வன்னிப் புலிக்கு பின் திடீரென அரசியலுக்கு வந்த "மே18"காரர், தங்கள் சந்தர்ப்பவாத அரசியலை திணிக்க கடந்த வரலாற்றை மறுத்து, வேறுபாடுகளை மறுப்பதும் தான் அவர்கள் அரசியலாகின்றது. இந்த வகையில் இலங்கை அரசியல் முதல் சர்வதேச நிலைமைகள் வரை மறுத்து திரிக்கின்றனர். ஒடுக்கப்பட்ட நாடுகளின் பாராளுமன்றத்தை ஒடுக்கும் நாடுகளின் பாராளுமன்றத்தையும், வேறுபாடற்ற ஓன்றாகக் காட்டி திரித்துக் காட்ட முனைகின்றனர். பாராளுமன்ற வடிவத்தை முன்னிறுத்தி, அதன் வேறுபட்ட உள்ளடக்கத்தை இல்லாதாக்க முனைகின்றனர். அதாவது "பொதுப்புத்தி" மட்டத்தில் முன்னிறுத்தி, வேறுபாட்டை மறுக்கின்றனர். உண்மையில் ஒடுக்கும் நாடுகள் இந்த நோக்கில் தான், ஒடுக்கப்பட்ட தங்கள் நாடுகளில் இந்த வடிவத்தைப் புகுத்தினர்.
இது எதிர்மறையில் எதை எமக்கு சொல்ல முனைகின்றது, ஒடுக்கும் நாடுகளுக்கு எதிரான ஒடுக்கப்பட்ட நாடுகள் குறைந்தபட்சம் ஜனநாயக புரட்சியைத் தன்னும் முன்னெடுக்க வேண்டிய வரலாற்றுக் கட்டத்தினை எடுத்துக் காட்டுகின்றது. ஒடுக்கும் நாடுகளுக்கு சேவை செய்யும் வண்ணம், ஒடுக்கப்பட்ட நாடுகளில் பாராளுமன்ற வடிவம் ஒடுக்கும் நாடுகளால் புகுத்தப்பட்டது. இதற்கு வெளியில் அல்ல. அதாவது ஒடுக்கும் நாடுகளுக்கு எதிரான, ஜனநாயகத்தை அது கொண்டு இருக்கவில்லை. ஒடுக்கும் நாடுகளின் நோக்கில் இருந்து, இந்த நாடுகளில் பாராளுமன்றம் தன்னை விடுவித்து தன்னளவில் புரட்சி செய்து கொள்ளவில்லை. மாறாக ஒடுக்கும் நாடுகளுக்கு பாராளுமன்றம் சேவை செய்கின்றது. இந்த பாராளுமன்றத்தின் "ஜனநாயகம்" இதற்கு உட்பட்டதுதான். இதற்கு அப்பால் ஆளும் வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாடுகள், ஏகாதிபத்தியத்துக்கு இடையிலான முரண்பாடுகள், சீர்திருத்தம் சார்ந்த முரண்பாடுகள் எவையும், குறைந்தபட்சம் ஜனநாயகப் புரட்சியைக் கூட ஏற்படுத்துவதில்லை. இங்கு ஜனநாயக பாராளுமன்றம் என்ற கேள்விக்கும் விவாதத்துக்கும் இடமில்லை. ஆனால் இந்த முரண்பாடுகளைக் காட்டியும், வேறுபாடுகளைக் காட்டியும் பாராளுமன்றத்தை பயன்படுத்த முடியும் என்று திரிக்கும் போக்கு காணப்படுகின்றது.
இலங்கையில் மகிந்தா அரசு மேற்குடனான முரண்பாட்டை, ஏகாதிபத்தியத்துடனான அரசியல் முரண்பாடாக காட்டுகின்ற இடதுசாரிய அரசியல் பித்தலாட்டமும், இந்த "மே18" காரர் முன்தள்ளும் அதே அரசியல் எல்லைக்குள் தான் இன்று முன்தள்ளப்படுகின்றது. அரசுக்கு எதிரான புலிகளின் போராட்டத்தைக் கூட, ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டமாக இப்படித்தான் காட்டப்பட்டது.
