எந்திரன் (ரோபோ) உலக அழகியைக் காதலிப்பது ஒரு அறிவியல் கற்பனைக் கதை. இதை உலகம் முழுவதும் செல்வதற்காக உலகத் தரத்துக்கு பிரம்மாண்டமாகவும் கோடிகோடியாகக் கொட்டிக் கவர்ச்சியான சினிமாவாகவும் உருவாக்கப்பட்டது.

 

இன்னொரு எந்திரன் (ரோபோ) சென்னை அருகே நோக்கியா கைபேசி ஆலையில் அம்பிகா என்ற ஒரு இளம் பெண் தொழிலாளியைக் கதறக்கதற கழுத்தை அறுத்துப் படுகொலை செய்தது. இந்த உண்மைச் சம்பவத்தை வெளியில் தெரியாமல் மறைப்பதற்கு ஆலை நிர்வாகம் மட்டுமல்ல, அரசும் செய்தி ஊடகமும் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளன.

 

மனித இனத்தைச் சேர்ந்த, உயிருள்ள ஒரு பெண்ணைக் காதலித்த எந்திரன் மனித இன மறுஉற்பத்திக்குத் தகுதியற்றவன்; அவனுக்கு இடப்பட்ட கட்டளைகளையும், நெறிமுறைகளையும் மீறிய குற்றத்துக்குத் தண்டனையாக அவன் அங்கம் அங்கமாகப் பிய்த்து எறியப்படுகிறான், கற்பனைக் கதையில். ஆனால், உண்மை வாழ்க்கையில் நடந்ததோ வேறு விதமாக இருந்தது.

 

தம் கண் முன்னே இரத்தம் பீறிட சக தொழிலாளி கழுத்தறுபடுவதைக் கண்டு ஆத்திரமுற்று ரேபோவை (எந்திரனை) அடித்து நொறுக்கி அவளை மீட்க தொழிலாளர்கள் எத்தணித்தார்கள். அந்த இளம் பெண் தொழிலாளியின் கழுத்தை அறுத்துக் கொண்டிருந்த எந்திரனுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பாக "செக்யூரிட்டிகள்'' என்ற சீருடை அடியாள்படை நிறுத்தப்பட்டது. சக பெண் தொழிலாளர்கள் மயங்கி விழ, ஆண் தொழிலாளர்கள் ஆத்திரத்தோடு குமுறிக் கொந்தளிக்க அவர்கள் கண் முன்பாகவே குரூரமானதொரு கொலையை நீண்ட நேரம் சாவகாசமாக செய்வதற்கு எந்திரன் அனுமதிக்கப்பட்டான்.

 

•••

 

இந்தியா, சீனா இரண்டு நாடுகளில் இருக்கும் எல்லா நோக்கியா ஆலைகளும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் 100 மில்லியன் செல்போன்கள் என்ற இலக்கை அடைவதற்கு, தொழிலாளிகள் இரக்கமின்றி ஒரு எந்திரம் போல வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். இந்த இலக்கை அடைவதற்கு அங்காடித்தெரு திரைப்படத்தில் வரும் கொடூரமான சூபர்வைசர் அண்ணாச்சியை விடக் கொடூரமான மேலாள நிர்வாகிகள் வேலை செய்கிறார்கள்.

 

அக்டோபர் 31 அன்று இரவு பி ஷிப்ட்டில் தொழிலாளி அம்பிகா வேலை செய்தார். அவரது யூனிட்டின் பெயர் ""இன்ஜின் ஆபரேஷன் ஃபைனல் அசம்பிளி''. இங்கு ""ரவுட்டர் கட்டிங் மிஷின்'' எனும் இயந்திரம் வரிசையாக வரும் செல்போன்களுக்குரிய ""மதர்போர்டு'' களைத் தனித்தனித் துண்டுகளாக அறுத்துப் போடும் வேலையின் போது, சில பீஸ் போர்டுகள் எந்திரத்தில் விழுந்தால் தொழிலாளிகள் அதை கைவிட்டு எடுப்பார்கள். அவர்கள் கை நுழைந்த உடனேயே அந்த எந்திரத்தில் உள்ள ஆட்டோமேடிக் சென்சர் இயந்திரம் இயங்கி அறுப்பதை நிறுத்திவிடும்.

