Language Selection

சிறி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அன்புடன் அம்மா அப்பா சகோதர சகோதரிகளுக்கும் பிள்ளைகளுக்கும் !

தொலைபேசியில் விளக்கமாக பேசமுடியாதென்பதாலும் சுருக்கமாக அவ்வாறு பேசுவது என்பது நான் சொல்லவருவது தவறாக புரியப்படக்கூடாது என்பதாலுமே இக்கடிதத்தை எழுதுகின்றேன்.

இவ்வளவு காலமும் மிகவும் கொடிய போர்ச்சூழலுக்குள் அகப்பட்டு அத்தனை வேதனைகளையும் சுமந்து எத்தனையோ இழப்புகளையும் தாங்கிநின்று வறுமை, வேலைவாய்ப்பின்மை, உணவுப்பண்டங்களின் தட்டுப்பாடு, விலையேற்றம், உயிரோடு இருப்போமா என்ற திடமில்லாத நாளாந்த மனப்பதட்டம், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கணப்பொழுதும் அச்சத்துடன் வாழும் வாழ்க்கை என்று மூச்சுவிட முடியாத, தாங்கொணா சுமைகளையும் வேதனைகயையும் தமிழ் சமூகம் தாங்கி நின்றது. ஒட்டுமொத்த தமிழ்சமூகமும் அனுபவித்த சொல்லொணாத் துன்பங்கள் துயரங்கள் சொல்லி மாளாதவை.

 

இங்கு இதனை எழுதிக்கொண்டிருக்கும் என்னைவிட அதனை நேரடியாகவும் நடைமுறையிலும் உடலாலும் மனதாலும் நேரில் அநுபவித்தவர்கள் நாட்டிலே தங்கிவிட்ட நீங்கள் தான். நாட்டைவிட்டு வெளிநாடுகளுக்கு சென்று தஞ்சமடைந்த நாங்கள் குண்டுவீச்சுகள் அவலமான இடப்பெயர்வுகள் உயிரிழப்புகள், என்ற இந்த மிகக் கொடிய போரின் கொடூரங்களை, வெறுமனே உணர்ந்தும் புரிந்துகொள்ளக் கூடியவர்களாகவே மட்டுமே வேற்றுநாடுகளில் வசித்தோம். இக் கொடிய போர் விடுதலைப்போர் என வெடித்துக்கிளம்பிய ஆரம்பகாலத்தில் அதன் அங்கங்களாகவும் இலக்குகளாவும் நாங்கள் இருந்ததனால் நாங்கள் நாட்டைவிட்டு வெளியேறி வந்திருந்தாலும் அதே போரின் நீட்சியும் தொடர்ச்சியும் என்ன கொடுமைகளை எந்த அவலங்களை எப்படியான வாழ்க்கைச் சுமைகளை உருவாக்கும் என்பது போரின் ஆரம்பகாலத்தில் நாங்கள் அநுபவித்து அறிந்தவை தான். இராணுவம் வீதிவீதியாக ரோந்து சென்று வீடுவீடாக தேடிவந்த காலங்கள் அவை.

எந்த இடத்திற்கும் எவ்வேளையிலும் நடுநிசியிலும் கூட எந்த அச்சமோ கவலையோ இன்றி போய்த் திரும்பலாம் என்ற சூழலில் பிறந்து வளர்ந்து ஒரு சிறு கன்றுக்குட்டியின் சுதந்திரத்தோடு துள்ளித்திரிந்த எங்கள் பால்யவயது இன்றைய இளம் சந்ததியான உங்களுக்கு வாய்க்கப்பெறவில்லை. இறுகக் கட்டிப்போட்டது போல் பிறந்த காலம் தொட்டு வளர்ந்துவந்தவர்கள் நீங்கள். குடும்ப, சொந்த கடப்பாடுகள், பொறுப்புகள், உற்சாகமான உழைப்பு என்பதைத் தவிர வேறெந்த வெளிச்சூழலும் எங்களை கட்டுக்குள்ளடக்கி வைக்காத எமது பால்யகாலங்கள் எமது வாழ்நாட்களின் ஆரம்பப்பகுதியாகும். பின்னர் படிப்படியாய் மேலெழுந்துவந்து எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவைத்த போர்மேகங்கள், சூழ்ந்து கருக்கொண்டு திரண்டு கொடூரங்களை வாழ்வில் அனர்த்தங்களாய் பொழிந்து, அத்தனை அமைதியையும் சுதந்திரத்தையும் எம்மிடமிருந்து வாரி அள்ளிக் கொண்டு சென்ற காலம் எமது விடலைப்பருவ காலமாகும்.

