிழக தமிழினவாதம் முன்தள்ளுகின்றது. இது குறிப்பாக தமிழக தேசிய இன முரண்பாட்டை பேசாத, புலித்தேசிய தமிழினவாத அரசியலாகும். இந்திய மீனவர்களின் வர்க்க வேறுபாட்டையும், அவர்களின் குறிப்பான கோரிக்கையையும் மறுத்து முன்வைக்கும், குறுகிய இனவாத அரசியலாகும்.

 

 

இலங்கைக் கடற்படையின் படுகொலை என்பது, அரசியல் நோக்கம் கொண்டது. இது போன்ற அரசியல் நோக்கத்தின் அடிப்படையில், தொடர்ந்தும் இந்தியா தலையிடுகின்றது. அண்மைக் காலமாக இந்தியாவின் உள்ளே, இலங்கையைச் சோந்தவர்களை கொண்ட இரகசிய நகர்வுகளை பலமுனையில் செய்கின்றது. இலங்கையில் இருந்து பலரை இலங்கை அரசுக்கு தெரியாது உதிரியாகவே இந்தியாவுக்குள் வரவழைத்து, இரகசிய சதியில் ஈடுபடுகின்றது. புலம்பெயர் சமூகத்துக்குள் இது தன்னை விரிவாக்கி, திடீர் தேசியம் மூலம் காய் நகர்த்துகின்றது. நாளை இலங்கையில் குண்டுகள் கூட, புலியல்லாத அரசியல் தளத்தில் வெடிக்கலாம்.

இப்படி யுத்தத்தின் பின்னான மீனவப்படுகொலை அரசியல் நோக்கம் கொண்டது. கடற்படையின் படுகொலை என்பது, குறிப்பானதல்ல. 1971, 1989-1990 பத்தாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களைக் கொன்ற அதே இராணுவம் தான், தமிழ் மக்களையும் கொன்றது. 7 வருடங்களுக்கு மேல் சில பத்தாயிரக்கணக்கானவர்களை சிங்கள இளைஞர்களை சிறையில் அடைத்து வைத்திருந்த இராணுவம்தான் தமிழ் இளைஞர்களை சிறையில் வைத்திருக்கின்றது. இந்த இராணுவம்தான் தொடர்ந்து தமிழக மீனவர்களைக் கொல்லுகின்றது. தமிழர் சிங்களவர் என்று எந்த பாகுபாடுமற்ற வகையில் தொடர்ந்து ஒடுக்கியும், அவர்களைக் கொன்றும் வருகின்றது. கொல்லுதல் என்பது குறிப்பானதல்ல.

இப்படியிருக்க தமிழ் மக்களையும், புலிகளையும், தமிழக மீனவர்களையும் கொன்ற ஒரு அரசுக்கு எதிரான எல்லையில், அதை ஆதரித்த இந்திய அரசுக்கு எதிரான வகையில், தமிழக புலியிச தமிழினவாதம் தன் அரசியல் கோசத்தை முன்தள்ளுகின்றது. இனம் சார்ந்த இந்த எதிர்ப்பும் அதன் அரசியல் உள்ளடக்கமும், மக்களைச் சாராத மக்கள் அதிகாரத்தைக் கோராதது. இந்த எதிர்ப்பு அரசியல் குறுகியது. மக்களுக்கு எதிரானது, குறிப்பாக மீனவர்களுக்கு எதிரானது. புலியிசம் இலங்கையில் மக்களுக்கு எதிராக எப்படி இருந்ததோ, அதைச் சார்ந்து உருவான தமிழக தமிழ் தேசியமும் கூட மக்களைச் சார்ந்ததல்ல.

