10012023ஞா
Last updateபு, 02 மார் 2022 7pm

சுனாமி வருகிறது மீண்டும்.

இலங்கையின் கரையோரப்பகுதிகளைத் தாக்கிய ஆழிப்பேரலை அல்லது சுனாமி கொண்ட உயிர்பலிகள் பல்லாயிரம். குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள், அங்கவீனர்கள் என்றும் இன, மத, பால், வயது வேறுபாடுகளுமின்றியும் அகப்பட்டோரையெல்லாம் அள்ளிச் சென்று மிகப் பாரிய புகைவண்டியைக் கூட இராட்சதபலத்துடன் இழுத்துச் சென்று உயிர்ப்பலி கொண்டது இந்த இயற்கைப் பிரளயம். 2004 ம் ஆண்டு மார்கழி மாதம் 26ம்  திகதி அதிகாலை இலங்கையின் கரைகளைத் தாக்கியதில் மாண்டு போனவர்கள் ஆயிரமாயிரம். குடும்பத்தில் குழந்தைகளை இழந்த பெற்றார், பெற்றாரை இழந்த குழந்தைகள், கணவனை இழந்த மனைவி, மனைவியை இழந்த கணவன் என பலப் பலவாறான உறவுகளை ஈறுபடுத்தி இழப்புகளை, குரூரத்தை இயற்கை விதைத்துப் போன அந்த நாட்களின் ஆரம்பம் டிசம்பர் 26.  எதிர்வரும் 26 ம் திகதியுடன் ஆறு வருடங்கள் ஆகின்றன.

இந்த இழப்புக்களை தாங்கி மூச்சுவிட முன்னரே இன்னொரு சுனாமி இலங்கையின் வன்னியின் உட்பிரதேசங்களில் புகுந்து சுற்றிவளைத்து கரையோரங்களை நோக்கி மக்கள் கூட்டத்தை வலிந்து இழுத்துச் அள்ளிச் சென்றது.

ஆனால் இந்தச் சுனாமிக்கு இயற்கைப் பூகம்பம் எதுவும் காரணமாயிருக்கவில்லை. எந்த இனத்தை தாக்கி அழிக்கவேண்டும் என்று அதற்கு தெரிந்திருந்தது. ஒரே வீச்சில் கொல்லாமல் மெல்ல மெல்ல பசி பட்டினி என்ற அவலங்களோடும் ஓட வைத்து விரட்டியும் துரத்தியும் சிறைப்பிடித்தும் உடல்களை சின்னாபின்னப்படுத்தியும் சித்திரவதைப்படுத்தியும் உயிரை எடுப்பதற்கு முன்னரே குரூரமான கொடுமைகளையெல்லாம் அது தான் சிறைப்பிடித்திருந்த மக்களுக்கு இழைத்து கொன்றழித்தது.

மீண்டும் அதே மாதிரி அவலங்கள். குடும்பத்தில் குழந்தைகளை இழந்த பெற்றார், பெற்றாரை இழந்த குழந்தைகள், கணவனை இழந்த மனைவி, மனைவியை இழந்த கணவன். இரத்த உறவுகளை தேடுகின்ற உயிரிருந்தும் நடைப்பிணமான மனிதர்கள். நெருங்கிய அன்பான உறவுகளை பறிகொடுத்த சொந்தங்கள்.

சுனாமி இரண்டு ஒன்று நடந்தது டிசம்பர் 2004 இல். சுனாமி இரண்டு நடந்தது மே 2009 இல். முதலாவது இயற்கையின் அனர்த்தம். இரண்டாவது மனித இராட்சசர்களால் நேரம் கணித்து திட்டமிட்டு முற்றுகையிட்டு வளைத்து வைத்து மிகக் கொடூர மனத்துடன் உருவாக்கப்பட்ட சுனாமி. இந்தச் சுனாமியோ இரத்தமும் சதையுமாய் கொன்றழித்தது பலியிட்டது. ஒரு இனத்தின் இரத்தத்தையே உறைய வைத்தது.

இடையில்

நான் தொலைபேசியில் பல மைல்கள் கடந்து அதனைப் மறுமுனையில் பற்றிக் கொண்டவர்களுடன் உரையாடியபடி இருக்க உரையாடலின் இடையில் ஒரு தகவல் செவியில் விழுந்தது. ஆடலுமான பாடலுமான விழா ஒழுங்குகள் நடக்கின்றன என்றது அக்குரல். ஏன் எதற்கு என என்னிடமிருந்து வந்த கேள்விக்கு மறுமுனையிலிருந்து அழுத்தம் திருத்தமான பதில் கிடைத்தது.

சுனாமி வருகிறது என்றது மறுமுனை.

அதாவது சுனாமி இலங்கையைத் தாக்கிய நாளன்று டிசம்பர் மாதம் 26 ம் திகதி சுனாமி யாழ்ப்பாணம் நோக்கி வருகின்றது என்றது குரல்.

சுனாமி என்பது எத்தனையோ மக்களின் துக்கநாள் துயரநாள். வன்னியில் நடந்த சுனாமியோ மனங்களிலிருந்து விலகா வலியோடு வாழும் மக்களின் மாபெரும் துக்கநாள். மாவீரர் நாள் கூட துக்கநாள்.

அப்படி சுனாமி வருகிறதென்றாலும் என்ன இது ஆடலும் பாடலும்?; எனது மூளையை குடைந்த கேள்வியை நான் கேட்க முன்னமே மறுமுனையில் மகிந்ந ராஜபக்சே யாழ்ப்பாணம் வருகிறார் என்ற போது அந்தக் குரலுக்குரியவர் சுனாமி என யாரைக் குறிப்பாய் சொல்லுகிறார் என்பதை தானாகவே சொல்லி வைத்தார்.

பேரினவாதி மகிந்த ராஜபக்ச வருவதை இதைவிட வேறெப்படி சொல்ல முடியும்? ஆழிப்பேரலை நடாத்திய சுனாமி விளைவித்த உயிர் உடமை அனர்த்தங்களிலிருந்து மக்கள் அழுது துயர் தீர முன்னமே தமிழ் இனத்தின் மேல் இன்னொரு சுனாமியாய் வந்திறங்கிய மகிந்தவே அந்நாளை அழிவுக்குட்பட்ட மக்களுடன் கலந்து சிறப்பிக்க வருகின்றார் என்றால் மக்கள் சுனாமி எதுவென அடையாளம் காணாமல் இருந்து விடுவார்களா என்ன?

இரத்தச் சுனாமியை நடாத்தி உயிர்ப்பலி கொண்ட மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம்; வருவதை இதைவிட எப்படி வேறு எவ் வழியில் குறிப்பிட முடியும்?

மடிந்துபோன புலிகளின் பிரபாகரன் இந்த இயற்கைச் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறப்பாக ஆறுதல் உரையாற்றினாரா எனக் கேட்டால் அதுவுமில்லைத்தான்.

ஆனால் மகிந்த என்ற பேரினவாதப் புலி பசுத்தோல் போர்த்து யாழ்ப்பாணம் நோக்கி பவ்வியமாக வந்தாலும் மக்களுக்கு அது இன்னொரு சுனாமி என்பது தெரியாததா என்ன?

ஆம் சுனாமி வருகின்றது. இம்மாதம் 26 ம் திகதி யாழ்ப்பாணத்தை நோக்கி வருகின்றது.

 


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்