போருக்குள்ளேயே பிறந்து அதிலேயே அவஸ்தையுடன் வளர்ந்தும் வந்த நீங்கள் போரின்றிய சூழலின் பெறுமதியை அளவிட அதற்கு முன்னரே பிறந்திருக்கவில்லை என்பது உங்கள் குற்றமல்ல. ஆனால் இவையிரண்டுக்கும் இடையில் அமைதியிலிருந்து போருக்குள் நாங்கள் அள்ளி தூக்கிவீசப்பட்டதனால் அமைதி என்ற நிழலின் அருமை போர் என்ற கொடும் வெய்யிலில் மட்டும் வாழ்ந்த உங்களை விட எங்களுக்கு மனதில் இருக்கின்றது. அந்த அமைதியானது இத்தனை அழிவுக்குப் பின்னாலும் உங்களுக்கு வாய்க்கப்பெறுமா என்ற ஆதங்கத்துடன் தான் நாங்கள் இங்கு வாழ்கிறோம்.

அந்தப் போரின் நீட்சியின் சுமைகளும் வேதனைகளும் இழப்புகளும் உங்களின் மேல் சுமைகளாக தொடர நாங்கள் தூரதேசத்திற்கு புலம் பெயர்ந்தோம். அடிக்கடி வந்துபோய் உறவுகளை பேணி பாதுகாத்து விருத்தி செய்யமுடியாத தொலைவிலிருந்தோம். நாங்கள் எறிகணை வீச்சு, துப்பாக்கிக் கொலைஞர்கள், தெருக்களில் நடமாட முடியாத அச்சம் என்பனவற்றிலிருந்து விடுபட்டு தொலைதூரத்திலிருந்தாலும் எண்ணங்களால் பழைய தெருக்களில் நடமாடியபடியே .இருந்தோம்.

அம்மா அப்பா சகோதரர்களுடன் குடும்பமாய் அங்கு வாழ்ந்த காலங்களும், துன்பங்களும் துயரங்கள் கொண்ட பாடுகளும், குதூகலமாகக் கூடி வாழ்ந்த பொழுதுகளும் நித்தம் எமது எண்ணங்களில் மீளவும் மீளவும் வந்துபோய்க் கொண்டேயிருக்கும்.

இன்றைக்கு பூட்டப்பிள்ளைகளோடும் பேரப்பிள்ளைகளாகிய உங்களோடும் சூழ இருக்கின்ற எங்கள் அப்பா அப்பா உங்கள் அப்பப்பா -அம்பப்பா அம்மம்மா -அப்பம்மா எட்டுப் பிள்ளைகளை பெற்று, வளர்த்து, ஒழுங்காக நிரந்தரமான வருமானமின்றிய காலங்களை எல்லாம் எதிர்கொண்டு, வளையாது சளையாது எங்களது உணவுக்கும் உறைவிடத்துக்குமாய் உழைத்து இன்று வயதால் இழைத்துத் தேய்ந்து போயிருக்கிறார்கள். எவரிடமும் இவர்கள் எங்களை கடனாளியாக்கியதில்லை கையேந்த வைத்ததுமில்லை என்பதையிட்டு அவர்கள் பெருமையுடன் மதிப்புடனும் நெஞ்சில் றிறுத்தப்பட வேண்டியவர்கள்.

உங்களது அம்மாவோ அப்பாவோ பிறந்ததும் குறிப்பிட்ட வயது வரை வளர்ந்ததும் காரைநகரில் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். குடிநீருக்கு, தண்ணீரை குடத்தில் மென்றுகொண்டு, நீர் நிரம்பிய குடங்களை இடுப்பிலும் தலையிலுமாக இரண்டு கிலோமீற்றருக்கப்பாலுள்ள நன்னீர் கிணறொன்றிலிருந்து சுமந்து கால்நடையாய் நித்தமும் பெண்கள் அணியணியாய் செல்வார்கள்.

இப்படி இவர்கள் தங்கள் தலையில் குடம் குடமாய் தண்ணீரைச் சுமக்காவிட்டால் இடுப்பொடிய நடக்காவிட்டால் தண்ணீர் பெறவும் தாகம் தீர்க்கவும் வேறுவழியே இல்லை.

குடிப்பதற்கு இப்படி என்றால் அழுக்கான உடுப்புகளையும் துணிகளையும் தலையிலோ இடுப்பிலோ சுமந்துகட்டி அதேயளவு தூரம் நடந்து சென்று கிணறுகளில் வாளிவாளியாய் தண்ணீர் இறைத்து தோய்த்து துவைத்து காயவிட்டு பின்னர் திரும்பவும் வீட்டுக்கு சுமந்து வருவது வாராந்தக் கடமை பெண்களுக்கு.

சிறுபராயத்து ஆண்களான நாங்கள் அன்று இவைபற்றி எண்ணிப் பார்த்தது கூட கிடையாது. ஏன் பெரியவர்களான ஆண்களும் தான்.

