எமது அக்டோபர் இதழ், பக்கம் 17இல், மணமேல் குடியைச் சேர்ந்த அலாவுதீனுக்கும் சப்னா ஆஸ்மிக்கும் சீர்திருத்த முறையில் நடந்த திருமணத்தைப் பற்றி வெளியிட்டிருந்த பெட்டிச்செய்தியில், மணமகள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் துணைத் தலைவரின் மகள் எனக் குறிப்பிட்டிருந்தோம். அவ்விதழ் வெளிவந்தவுடனேயே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உறுப்பினர்கள் சிலர் எம்மைக் கைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு மணமகள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்தின் மாநிலத் துணைத் தலைவரின் மகள் எனக் குறிப்பிடப்பட்டிருப்பது பிழையானது எனச் சுட்டிக் காட்டினர்.

 

 

 

அவ்வமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் திரு. ஆர்.ரஹ்மத்துல்லாஹ் எமக்கு எழுதிய கடிதத்தில், ""... மணமகளின் தந்தைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. கடந்த காலங்களில் அவர் சாதாரண கிளைப் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார். . . . . மேலும், இத்திருமணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளை, மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் உட்பட எவரும் கலந்து கொள்ளவில்லை என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம்.'' எனக் குறிப்பிட்டு, இதையே மறுப்பு செய்தியாக வெளியிடுமாறு கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக எமது தரப்பில் விசாரித்ததில், மணமகளின் தந்தை அப்பாஸ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் காரைக்குடி நகரச் செயலாளராகவும், அப்பகுதியின் துணைத் தலைவராகவும் செயல்பட்டுள்ளார் என்பது தெரிய வந்தது. இத்திருமணச் செய்தியை வெளியிடக் கோரி அனுப்பியிருந்த தோழர்கள், ""மணமகளின் தந்தை, இப்பகுதியின் துணைத் தலைவராக இருந்தார் என்பதைத்தான், நாங்கள் மாநிலத்தின் துணைத் தலைவராக இருக்கிறார் எனத் தவறாகப் புரிந்துகொண்டு எழுதியிருக்கிறோம்'' என விளக்கமளித்து, தங்களின் தவறுக்கு வருத்தம் தெரிவித்து சுயவிமர்சனம் செய்து கொண்டுள்ளனர்.

மணமகளின் தந்தை அவ்வமைப்பின் மாநிலத் துணைத் தலைவராக இருக்கிறாரா என்பதை எமது தரப்பில் உறுதிப்படுத்திக் கொள்ளாமல் செய்தி வெளியிட்டதற்கு நாங்களும் வருத்தம் தெரிவித்து சுயவிமர்சனம் ஏற்றுக் கொள்கிறோம். இவ்விவரப் பிழையை எமக்குச் சுட்டிக்காட்டிய அவ்வமைப்பைச் சேர்ந்த அனைவரும் எங்களது இவ்விளக்கத்தை ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறோம். இனி இது போன்ற தவறுகள் நேராத வண்ணம் செய்திகளை வெளியிடுவோம் என எமது வாசகர்களுக்கு உறுதியளிக்கிறோம்.

சவூதி அரேபியாவில் பணியாற்றிவரும் மணமகளின் தந்தை அப்பாஸ் தற்பொழுது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்தில் எந்த பொறுப்பிலும் இல்லையென்றபோதும், அவர் இன்றும் அவ்வமைப்பின் கொள்கைகளைப் பரப்பி வருபவராகவும், அவ்வமைப்பிற்கு நிதி வழங்குபவராகவும் இருக்கிறார் என்பதை மணமகனும், மணமகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். எனவே, மணமகளின் தந்தைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை.

இவ்விளக்கத்தை அளிக்கும் அதேசமயம், இத்திருமணம் பல்வேறுவிதமான தடைகளைத் தாண்டி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியால் ஒழுங்கு செய்யப்பட்டு எவ்விதமான மதச் சடங்குகளும் இன்றிச் சீர்திருத்த முறையில் நடத்தப்பட்டது; தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் புதுக்கோட்டை மாவட்ட துணைத் தலைவர் அப்துல் மஜீத் உள்பட அவ்வமைப்பைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டோரின் கண் முன்னேதான் இச்சீர்திருத்த திருமணம் நடைபெற்றது என்பதை மீண்டும் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

ஆசிரியர் குழு