பிள்ளையான், சித்தார்த்தன், கருணா, டக்கிளஸ் முதல் அரசு வரை, ஒரே குரலில் குற்றவாளிகள் எங்களோடு இருக்கவில்லை என்கின்றனர். அவர்களின் அடையாளத்துடன் குற்றவாளிகளாக குற்றவாளிகள் பிடிபட்டவுடன், அவர்கள் தங்களுடன் இருக்கவில்லை என்கின்றனர். இந்த குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்கள், பிரபாகரன் சரணடைந்த பின் முல்லைத்தீவில் வைத்து சிறப்பாக குறிப்பாக வதைத்த போது, அவர்கள் அரசுடன் தான் இருந்தனர். இப்படி பல சந்தர்ப்பத்தில் அரசுடன் சேர்ந்து, இவர்கள் செய்யாத குற்றங்களே கிடையாது. மனிதர்களைக் கடத்தி, அதை தொழிலாக செய்தவர்கள் முதல் பெண்ணை கடத்தில் பாலியல் வல்லுறவு செய்து நுகர்வது வரை, இதுவே புலியொழிப்பின் ஒரு அங்கமாகக் கூட மாறியிருந்தது.

 

 

இதுவே புலி ஒழிப்பின் பின்னரும் தொடருகின்றது. இப்படி வடக்கு கிழக்கில் அரசு ஆதரவுடன் நடக்கும் குற்றங்கள்; எவையும், சட்டம் நீதிக்கு உள்ளாவதில்லை. இப்படி எம்மண்ணில் காணாமல் போன, கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட, கப்பம்; வசூலிக்கப்பட்ட, பாலியல் வல்லுறவுக்கு உள்ளான ஆயிரக்கணக்கான சம்பவங்களில், ஒன்று கூட நீதி விசாரணைக்கு உள்ளாகவில்லை. இந்தக் குற்றவாளிகளை பாதுகாக்கின்ற வேலையைத்தான், இந்த அரசு செய்கின்றது. ஆம் இந்த அரசு இந்த குற்றக்கும்பலின் தயவில் நாட்டை ஆளுகின்றது.

அரசு ஆதரவு பெற்ற குற்றவாளிகள் கையும்மெய்யுமாக பிடிபடும் போது, அவர்கள் அதன் பூர்வீகத்தை வெளிச்சொல்லாத வண்ணம் பொலிசைச் கொண்டு அவர்களை போட்டுத் தள்ளுகின்றனர். மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா என்று எங்கும், இப்படி பிடிபட்ட குற்றவாளிகள் சிலர் போடப்பட்டனர். இவர்களோ வேறு யாருமல்ல, அரசின் பின் இருந்த தமிழ் கூலிக் குழு உறுப்பினர்கள்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், புளட் முதல் ஈ.பி.டி.பி வரை, இது போன்ற குற்றங்கள் செய்வதன் மூலம் அரசியல் நடத்தியவர்கள். இந்தக் குற்றங்கள் தான், புலிக்கு எதிரான அன்றைய இவர்களின் அரசியலாகும். புலிஒழிப்பு அரசியல் மூலம், அரச எடுபிடிகளாக நக்கிய இவர்கள், செய்யாத குற்றங்கள் என எதுவும் கிடையாது.

இப்படிப்பட்ட இவர்கள் இன்று கையும்மெய்யுமாக பிடிபடும் போது, அவர் இன்று எமது அமைப்பில் இல்லை அல்லது எமது உறுப்;பினர் அல்ல என்கின்றனர். இந்தக் கூலிக் குழு அமைப்பின் தலைவர்கள், அறிக்கைகள் கூட விடுகின்றனர். பிடிபட்ட சிலரை பொலிசே போட்டுத் தள்ளி, இந்த அறிக்கைவிடும் சிரமத்தைக் கூட அவர்களுக்கு இல்லாதாக்கி விடுகின்றனர்.

கொலை, கொள்ளை, கடத்தல், கப்பம், லஞ்சம், மிரட்டல் முதல் பாலியல் வல்லுறவு வரை தொடரும் குற்றமும், அதன் அரசியல் சூழலும் தொடர்ந்து மூடிமறைக்கப்படுகின்றது. இதன் பின்னணி வெளிவராத வண்ணம், அரசு முதல் இந்த கூலிக் குழுக்கள் வரை கூட்டாக செயலாற்றுகின்றன.