இவை விட விறகு சேகரிப்பது ஆடு கோழி வளர்ப்பது என்பது இத்தனை வேலைகளுக்கிடையிலும் முயற்சிகள் எதுவுமின்றி இருக்க மறுக்கும் ஒரு மூத்த தலைமுறையின் பண்பாடாகும்.

உங்கள் எல்லோரையும் நான் பாராட்டவும் தட்டிக்கொடுக்கவம் விரும்புகிறேன். ஆனால் அதேவேளையில் பேரப்பிள்ளைகளில் நான் உங்களுக்கு முன்னுதாரணமாகக் காட்டவிரும்புவது நிமலனைத் தான்.

கீழ்க்கண்ட ஆங்கில முதுமொழிக்கிணங்க கிடைக்கின்ற உதவிகளை படிக்கட்டுகளாக எடுத்து அதன் மூலம் சொந்தமான உழைப்பிலும் முயற்சியிலும் தன்னை வாழ்வில் நிலைநாட்டுவதிலும் தனது சமூகத்திற்கு பொறுப்பு வாய்ந்த ஒருவனாகவே ஒருத்தியாகவோ தனது கடமைகளையாற்றுவதிலும் நாங்கள் முன்னேறிச் செல்லவேண்டும். உதவி எனப்படுவது கடலில் தத்தளிக்கின்ற ஒரு உயிருக்கு கிடைக்கின்ற ஒரு படகு போன்றதே. தனது வலிமையையும் சக்தியையும் பயன்படுத்தி துடுப்பினை தானே வலித்தால் தான் கரைசேர்வது என்ற பேச்சுக்கே இடமுண்டு.

Give a man a fish and you feed him for a day.Teach a man to fish and you feed him for a lifetime.”

"ஒரு மீனை வழங்கினால் ஒருத்தனின் ஒருவேளைப் பசி தான் அடங்கும். அவனுக்கு மீன் பிடிப்பதைக் கற்றுக்கொடு அவனுக்கு நீ ஆயுள் வரைக்கும் ஆகாரம் தருகிறாய்."

நான் உங்களுக்கு என்னால் முடிந்தளவுக்கு உதவி செய்ய பின்நிற்கப் போவதில்லை. ஆனால் அந்த உதவியின் விளைவாய் நீங்கள் அடையும் முன்னேற்றங்களின் ஒவ்வொரு படிக்கட்டுக்களையும் நான் காணவிழைகின்றேன். நீங்கள் உங்கள் சொந்தக்காலில் உங்களை நிறுவிக்கொள்ள வேண்டும் என்பதே எனது அவா. அதுவே பெற்றாராகிய எங்களுக்கும் உங்களுக்கும் பெருமையான விடயம். இதனை நான் கற்றுக்கொண்டது அப்பப்பா-அம்மப்பாவிடமிருந்து. எண்பத்தைந்து வயதை தாண்டிய பின்னாலும் அவர் தான் இன்னும் உழைப்பதை நிறுத்தவேயில்லைப் பாருங்கள்

உங்களுடைய கையிலும் உங்களுடைய தீர்மானத்திலும் தான் உங்கள் வாழ்க்கை எதிர்காலத்தில் அமைய வேண்டும். யாருடைய தயவிலும் உங்கள் வாழ்க்கையை அலைய விடக் கூடாது. நிமிர்ந்து நின்று நீங்கள் யார்க்கும் தலைகுனியாமல் நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்பார்கள் அதுபோல் அச்சமில்லை அச்சமில்லை உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமென்பதில்லையே என்ற மிடுக்கோடும் தன்மானத்தோடும் வாழ வேண்டும்.

இளமை என்பது பசுமரத்தாணி போல் எவற்றையும் இலகுவில் கிரகித்து நினைவில் பதிக்கின்ற காலம். எவற்றையெல்லாம் கற்க வாய்ப்பிருக்கின்றதோ அது கல்வியாயிருக்கலாம் விளையாட்டுதிறனாயிருக்கலாம் தொழிற்தகமையாயிருக்கலாம் இளமையில் கற்றுக்கொள்ளாமல் விட்டுவிட்டால் - இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்பார்கள் . வயது கடந்த பின்னர் மிகவும் சிரமமானதொரு விடயம்.

உடற்கூற்றியலின்படி மனிதரின் வயதேகி செல்லும்போது உடற்கலங்கள் இளம் பருவ காலத்திலுள்ளது போல் செயற்படுவதில்லை. எல்லா இயல்புகளும் அருகிக்செல்கின்றன. அதற்காகத்தான் காலத்தே பயிர்செய் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்றார்கள்.

ஓவ்வொரு உதவியும் உனக்கொரு ஏடிப்பணி. உதவிகள் முன்னேற்றத்துக்கான முதலீடு.

எனவே துடிப்போடும் மிடுக்கோடும் எவற்றையும் எதிர்கொண்டு போராடி நிமிர்ந்து நிற்க வேண்டும் நீங்கள்.

