சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு பற்றிய சர்ச்சை இன்று ஆங்காங்கே எழுந்துள்ளது. இந்த மகாநாடு இலங்கையில் நடப்பது குறித்து தான் இந்த சர்ச்சை. இதனை வேறு எந்த நாட்டில் நடத்தினாலும் அதனை இவர்கள் வரவேற்பார்கள். அங்கு அவர்கள் என்ன பேசுவார்கள் என்பது பற்றி, எந்தக் கவலையும் இவர்களுக்கு கிடையாது. முதலில் இந்த மகாநாடு இலங்கையில் நடைபெறுவதால் ஏற்படக்கூடிய நன்மை தீமை என்பவற்றை ஆராய்ந்து, அதன்பின் இந்த சர்ச்சையைக் கிளப்பும் பிழைப்புவாதிகளைப் பற்றிப் பார்ப்போம்.
சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டை இலங்கையில் நடாத்துவதன் மூலம் இலங்கை அரசு தமிழ் மக்களுக்கான சகல உரிமைகளையும் வழங்கி உள்ளது என்றும், தமிழ் மக்கள் இலங்கையில் சம உரிமையுடன் வாழ்கின்றனர் என்றும் உலகத்துக்கு காட்ட முயற்சிக்கும். இதனை முறியடிக்கும் வகையில் மகாநாட்டுக் குழுவினர் இந்த மகாநாட்டை நடத்துதல் அவசியமானது. இதை யார் கோரினர்? இதை அவர்கள் மறுத்தார்களா? இது பற்றி யாருக்கும் எந்த அக்கறையும் கிடையாது. இலங்கையில் நடப்பதால், அதை அரசு நடத்துகின்றது என்று குற்றம்சாட்டுவது தான் (புலித்) தமிழ்தேசியமாக உள்ளது. வேறு காரணம் எதும் கிடையாது.
ஓரு இனப் படுகொலை நடத்தப்பட்ட தேசத்தில், சுயாதீனமான நிகழ்வுகள் நடைபெறுவது அவசியமானது. அதற்கு ஆதாரமற்ற முத்திரை குத்துவது தான் நடக்கின்றது. அழிந்து போன இனம், தன்னை மீளக் கட்டமைத்துக் கொள்ள வாய்ப்புக்களை சுயாதீனமான நிகழ்வுகள் உருவாக்கும். அந்த வகையில் இதை நடத்தக் கோரியிருக்கவேண்டும். அதை முன்வைத்திருக்க வேண்டும. மாறாக இலங்கையில் நடப்பதெல்லாம் இலங்கை அரசு சார்ந்ததாக கூறுவது, முத்திரை குத்துவது அண்மைய தமிழ்தேசிய எதிர்பரசியலாகின்றது.
ஏற்கனவே இலங்கையில் தமிழர் பகுதியில் ஏற்பட்ட தன்னியல்பான போராட்டங்களை எவ்வாறு புலிகள் தமதாக்கி அதை அழிவிற்கு இட்டுச்சென்றனரோ அதுவே மீள தொடங்கியுள்ளது. அது மட்டுமல்லாது புலிகளின் கட்டுப்பாட்டினுள் போக மறுத்த நிகழ்வுகளை தடைசெய்தும், துரோகக் கும்பல்களின் நிகழ்வு எனவும் முத்திரை குத்தி, அவை மீள எழாதவாறு அதை அழித்தனர். அதே பாணியில் புலம்பெயர் நாடுகளிலும் செயற்பட்டனர். இவ்வாறான செயற்பாட்டை மீண்டும் தற்போது புலியின் அழிவின்பின், தன்னியல்பாக எழும் நிகழ்வுகளை புலிப்பினாமிகள் அழிக்க முனைவதை இனியாவது தமிழ் சமூகம் கண்டித்து நிற்க கடமைப்பட்டுள்ளது.
இந்த மகாநாட்டை நடத்துபவர், இலங்கை அரசுக்கும் இந்த மகாநாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கின்றார். இலங்கை அரசுக்கும் இந்த மாநாட்டிற்கும் சம்பந்தம் இல்லை என்ற அடிப்படையில் இருந்து, இதை நோக்கவேண்டும், அணுக வேண்டும்;. அப்படி நடத்தக் கோர வேண்டும். இல்லை இலங்கை அரச நடத்துகின்றது என்றால், அதை ஆதாரமாக வைக்கவேண்டும்;. அப்படி ஆதாரமற்ற நிலையில் இறுதிநேரத்தில் இந்த மகாநாட்டை அரசின் அடிவருடித்தனமாக நடத்தினால் மட்டும் தான், அதை அம்பலப்படுத்த வேண்டும்.
