தமிழ் மக்கள் தம்மைத் தாமே இரண்டாவது பிரஜையாக உணரவைக்கும் மூளைச்சலவைகள்

இலங்கையில் தமிழ் இன அழிப்பு இராணுவ ரீதியாக நடைபெற்று இரண்டாவது ஆண்டை எட்டிப்பிடிக்கும் நிலையில், இன்றும் தமிழ் இன அழிப்பு தொடர்ந்த வண்ணம் தான் உள்ளது. இலங்கையின் பாசிச இனவெறி அரசானது தமிழ் மக்களின் வாழ்விடங்களில் திட்டமிட்ட குடியேற்றத்தையும், திட்டமிட்ட இன அடையாளங்களையும் அழிப்பதிலும் மிகவும் அக்கறையுடனும் கண்ணும் கருத்துமாகவும் செயற்பட்டு வருகின்றது. இந்த திட்டமிட்ட நடவடிக்கைக்கு துணையாக நிற்பது கூலிக் குழுக்களாக இருந்த தமிழ் சந்தர்ப்பவாதக் குழுக்கள் தான்.

தமிழ் மக்களின் வாழ்வாதாரங்களை கேள்விக்குள்ளாக்கிய இந்தப் பாசிச இலங்கை அரசு, மீள் குடியேற்றம் என்ற ஒரு பதத்தை பாவித்து எத்தனை காலம் தான் தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றது. மீள் குடியேற்றம் என்ற பதத்தில் ஒழிந்திருப்பது, இராணுவத்தினரையும் தமிழர் பிரதேசங்களில் மீள் குடியேற்றுவதே.

மீள் குடியேற்றம் என்பதற்கு அப்பால், திட்டமிட்ட குடியேற்றம் ஆங்காங்கே அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றது. இது இன்றும் தொடர்கின்றது. சட்டவிரோத இனவாத குடியேற்ற வெளிப்பாடு தான், இராணுவம் இரவோடு இரவாக யாழ் புகையிரத நிலையத்தில் தங்கியிருந்தவர்களை நாவற்குழியில் குடியமர்த்தியது.

யுத்த காலங்களில் தனிமையில் சிங்கள மக்கள் மட்டும் தமிழ் பிரதேசங்களில் இருந்து குடி பெயரவில்லை மாறாக தமிழ், முஸ்லீம் சகோதரர்களும் தான் குடி பெயர்ந்தனர். இவர்களுக்கும் எதிரியாக அன்றைய புலிகள் செயற்பட்டனர். இந்த தமிழ், முஸ்லீம் மக்களை மீள் குடியேற்ற வக்கில்லாத இந்த அரசு, தனது இனச் சுத்திகரிப்பை நடத்தி தமிழ் மக்களை இரண்டாம் பிரஜையாக பிரகடனப்பபடுத்தியது. தமது பேரினவாத கொள்கையை தமிழ் மக்கள் மீது திணித்து, அம் மக்களை மீண்டும் மீண்டும் அடக்கி ஒடுக்க நினைக்கின்றது. இதற்காக இந்த இனவாத அரசால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை, நாம் பட்டியல் இடலாம்

1. தமிழ் மக்கள் செறிவாக வாழும் இடங்களில் சிங்கள குடியேற்றத்தை நிறுவுதல். ஆதன் பின் அதற்கு பாதுகாப்பு என்ற போர்வையில் படைமுகாம்களை அமைத்தல்

2. தமிழ் மக்களிடம் கலாச்சார சீரழிவுகளை உருவாக்கி கலாச்சாரமற்ற இனமாக மாற்றுதல்

3. தமிழ் மக்களிடையே இருக்கும் சாதி முரண்பாட்டை கூர்மையாக்கி, சாதிய ரீதியான செயற்பாடுகளை தூண்டிவிட்டு மக்களை பிளவு படுத்தல்

4. தமிழ் மக்களின் புராதன சின்னங்களை அழித்து அதன் மேல் பேரினவாத சின்னங்களை நிறுவுதல்

5. தமிழ் மக்களின் குழந்தைகளுக்கு சமூக சீர்கேடுகளை கற்பித்தல்

6. தமிழ் பெண்களை மானபங்கப்படுத்தி, அவர்களை தங்கள் தயவில் வாழுமாறு மிரட்டுதல்

7.தமிழ் அரசியல் வாதிகளை வைத்தே, தமிழ் மக்களை ஒடுக்குதல்

இப்படி பல வகையில் செயற்பட்டுவரும் அரசு, தமிழ் மக்களை இதன் மூலம் தம்மை தாமே இரண்டாவது பிரஜையாக உணரவைக்கும் வண்ணம் மூளைச்சலவை செய்கின்றது.