 

ஆனால், இந்த ஆட்டோமேடிக் சென்சர் இயந்திரம் வேலை செய்தால் சிலசமயம் வேலை தடைப்பட்டு, அதனால் பத்து பதினைந்து நிமிடம் உற்பத்தி தாமதமாகிவிடும் என்பதால் இதை மூடியே வைத்திருந்தார்கள். அதாவது தொழிலாளி தன் உயிரைப் பணயம் வைத்து சில விநாடிகளுக்குள் விழுந்துவிட்ட போர்டுகளை எடுக்க வேண்டும். இது பச்சையான படுகொலை இல்லையா? எந்திரத்தில் சில போர்டுகள் விழுந்துவிட்டால் அதை அப்படியே விட்டுவிடவும் முடியாது. ஏனெனில், அறுக்கப்படும் எல்லா போர்டுகளுக்கும் தொழிலாளிகள் சரியான கணக்கு கொடுக்க வேண்டும்.

 

இந்நிலையில் 30.10.2010 மாலை சுமார் ஏழு மணிக்கு அப்படி விழுந்துவிட்ட போர்டை எடுப்பதற்கு அம்பிகா முயன்றிருக்கிறார். எந்திரத்தின் சென்சர் இயங்காததால் அம்பிகா குனிந்து கீழே விழுந்த போர்டை எடுக்க முயல்வது அதற்குத் தெரியவில்லை. எனவே அதற்கு இடப்பட்ட கட்டளைப்படி, அடுத்த போர்டை அறுப்பதற்கு எந்திரத்தின் அறுவை பகுதி கீழே இறங்கி, அம்பிகா கழுத்தைப் பின்புறமாக அறுக்கத் தொடங்கியிருக்கிறது. கழுத்து அறுபட அறுபட இரத்தம் ஏராளமாக வழிய ஆரம்பித்திருக்கிறது. ஒரு கம்பி கழுத்தில் ஆழமாக சென்ன்றுவிட்டதால் இரத்தம் உடலுக்குள்ளேயே ஏராளமாக கசிய ஆரம்பித்திருக்கிறது. இதன் காரணமாக அவருக்கு நான்கைந்து முறை மாரடைப்பு வந்திருக்கிறது. ஆனால், வெளியே யாருக்கும் இது தெரியவில்லை. சில பெண் தொழிலாளிகள் இதைப் பார்த்துவிட்டு மயக்கம் போட்டு விழுந்துவிட்டனர். சில ஆண் தொழிலாளிகள் உடனே எந்திரத்தை உடைத்து அம்பிகாவைக் காப்பாற்ற முயன்றிருக்கின்றனர்.

 

ஆனால், அங்கிருந்த சூபர்வைசர் மேலிடத்தில் பேசி விட்டு மிஷனை உடைப்பதற்கு அனுமதி கொடுக்கவில்லை. அதைப் பொறுமையாக ""டூல்ஜ்'' கொண்டு படிப்படியாகக் கழட்டலாம் என்றார். எந்திரத்தை உடைக்காமல் இருப்பதற்குப் பாதுகாப்பாக செக்யூரிட்டிகளை நிறுத்தியிருக்கிறார். டூல்சை கொண்டு கழட்டலாம் என்றால், அங்கே டூல்ஸ் பாக்சும் இல்லை. இதற்குள் 10 நிமிடங்கள் கழிந்துவிட்டன. ஏராளமான இரத்தம் வழிந்துவிட்டது. கழுத்தை அறுத்த அந்த எந்திரத்தில் இருந்து அம்பிகா மீட்கப்படவில்லை. இறுதியில் வேறுவழியின்றி தொழிலாளிகள் நிர்வாகத்துடன் சண்டை போட்டு எந்திரத்தின் கட்டரை உடைத்து அம்பிகாவை மீட்கின்றனர். அதற்குள் மொத்தம் 20 அல்லது 25 நிமிடங்கள் முடிந்துவிட்டன.

 

ஆலையிலிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் இருக்கும் ஜெயா மருத்துவமனைக்கும் பின்னர் சென்னை கே.எம்.சி., அப்பல்லோ எனப் பிற மருத்துவ மனைகளுக்கும், அதற்குள் இறந்திருந்த அம்பிகாவின் உடலைக் கொண்டு சென்றார்கள்.