சாதிக்கவல்ல இளமைப்பருவத்தை வீணே கழித்துவிட்டு பின்னர் வாழ்நாள் பூராவும் கவலைப்படக்கூடாது. அசையாத மன உறுதியோடும் திடத்தோடும் இலக்குகளோடும் இலட்சியங்களோடும் விடாமுயற்சியோடும் முன்னேறுங்கள்.

போருக்கு முன்னானதும் பின்னானதுமான இன்றைய சூழலில் இளைய தலைமுறையினரிடையே பரவிவருகின்ற தனது சுயசம்பாத்தியத்தை தானே தேட விழையாத சோம்பேறித்தனமான, எதையும் இன்னொருவரின் உழைப்பிலோ கருணையிலோ தயவிலோ நுகரும் ஒரு மனப்பாங்கு குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வளர்ந்து வருகின்றது.

இந்த மனப்பாங்கு சமுதாயத்தில் உழைப்பை மதிக்காத தன்மையை வளர்த்து அடிமையையும் மிடிமையையும் உருவாக்கும்.

நீங்கள் மட்டுமல்லாது யாரும் இந்த தொற்றுநோய்க்குள் விழுந்து விடக்கூடாது. சமூக அக்கறையோடு இளையவர்களாகிய நீங்களும் வளர்ந்தவர்களாகிய பெற்றோரும் தங்கள் இளையவர்களையும் சமூகத்திலுள்ள மற்றைய இளைஞர்களுக்கும் எடுத்தியம்பி வளர்த்துச் செல்ல வேண்டும்.

கடும் உழைப்புக்கும் ஊக்கத்துக்கும் பெயர்போனது யாழ்ப்பாண சமூகம். இதற்கு மிகவும் சிறந்த உதாரணத்துக்கு நீங்கள் அதிக தூரம் போகவேண்டியதில்லை. உங்கள் அப்பப்பா அம்மப்பாவை பாருங்கள். அவரது ஊக்கமும் உழைப்பும் அருகிலிருக்கின்ற உங்களுக்கு புரியாவிட்டால் வேறு யாரையும் காட்டி அதனை உங்களுக்கு உணரவைக்க முடியாது.

துன்பங்கள் துயரங்கள் வரும்போது தூக்கிவிடுவது மனிதப்பண்பு. அதே போல் தனக்குக் கிடைக்கும் அவ்வாறான உதவி ஒவ்வொன்றையும் படிக்கட்டுகளாக பாவித்து தன்னுடைய சுயவிருத்தியின் மூலம் தன் சொந்தக்காலில் தளராமல் நிற்பதற்கு அடித்தளம் இடுவதற்கும் தலைகுனியாமல் வாழ்வதற்கும் முயற்சி எடுக்க வேண்டும். அதைவிடுத்து எவராவது என்றோ ஒருநாள் எங்களுக்கு படியளப்பார் என்று தங்கள் கல்வியைத் துறப்பதோ அல்லது வெளிநாட்டிற்கு சென்றால் வளங்கள் தானாக வரும் என்று நாட்டில் எந்த முயற்சியையும் கைவிட்டு வெளிநாடு செல்லலாம் என கனவு காணுவதோ பொருத்தமாயிருக்காது.

வெளிநாட்டில் உழைப்பில்லாமல் யாரும் எதையும் சம்பாதித்து விட முடியாது. மிகவும் கடினமான உழைப்பினூடாகவே எவரும் வாழமுடியும். இந்த கடின உழைப்பின் செலவு போக கிடைக்கும் பலமாதச் சேமிப்பு இலங்கை நாணயத்துக்கு அது மாற்றமடையும் போது அது பலமடங்காவதால் தான் வெளிநாட்டு வருவாய் செல்வச் செழிப்பானதாக தெரிகிறது.

வெளிநாட்டுக்கு வந்துவிட்டால் மொழியைக் கற்க வேண்டும். அதன் பின்னால் தொழில் பெறவேண்டும். தொழில் பெறுவது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. மீண்டும் எந்தத் தொழில் செய்ய நாங்கள் நாட்டில் மனவிருப்பின்றி இருந்தோமே அதே தொழில்களை தான் இங்கு செய்ய வேண்டும்.

இபபடி வந்த பலர் பொறுப்புணர்வின்றி உழைத்து வாழாத ரவுடிகளாக ஜரோப்பிய கனடியத் தெருக்களில் அலைகிறார்கள். வெளிநாடெனில் சொகுசு என எண்ணுபவர்கள் இங்கே வந்தபின்னால் கடின உழைப்பின்றி வாழ்க்கை வசதியானதல்ல என்று தங்கள் கனவுகளை கைவிட்டு இப்படியான இலகு பாதைகளில் தவறி விழுகிறார்கள். அவர்களுக்கு உழைப்பினதும் தனது சுயசம்பாத்தியத்தினதும் மகிமையும் தெரியவில்லை. தனது சுய கவுரத்திற்கு வைராக்கியமான மனமும், எதையும் அடைந்தேகுவதற்கு தனது விடாமுயற்சியும் அவசியமானது என்ற பாலபாடம் கிடைக்கப் பெறாமல் ஊர்களிலேயே ஊதாரிப் போக்கில் திரிந்தவர்களாதலால் அவர்களின் முதுகு எங்கும் வளையாது.