இதை எதிர்க்கவென புறப்படுபவர்களை, புலிகள் என்று முத்திரை குத்தி அவர்களை சிறையில் அடைக்கின்றது இந்த பேரினவாத அரசு. இவர்களுக்கு சேவகம் செய்யும் வகையில், புலம்பெயர் நாடுகளில் ஒரு சில இணையங்கள் இயங்குகின்றன. யாராவது அரசை எதிர்த்தால், அவர்களை புலிகள் என்று முத்திரை குத்தி புலியின் தமிழ் தேசியத்திற்குள் தள்ளிவிடுகின்றனர். இவர்களை உண்மையில் இலங்கை அரசின் அல்லது இந்திய உளவு ஸ்தாபனத்தில் கையாட்களாகவே நாம் பார்க்க வேண்டியும் உள்ளது.

தமிழர்களை தமிழர்களாலேயே அழிப்பது என்பது இன்று இலங்கையில் மிகவும் திட்டமிட்ட செயற்பாடாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. யுத்தகாலத்தில் சின்னஞ்சிறு குழந்தைகளையும் புலிகள் என்ற பட்டியலில் போட்டு கொன்று குவித்த இந்த அரசு, தமிழ் மக்களின் இரத்தத்தை திராட்சை ரசம் என்று குடிக்கும் இந்த பேரினவாதக் கூட்டமும், தமிழ் தொழிலாளர்களையும் சிங்களத் தொழிலாளர்களையும் ஒன்று சேரவிடாது தொடர்ந்தும் இனவாத கருத்துக்களை விதைப்பதன் மூலம் பிரித்து வைத்திருக்கின்றது.

தமிழர்கள் தொடர்பில் புலிகள் அல்லாத எவருமே தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இயங்க விடாது மறுத்த புலிகூட, இந்த இனவாத அரசிற்கு மறைமுகமாக சேவகம் செய்வதாகவே உள்ளது. தமிழ் அரசியல் வாதிகளை எடுத்தால், இவர்கள் எந்தளவில் தமிழ் மக்களின் இரத்தத்தை உறிஞ்சலாம் என்று கங்கணம் கட்டுபவர்களே. தமிழ் மக்களை பாதுகாக்க எனப் புறப்பட்ட பிற்போக்கு தமிழ் தேசியத்தை உயர்த்திப்பிடித்த பழைய இயக்கங்களும், தமிழ் மக்களின் இரத்தத்தை உறிஞ்சுபவையாகவே இருக்கின்றன. இவ்வாறு தமிழ் மக்களை தனிமையில், சிங்களப் பேரினவாதம் தான் நசுக்குகின்றது என்றாலும் அதற்கு உறுதுணையாக செயற்படுவது இந்த தமிழ் சக்திகளே.

இன்றைய நிலையில் ஒரு சில இணையங்களில் ஒரு கோட்பாட்டு வரையறையை சந்தர்ப்பவாதிகள் முன் வைக்க முனைகின்றனர். தமிழ் தேசியத்தை (புலித்தேசியத்தை) எதிர்ப்பவர்கள் எல்லோரும், இலங்கை அரசு சார்பினர் என்றும் உளவாளிகள் என்றும் அதேபோன்று இலங்கை அரசை எதிர்ப்பவர்கள் எல்லோரும், புலிகள் என்றும் முத்திரையை மாறி மாறி குத்துகின்றனர். இதற்கும் மேலாக தமிழ் தொழிலாளர் வர்க்கத்தினரால் உயர்த்திப் பிடிக்கப்படவேண்டிய தேசியவாதம் ஒன்று உண்டு என்பதை கவனிக்கத் தவறுவதுடன், அதை உயர்த்திப்பிடிப்பவர்களை இந்த குறுந்தேசியவாத நோக்கில் நின்று முத்திரை குத்துகின்றனர்.

 

சீலன்

12.11.2010