எதிரி "அரச இயந்திரமே அன்றி அரசாங்கமல்ல" என்று கூறுவது, எதிர்மறையான இரண்டு திரிபை அடிப்படையாக கொண்டது. இதில் ஒன்றை மறுத்து அல்லது ஒன்றை மிகை அழுத்தம் கொடுப்பதன் மூலம் தான் இந்த திரிபு வெளிப்படுகின்றது.

1. அரசை மட்டும் தூக்கி எறியக் கோருவது. இதன் மூலம் அரச இயந்திரத்தை பாதுகாத்தல் அல்லது அதை மென்மையான உறுப்பாகக் காட்டுதல்

2. அரச இயந்திரத்தை மட்டும் தூக்கி எறியக் கூறுவது. அரசை பாதுகாத்தல் அல்லது அதை மென்மையான உறுப்பாக காட்டுதல்

 

இங்கு மே 18 அரச இயந்திரத்தை காட்டி, அரசை தக்கவைக்க முனைகின்றது. அதாவது அரசை வர்க்கமற்ற ஒன்றாகவே காட்ட முற்படுகின்றது. இந்த வகையில்தான் அரசு என்பது "சுரண்டப்படும் மக்கள் பிரிவினரையும் திருப்தி செய்தாக வேண்டும்" என்ற புரட்டை முன்தள்ளுகின்றது. மேலும் அரசை வர்க்கமற்றதாக நிறுவவும், அதாவது அரசுக்கு இரண்டு குணாம்சம் உள்ளது என்று புரட்டவே "மே18" என்ன கூறுகின்றது என்பதைப் பாருங்கள்

".. படிப்படியாக ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினரும் வாக்குரிமை பெற்றுக் கொண்ட பின்பு இந்த மக்கள் பிரிவினரின் சம்மதத்தைப் பெறுவது என்பது இங்கு முக்கியத்துவம் பெறத் தொடங்குகிறது. இதனால் முதலாளித்துவ அரசாங்கம் மாத்திரம் அல்ல, அதன் அரசும் கூட இந்த ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினருடன் ஒருவித சமரசம் செய்து கொண்டே தமது ஆட்சியதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முடிகிறது…. "

என்கின்றனர்.

இங்கு "ஒருவித சமரசம்" என்பது, அரசுக்கு இரண்டு முகம் உண்டு என்று திரித்துக் காட்டுதலாகும். இப்படி இங்கு "ஒருவித சமரசம்" என்பது, வர்க்கமற்ற ஒன்றா!? "ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினருடன் ஒருவித சமரசம்" என்பது, அரசு பற்றி அடிப்படையான திரிபாகும். இங்குதான் பாராளுமன்றத்தை பயன்படுத்தும் கனவுகளில், தங்கள் கற்பனை சிறகுகளை பறக்கவிடுகின்றனர். இந்த அரசு பற்றி, அதை "ஒருவித சமரசம்" செய்யும் வர்க்கம் கடந்த உறுப்பாக காட்டிவிடுகின்றனர். இதன் மேல் நம்பிக்கையை ஊட்டித்தான், பாராளுமன்ற பன்றித் தொழுவத்தில் படுப்பதுபற்றி தங்கள் முடிவை முன்தள்ளுகின்றனர். அரசு என்பது "ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவின"ரிடமும், "மக்கள் பிரிவினரின் சம்மதத்தைப்பெறுவது" என்பது அவசியம் என்பது, அரசு பற்றிய மாயையை உருவாக்குவதாகும். அதாவது அரசு "ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவின"ரிடமும், "சம்மதத்தைப் பெறுவது" என்பது, வர்க்கமற்ற ஒரு நிலையில்தான் என்ற திரிபை புகுத்துகின்றனர். இதனால் "அரச இயந்திரமே அன்றி அரசாங்கமல்ல" என்று திரிபையும் முன்தள்ளுகின்றனர்.