உடலுழைப்பு என்றும் இழிவானதல்ல. நான் கல்விகற்ற வேளைகளில் கூலிவேலைக்கும் கல்லுமண் சுமந்தும் சிறு சம்பாத்தியத்தை தேடியிருக்கின்றேன். இவ்வாறான சுதந்திரத்தை எனக்கு ஒரு தெரிவாகத்தந்த எனது பெற்றார்களை அதற்காக நான் போற்றுகிறேன்.மறுபுறத்தில் அவர்கள் எனக்களித்த சுதந்திரத்தை நான் எந்தக் கெட்ட வழியிலும் அல்லது வீண் பொழுது போக்குவதிலும் செலவழிக்கவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்.

அதே நேரம் இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும். சமூகநோக்குடைய வேலைகளில் நான் ஈடுபாடு காட்டிய வேளைகளிலும் நான் எனது வாழ்க்கைத் துணையை எனது சுய விருப்பில் தெரிவு செய்த போதும் அவர்கள் எனக்கு அந்தச் சுதந்திரத்தையும் அளித்தார்கள்.

பெற்றார் பிள்ளைகள் மேல் எப்படி நம்பிக்கையுடன் அவர்களை வழிநடத்துவார்களோ அதே போல் பிள்ளைகளும் பெற்றாருக்கு தங்களது சொந்தக்காலில் தலைநிமிரும் வரைக்காவது பரஸ்பர நம்பிக்கையுடனும் சொல் நாணயத்துடனும் நடந்தால் மட்டுமே இந்த இருவழி உறவு பெறுமதியை பிள்ளைகளுக்கு வாழ்க்கையில் வழங்கும். உங்களது மகிழ்ச்சியான வாழ்வு ( அம்மா சொல்வது போல் கூழைக்குடித்தாயினும் கஞ்சியைக் குடித்தாயினும் நோய் நொடியின்றி மனமார சீவனுக்கு பொல்லாங்கில்லாமல் வாழ்ந்தால் சந்தோசம்) தான் அவர்கள் தங்கள் உதவி மூலம் உங்களுக்கு அளிக்கும் முதலீடு. ஆந்த முதலீட்டில் முதலும் வட்டியும் உங்களுக்கே சேர்மதி. பெற்றார் வேறெதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். உங்களது சந்தோசம்தான் அவர்களது வாழ்வு. நீங்கள் அவர்கள் தொய்ந்து வயதால் நொந்தபோது மட்டும் அவர்களை பராமரிக்கும் எண்ணத்தை கடப்பாடாக செய்ய வேண்டும்.

வெளிநாட்டில் வயோதிபர் இல்லங்கள் உண்டு. நான் இங்கு வந்த பின்னால் படித்துக் கொண்டிருந்த அதேவேளை பகுதிநேர வேலையாக வயோதிபர்களை பராமரிக்கும் வேலை செய்தேன். இந்த நவீனமான வசதிகள் கொண்ட வயோதிப இல்லங்களில் கொண்டுவந்து சேர்க்கப்படுவவர்களுக்கு வசதிகளுக்கு எந்தக் குறையுமில்லாதிருந்த போதும் அவர்களுக்கு இருக்கின்ற ஏக்கம் எதுவென்பது இலங்கை போன்ற நாடுகளிலிருந்து வந்த எங்களுக்கு சொல்லாமலே புரியும். அவர்களது, தங்களது பிள்ளைகளின் அருகாமையை இழந்திருக்கின்ற தவிப்பு அவர்களது முகங்களில் ஒட்டப்பட்டிருக்கும். பெருநாள் திருநாள் என்றால் தான் பெரும்பாலான பிள்ளைகள் இந்த வயோதிப இல்லங்களுக்கு வருவார்கள். மற்றும்படி சிலர் மிகவும் ஒழுங்காக வாரத்தில் ஒரு முறை இருமுறையாவது தவறாமல் வந்து தாங்களே அவர்களுக்கு உரிய பணிவிடைகளைச் செய்வார்கள்.

இந்த ஊதியம் வழங்கப்படும் சேவையை நிறுவனமயமாக்கி இங்கே ஒவ்வொரு நகர கிராம மன்றுகள் கட்டாய சேவையாக வழங்கி வருகின்றார்கள். ஆனாலும் நிறைகளும் குறைகளும் நிதி ஒதுக்கீட்டில் வெட்டுகளும் நடந்தே வருகின்றது.

