தேசம்நெற்றில் ஜேவாலும் ரகுமான்ஜானும் "பொறுக்கிமான்", "ராம்" என்ற புனை பெயர்களில் அண்மையில் எழுதிய புனை கதைகளுக்கு புளட்டின்  வடமாகாணப் பொறுப்பாளரும் பின்னர் புளட்டின் அராஜகங்களுக்கு எதிராக புளட்டை  விட்டு  வெளியேறி தீப்பொறியில்  பணியாற்றி நேசன் எழுதிய பதில்:

 

அண்மைக்காலமாக தேசம்நெற்றில் வரும் புளட்(தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்) பற்றியும் தீப்பொறிபற்றியும் பதிவுகளையும் பின்னோட்டங்களையும் பார்க்கும்போது இவர்களுமா புளட்,  தீப்பொறி போன்ற அமைப்புகளில் இருந்தார்கள் என எண்ணத் தோன்றுகிறது.

 

இப்படிப்பட்டவர்கள் எல்லாம் இன்று மக்கள் பற்றியும் புரட்சி பற்றியும் பேசுவதெல்லாம் வெளிவேசமே தவிர வேறு எதுவுமே இல்லை என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமே இல்லை.

 

இவர்கள் தம்மை "முன்னேறிய பிரிவினர்" என்று அழைத்துக் கொள்கிறார்களே ஒழிய இவர்கள் முன்னேறிய பிரிவினரே அல்ல என்பது வெள்ளிடைமலை.

 

நான் 1983இல்  இருந்து முழு நேரமாக புளட்டில் செயல்பட்டு  வந்தேன் . 1985இல் புளட்டில்  இருந்து வெளியேறி 1992வரை தீப்பொறி குழுவில்  செயல்பட்டு வந்தேன். .  ஆனால் என்னுடன் அன்று செயற்பட்ட "தோழர்கள்" (இந்த சொல்லை இன்று பயன்படுத்தவே மிகவும் வெட்கப்படுகிறேன்) இன்று இப்படியான கீழ்த்தரமான நிலைக்கு சென்று தனிநபர்கள் பற்றி வசைபாடுதல், உண்மைகளை திரித்து கூறுதல் என்பவற்றை எப்படிச் சொல்வது?

 

இவற்றுக்கெல்லாம் மேலாக  புளட் மத்திய கமிட்டியில் இருந்தேன், தீப்பொறியில் முக்கிய பதவியில் இருந்தேன் என்றெல்லாம் தம்பட்டம் அடிக்கிறார்கள்.  "பொறிமகன்"  என்றும் "ராம்" என்றும் தேசம்நெற்றில் திரைமறைவில் ஒளிந்திருந்து புளட்டின் வரலாறு பற்றியும் தீப்பொறியின் வரலாறு பற்றியும் தெரியாதவர்கட்கு "கதை" சொல்கிறார்கள்.

 

இந்தக் கதையில் சில உண்மை சம்பவங்களையும்  நிறையவே உண்மைக்கு புறம்பான சம்பவங்களையும் அங்கும் இங்குமாக எடுத்து அவற்றை தொகுத்து எல்லாவற்றையும் கண்ணாடி சந்திரன் மேல் போடுவதாக பாசாங்கு செய்கிறார்கள்.

 

ஏன் இப்படி திரைமறைவில் இருந்து அபாண்டமான கட்டுரைகளை தேசம்நெற்றில் வரைந்து தள்ளுகிறீர்கள்?

 

இதுதான் இன்றைய சமுதாயத்தின் கவலைக்குரிய விவகாரமாக  நினைக்கிறீர்களா? நீங்கள் சொல்வது போல் நீங்கள் புளட், தீப்பொறியில் இருந்தது உண்மை எனில் நீங்கள் "பொறிமகன்"  என்றும் "ராம்" என்றும் தேசம்நெற்றில் திரைமறைவில் இருந்து உண்மைக்கு புறம்பாக கீழ்த்தரமான முறையில் கட்டுரை வரைந்து தள்ளுவதை விட்டு, திரைமறைவில் இருந்து வெளியே வாருங்கள்!

 

எது உண்மை எது உண்மைக்கு புறம்பானது என்று பேசுவோம்!

 

நான் 1983இல் புளட்டில் முழுநேரமாக செயல்பட தொடங்கி இருந்தாலும் அதற்கு முன்பே எனது சகோதரருக்கு காந்தீயம், புளட் போன்றவற்றுடன் இருந்த தொடர்புகள் மூலமும், எனது நண்பர்களுக்கு இருந்த தொடர்புகள் மூலமும் எமது வீட்டை புளட் பல்வேறு தேவைகளுக்கு பல காலமாக பயன்படுத்தியதாலும்  புளட்டில் இருந்தவர்கள் பற்றியும் அவர்களது நடவடிக்கைகள் பற்றியும் ஓரளவு அறிந்திருந்தேன்.

