உலக மக்களின் எதிரியான அமெரிக்க மேல்நிலை வல்லரசின் அதிபர் பாரக் ஒபாமாவின் இந்திய வருகையை எதிர்த்து நாடெங்கும் இடதுசாரி இயக்கங்களும் புரட்சிகர ஜனநாயக சக்திகளும் கடந்த நவம்பர் 8ஆம் தேதியன்று ஆர்ப்பாட்டங்களையும் பேரணிகளையும் கடையடைப்புப் போராட்டங்களையும் நடத்தின. அமெரிக்கக் கொலைகார யூனியன் கார்பைடு நிறுவனத்தின் நச்சு வாயுவால் நடைபிணங்களாகி விட்டவர்கள் போபாலில் ஒபாமாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். அமெரிக்க மான்சாண்டோவின் பி.டி. பருத்தியால் இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போண்டியாகி தற்கொலைக்குத் தள்ளப்பட்டதை எதிர்த்து, கணவனை இழந்து விதவைகளாகிவிட்ட விவசாயத் தாய்மார்கள் ""கொலைகார அமெரிக்காவின் அதிபரே, திரும்பிப் போ!'' என்று விதர்பா பிராந்தியத்திலுள்ள ஹிவாரா கிராமத்தில் பேரணியும் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினர்.

 

உலக மேலாதிக்க பயங்கரவாத அமெரிக்க வல்லரசின் அதிபரான ஒபாமாவின் வருகையை எதிர்த்துத் தமிழகமெங்கும் ம.க.இ.க வி.வி.மு பு.மா.இ.மு பு.ஜ.தொ.மு பெ.வி.மு. ஆகிய அமைப்புகள் தாங்கள் செயல்படும் பகுதிகளில் வீச்சான பிரச்சாரத்தை மேற்கொண்டதோடு, இந்திய நாடாளுமன்றத்தில் ஒபாமா உரையாற்றிய நவம்பர் 8ஆம் தேதியன்று தமிழகத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தின.

 

அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்த்தேரில் இந்தியாவைப் பிணைத்து விசுவாச அடியாளாக உறுதிப்படுத்துவதோடு, அமெரிக்க முதலீட்டுக்கு கதவை அகலத் திறக்குமாறு இந்தியாவை நிர்ப்பந்தித்து, நாட்டையும் மக்களையும் காவு கொள்ளும் ஒப்பந்தங்களை நிறைவேற்ற வந்துள்ள ஒபாமாவின் வருகையை எதிர்த்தும், அவருக்கு வரவேற்பு அளிப்பது நாட்டுக்கே அவமானம் என்பதை விளக்கியும், அமெரிக்க கைக்கூலி மன்மோகன் சிங்கின் சதிகளை அம்பலப்படுத்தியும், அமெரிக்காவின் தலைமையில் நாடு மீண்டும் காலனியாக்கப்படுவதை எதிர்த்தும் திருச்சி புத்தூர் நாலு ரோட்டிலும், தஞ்சை பனகல் கட்டிடம் அருகிலும், கடலூர் மஞ்சக்குப்பம் ஏ.எல்.சி. சர்ச் அருகிலும், சென்னை குரோம்பேட்டையிலும், உடுமலை மையப் பேருந்து நிலையம் அருகிலும், கோவை செஞ்சிலுவைச் சங்கம் அருகிலும் இவ்வமைப்புகள் எழுச்சிமிகு கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தின.

 

புரட்சிகரப் பாடல்களோடும் விண்ணதிரும் முழக்கங்களோடும் நடந்த இந்த ஆர்ப்பாட்டங்கள், உழைக்கும் மக்களிடம் ஒபாமா பற்றிய மாயையைத் திரைகிழித்துக் காட்டிப் போராட அறைகூவுவதாக அமைந்தன. பு.ஜ. செய்தியாளர்கள்.