இதனை நான் ஏன் கூற வந்தேனென்றால் எங்களது நாட்டில் இயலாத காலத்தில் பெற்றாரை பராமரிப்பது பிள்ளைகளின் பொறுப்பு என்பதாக நாம் உணரவேண்டும். தானும் தலைநிமிர்ந்து சமூகத்தில் இயலாத மற்றவர்களுக்கும் பொறுப்பானவர்களாக நீங்கள் உறுதிப்பட வேண்டும்.

நான் சிறியவனாக இருந்து போது எனக்கும் உங்களைப் போல் அம்மையாவும் அப்பையாவும் இருந்தார்கள் வயோதிபர்களாக.

அம்மையாவுக்கு வயோதிப காலத்தில் கண்பார்வை அறவே போய்விட்டது. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாய் அவர் கண்பார்வை இழந்தவராகவே இருந்தார். அவருக்கு மலசலம் கழிப்பது, தூர நடை போவது, உணவு, தண்ணீர் பெறுவது என எதற்கும் இன்னொருவர் தயவு தேவைப்பட்டது. இந்த உதவிகளை நான் என்னால் முடிந்தளவுக்கு தட்டிக்கழிக்காமலும் முகம் சுழிக்காமலும் அன்போடும் ஈடுபாட்டோடும் செய்திருக்கின்றேன். அவருக்கு முகம் கழுவ தண்ணீர் தருவது. பல்லு விளக்க கரித்துண்டு தருவது, காலைக்கடன் கழிக்க மலசலகூடத்துக்கு அவருடைய கைத்தடியில் பிடித்து தாங்கலாய் அழைத்துச் செல்வது, மலம்கழுவி துப்பரவாக்க தண்ணீர் மொண்டு தருவது, அல்லாவிடில் கடற்கரைக்கு அழைத்துச் செல்வது, கோவிலுக்கு கூட்டிச்செல்வது, மதிய உணவு மாலைநேர உணவு தருவது, இரவுப்படுக்கைக்கு படுக்கையை சரிசெய்து பாய் தலையணையை சீர்படுத்திக் கொடுப்பது, வெந்நீர் வைத்து குளிக்க உதவி செய்வது என்ற பணிவிடைகளை நான் ஒரு பேரனாக செய்திருக்கின்றேன். அவரோ தனது மகிழ்வின் அடையாளமாய் எனக்கு கணித பெருக்கல் வாய்ப்பாடுகளை திரும்பத் திரும்ப என்னிடம் கேட்டு எனக்கு அவை மனப்பாடமாகுவதற்கு வழி செய்தார். என்னை தன்னுடைய கால்பாதங்களில் இருத்தி ஊஞ்சலாட்டி பல புராண இதிகாசக் கதைகளை கூறுவார்.

அப்பப்பாவும் கூட விடாமுயற்சியும் சதாவேளையும் ஏதோ ஒரு வேலையை செய்தபடியும் இருப்பார். இவர் ஒரு சிறந்த நுணுக்கமான கைத்தொழில்கள் பல கைவரப் பெற்றவர். பாய்மரப்படகு, வத்தைகட்டுதலிலிருந்து இரும்பு, மர தச்சு வேலை கட்டிடக் கோப்பிச வேலை சிற்ப வேலைகள் கைவந்தவர்.

இன்றைக்கும் எனக்கு சுத்தியல் பிடித்து ஆணி அடிக்கவோ சுவருக்கு பூச்சுவேலை செய்தாலோ அல்லது எந்த நுணுக்கமான கைவேலையான வர்ணம் பூவும் வேலையாக இருந்தாலே அப்பப்பா தான் எனக்கு மானசீகமான குருவாய் இருக்கின்றார்.

இவருடைய முதுமையான காலத்திலும் இவருக்கு ஒத்தாசையாக நான் அவரோடு கூட அவர் செல்லும் இடங்களுக்கு துணையாக போவதிலிருந்து அவருக்கு வெந்நீர் வைத்துக் கொடுப்பது மற்றும் வேண்டிய உதவிகளையும் பணிவிடைகளையும் செய்து கொடுப்பது போன்றன எனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாக இன்றெண்ணி மகிழ்கிறேன்.

இத்தனைகளையும் நாங்கள் சிரமமெடுத்து மனதார செய்வோமாகில் எந்த வேலைகளும் பழுவாக தெரியாது மன மகிழ்வாகத்தான் தெரியும்.

வாழ்க்கை என்பது நெடுகிலும் ஒரு போராட்டம். அந்தப் போராட்டமே மனமகிழ்வினை தரும். துவண்டு விடாது மனம் சோர்ந்து விடாது சாதிப்பது, எவற்றையும் வெல்வது தான் வாழ்க்கை.

உன்னால் முடியும் தம்பி என்பார்கள்.

