கொல்லப்பட்ட தமிழக மீனவர்களை முன்னிறுத்தி அரசியல் பித்தலாட்டங்கள், இலங்கையில் வடக்கு தமிழ் மீனவர்களின் உரிமைப் பறிப்பாக மாறிச்செலுகின்றது. இந்திய மீன்வளம் அழிந்துபோன நிலையில் தமிழக மீனவர்களின் வாழ்வுக்கு வழிகாட்ட வக்கற்ற இந்திய அரசு, மீன்வளத்தை அழிக்கும் பெருமூலதனத்தைக் கொண்ட மீன்பிடியை இலங்கையின் கடல் எல்லைக்குள் திணிக்கின்றது. தமிழினவாதிகள் இதையே மறைமுக அரசியலாகக் கொண்டு, இலங்கை மக்களுக்கு (வடக்கு தமிழ்மக்களுக்கு) எதிரான குறுகிய தங்கள் சுயநல அரசியலை முன்தள்ளுகின்றனர். இந்திய மார்க்சிய லெனினிய குழுக்கள் தமிழினவாதிகளை கடந்து, இதை வழிகாட்ட முடியாது திக்குத் தடுமாறி அங்குமிங்குமாக தடுமாறுகின்றனர்.

 

 

மக்களை சுரண்டுவதற்காக ஒடுக்கி அதன் மூலம் கொழுத்து வாழும் கூட்டம், இதற்காக கொல்வது அதன் குணாம்சமாகும். மக்களை கொல்லாத அதிகாரம் என்பது, ஜனநாயகமல்ல. இங்கு தான் "இனி ஒருவரையும் சாகவிட மாட்டோம்" என்று கூறுகின்ற கேலிக் கூத்தைப் பார்க்கின்றோம். இதுவரை காலமும் ஏன் சாகவிட்டீர்கள்? சாகக்கொடுத்து இந்திய விஸ்தரிப்புவாதத்தை தென்னாசியாவில் நிறுவும் சகுனி ஆட்டம், என்ன இலங்கையில் முடிந்து விட்டதா? இல்லை

 

இப்படியிருக்க தமிழக தேர்தல் அரசியல் கூத்துகள் மீனவர்களுக்காக பலவாகின்றது. தமிழக மீனவர்கள் உயிர் முதல், இலங்கையின் கடல்வளம் அனைத்தையும் இன்று தேர்தல் பூச்சாண்டி அரசியலுக்குள் மலினப்படுத்தப்படுகின்றது.

 

தேர்தல் காலத்தில் மேலெழும் திடீர் காலன்கள் இந்த விடையம் மீது நடத்துகின்ற ஆக்கிரமிப்புகள், பிண அரசியலை வைத்து பிழைக்கப் புறப்படுகின்றது. இதன் இன்னொரு பக்கத்தில் தமிழினவாத மற்றும் புலிவாத இனவாதக் கூட்டம் இதை வைத்து குறுகிய சுயநலத்துடன் ஒட்ட முனைகின்றது. இதன் பின்னுள்ள பல பரிணாமங்களையும், மக்கள் விரோத கூத்துக்களையும் இனம் காண்பது அவசியமானது.

 

1. தமிழக மீனவர்கள் கொல்லப்படுதல்;

 

2. எல்லையைத்தாண்டி மீன்பிடித்தல்

 

3. கடல்வளத்தை அழிக்கும் வண்ணம் மீன்பிடி நடத்தும், பெருமூலதனத்தைக் கொண்டோரின் இந்திய மீன்பிடி

 

4. எதிர்காலத்தில் மீன்பிடி நடத்த உள்ள பன்னாட்டு நிறுவனங்கள்

 

5. வடக்கு மீனவர்களின் மீன்வளத்தை பாதுகாத்தலும், அவர்களின் உரிமையும்

 

6. எதிர்காலத்தில் இந்தக் கரைமீது உரிமையில்லாத, இலங்கையின் மற்றைய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் மீன்பிடிக்கும் போது ஏற்படவுள்ள பிரச்சனைகள்

 

7. தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமையும், தடைசெய்யப்பட்ட மீனைப் பிடித்தலும்

 

இப்படி பலமுனைப் பிரச்சனைகள் இதன் பின்னணியில் இருக்க, மீனவர்கள் கொல்லப்படுதல் என்ற குறிப்பான விடைத்தின் ஊடாக, தமிழக தமிழனவாதிகள் இலங்கை தமிழின மீன்பிடிப்பாளருக்கு எதிரான இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பை மறைமுகமாக திணிக்க முனைகின்றனர்.

 

1. இலங்கையில் அத்துமீறி மீன்பிடிக்கும் உரிமையை கோருகின்றனர்.

 

2. கடல்வளத்தை அழிக்கும் இந்திய (தமிழக) பெருமூலதனத்தைக் கொண்ட மீன்பிடி இலங்கையின் எல்லையில் சுதந்திரமாக செயல்படும் அங்கீகாரத்தைக் கோருகின்றனர்

 

3. இலங்கை மீனவர்களின் வலைகளை வெட்டி அழித்து மீன்பிடிக்கும் (றோலர் முதல்) இந்திய முறையை நியாயப்படுத்தியும், அதற்கான தங்கள் ஆக்கிரமிப்பு உரிமையையும் கோருகின்றனர்.

 

4. இதுவரை காலமும் பேரினவாதம் இலங்கை தமிழ் மீனவர்கள் ஒடுக்கிய இடத்தை, இந்திய மீனவர்களின் உரிமையாக்குமாறு இலங்கையிடம் கோருகின்றனர்.

 

பேரினவாதத்தின் கீழும், இந்திய தமிழினவாதிகளின் இனவாதக் கூச்சலின் கீழும், வடக்கு தமிழ் மீனவர்களின் எந்தக் குரலும் மேல் எழாத வண்ணம் இன்று ஒடுங்கிப்போகின்றது.

 

தமிழின மீனவர்களைக் கொல்லுதல் மூலம், இலங்கையில் வடக்கு மீனவர்களின் உரிமைகள் திட்டமிட்டு மறுக்கப்படுகினறது. ஒரு ஒடுக்குமுறையைக் காட்டி, மற்றொரு தரப்பின் உரிமைகளை மறுக்கின்ற அரசியல் நகர்வாக, இதுவே தமிழினவாதமாக மாறிச்செல்லுகின்றது. தமிழக மீனவர்களைக் கொல்வதன் மூலமும், அதற்கு எதிரான போராட்டங்கள் மூலமும் இலங்கையில் வடக்கு மீனவர்களின் (தமிழ்) உரிமைகள் பறிபோகின்றது. இதன் பின்னணியில் இந்திய இலங்கை அரசு நடத்துகின்ற இரகசிய ஒப்பந்தங்கள், இலங்கைக் கடலில் இந்திய பெருமூலதனத்தின் மீன்பிடிக்கும் உரிமையாக மாறிச் செல்லுகின்றது. இது இலங்கை மீனவர்களை மட்டுமல்ல, இந்திய சிறு மீன்பிடியை நாசம் செய்கின்ற அரசியல் நகர்வாக இந்தப் போராட்டம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக வழிகாட்டுகின்றது.

 

பி.இரயாகரன்

31.01.2011