அப்படியல்லாது மகாநாட்டை சிலர் தமது சொந்த அரசியல் நலன்களின் அடிப்படையில் குறுக்கிப் பார்ப்பதும், கண்டித்து அதற்கு எதிராக செயற்படுவதும் ஒரு அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவே உணர முடியும்.
அண்மையில் மகாநாட்டுக்கு எதிரான அறிக்கையும், அதன் கீழ் கையெழுத்து போட்ட நபர்களின் விபரங்களும் வெளியாகி இருந்தது. இந்த அறிக்கையினை வெளிக்கொண்டு வந்தவர்கள் யார்? புலிகளின் அமைப்பில் இயங்கியவர்களே. இவர்கள் இன்று புலிகளைத் தவிர வேறு எந்த சக்தியும், தமிழ் மக்களிடையே அரசியலை முன்வைக்க கூடாது என்ற எண்ணத்தில் உள்ளவர்கள். புலி அழிந்தாலும் அதை வைத்து பிழைக்கும் இந்த புலி ஆதரவாளர்கள், இலங்கையில் வாழும் தமிழ் மக்களை வைத்து மீண்டும் தமது அரசியல் பிழைப்பினை நடத்த பல வழிகளைத் தேடுகின்றனர். அதன் ஒரு செயற்பாடே, அவர்களின் இந்த எதிர்ப்பாகும். இவர்களுக்கு ஆதரவாக கையொப்பம் இட்டவர்களில்; அதிகமானவர்கள் இந்தியர்களே. இவர்கள் உண்மையில் இலங்கை தமிழ் மக்களின் நலனில் இருந்தா இங்கு கையெழுத்திட்டார்கள் என்றால் இல்லை. மாறாக புலித் தமிழ் தேசியத்தை உயர்த்திப் பிடித்து, புலம் பெயர் புலிகளுடன் கூட்டுச் சேர்ந்து, கடந்த காலங்களில் தமிழ் மக்களின் உண்மையான தேசிய விடுதலைப் போரை சின்னாபின்னமாக்க உதவியவர்கள். தொடர்ந்தும் அதனையே அவர்கள் செய்கின்றார்கள்.
இதற்கு நல்ல உதாரணம் அருள்எழிலன். இவர் புலித் தமிழ் தேசியத்தை உயர்த்திப் பிடிக்கும் ஒரு பேர்வழி. இவரின் பேஸ்புக்கில் புலிகளிடம் மக்களை விடுவிக்கக் கோரியது அநீதியான கோரிக்கை என்றும், எனது அடுத்த மேற்குலகப் பயணம் மே மாதத்தில் புலி காசில் … எனவும் அறிவிக்கிறார். மனித நேயமற்ற தனது முகத்தினையும், புலத்து தமிழர்களிடம் புலி மிரட்டிப் பறித்த காசில், ஊர் சுற்றி வருவதனை வெட்கமற்று பறைசாற்றியுள்ளார். இதனூடாக அவர் தமிழ்நாட்டில் தான் ஒரு புலிப் பிரமுகர் என்று மக்கள் முன் காட்டமுனையும் அதேவேளை, இலங்கை தமிழ் மக்களின் உயிரை ஒரு தூசாக பார்ப்பதனையும் இங்கு நாம் காணலாம். இலங்கை அரசு இன அழிப்பை நடத்திக் கொண்டிருந்த வேளை, எந்த மக்களுக்காக என்று கூறி புலிகள் போராடினார்களோ, அந்த மக்களை பணயக் கைதிகளாக பயன்படுத்தி தம்மை காக்க முனைந்த புலிகளை, இன்று சரி என்று கூறுகின்றார். இன்று இதை போல்தான் அனைவரும் கூற முனைகின்றனர். இந்த புலித் தமிழ் தேசியவாதிகள், புலத்து புலிகளின் பின் நின்று கூறினால் தான், தமிழ்தேசியம் என்று நிலை எடுக்கின்றனர். இந்த வகையில் தான், இலங்கையில் நடக்க விருக்கும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டை எதிர்த்து நிற்கின்றனர். இலங்கையில் சுயாதீனமான எதுவும் நடக்காது என்பது தான், இவர்களின் தமிழ்த் தேசிய வரையறையாகும்.