தமிழ் சினிமா வாழ்க்கை உங்கள் இதயங்களில் எந்தக் கனவையும் விதைக்க இடம் வைத்துவிடாதீர்கள். இளைய வயதினரை இழுத்து விழுத்தும் பல பொறிகள் அங்கு நீங்கள் அறியாமலே பரவி விடப்பட்டிருக்கின்றது.

சினிமா என்பது ஒரு கனவுத் தொழிற்சாலை. நிஜவுலக வாழ்வுக்கும் சினிமா உங்கள் மனதில் உள்புகுத்தும் கனவுக்கும் துளியளவும் சம்பந்தமில்லை என்பதை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்.

சினிமாவுக்கும் தொலைக்காட்சிக்கும் உங்கள் மொத்த நேரத்தில் நீங்கள் தரக்கூடிய நேரம் ஒரு சதவீதம் கூட ஆகக் கூடாது.

எத்தனையோ அறிவுபூர்வமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் உண்டு தான். ஆனால் அவை துரதிஸ்டவசமாக வேற்றுமொழியில் தான் கிடைக்கின்றன. தமிழ்மொழியிலான தொலைக்காட்சியோ சினிமாவை விட்டு இன்னும் விலத்தியபாடில்லை. தமிழ் சினிமாவோ இன்னும் யதார்த்த வாழ்வினையும் நிஜமான நடப்புகளையும் கொண்டு தயாரிக்கபடுவதில்லை.

நல்ல புத்தகங்களை தேடி வாசிப்பது, எந்தமொழியாயினும் அதனை கற்றுத் தேர்வது பாண்டித்தியம் பெறுவது, அத்தோடு கற்கும் அந்த இரண்டாம மொழியில் வெறும் அடிப்படையறிவை மட்டும் குறிக்கோளாகக் கொள்ளாமல் அந்த மொழியில் எழுதப்பட்ட நூல்களையும் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது என பன்மொழித் திறமையை வளர்ப்பது என்பது சினிமாவுக்கு செலவழிக்கும் நேரத்தைவிடச் மிகவும் பயனுள்ளது. பிரயோசனமானது. நாங்கள் கற்ற காலங்களை விட உங்களுக்கு இன்றைக்கு உலகமொழிகள் அறிவுகள் எத்தொலைவிலிருந்தாலும் உங்கள் காலடிக்கு வந்து சேரும் விதத்தில் இன்று இணைய வசதிகள் இருக்கின்றன. ஆனால் எங்களது உற்சாகத்தை நீங்கள் பிரதிபண்ணுவீர்களாயின் எங்களை விட பலமடங்கு வேகத்தில் நீங்கள் கற்றுக் கொள்ளும் வசதி இன்று உங்களுக்கு இன்றைய தொழிற்தொடர்பு தொழில் நுட்பம் வழங்கியிருக்கின்றது. இது உங்களுக்கு ஒரு வரப்பிரசாதமல்லவா?

உங்களுக்கு இருக்கின்ற நேரத்தை திட்டமிடுங்கள் அதனை கூறு போடுங்கள். முக்கியமானவற்றை முதன்மைப்படுத்தி உரிய போதுமானளவு நேரத்தை அவற்றுக்கு ஒதுக்குங்கள். உடற்பயிற்சிக்கும் விளையாட்டுக்கும் நேரம் ஒதுக்குங்கள். இசைக்கும் கலைக்கும் ஒதுக்குங்கள். இசை வாத்தியங்கள் உங்களுக்கு மட்டுமல்லாது உங்களைச் சூழவுள்ளவர்களுக்கும் இனிமையைத் தரும். மிகுதி நேரம் கிடைத்தால் அதனையும் சரியான வழியில் பயன்படுத்தப் பழகுங்கள். சினிமாவுக்கு என்னைப் பொறுத்தவரை மாதத்தில் ஒரு தடவையோ வருடத்தில சில தடவைகளோ ஒதுக்கலாம்.

வீட்டில் பெரியவர்கள், வேறு முக்கியமான அலுவல்கள் இல்லாமல் ஓய்வுநேரத்தை சினிமாவில் போக்கிக் கழிக்க விரும்பும் வளர்ந்தவர்கள் இருந்தால் அவர்களோடு நீங்களும் சேர்ந்து சினிமாவில் பொழுதைக் கழிக்காதீர்கள். அது எந்த அறிவையோ வாழ்க்கைக்கு எந்த அடிப்படையையோ உங்களுக்கு தேடித் தராது.

பிள்ளைகளே நீங்கள் நாளைய எங்கள் வருங்காலப் பயிர்கள். நீங்கள் செழித்து வளர்ந்து பூரிப்போடு தனக்கும் சமுதாயத்துக்குமாக வாழ்வது தான் பெற்றாருக்கு நீங்கள் தரக்கூடிய மிக உச்சமான மகிழ்ச்சி. அது மட்டுமல்ல அதுவே தான் உங்களுக்கும் நாளைய உங்கள் சொந்த மகிழ்ச்சிக்கு நீங்கள் நீங்கள் இடக்கூடிய அடிப்படை முயற்சி.