அண்மையில் மன்னாரில் வைத்து மக்கள் மேல் துப்பாக்கி பிரயோகம் செய்து பெண் உள்ளிட்ட 5 பேரை இந்த அரசு சட்டவிரோதமாக கடத்தியது. அவர்களை கொழும்பு வரை கொண்டு சென்றது. சர்வதேச நெருக்கடியை தணிக்க, இவர்களை மன்னாரில் வைத்து அரசு விடுவித்த செய்தியும் கூட வெளிவருகின்றது. இந்தக் கடத்தலின் நோக்கம் என்ன என்பது வெளிவராத போதும், வடக்குகிழக்கில் சட்டமும் ஒழுங்கும் இப்படித்தான் இன்று அமுலாகின்றது. அரசுதான் இதைச் செய்கின்றது. இப்படி சட்டவிரோத செயற்பாட்டில் அரசுதான் முதன்மையான குற்றவாளியாக தொடர்ந்தும் செயல்படுகின்றது.

அரசால் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட இந்த நிகழ்வின் பின்னான விடுவிப்பு, இதுபோன்ற சம்வங்களின் பின் அரசு இருப்பது இன்று வெளிப்படையாகியுள்ளது. அரசின் தயவில் இருந்த அனைத்து கூலிக்குழுக்களும், இதைத்தான் தங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலாக செய்து வந்தனர். ஏன் இன்றும் அதையே செய்கின்றனர்.

இன்று நடக்கின்ற தொடர் நிகழ்வுகள், புலிகள் இல்லாத இன்றைய சூழலில் வெளிப்படையாக யார் குற்றவாளிகள் என்பதையே இது இனம் காட்டுகின்றது. இதை மூடிமறைக்க அரசால் முடிவதில்லை. இந்தவகையில் இதைத் தனிப்பட்ட குற்றமாக காட்டுவது முதல் கிளிநொச்சி மாணவனை பொய் சொன்னதாக கூறி சிறுவர் நன்னடத்தைப் பள்ளிக்கு அனுப்புவது வரை, இப்படி அனைத்தையும் இந்த அரசுதான் திட்டமிட்டு செய்கின்றது.

குற்றத்தை நடக்கவில்லை என்பதும், பிடிபட்டவர் தமது உறுப்பினர் அல்ல என்பதும், அவை தனிப்பட்ட குற்றம் என்பதும், பிடிபட்டவரை போட்டுத் தள்ளுவதும், நீதிபதிகளை இடம்மாற்றுவதும், பொலிஸ் அதிகாரிகளை இடம்மாற்றுவதும், என்று அரசின் துணையுடன் அனைத்துவிதமான சட்டவிரோத நடத்தைகள் மூலம்தான், இவைகள் தொடர்ந்து அரங்கேறுகின்றது.

பிள்ளையான், டக்கிளஸ் முதல் மகிந்தா வரை இந்தக் குற்றங்களுக்கு துணையாகவும் தூணாகவும் நிற்;கவே, கொலை, கொள்ளை, கடத்தல், கப்பம், லஞ்சம், மிரட்டல் முதல் பாலியல் வல்லுறவுகள் தொடர்ந்து வடக்கு கிழக்கில் அரங்கேறுகின்றது.

புலி முதல் அரசு வரை ஏறி மிதித்த தமிழ் சமூகத்தின் இருப்பும் இயல்பும், தொடர்ந்து அச்சமும் பீதியும் கொண்ட அடிமை வாழ்வாகின்றது. இதில் இருந்து மீள முடியாதவாறு, அந்த மக்கள் மேல் அரசு தொடர்ந்து திணிக்கும் நிகழ்வுகள் தான், இன்று வடக்குகிழக்கில் அரங்கேறுகின்றது. இந்தக் குற்றங்கள் பல இன்று செய்திக்கு கூட வருவதில்லை. ஜனநாயகத்தை வெளிப்படுத்துவது என்பது கூட, தனக்குத்தானே சவக்குழியைத் தோண்டுவதாகும். இதுதான் வடக்கின் வசந்தமும், கிழக்கில் விடியலும் என்றால், முழு இலங்கையிலும் இதுதான் இன்று பாசிசமாக மாறி கோலோச்சுகின்றது.

 

பி.இரயாகரன்

09.01.2011