ஒடுக்கும் நாடுகள் வழங்கிய சுதந்திரம் போல், அது உருவாக்கிய பாராளுமன்றங்கள் போல், தேர்ந்தெடுக்கும் ஜனநாயகம் கூட போலியானது. இப்படி உண்மைக்கும் போலிக்கும் இடையில் உள்ள இடைவெளி புரிய முடியாதவாறு, "பொதுப்புத்தி" மட்டத்தில் தான் இது இன்று உயிர் வாழ்கின்றது. இதைத்தான் "மே18" காரர் இனிப்பு பூசி விற்கின்றனர். ஒடுக்கப்பட்ட நாடுகளின் ஜனநாயகப் புரட்சிக் கடமையை மறுக்கின்ற அரசியலை, பாராளுமன்றத்தை பயன்படுத்தல் மூலம் திணிக்க முனைகின்றனர். அதுதான் "ஜனநாயகப்புரட்சி நடைபெறாத நாட்டில் பாராளுமன்ற தேர்தலில் கலந்து கொள்ள முடியாது என்ற வாதம் எங்கிருந்து வருகிறது?" என்று எம்மை கேட்பதன் மூலம், லெனினையே திரித்துக் காட்ட முனைகின்றனர். இந்த வகையில்தான் "1905" இல் ருசியாவில் நடந்த ஜனநாயகப்; புரட்சியை மறுத்தனர்.
தங்கள் அரசியல் பித்தலாட்டத்தை செய்யவே, காலனித்துவ மற்றும் ஆக்கிரமிப்பு காலத்தில் அவர்களால் நிறுவப்பட்ட பாராளுமன்ற வடிவங்களை தூக்கி நிறுத்தி, அதை ஜனநாயகத்தின் அரசியல் வடிவமாக காட்டுகின்றனர். காலனித்துவாதிகள் வழங்கிய ஆட்சி மாற்றத்தை இவர்கள் "சுதந்திரம்" என்று வேறு கூறுகின்றனர். இது அவனின் அதே அரசியல் மோசடித்தனத்தை அடிப்படையாகக் கொண்டது.
"மே18"காரர் கூறுகின்றனர் "இந்தியா கொலனித்துவத்தில் இருந்து விடுதலை பெற்ற ஒரு நாடாகும். இந்த சுதந்திரத்தை முற்றாக மறுப்பது என்பது தவறானது. தனது கொலனித்துவ காலகட்டத்தில் இருந்ததிலும் பார்க்க இந்திய அரசும், மக்களும் மிகவும் வேறுபட்ட அளவிலான சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள்." இங்கு "பொதுப்புத்தி" மட்டத்தை அடிப்படையாக கொண்டு, காலனித்துவாதிகளின் அதே நோக்கத்தை மீள எம்மை நோக்கி முன்தள்ளுகின்றனர். "கொலனித்துவத்தில் இருந்து விடுதலை பெற்ற ஒரு நாடாகும்" என்பது "பொதுப்புத்தி" மட்டம் சார்ந்து பொய். இதைத்தான் இந்த நாட்டை ஆளும் கூட்டமும் கூறி வருகின்றது. காலனித்துவாதிகள் தங்கள் நேரடி காலனித்துவத்தில் இருந்து அரைக்காலனிய அல்லது நவகாலனிய நாடாக மாறியது என்பது தான் சுதந்திரத்தின் பெயரில் நடந்தது. இது உலகெங்கும் ஏகாதிபத்தியத்தால், அன்று கையாளப்பட்ட ஆட்சி மாற்றங்களாகும். உலகளாவில் நடந்த தேசியப் போராட்டங்களை சிதைக்க, தங்கள் காலனிகளை தக்கவைக்க ஏகாதிபத்தியங்கள் உலகளாவில் உருவாக்கிய வடிவம் தான் சுதந்திரத்தின் பெயரிலான ஆட்சி வடிவங்கள். ஒடுக்கும் நாடுகள் ஒடுக்கப்பட்ட நாடுகள் மேல் செய்த மாற்றம் தான் நடந்தேறியது. பல நாடுகளில் அக்காலத்தில் நடந்தேறியது. இங்கு "விடுதலை" பெற்றது என்பது பொய்யாகும் புரட்டாகும். இங்கு "விடுதலை" என்பது வெள்ளை ஆளும் வர்க்கத்துக்குப் பதில் கறுப்பு ஆளும் வர்க்கத்திடம் அதிகாரத்தை மாற்றியதைக் குறிக்கின்றது. சமூக பொருளாதார அரசியல் மாற்றத்தையல்ல. அவை அப்படியே தொடர்ந்து நீடித்தன. அதிகார வர்க்கம் மாறிவிடவில்லை.