 

1983க்கு பின்னர் பெரிய முரளி, சத்தியமூர்த்தி, பார்த்தன், கேதீஸ், சலீம், பொன்னுத்துரை, கண்ணாடி சந்திரன், செல்வன் (கிருபா) , அகிலன், கிறிஸ்டி, ஈஸ்வரன், அசோக், வவுனியா தம்பி, மல்லாவி சந்திரன், யக்கடயா ராமசாமி போன்றவர்களுடன் இணைந்து செயற்பட்டேன்.

தீப்பொறி குழு உருவாகியதில் இருந்து 1992வரை தீப்பொறியிலும்  செயல்பட்டு வந்தேன். எனவே பொறிமகனும் ராமும் தேசம்நெற்றில் திரைமறைவில் இருந்து எழுதும் சில உண்மை சம்பவங்களுடன் சோடித்து எழுதும் உண்மைக்கு புறம்பான விடயங்களை கண்களை மூடிக்கொண்டு தொடர்ந்தும் பார்த்துக் கொண்டிருக்க போவதில்லை.

 

என்னுடைய இவ்வளவு கால மௌனத்திற்கும் அறிகுறி நீங்கள் திரைமறைவில் இருந்து தேசம்நெற்றில் சொல்வதெல்லாம் உண்மை என்று அர்த்தமாகிவிடாது.

 

நீங்கள் உண்மைக்கு புறம்பாக இவற்றை எல்லாம் தேசம்நெற்றில் எழுதும்போது புளட்டுக்கும் தீப்பொறிக்கும் உண்மையான விடுதலை உணர்வோடு வந்து இறந்து போனவர்களை எல்லாம் எண்ணிப் பார்ப்பது இல்லையா?  அல்லது இன்னமும் பல ஆபத்துகள் மத்தியில் இருக்கும் சக நண்பர்களை பற்றி நினைத்து பார்ப்பதில்லையா? புளட் அராஜகத்துக்கு எதிராக போராடி புளட்டாலும் பின்பு புலிகளாலும் கொல்லப்பட்டவர்களை நினைத்து பார்ப்பதில்லையா?

தேசம்நெற்றில் உங்கள் கட்டுரைகளில் அடிக்கடி உங்களுக்கு தோள் கொடுக்க நேசனிடம் கேட்டு பாருங்கள், ஜீவனிடம் கேட்டு பாருங்கள், விபுலிடம் கேட்டு பாருங்கள் அல்லது பாண்டியிடம் கேட்டு பாருங்கள் என்கிறீர்கள்.

 

ஏன் எங்களையும் உங்களைப் போல் முற்போக்கு அரசியல் பேசிக் கொண்டு கீழ்த்தரமான முறையில் அசிங்கமான வேலை செய்ய சொல்கிறீர்களா?

 

தயவுசெய்து இனிமேலாவது தனிநபர் மீதான உண்மைக்கு புறம்பான அர்த்தமற்ற வசைபாடுவதை நிறுத்துங்கள். நீங்கள் கண்ணாடி சந்திரன் அதை  செய்தார், மல்லாவி சந்திரன் இதை செய்தார்,  என்று கூறி உங்களை நியாயப்படுத்த புறப்பட்டு அன்று அவர்களுடன் இணைந்து செயற்பட்ட அனைவர் மீதும் சேற்றை அள்ளி வீசுகிறீர்கள். குறிப்பாக அவர்களுடன் இணைந்து செயற்பட்டு இறந்து போன போராளிகளை உங்கள் உண்மைக்கு புறம்பான வசை பாடல்களினால் இழிவு படுத்துகிறீர்கள்; அவமானப்படுத்துகிறீர்கள்.

 

நீங்கள் ஒரு தவறான புள்ளியில் தொடங்கியுள்ளீர்கள் என்பதுதான் எனது கருத்து. தயவுசெய்து அதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள் .

 

நீங்கள் "பொறிமகன்"  என்றும் "ராம்" என்றும் திரைமறைவில் இருந்து தேசம்நெற்றில்  உண்மைக்கு புறம்பாக கீழ்த்தரமான முறையில் கட்டுரை வரைந்து தள்ளுவதை விட்டு வெளியே வந்து ஆரோக்கியமாக உண்மை பேசினால் நானும் பேசுவதற்கு  தயாராக உள்ளேன்.

 

இல்லையெனில் "புதியதோர் உலகம்" படைக்கப் புறப்பட்ட நாம் புதியதோர் உலகம் படைக்காமல் விட்டாலும் பரவாயில்லை இன்று இருக்கின்ற உலகை நச்சுப்படுத்தாமல் இருப்போம். இதுதான் இறந்து போன போராளிகளுக்கும் அப்பாவி பொது மக்களுக்கும் நாம் செய்யும் கௌரவமாக இருக்கும்

 

நேசன்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.