 

ஆலைக்குள் தொழிலாளிகள் செல்பேசிகளை எடுத்துச் செல்ல தடையுள்ளது. எனவே, அம்பிகாவின் மரணம் அவர்களுக்கு உடனேயே தெரியவில்லை. ""அசம்பிள் டூ ஆர்டர் செக்சன்'' எனும் பிரிவின் சூபர்வைசர் அம்பிகாவின் மரணத்தைத் மறைத்து தொழிலாளர்களை தொடர்ந்து பணியாற்றப் பணித்திருக்கிறான்.

 

பின்னர் மருத்துவமனையின் நர்ஸ் மூலம் செய்தி தொழிலாளிகளுக்கு கிடைத்து, அதன்பின் இரவு 12 மணிக்குத்தான் உற்பத்தியை நிறுத்தினார்கள். அதுவும் கூட தொழிலாளிகளின் கோபத்தால் நடந்ததே அன்றி, நிர்வாகத்தால் அல்ல. ஆனால், எப்படியும் உற்பத்தியை நிறுத்தக்கூடாது என்பதுதான் நிர்வாகத்தின் நோக்கமாக இருந்தது.

 

எந்திரத்தை உடனே உடைத்திருந்தால், அம்பிகாவைக் காப்பாற்றியிருக்கலாம். ஆனால், இரண்டு கோடி நட்டமாயிருக்குமே! கட்டிங் இயந்திரத்தின் சென்சர் போர்டை எப்போதும் இயக்கத்தில் வைத்திருந்தால் அம்பிகா இறந்திருக்க மாட்டார். ஆனால் நிறுத்தப்படும் ஒவ்வொருமுறையும் உற்பத்தி தடங்கலுக்குள்ளாயிருக்குமே! எனவே, 10 கோடி கைபேசி என்ற இலக்கை அடைவதற்காக, இத்தகைய அபாயகரமான சூழ்நிலையில்தான் நோக்கியா தொழிலாளிகள் வேலை செய்கிறார்கள். அப்படி வேலை செய்ததனால்தான் இன்று அம்பிகா கொல்லப்பட்டிருக்கிறார்.

 

சென்ற மாதம்தான் நோக்கியா ஆலைக்கு ""6 எஸ்'' (6கு) எனும் சிறந்த பாதுகாப்பு வசதிகள் கொண்ட ஆலை என்ற விருது கொடுக்கப்பட்டதாம்! அந்த பாதுகாப்பு இலட்சணத்திற்கு ரத்த சாட்சியம்தான் அம்பிகா!

 

போராட தொழிற்சங்க தலைமை இல்லாத காரணத்தால் தொழிலாளிகள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிற்கையில், தி.மு.க. பிரமுகர்கள் அம்பிகா கொலை செய்யப்பட்டதை சாதாரண விபத்தாக மாற்றுவதற்கு முயன்றார்கள். அம்பிகாவின் பெற்றோரோடு நைச்சியமாகச் சமரசம் பேசியது, நிர்வாகம். நிவாரணம், குடும்பத்தினருக்கு வேலை என்ற வழமையான சடங்கு சம்பிரதாயங்கள் பேசப்பட்டன. ஆனால், அம்பிகாவின் மரணத்திற்கு இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது இருக்கட்டும், யார் மீதும் எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை.

 

பழுதடைந்த அந்த எந்திரத்தை அப்புறப்படுத்திவிட்டு, நல்ல நிலையில் இருக்கும் புதிய எந்திரத்தை அங்கே வைத்தார்கள். அம்பிகா கொல்லப்பட்ட நோக்கியாவின் துணை நிறுவனமான ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் நேர்ந்த விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்குத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளித்து, நடந்த சம்பவம் மூடி மறைக்கப்பட்டது. இடத்தைக் கழுவி சுத்தம் செய்த பிறகு, தமிழக அரசு தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளை வைத்து ஒரு விசாரணையை நடத்தி முடித்து விட்டார்கள்.