இப்படி இலங்கை இனப்பிரச்சனை விடையத்தில், பாராளுமன்றமல்லாத தமிழகப் பிரிவினர் முரண்பாட்டுடன் கையாண்ட குறுகிய வழிமுறைகள் தான், இங்கு மீனவர் பிரச்சனையில் பிரதிபலிக்கின்றது. தமிழக புலித் தமிழினவாதிகள் முதல் மார்க்சிய லெனினிய குழுக்கள் வரை, தமக்குள் முரண்பட்ட அதே நேரம் மார்க்சிய லெனினிய குழுக்கள் படிப்படியாக புலி தமிழினவாதிகள் நிலைக்குள் சரிந்தனர். குறிப்பாக மக்கள் யுத்தக்குழு புலியை வெளிப்படையாக ஆதரிக்கின்ற நிலைக்கும், ம.க.இ.க இதில் சந்தர்ப்பவாத நிலையெடுக்கும் அளவுக்கும் சரிந்து சென்றனர். இப்படி அனைத்தும், இதற்குள் தான் அடங்கும். மார்க்சிய லெனினிய குழுக்களின் இந்தப் போக்கில் இருந்து, எந்த மாற்றமும் ஏற்படவில்லை. (அமைப்புகளின் உள்ளே இது தொடர்பாக முரண்பாடுகள் இருக்கலாம்.) இந்த இனவாத எல்லையில் தான், மீனவர் பிரச்சனை அணுகப்படுகின்றது. அது தமிழக (பாராளுமன்றம் அல்லாத பிரிவினரின்) புலித் தமிழினவாதிகளின் நோக்குகளில் இருந்து முன்தள்ளப்படுகின்றது. மார்க்சிய லெனினியம் தனக்கான சொந்த வழியில் நின்று, இதை தனித்துவமாக அணுகவில்லை. குறிப்பாக புலியையும் புலியிசத்தையும், அது சார்ந்து உருவான தமிழினவாதத்தையும் அது வெளிப்படையாக விமர்சிக்கவில்லை. புலியிசம் சார்ந்த பொய்களையும் புரட்டுகளையும் சார்ந்து நின்றும், அதை முன்னிறுத்தியும், அதை ஆதரித்தும், அதன்பின் அனைத்தையும் குறுக்கிவிடுகின்றனர்.

இந்த வகையில் புலியிச தமிழினவாதிகளின் நோக்கங்களில் எழுதிய இனியொரு கட்டுரையை, வினவு வினவாது அதை "ஆழமானதும் அவசியமானதுமான இக்கட்டுரையைப் படியுங்கள், பல உண்மைகளைத் தெரிந்து கொள்ளலாம்." என்று வழிகாட்டுகின்றது. இது உண்மைகளைக் கொண்டதா? இதில் உண்மைகள் அல்லாத எதையும் சுட்டிக்காட்டி, வினவு வினவவில்லை. இதனால் இலங்கை மார்க்சிய லெனினியவாதிகள் ஆகிய நாங்கள், ஓவ்வொன்றாக வினவுவது இன்று அவசியமாகி விடுகின்றது.

1. "பல நேரங்களில் சிங்களக் கடற்படை இராமேஸ்வரம் மீனவ கிராமங்களுக்குள் கரையிறங்கி மீனவர்களைத் தாக்கி கொன்று கொள்ளையடித்துச் சென்றிருக்கிறது." இது ஒரு உண்மையா? சொல்லுங்கள். இப்படி நடக்காத ஒன்றை, நடந்ததாக இட்டுக்கட்டிய புரட்டு. அதுவும் "பல நேரங்களில்" என்று, புலிப்பாணிக் கதையை புலியிச தமிழினவாதிகள் சொல்லுகின்றனர். வினவு இதையே "ஆழமானதும் அவசியமானதுமானது" என்று கூறி, தமிழக குறுகிய இனவாதத்தை தூண்டும், பொய்களுக்கு மக்களை வழிகாட்டுகின்றனர். வெட்கக்கேடான அரசியல்.