இது ஒரு புறமிருக்க இந்தியா இலங்கையின் மீது தனது வல்லாதிக்கத்தை எவ்வாறு செலுத்தியதோ, அதே போன்று தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் இலங்கைத் தமிழர்கள் மீது தமது வல்லாதிக்கத்தை செலுத்த முற்படுகின்றனர். இந்திய தமிழர்கள் தாம் பெரியண்ணன்களாகவும், இலங்கைத் தமிழர்களை சின்னத்தம்பிகளாகவும் நடத்த முற்படுகின்றனர். இதன் பாதிப்பை பல வழிகளில் எம்மால் உணர முடிகின்றது. எழுத்தாளர் மகாநாட்டை புறக்கணிக்க கோருவது புலி என்றாலும், அதை ஆதரித்து அதற்கு சாயமடிப்பது பெரியண்ணன்மார்களே. இலங்கையில் இந்த மகாநாடு நடப்பதனால் இரண்டு விதத்தில் இந்த பெரியண்ணாக்களுக்கு பாதிப்பு.
1. இலங்கை தமிழர் தம்மைத் தாமே உணர்ந்து சுயமாக சிந்தித்து தமது சுய உழைப்பில் தமது பிரச்சனைகளை கையாள ஆரம்பிக்க முயற்சிக்கின்றார்கள் என்பதும்
2. தமிழ் நாட்டில் இது நடந்தால் ஒரு புத்தகக் கண்காட்சியை இதனுடன் இணைத்து நடாத்தி பல்லாயிரக்கணக்கான புத்தகத்தை விற்று லாபம் சம்பாதிக்கலாம் என்பதும்.
இலங்கை தமிழ் மக்களாகிய நாம் எமது சுய சிந்தனையில் சுய முயற்சியில் எமக்கான முரண்பாடுகளை களைய வேண்டுமே தவிர, மற்றவர்களின் துணையுடன் அதை நடத்த முனைவது மற்றவர்களது நலன்களிற்கு நாம் பலியாடாகுவதிலேயே முடியும். 1980 களில் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை இலங்கை தமிழ் மக்களை மையமாக வைத்தே, தமிழ் நாட்டு அரசியல் நடைபெற்று வருகின்றது. இதற்கு இடம் அளித்ததும் நாம்தான். சண்முகதாசன் காலத்தில் இந்திய இடதுசாரிகளில் அவர் தங்கியிருக்கவில்லை. ஆனால் பிற்காலத்தில் எமது போராட்ட அமைப்புக்கள் தமிழ் நாட்டு இடதுசாரிகளிலும், தமிழ் நாட்டு கழிசடை அரசியல் கட்சிகளிலும் தங்கி இருந்தே போராட்டத்தை ஆரம்பித்தனர். இன்று வரையிலும் அவர்களைச் சார்ந்த அரசியலையே முன்வைக்கவும் முயற்சிக்கின்றனர். அதை தவிர்த்து சுயமான அரசியலை நடத்த இலங்கையர் பலருக்கும் முடியாமல் உள்ளது கண்கூடு. இந்த நிலையை நாம் மாற்றி அமைக்காத வரை, இலங்கை தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைப்பது தொடர்ந்த வண்ணமே இருக்கும்.
இந்த நிலையில் இந்தியாவில் உள்ள புரட்சிகர இடதுசாரிகளினதும், பரந்துபட்ட சாதாரண பொது மக்களின் ஆதரவும் எப்போதும் இலங்கைத் தமிழ் மக்களிற்கு உண்டு என்பதனை இங்கு மறுக்கவோ நிராகரிக்கவோ இல்லை. தமிழ் நாட்டிலுள்ள பிழைப்புவாத கட்சிகளினதும் நபர்களினதும் கைகளில் எமது போராட்டத்தினை நாமாகவே ஒப்படைத்த கேவலத்தினையே இங்கு சுட்டிக்காட்டியுள்ளேன்.
முடிவாக
1. எந்த செயல்பாடும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும் ஒடுக்குபவர்களுக்கு எதிரானதாகவும் அமைதல் வேண்டும்
2. தமக்கு தாமே படைத்து, தம்மாலேயே புகழப்படுவதை நிறுத்தி மக்களுக்கானதாக அவை மாற்றி அமைத்தல் வேண்டும்
3. யுத்தத்தின் கரங்களில் சிக்குண்ட மக்களின் அடிப்படை பிரச்சனைகளை மையமாக வைத்து குரல் எழுப்ப வேண்டும்
4. இனவாத யுத்தத்தை நடத்தி தமிழ் மக்களை கொன்றொழித்த இலங்கை அரசின் செயற்பாட்டை உலகிற்கு அம்பலப்படுத்த வேண்டும். தமிழ் மக்கள் ஒரு இனமாக வாழும் ஜனநாயக உரிமையை முன்வைக்கவேண்டும்.
5. புலிகளின் புலித்தேசிய பாசிச வேடத்தை மக்களுக்கு அம்பலப்படுத்துவதன் மூலம், மீண்டும் ஒரு புலியை உருவாக்காது மக்களை தமது பிரச்சனை தீர்க்கும் வண்ணம் அவர்களை விழிப்புறவைக்கவேண்டும்.
சீலன்