 

சன் டி.வி.யிலும் சில பத்திரிக்கைளிலும் ஒரு ஒற்றை வரிச் செய்தியோடு இந்தப் படுகொலை முடிந்து விட்டது. நோக்கியா ஆலைக்குச் சென்றபோது ""வினவு'' இணையதள செய்தியாளர்களைத் தவிர அங்கு எந்த ஊடக நபர்களும் இல்லை. அதில் ஆச்சரியம் ஏதுமில்லை, எல்லா ஊடகங்களும் நோக்கியா விளம்பரம் மூலம் கல்லா கட்டுகின்றன. நோக்கியாவின் மக்கள் தொடர்பு அதிகாரிகள் எல்லா பத்திரிகைகளையும் தொடர்பு கொண்டு தாங்கள் அளித்த, அளிக்க போகின்ற விளம்பரங்களை நினைவுபடுத்தி, இந்த கொலையை மறைக்க வேலை செய்கிறார்கள். அதன் விளைவையும் ஊடகங்களில் பார்க்கிறோம்.

 

நோக்கியா தொழிற்சாலை முழுவதும் சி.சி.டி.வி காமராக்கள் இருக்கின்றன. தொழிலாளிகளின் ஒவ்வொரு நடவடிக்கையும் அதில் பதிவாகின்றன. இந்தக் கண்காணிப்பை வைத்துத் தொழிலாளிகளின் மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அருகாமை தொழிலாளியிடம் பேசினால் கூட இங்கு குற்றம் என்பது சட்டம். எனில், அம்பிகா கொலை செய்யப்பட்ட காட்சி கூட அந்த காமராக்களில் பதிவாகியிருக்கும். இது சாதாரண விபத்து என்று ஊடகங்களின் உதவியுடன் ஊளையிடும் நோக்கியா நிர்வாகம் அந்த படப்பதிவை வெளியிடட்டுமே? உண்மையை உலகுக்கு அறிவிக்கலாமே, செய்வார்களா?

 

காஞ்சிபுரம் கலவைக்கு அருகே உள்ள கிராமத்தில் அம்பிகாவின் இறுதி ஊர்வலம் நடந்தது. சில நூறு தொழிலாளர்களைத் தவிர அங்கு வேறு யாருமில்லை. அப்போதுகூட நோக்கியாவில் உற்பத்தி நடந்தது. விடுமுறை இல்லை. தொழிலாளிகள் அதைப் புறக்கணித்துவிட்டு அம்பிகாவின் இறுதி ஊர்வலத்திற்கு வந்திருக்கிறார்கள். நெடுந்தொலைவு காரணமாக நிறைய பெண் தொழிலாளிகள் வரவில்லை. தொழிலாளிகள் அரசியல் உணர்வு பெறும்வரை அம்பிகாவின் மரணத்தை நாம் நினைவில் மட்டும் வைத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. அடுத்த மாதம் பின்லாந்தில் ஒரு வெற்றிவிழா நடக்கும். அது நோக்கியாவின் 100 மில்லியன் இலக்கை அடைந்த சாதனைக்கான கேளிக்கை விழா. நோக்கியா முதலாளிகளும், அதிகாரிகளும் சீமைச்சாராயத்தைப் பருகியவாறு தமது வெற்றியைச் சிலாகிப்பார்கள்.

 

அவர்கள் பருகுவது சாராயமல்ல, அம்பிகாவைப் போன்ற தொழிலாளிகளின் இரத்தம் என்பதை நாங்கள் குறித்து வைத்திருக்கிறோம். பழி தீர்ப்போம்!

 

•••

 

தனியார்மயம் தாராளமயம் உலகமயமாக்கம் ஆதிக்கம் வகிக்கும் இன்றைய சூழலில், குறிப்பாக, பன்னாட்டு முதலாளியம் நடத்தும் நோக்கியா, ஹ_ண்டாய் முதலான ஆலைகளில் அம்பிகா போன்ற தொழிலாளர் படுகொலை விதிவிலக்கல்ல. முழுக்க முழுக்க ரோபோ மயமாக்கப்பட்டு, கண்காணிப்பு காமிராக்கள் மூலம், சிறிதுகூட கவனப் பிசகு இல்லாமல் முடுக்கிவிடப்படும் தொழிலாளர்கள் இயந்திரங்களோடு போட்டி போட்டு, உயிரைப் பணயம் வைத்து வேலை செய்ய வேண்டியுள்ளது. தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளோ, ஆபத்துக்குத் தேவையான மருத்துவ வசதிகளோ கிடையாது.