இலங்கைக் கடற்படை எல்லை கடந்து தாக்கியிருக்கின்றது. அததான் உண்மை. அந்த உண்மையைக் கொண்டு, இந்தியக் கரைகளில் இறங்கி "பல" தரம் தாக்கியதாக, கொள்ளை அடித்ததாக கூறுகின்ற பொய் அரசியலில் குறுகிய இனவாதமாகும். மக்களை அறிவின்பாலான தேசிய உணர்வை உருவாக்கும் அரசியல் நேர்மையைக் கொண்டதல்ல, இந்தக் கட்டுரையின் நோக்கம். இந்தப் பொய் மூலம் மக்களை அறிவற்ற மந்தைக் கூட்டமாக மாற்றி, வரலாற்றை மக்கள் தெரிந்து கொள்ளாத பொய்கள் மூலம், மக்களை மேய்க்கின்ற குறுகிய மக்கள் விரோத இனவாதக் கூட்டத்தின் குறுகிய அரசியலாகும்.

2. "இது அரசால் (இந்தியா) தடை செய்யப்பட்ட மீன் வலையாகும். இதே வலையை இலங்கை சிங்கள மீனவர்களும் பயன்படுத்துகிறார்கள்" ஆகாகா என்ன இனவாத தர்க்கம். இலங்கை சிங்கள மீனவர்களும் பயன்படுத்துகின்றனர் என்பது, இங்கு இனவாதம். இந்திய மீனவர்கள் இலங்கைக் கடலில் அதைப் பயன்படுத்துகின்றனர் என்பது தான் விடையம். அதாவது எல்லை கடந்தும், அத்துமீறியும், அதுவும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலையை பாவித்தலும் தான் இங்கு விடையம். இதற்கு பதில் சொல்லாது இருக்க, சிங்கள மீனவர்களை இனவாதிகள் இழுத்து வருகின்றனர். எப்படி தமிழக மீனவர்கள் இன அடையாளத்துக்கு அப்பால் மீனவர்களாக இருக்கின்றனரோ. அதுபோல் தான் சிங்கள இனத்துக்கு அப்பால், அவர்கள் மீனவர்கள். இங்கு குறுகிய இனத்துக்கு அப்பால், அவர்கள் எல்லாம் மீனவர்கள். இதை மறுக்கும் இனவாதமே, இங்கு முதன்மை பெற்று கொப்பளிக்கின்றது.

சரி சிங்கள மீனவர்கள் பாவிப்பதாகவும், இலங்கை தமிழர் பகுதியில் அவர்கள் மீன்பிடிப்பதாகவும் கூறிய எந்த தர்க்கத்தையும், எல்லை கடந்து மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் செயலுக்கு ஏற்ற நியாயம் எனக் கற்பிக்க முடியாது. இங்கு இரண்டு நாடுகள் என்பதும், இது தனக்கென்று எல்லைகளைக் கொண்டது.

தமிழக மீனவர்கள் நீர் ஓட்டத்திலும், எல்லை தெரியாது தான் எல்லை கடப்பதாக கூறுகின்ற குறுகிய அரசியல் சார்ந்த இனவாதக் கண்ணோட்டம், சிங்கள மீனவர்கள் விடையத்தில் இதை ஒரு அரசியல் அளவுகோலாகக் கூறுவது கிடையாது. இனவாதக் கூச்சல் தான், அப்படியும் இப்படியுமாக இங்கு இட்டுக் கட்டுகின்றது.