தோல்விகள் துன்பங்கள் வழிநெடுக உண்டு. அது தன்னாலும் வரலாம் பிறராலும் வரலாம். எல்லாவற்றையும் தாண்டி துவண்டுவிடாமல் அடுத்தபடிக்கு செல்வதும் அவற்றை வெல்வதும் மன உறுதியோடு மீண்டும் அடுத்த அடியெடுத்து முன்னேறுவதும் போராட்டம். அதுவே வாழ்க்கை.

உன்னால் முடிந்ததை சாதிக்கப் பழகு.சோம்பேறியாய் இருந்துவிட்டு எவரும் எதுவும் எனக்கு உதவி செய்யவில்லை என்று மற்றவர் மேல் பழி சுமத்தி மற்றவர்களின் இரக்கத்தில் வாழப் பழகிக் கொள்ளாதே. அது தன்மானமாக தலைநிமிர்ந்து வாழும் உன் எண்ணத்துக்கு ஈறு தரும் என்பதைப் புரிந்து கொள்.

நானே என் முயற்சியால் உயர்ந்தேன் என்று மார்தட்டு. உதவி என்பது உனக்கு படிக்கட்டுத்தான். காலடிகளை மேலே எடுத்து வைப்பது நீயே தான். உதவி என்பது உனக்கு பாயல்ல படுத்துத் தூங்குவதற்கு. படுத்துத் தூங்குபவனுக்கு உதவி செய்வது அவனை மேலும் பாழடிப்பதாவே முடியும். எனவே சாதித்துக் காட்டுங்கள். தானே உதவி தேடி வரும். அது புலமைப்பரிசிலாக வரலாம். தனிநபரிடமிருந்து கூட வரலாம். தனிநபர்களிடமிருந்து வரும் உதவிகளை அது உங்கள் சுயாதீனத்துக்கும் சுயகவுரத்துக்கும் எந்த வகையிலும் உங்கள் சொந்த தீர்மானங்களுக்கும் சிந்தனைக்கும் கட்டுப்பாடு வைக்காத வகையில் மட்டும் அதனை சீர் தூக்கிப்பாருங்கள். உதவிகளுக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் உங்களை எங்கும் அடகு வைக்காதீர்கள்.

அது காதல் ரூபத்திலோ கல்யாண ரூபத்திலோ கூட வரலாம். தெரிந்தவர் அறிந்தவர் பெரியவர் என்ற அந்தஸ்து ரூபத்திலும் வரலாம். உன்னை கீழ்ப்படுத்தி தாழ்மைப்படுத்தி எந்த உறவோ உதவியோ வந்தால் துரத்தியடியுங்கள். அவர்கள் தீய நோக்குடன் குறுக்கே நின்றால் உங்களுக்கு தனிப்பட குறிப்பிட்ட வழியில் பாதகமாயிருப்பினும் அத்தீயவர்களை தூக்கியெறியுங்கள். அவர்களை அம்பலத்துக்கு கொண்டு வாருங்கள். அவர்கள் உறவாயிருப்பினும் நண்பர்கள் போல் நடிப்பவர்களாவிருப்பினும் அறிவாண்மையால் தங்களை மற்றவர்களை விட மேலானவர்களாக கருதுபவர்களாகவும் இருக்கலாம், எவராயினும் நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே.

அதே போல் மனமறியாமல் பக்குவமில்லாமல் முதிர்ச்சியடையாமல் நீங்கள் தவறுகள் இழைப்பின் அத்தவறுகளுக்கு மனம் வருந்துங்கள். உங்களை திருத்திக் கொள்வதுடன் நீங்கள் தவறிழைத்திருப்பது உங்களை விட வயதில் அறிவில் சிறியவராயிருப்பினும் அவர்களிடம் மனவுணர்வுடன் மன்னிப்பு கேட்கவும் தவறாதீர்கள். மன்னிப்பு என்பது உண்மையில் தவறை தவறென்று உண்மையிலேயே உணர்ந்தவர்களுக்கு மட்டுமே என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள். கற்றுக் கொள்ளுங்கள் கற்றுக் கொடுங்கள். நேரம் பொன்னானது. போனால் திரும்பி வராதது. இளமையில் கல்வி சிலையில் எழுத்து. கற்றது கையளவு கல்லாதது உலகளவு.

மனிதப் பாங்கும் பண்பும் மற்றெல்லாத் தகுதிகளை விடவும் மேலானது. இன்னொருத்தரின் அழிவில் தன்னுடைய செழிப்பை யாரும் தேடக் கூடாது.

இப்போதைக்கு நான் இக்கடிதத்தை நிறுத்துகிறேன்.

நன்றி