 

பலரும் எண்ணுவதுபோல இத்தகைய நிறுவனங்களில் மிகையான ஊதியம் தரப்படுவதில்லை. கூடுதல் ஊதியம் பெறும் பயிற்சி பெற்ற நிரந்தரத் தொழிலாளர்களுக்குப் பதிலாக, குறை ஊதியம் பெறும் தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளர்கள்தாம் கூடுதலாக உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஆனால், உற்பத்தி இலக்கு மட்டும் பன்மடங்கு எகிறிக் கொண்டே போகிறது.

 

சென்னை பூவிருந்தவல்லி அருகே உள்ள ஹ_ண்டாய் ஆலையில் 1999ஆம் ஆண்டு, 1750 நிரந்தரத் தொழிலாளர்களும், 7,500 தற்காலிகத் தொழிலாளர்களும் வருடத்துக்கு 78,000 கார்கள் உற்பத்தி செய்தனர். ஆனால், அவர்களே 2008இல் வருடத்துக்கு 8 இலட்சம் கார்கள் உற்பத்தி செய்தனர். அந்த அளவு @ரோபா மயமாக்கப்பட்டு, தொழிலாளர்களும் இயந்திரமயமாகி உழைக்கிறார்கள். 2002ஆம் ஆண்டு ஆலையிலேயே ஒரு தொழிலாளி மாரடைப்பால் மாண்டார். அதைத் தொடர்ந்து, ஆலை விபத்துகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. 2008ஆம் ஆண்டு ரோபோ இயந்திரத்தின் இயக்கத்தால், இரும்புக் கம்பி ஒரு தொழிலாளி தலையின் ஒரு பக்கம் நுழைந்து மறுபுறம் வெளிவந்தது. அப்படியே கால் மணி நேரம் தொங்கிய அத்தொழிலாளி, மூன்று நாள் நினைவின்றி மருத்துவமனையில் கிடந்து மாண்டு போனார்.

 

ஜந்து கருங்காலிகளைக் கொண்ட தொழிலாளர் நலக்கமிட்டியை வைத்துக் கொண்டு தொழிற்சங்கம் வைக்கும் உரிமை அடியோடு மறுக்கப்பட்டு வருகிறது. அதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது 15 பேர் வேலை நீக்கமும் 89 பேர் தற்காலிக வேலை நீக்கமும் செய்யப்பட்டனர். போலீசை ஏவி முன்னணித் தொழிலாளர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். ஃபாக்ஸ்கான் நிர்வாகத்தின் அடக்குமுறை, தொழிலாளர் விரோதப் போக்குகளைக் கண்டித்து, அவ்வாலைத் தொழிலாளர்கள் காஞ்சிபுரத்தில் நடத்திய ஆர்ப்பாட்டம்.

 

பெண் தொழிலாளி அம்பிகாவைப் படுகொலை செய்த நோக்கியா நிறுவனத்தின் துணைநிறுவனம் ஃபாக்ஸ்கான். கடந்த ஆகஸ்ட் மாதம் ஃபாக்ஸ்கான் ஆலையில் நச்சு வாயு கசிந்து, 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர். அவர்களில் பலர் பெண் தொழிலாளர்கள். முதல் ""ஷிப்ட்'' வேலையில் 127 தொழிலாளர்கள் ரத்த வாந்தி எடுத்து விழுந்தபோதும், அவர்கள் ""ஆடி மாதம் விரதம் இருந்ததால் நேர்ந்தது'' என்று கேலி பேசி, இரண்டாவது ""ஷிப்ட்'' வேலை வைத்து மேலும் 145 தொழிலாளர்களை இரத்த வாந்தி எடுத்து மயங்கி விழச் செய்தது, நிர்வாகம். தொழிலாளருக்கு நேர்ந்த ஆபத்தை மூடி மறைப்பதற்காக புறநோயாளிகளாக வைத்து முதலுதவி மட்டுமே அளித்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை விரட்டிவிட்டார்கள். அரசுக்கும் அதிகாரிகளுக்கும் ""கப்பம்'' கட்டி நடந்த சம்பவத்தை ஒன்றுமில்லாததாக அமுக்கி விட்டது, நிர்வாகம்.