அரசும், அரச இயந்திரமும் சுரண்டும் வர்க்கத்தின் நலனை வன்முறை மூலம் மட்டும் காப்பது கிடையாது. அப்படிக் காட்டுவது கூட திரிபுதான். இங்கு அப்படிக் காட்டித்தான், அரசுக்கு வேறு முகமும் உண்டு என்ற திரிபை புகுத்த முனைகின்றனர். அரசு சுரண்டும் வர்க்கத்தின் நலனை சித்தாந்த மேலாண்மை, சலுகை கொடுத்தல், பிரித்துக் கையாளுதல், மோசடிகள், பித்தலாட்டங்கள் முதல் வன்முறை ஈறாக பல வடிவங்களில் தான் மக்களை சுரண்டி அடக்கியாளுகின்றது. இங்கு மே 18 காட்டும் "ஒருவித சமரசம்", இதற்கு முரணான ஒன்று அல்ல. அதாவது சுரண்டும் வர்க்கத்துக்கு, எதிரான ஒன்றல்ல. இங்கு "மே18" "ஒருவித சமரச"த்தை சுரண்டும் வர்க்கத்துக்கு எதிரான அல்லது முரணான ஒன்றாக காட்ட முற்படுகின்றது. இப்படித்தான் அரசை "ஒருவித சமரசம்" செய்யும் வர்க்கமற்ற உறுப்பாக முன்தள்ளுகின்றனர்.

உண்மையில் இந்த சுரண்டலான சமூக அமைப்பிலான ஆளும் வர்க்கம் முன்தள்ளும் சித்தாந்தத்தை, இங்கு மீளக் கூறுவதாகும். சுரண்டும் வர்க்கம் அரசு பற்றி எதை எப்படிக் கூறுகின்றதோ, அதை இங்கு மீள புரட்சியின் பெயரால் முள்தள்ளுகின்றனர். உண்மையில் சுரண்டும் வர்க்கத்தின் பொதுவான ஏற்பாட்டை மறுத்து, அதைத் திரித்துக் காட்டுவதாகும். சுரண்டும் வர்க்கம் இதை "ஒருவித சமரசம்" என்று கருதுவது கிடையாது. அது சுரண்டும் உறுப்பில் கையாளவேண்டிய ஒரு கூறாகவே அதைக் கருதுகின்றது. இதுவின்றி சுரண்ட முடியாது. இதை மறத்துத்தான் இந்த திரிபு இங்கு புகுத்தப்படுகின்றது. "ஒருவித சமரசம்" என்று, சுரண்டும் வர்க்கத்தினதும் அதன் நோக்கத்திலும் இருந்து, அதைப் பிரித்துக்காட்ட முனைகின்றனர். அதாவது இதை ஒடுக்கப்பட்ட மக்களின் நலன் சார்ந்த ஒன்றாக, சுரண்டும் வர்க்கத்துக்கு எதிரான ஒன்றாக இதைக் காட்ட முனைகின்றனர்.

இப்படி மே 18 அரசு பற்றியதும், பாராளுமன்றத்தை பற்றியதுமான புரட்டைப் புகுத்த முனைகின்றது. இந்த வகையிலான மற்றொரு புரட்டைப் பாருங்கள்.

"..புதிதாக உருவாகி வந்த பாட்டாளி வர்க்கமானது தமது உழைப்புச் சக்தியை விற்பதனால் மாத்திரமே உயிர்வாழ முடியும் என்ற நிலையில் இருந்தது. இங்கு உழைப்பும் ஊதியமும் ஒருவித சமத்துவ நிலையில் இருந்ததாக கருதப்பட்டது. இதனால் இவர்களது உழைப்புச் சக்தியை பெறுவதற்கு வன்முறை தேவைப்படவில்லை" என்கின்றனர். இங்கு "உழைப்பும் ஊதியமும் ஒருவித சமத்துவ"ம் இருந்ததாக கூறுவது, சுரண்டலற்றதாக காட்டுகின்ற அரசியல் பி;த்தலாட்டம். இதுதான் "உழைப்புச் சக்தியை" வழங்கியதாக கூறுவது, அதைவிட மோசடித்தனம். "உழைப்புச் சக்தியை" பெற "வன்முறை தேவைப்படவில்லை" என்பது, வன்முறை மூலம் மட்டும்தான் சுரண்டும் வர்க்கம் சுரண்டுவதாக திரிக்கின்ற புரட்டில் இருந்து, வன்முறையற்ற சுரண்டல் முறையை வர்க்கமற்ற அரசின் நடுநிலையின் "ஒருவித சமரசம்"த்தின் கூறாக திரித்தலாகும்;.