சரி "இதே வலையை இலங்கை சிங்கள மீனவர்களும் பயன்படுத்துகிறார்கள்" என்று தமிழினவாதிகள் கூறுகின்ற இந்த கூற்றுப் பொய்யானது. இலங்கை (சிங்கள) மீனவர்கள் எல்லைகடந்து இந்தியக் கடலில் மீன்பிடித்த போது, கைதான பல சம்பவங்கள் உண்டு. அப்போது அவர்கள் தடைசெய்யப்பட்ட வலையை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்படவில்லை. இலங்கையில் தடைசெய்யப்பட்ட இந்த வலையை சிங்கள மீனவர்கள் பயன்படுத்துவது கிடையாது. அதை அவர்கள் களவாகத்தான் பயன்படுத்த வேண்டும்;. இலங்கை தமிழ் மீனவர்கள் கூட இப்படித்தான் பயன்படுத்துகின்றனர். இவை சட்டத்துக்கு புறம்பான, விதிவிலக்கு. ஆனால் தமிழக பெரும் மூலதன மீனவர்கள், இதைத்தான் பெருமளவில் பயன்படுத்துகின்றனர். இந்திய சிறு மீன்பிடியை, இப்படித்தான் அவர்கள் அழித்தார்கள். அண்மையில் நடந்த இலங்கை இந்திய மீனவர்களது பேச்சுவார்த்தையில், இலங்கை மீனவர்கள் முன்வைத்த கோரிக்கையில் இது முதன்மையானது. இலங்கைக் கடலில் 70 நாள் மீன்பிடியைக் கோரிய இந்திய மீனவர்கள், அக்காலத்தில் தடைசெய்யப்பட்ட மீன்பிடியை தடுக்கும் உத்தரவாதத்தை கொடுக்க முடியவில்லை. இதனால் தான் நடந்த குறைந்தபட்ச பேச்சுவார்த்தை கூட, மேலும் முன்னேற முடியாது போனது. 70 நாள் எல்லை கடந்து இலங்கைக் கடலில் மீன்பிடித்தல் பற்றி பேசப்பட்டது. இது நீர் ஓட்டத்திலும், எல்லை தெரியாது சென்ற மீனவர்கள் விவகாரம் அல்ல. இக்காலத்தில் இலங்கை மீனவர்கள் மீன்பிடிக்க வரக் கூடாது என்று நிபந்தனையும் விதிக்கப்பட்டது. இது இலங்கை மீனவர்களைப் பாதிக்காதா? இது இலங்கைக் கடலில், இலங்கை - இந்தியா மீனவர்களின் முரண்பாடுகளை உள்ளடக்கியது. இலங்கை கடற்படையின் படுகொலையின் பின்னால் இயங்கும், மற்றொரு ஆக்கிரமிப்பும் நியாயப்படுத்தலுமாகும். இதை மூடிமறைக்க நீர் ஓட்டம், எல்லை தெரியாத எல்லை கடப்பு, கச்சதீவுப் பயன்பாடு என்று ஏய்க்கும் கதைகள் சொல்லுகின்றனர்.

சரி அவர்களின் அடுத்த வாதத்தை எடுப்போம். சிங்கள மீனவர்கள் தடைசெய்யப்பட்ட வலையை பயன்படுத்தினால், அதுவும் இந்திய எல்லைக்குள் அத்துமீறி பயன்படுத்தினால் தான், அது உங்கள் மீனவர் பிரச்சனை. அதை இலங்கை எல்லைக்குள் பயன்படுத்தினால், அது இலங்கை மீனவர்களின் பிரச்சனை. எல்லை கடந்து மீன்பிடிக்க சிங்கள மீனவர்களை எதிரியாகக் காட்டிய தர்க்கம், குறுகிய இனவாதத் தன்மை கொண்டது. எப்படி ஒடுக்கப்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை ஓடுக்கப்பட்ட தமிழ் மீனவர்களின் எதிரியல்லவோ, அப்படித்தான் ஒடுக்கப்பட்ட சிங்கள மீனவர்களும். இலங்கை அரசு சிங்கள மீனவர்களுக்கு சலுகை கொடுக்கும் நண்பனல்ல, மீனவர்களின் எதிரிதான். பிரித்தாளும் இனப்பாகுபாடு என்பது, சிங்கள மக்களை ஒடுக்கியாளும் அரசியல் தந்திரம் தான்.

 

தொடரும்

 

பி.இரயாகரன்

05.02.2011

 

தமிழக மீனவர்கள் படுகொலைக்குள் புளுக்கும் சந்தர்ப்பவாத அரசியல் (பகுதி – 01)