 

ஃபாக்ஸ்கான், ஃபெர்லெக்ஸ், ஸ்கல்காம் என்று பல துணை நிறுவனம் வைத்து நடத்தும் நோக்கியா கைபேசி நிறுவனம் தொழிற்சங்கம் அமைத்துக் கொள்ளும் உரிமையை மறுத்து, போராடும் தொழிலாளர்கள் மீது போலீசை ஏவிக் கைது செய்து சிறையில் அடைக்கிறது. நோக்கியா, ஹ_ண்டாசூ போன்ற பன்னாட்டுக் கம்பெனிகள் அனைத்திலும் நிரந்தரத் தொழிலாளர்களை விடத் தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளர்கள்தாம் பல மடங்கு உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவர்களோடு நிரந்தரத் தொழிலாளர்களும், இயந்திரக் கொத்தடிமைகளாக நடத்தப்படுகிறார்கள்.

 

ஆனால், கொல்லைப் புறவழியே பதவிக்கு வந்த தமிழகத் தலைமைப் போலீசு இயக்குநர் லாத்திகா சரண், முதலாளிகளின் சங்கக் கூட்டத்தில் பேசுகிறார், ""தொழிற்சாலைகள், அலுவலகங்களின் உள்ளே கண்காணிப்பு கேமராக்கள், அலுவலர்களுக்கு அடையாள அட்டை, கைரேகைப் பதிவு ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும். நிறுவன உயர் அதிகாரி, உரிமையாளரை எதிர்க்கும் தொழிலாளர்கள் கண்காணிக்கப்பட வேண்டும். ஏனென்றால், வெளியாட்கள் இவர்களைப் பயன்படுத்தி அந்த நிறுவனத்தை சீர்குலைக்கலாம்...'' வரம்பற்ற வேலைநேரம், விபத்து படுகொலை என்று தொழிலாளர்களை அடக்கி ஒடுக்கித் தொழிலாளர்களை நரபலி கொடுக்கும் முதலாளியப் பயங்கரவாதத்துக்கு எதிராகத் தொழிலாளர்கள் அனுபவிக்கின்ற கொடுமைகள் குறித்து ஒருபோதும் பேசாத போலீசு அதிகாரிகள், முதலாளிகள் சங்கத்தின் கருத்தரங்கத்துக்கு போய் அவர்களுக்கு தொழிலாளர்களால் ஆபத்து விளையும் என்று அக்கறையுடன் பேசுகிறார்கள்.

 

மறுபுறம், இம்மாதிரி அதிகாரிகளைத் தேடிப்பிடித்து பதவி உயர்வுதரும் கருணாநிதி, தான் தொழிலாளர்களின் நண்பன் என்று முதலைக்கண்ணீர் வடிக்கிறார். அதேசமயம் நோக்கியா, ஹ_ண்டாசூ, சம்சங் என்று பலப் பல பன்னாட்டுக் கம்பெனிகளைக் கொண்டு வந்து தமிழகத்தில் முதலீடுகளையும் தொழில்வளர்ச்சியையும் செய்து வருவதாக அப்பனும் மகனும் பேரனும் பெருமை பேசிக் கொள்கிறார்கள். இதனால் பல ஆயிரம் பேருக்கு நேரடி மறைமுக வேலை கிடைக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள். பல ஆயிரம் கோடி வரிச்சலுகைகளோடு, நீர், நிலம், மின்சாரம் முதலானவற்றை இலவசமாக வழங்குவதோடு, சட்டத்தை மதியாது கொத்தடிமைகளாகத் தொழிலாளர்களை காலில் போட்டு மிதிப்பதற்குத் துணை நிற்கிறார்கள். இதைக் காண்பதற்கு இன்னும் வேறுபல ஆதாரங்களைத் தேடிப் போக வேண்டியதில்லை. நோக்கியா, ஹ_ண்டாய் ஆலைகளின் நடப்புகளே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

 

• மாணிக்கவாசகம்.