சுரண்டல் சமூக அமைப்பில் "உழைப்பும் ஊதியமும் ஒருவித சமத்துவ நிலையில் இருந்ததாக" கூறுகின்ற அரசியல் மோசடித்தனத்தைப் பார்க்கின்றோம். அப்படி சுரண்டல் அமைப்பு இருப்பது கிடையாது. சுரண்டல் இல்லாத சமத்துவமான "உழைப்பும் ஊதியமும்" சுரண்டல் சமூக அமைப்பில் எதுவும் கிடையாது. மூலதனம் சுரண்டல் இல்லாமல் "உழைப்பை' பெற்று "ஊதியத்தைக்" கொடுப்பது கிடையாது. இது மாபெரும் புரட்டு. சுரண்டல் அளவு காலத்துக்குகாலம் வேறுபட்ட போதும், அது என்றும் சுரண்டலற்ற "சமத்துவ நிலையில்" இருந்தது கிடையாது. இங்கு வேறுபட்ட சுரண்டல் அளவு என்பது, "உழைப்பும் ஊதியமும்" என்ற வினைதிறனின் ஊடாக மட்டும், சுரண்டும் வர்க்கம் பெற்றது கிடையாது. மாறாக உற்பத்தித்திறன் முதல் அன்னிய நாட்டில் உழைப்பை பெறுவது வரை எத்தனையோ சுற்று வழிகளில்தான், பலமுனையில் சுரண்டுகின்றது. சுரண்டுவதற்கு உள்ள அனைத்து சந்து பொந்துகளின் ஊடாகவும் கூட அது சுரண்டுகின்றது. ஒரு இடத்தில் சுரண்டி, மறு இடத்திற்கு சலுகை கொடுத்தும் சுரண்டுகின்றது.

சுரண்டுவதை உறுதி செய்யவும், வர்க்கப்போராட்டத்தை தடுக்கவும், சுரண்டும் வர்க்கம் எல்லாவிதமான சமூகப் பொறிமுறைகளையும் தனக்கு சாதகமாக பயன்படுத்துகின்றது. அரசு என்பது வர்க்கத்தின் (சுரண்டும்) சர்வாதிகாரம் தான். அது வன்முறை மூலம் மட்டும்தான், தன்னை முன்னிறுத்துகின்றது என்று காட்டுவது திரிபு. வன்முறை அல்லாத வழிகளிலும் கூட, சுரண்டும் வர்க்கம் வர்க்க சர்வாதிகாரத்தைப் பேணுகின்றது. இதை வர்க்கமற்ற கூறாக எதிர்மறையில் காட்டுவது, சுரண்டும் வர்க்கத்தின் நலனுக்கு எதிரானதாக காட்டுவது, சுரண்டும் வர்க்கம் முன்தள்ளும் நோக்கத்தின் பாலானது. சுரண்டும் வர்க்கம் தான் செய்கின்றது என்பதை மறுக்கின்ற ஒரு திரிபாகும். இது நிலவும் "பொதுப்புத்தி" மட்டத்தில் உள்ள சமூக அறியாமையை பூசி மெழுகி, மீள முன்தள்ளுவதாகும்.

இப்படி பல திரிபுகளை உள்ளடக்கியதே "பாராளுமன்றமும் புரட்சியாளரும்" என்ற கட்டுரை. மார்க்சியமல்லாத "மே18" என்ற தங்கள் புலித் தேசிய அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப, மார்க்சியத்தை திரித்தலாகும். இதைத் தாண்டிய வேறு அரசியல் நிகழ்ச்சி நிரல் எதுவும் கிடையாது.

முற்றும்

பி.இரயாகரன்

10.01.2011

1.பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 1

2.பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 2

3. பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 3

4. பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 4

5. பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 5

6. பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 6

7.பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 7

8. பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 8