தேசியம் "முதலாளித்துவ கோரிக்கையல்ல" என்று, காட்ட, மே18க்கு ஸ்ராலின் நிலைப்பாடு தேவைப்படுகின்றது. அதேநேரம் தேசிய இனம் என்றால் என்ன என்று ஸ்ராலின் வரையறுத்த கோட்பாட்டை மறுக்கின்றவர்கள் தான் இவர்கள். இப்படி நாணயத்தின் இரண்டு நேர் எதிர் பக்கமாக நிறுத்தி, அதை தம் குறுகிய நோக்கத்துக்கு ஏற்ப பயன்படுத்துகின்றனர். நாணயத்தின் இரண்டு நேர் எதிர் பக்கமாக நிறுத்த, அதன் உள்ளடக்கத்தை மறுத்து திரித்துக்காட்டுகினர்.

இரண்டாம் உலக யுத்தத்தின் போது, "… மகா பீற்றர் (ஜார் மன்னன்) மற்றும் இவான் போன்ற கொடுங்கோன்மையாளர்களையும் விழித்து ரஸ்ய மக்களது தேசிய உணர்வை தட்டியெழுப்பி" விடையம், மிகச் சரியானது. ஆனால் இதை யாரும் திரிக்க முடியாது. அன்று சோவியத் நாடு, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழான ஆட்சியிலிருந்தது. இந்த வகையில் அங்கு பாட்டாளி வர்க்கமல்லாத வர்க்கங்களும் அந்த சமூகத்தில் இருந்தன. இதனால் தான் அங்கு, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் கையாளப்பட்டது. ஆம் அங்கு முரணான வர்க்கங்கள் இருந்தன.

நாடு அன்னிய படையெடுப்பை எதிர்கொண்ட போது, வர்க்க ரீதியாக உள்நாட்டில் நடந்த வர்க்கப் போராட்டத்தை பாட்டாளி வர்க்க நலன் சார்ந்து நிறுத்துவது அவசியமாக இருந்தது. உள்நாட்டில் இருந்த வர்க்க எதிரிகள், அன்னிய எதிரிகளுடன் சேர்ந்து பாட்டாளி வர்க்கத்தை எதிhப்பதை தடுப்பது அவசியமாக இருந்தது. பாட்டாளி வர்க்கத்துக்கு எதிரான அன்னிய படையெடுப்பை முறியடிக்க, அனைத்து வர்க்கத்திற்கும் பாட்டாளி வர்க்கம் தலைமைதாங்க வேண்டியிருந்தது.

இந்தவகையில் அன்னிய படையெடுப்பை எதிர்கொள்ள, பாட்டாளி வர்க்கமல்லாத மற்றைய வர்க்கங்களின் ஆதரவை பெற, அந்த வர்க்கத்தின் குறுகிய தேசிய உணர்வுகளையும் பாட்டாளி வர்க்கம் தன்கையில் எடுத்தது. இதன் மூலம் அவர்களை யுத்தமுனையில், சரியான பாதைக்குள் கொண்டுவர முனைந்தது. யுத்ததந்திர ரீதியாக மிகச் சரியானது. பாட்டாளி வர்க்கம் தன் வர்க்க நலனை அடைய, உள்நாட்டு எதிரி வர்க்கத்தை சரியான யுத்ததந்திரம் மூலம் அணுகியது. இவை தேசியத்தை முதலாளித்துவ வர்க்க நலன் அல்லாத ஒரு "புனைவாக" காட்ட எந்த அரசியல் அடிப்படையையும் வழங்கவில்லை. மாறாக அந்த வர்க்கத்தின் குறித்த கூறை அங்கீகரித்து, அதை தனக்குள் உள்வாங்கியது.

தேசியம் பாட்டாளி வர்க்கமல்லாத மற்றொரு வர்க்கத்தின் உணர்வு சார்ந்தது. இந்தவகையில் "மகா பீற்றர் (ஜார் மன்னன்) மற்றும் இவான் போன்ற கொடுங்கோன்மையாளர்களை” அது பிரதிநிதித்துவம் செய்வதால் தான், அதையும் பாட்டாளி வர்க்கம் எதிரிக்கு பயன்படாத முறையில் அதை உள்வாங்கியது. இப்படித்தான் 2ம் உலக யுத்தத்தை பாட்டாளி வர்க்கம் வெற்றிகரமாக எதிர்கொண்டது.

