நீங்கள் மனிதத்தினை மறந்திருக்கலாம்

நாங்கள் மறந்துவிடவில்லை

நீங்கள் புலியாக மாறியிருக்கலாம்

நாங்கள் மாறிவிடவில்லை

உங்களிடம் கண்ணீர் அற்றுப் போயிருக்கலாம்

எங்களிடம் இருப்பது கண்ணீர் மட்டும் தான்

யிர் மகத்தானது. மனிதன் மட்டுமில்லை, விலங்குகள் தொட்டு ஒவ்வொரு உயிரினமும் முதலில் பாதுகாத்துக் கொள்வது உயிரையே. இறுதிக் கணத்தில் வரும் மரணபயம், உயிருக்காக இரந்து நிற்கும் முகத்தின் துடிப்புக்களை பார்க்கும் போது அவன் எவ்வளவு கொடிய மனிதனாக இருந்தாலும் பார்ப்பவர்களுடைய மனதை ஒரு கணம் உலுப்பி நெகிழ வைத்து விடுகிறது.

இந்த முப்பது வருடத்தில் எத்தனை மாமாக்கள், எத்தனை அண்ணாக்கள், எத்தனை தம்பீக்கள், எத்தனை சேர்கள்…, என்று எத்தனை ஆயிரமாயிரம் அப்பாவிக் குரல்களின் ஓலங்கள் ஒலித்து ஓய்ந்து போனது அந்த ஈழத்து மண்ணிலே. இது எங்கள் சகோதர உறவுகளின் குரல்கள், எங்கள் மக்களின் குரல்கள் என்று அந்த கொலை வெறி பிடித்த பாசிஸ்டுகள் கணப் பொழுது கூட சிந்தித்துப் பார்த்தது கிடையாது. அந்த அப்பாவிகளின் ஓலக்குரல்கள் அந்த வெறியர்களின் காதுகளுக்கு சங்கீதமாகத் தான் இசைத்தது.

ரமேஸ், இந்த கொலை வெறியர்களின் கூட்டத்தில் நீயும் ஒருத்தன். உனக்குப் புனிதன் என்ற பட்டம் சூட்டி எங்களால் பார்க்க முடியாது. ஆனால் நீ மகிந்தாவின் காட்டுமிரண்டி இராணுவத்திடம் உன் உயிருக்கு இரந்து நிற்கும் போது என் சகோதரனாகத் தான் எண்ணத் தோன்றுகிறது. எத்தனை சேர்கள், எத்தனை அண்டஸ்ராண்ட் அண்டஸ்ருட்டுக்கள் (understand…) போட்டுப் பார்த்து ஓய்ந்து போனது உன் குரல். இதை போர் குற்றம் என்கிறார்கள். அதை மறுப்பதற்கில்லை…! இது மகிந்த பாசிசத்தின் போர்க் குற்றமே. ஆனால் எத்தனை ஆயிரம் எம் பிஞ்சுகளின் குரல் உங்கள் புலிப் பாசிசத்திடம் மண்டியிட்டிருக்கும். இதை எந்தக் குற்றத்தில் நாங்கள் சேர்த்துக் கொள்வது.

துரோகி என்றும், திருடன் என்றும், விரோதி என்றும் எத்தனை காரணங்களை சொல்லி கொன்று குவித்தீர்கள். எத்தனை எத்தனை உயிர்களின் அவலக் குரல்கள் கதறி ஓய்ந்தன எங்கள் தாய்மண்ணிலே. இறுதியில் உன்னிலிருந்து உன் தலைவன் வரை கொலைகாரக் கும்பல் மகிந்த பாசிசத்திடம் மண்டியிட்டு இறந்து போனீர்கள்.  ஆனால் நீங்கள் செய்த கொலைக்காக கண்ணீர் விட்டவர்களும்,  உங்கள் சாவுக்காக கண்ணீர் விட்டவர்களும் நாங்கள் தான். காரணம் மனிதம் இன்னும் எங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றது. உங்களால் மக்கள் பணத்தினை விழுங்கி கொழுத்துப் போயிருக்கும் உங்கள் நண்பர்கள் பலர்  மகிந்த கொலைக் கும்பலுக்கெதிரான போர்குற்றத்தை மூடிமறைக்க முயற்சிக்கின்றார்கள். காரணம் உங்களுக்கு அவர்கள் செய்த துரோகம் மக்களுக்கு அம்பலமாகிவிடும் என்ற பயம். ஆனால் உங்களை நம்பிய,  இன்னமும் நம்புகின்ற அப்பாவிச் சனங்கள் தான் உங்களுக்காக இன்னமும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதையும் தங்களுக்கு விளம்பரமாக்க முயற்சிக்கின்றது சில கும்பல்கள்.

வலிமையோடிருந்தவர்கள் நீங்கள்

துப்பாக்கி தரித்தவர்கள் நீங்கள்

நினைத்திருந்தால் மாற்றியிருக்கலாம்

மனித சரித்திரத்தை மாற்றியிருக்கலாம்

நினைத்திருந்தால் மீட்டிருக்கலாம்

அடிமை வாழ்வில் இருந்து மக்களை மீட்டிருக்கலாம்.


வலிமையுள்ளவர்கள், வலிமையற்ற உயிர்களை வாழ வைத்துப் பார்க்க வேண்டுமே தவிர வதைத்துப் பார்க்கப்படாது. நீங்கள் வதைத்தப் பார்த்தவர்கள். உங்கள் வதையின் வேதனை மாறாமல் எத்தனை குடும்பங்கள் எங்கள் தாய் மண்ணிலே இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. காலத்தால் மாற்ற முடியாத வலிகள் அவை. மரணத்தில் தான் மறைந்து போகும். எத்தனை தாய் உள்ளங்கள் எங்கள் மண்ணில் இப்போதும் கதறிக் கொண்டிருக்கின்றன. புலிகள் போய்விட்டது. கொலைகாரர்கள் மரணித்துவிட்டார்கள். நீங்கள் சிரியுங்கள் என்று எந்தத் தாயிடம் நாங்கள் கூற முடியும். பிள்ளைகளின் உயிருக்காக உங்களிடம் இரந்து நின்ற தாயமார்களின் உயிர்கள் எத்தனை, கணவன்மார்களின் உயிருக்காக இரந்து நின்ற மனைவிமார்களின் உயிர்கள் எத்தனை…, இப்படி எத்தனை ஆயிரம் உயிர்கள் தங்கள் உயிருக்காக உங்கள் காலடியில் இரந்து நின்றார்கள். இறுதியில் உங்கள் உயிருக்காக நீங்களே இரந்து நிற்க வேண்டியவர்கள் ஆகிப் போனீர்கள்.

துரோகிகளாக மறைந்து போன உங்களுக்காக நாங்கள் அனுதாபப்படக் கூட முடியாதவர்களாக இருக்கின்றோம். அனுதாபப்பட்டால் எங்களையும் புலிகள் என்கிறார்கள்… புலிப்பினாமி என்கிறார்கள்… மக்கள் விரோதி என்கிறார்கள்… பித்தலாட்டப் புரட்சியாளர்கள் என்கிறார்கள் சில பலவும் படித்த தத்துவக்காரர்கள். ரமேஸ், அதற்காக நாங்கள் தயங்கவில்லை. உனக்கும் உன்னோடு செத்துப் போன மற்றவர்கட்கும், உன் தலைவனுக்கும் எங்கள் அனுதாபங்கள். இன்னொரு தடவை நீங்கள் ஒன்று சேர்ந்தால் துப்பாக்கிகளை மக்களுக்கு எதிராக திருப்பாதீர்கள்.