இங்கு "இந்த சுதந்திரத்தை முற்றாக மறுப்பது என்பது தவறானது" என்று கூறுவதன் மூலம், கறுப்பு ஆளும் வர்க்கம் உருவானது. அந்த ஒடுக்கும் சுதந்திரத்தை, இந்திய மக்களின் சுதந்திரமாக காட்டுவதுதான் இங்கு அரங்கேறுகின்றது. இங்கு சுதந்திரம் என்பது போலிச் சுதந்திரம் தான். "கொலனித்துவ காலகட்டத்தில் இருந்ததிலும் பார்க்க இந்திய அரசும், மக்களும் மிகவும் வேறுபட்ட அளவிலான சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள்" என்று கூறும் "பொதுப்புத்தி" அரசியல் மட்டத்திலான மீள் திணிப்பு, அடிப்படையில் காலனித்துவாதிகளும் சுதேசிய காலனித்துவ வாதிகளும் (கறுப்பு ஆட்சியாளர்களும்) மக்களை ஏமாற்றிய அதே அரசியல்தான்.
காலனித்துவவாதிகள் வழங்கிய சுதந்திரம், ஜனநாயகம் அவர்கள் காலனிகளில் உருவாக்கிய பாராளுமன்றங்கள் போன்றவை தான். புலிகளை ஒடுக்கிய பேரினவாதம், புலிகள் மறுத்த ஜனநாயகத்தையும், தேர்ந்தெடுக்கும் உரிமையையும் வழங்கியது போன்றது தான். ஆம் இங்கு வேறுபாடு உண்டு. ஆனால் தமிழ்மக்களின் உரிமையையோ, உரிமைக்காக போராடுவதையோ அது வழங்கவில்லை. அதை மறுக்கும் ஜனநாயகத்தையும், தேர்ந்தெடுக்கும் உரிமையையும் வழங்கியதன் மூலம், வேறுபாட்டை உருவாக்கியுள்ளது. இதுவா சுதந்திரம்? இதுவா விடுதலை?
"மே18" காரரின் தர்க்கத்தின் அடைப்புக் குறிக்குள் உள்ள சில சொற்களை மாற்றி வாசித்தால், இவர்களின் "பொதுப்புத்தி" ஊடாக திணிக்கும் அரசியல் நோக்கம் மிக தெளிவாக அம்பலமாவதை எமது சொந்த அனுபவத்துடன் புரிந்து கொள்ளமுடியும்.
புலித் தமிழீழம் "புலிப் பாசிசத்தில் (இந்திய கொலனித்துவத்தில்) இருந்து விடுதலை பெற்ற ஒரு பிரதேசமாகும் (நாடாகும்). இந்த சுதந்திரத்தை முற்றாக மறுப்பது என்பது தவறானது. புலிப் பாசிச (தனது கொலனித்துவ) காலகட்டத்தில் இருந்ததிலும் பார்க்க ஆளும் வாக்க அரசியல்வாதிகளும் (இந்திய அரசும்), மக்களும் மிகவும் வேறுபட்ட அளவிலான சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள்." ஆக இப்படி புலி அழிப்பு மூலம், மக்கள் ஒப்பீட்டளவில் விடுதலை பெற்றுவிட்டனர் என்ற தர்க்கம் தான், இன்று புலி எதிர்ப்பு அரசியலில் அரசியல் சாரமாக உள்ளது. இதுதான் மகிந்தாவின் பாசிச அரசியல் பின் அணிதிரள வைக்கின்றது. இதைத்தான் காலனிகளில் இருந்து சுதந்திரம் பற்றிய கருதுகோள்கள் உருவாகின்றது.
இதை நியாயப்படுத்த "மே18"காரர் சொல்கின்றனர். "இவை சுதந்திரம் அடைந்த போது இந்த அரசுகளிடம் வரம்பற்ற அதிகாரம் குவிந்திருந்தது." என்றால், இதன்பின் அப்படியல்ல என்று கூற முனைகின்றனர். எவ்வளவு பெரிய அரசியல் மோசடி. நாட்டு மக்களையும் தேசத்தையும் அன்னியனுக்கு விற்கின்ற கூட்டம், தேச வளங்களை தனியார் மயமாக்குவது முதல் நிலங்களை அபகரிப்பது வரை அரசே மாபியாத்தனமாக இயங்குகின்றது. இதற்கு ஏற்ப சட்ட அமைப்புகள் இயங்கும் எல்லை வரை, வரம்பற்ற பாசிச வடிவம் கொண்ட பொலிஸ் அதிகாரம் மூலம்தான், ஒடுக்கப்பட்ட இந்த நாடுகளின் இந்த ஆட்சி அமைப்புகள் நீடிக்கின்றது.
தொடரும்
பி.இரயாகரன்
01.12.2010
1.பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 1
2.பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 2
3. பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 3
4. பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 4
5. பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 5
6. பாட்டாளி வர்க்கம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த முடியுமா!? – பகுதி 6