இங்கு மே18 புரட்டாக முன்தள்ளுகின்ற "…ஸ்டாலின் “பாட்டாளி வர்க்க சர்வதேசியம்" பற்றிய கோசங்களை முன்வைக்கவில்லை" என்பது நகைப்புக்குரியது. ஸராலின் கோசம் அடிப்படையில் பாட்டாளி வர்க்க சர்வதேசியமாகும். பாட்டாளி வர்க்க நலனை அடைய, குறிப்பான சூழலுக்கு ஏற்ப மற்றைய வர்க்கங்களை அது தலைமைதாங்கியது. இது தான் சர்வதேசியமாகும்.

இதுபோல்தான் அன்று யப்பானுக்கு எதிரான யுத்தத்தின் போது, சீன கம்யூனிஸ்டுகள் கூட செயற்பட்டனர். தங்கள் தலைமையிலான ஆயுதப்படையின் தலைமையகத்தைக் கலைத்து, சியாங்கேசேர்க்கின் தலைமையின் கீழ் தங்கள் படைகளை விட்டனர். பாட்டாளி வர்க்கம் தன் வர்க்க நலனை அடைய, வரலாற்றில் இப்படி பல யுத்த தந்திரங்களை கையாண்டுள்ளது. இன்று நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் ஜனநாயகப்புரட்சி கடமையை, பல்வேறு வர்க்கங்கள் சார்ந்து தங்கள் கையில் எடுத்து இருக்கின்றனர். தங்கள் படையைக் கூட இராணுவத்தில் இணைக்கக் கோருகின்றனர். இது பாட்டாளி வர்க்க நலன் கடந்த அரசியல் திரிபுகளில் இருந்தல்ல.

மற்றைய வர்க்கங்களின் ஜனநாயக கோசத்தையும், எதிரி பயன்படுத்தக் கூடியவற்றை பயன்படுத்த முடியாத வண்ணம், பாட்டாளி வர்க்க நலனுக்கு ஏற்ப தங்கள் தலைமையின் கீழ் கொண்டு வருகின்றனர். இதைத் திரித்து தேசியத்தை "முதலாளித்துவ கோசமல்ல" என்று, சந்தர்ப்பவாத திரிபுவாதி மாத்திரம் தான் கூற முடியும். தேசியத்தை வர்க்கம் கடந்த ஒன்றாக இட்டுக்கட்டித்தான், அவர்கள் இதை செய்ய முடிகின்றது.

வரலாற்றில் தேசியம் எந்த சமூக பொருளாதார சமூக அடிப்படையில் தோன்றியது என்பதை மூடிமறைத்து விட முனைகின்றனர். இதைத்தான் தேசியவாதிகள் செய்ய விரும்புகின்றனர். தேசியவாதிகள் தேசியத்தை அனைத்து வர்க்கத்தினதும் நலன் சார்ந்த ஒன்றாக காட்ட முனைகின்றனர். இதைத்தான் புதியதிசையும் கூறியது. இதைத்தான் மே 18 கூறுகின்றது.

தேசியத்துக்காக இடதுசாரியம் பேசுகின்ற அனைத்து சந்தர்ப்பவாதிகளும், தேசியத்தை வர்க்கமற்ற ஒன்றாக காட்டுவதன் மூலம் தான் மீளவும் ஒரு புலியைக் கட்ட முனைகின்றனர். மே18 தேசியத்தை வெளிப்படையாக, வர்க்கமற்ற ஒன்றாக காட்டுகின்றது. புதியதிசை வெளிப்படையாக தங்கள் நிலைப்பாட்டை முன்வைக்காது, மூடிமறைத்து அதை சந்தர்ப்பத்துக்கு ஏற்ப விளக்கம் கொடுத்து புலித் தேசியத்தை மீளக் கொண்டுவர முனைகின்றது.

மே 18 இதே நோக்குடன், ஸ்ராலினை தங்கள் தேவைக்கு ஏற்ப பயன்படுத்த முனைகின்றனர். 2ம் உலக யுத்த காலத்தில் சோவியத்யூனியனில் இருந்த பாட்டாளி வர்க்கம், ஒரு தேசியமாக இருந்ததா!?

தொடரும்

பி.இரயாகரன்

14.01.2011

 

1. தேசியம் என்பது எப்போதும் முதலாளித்துவ நலன்களையே பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பது புனைவா!? - 01