Language Selection

தேவன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழ் மக்கள் விரக்தியடைந்துள்ளார்கள். 30வருட போராட்டம் மக்களை சலிப்படைய வைத்துவிட்டது என்று சொல்லிக் கொண்ட தமிழ் மக்களின் போராட்ட உணர்விற்கு ஊட்டச்சத்து கொடுக்க முன்வந்துள்ளார்கள் சில அரசியல்வாதிகள்.

புலிகள் இருக்கும் வரை புலிகளுக்கு வால்பிடித்துத் திரிந்த இந்த கூட்டம்…,

தங்களுடைய கருத்துக்களை வெளிப்படையாக கூற முடியாமல் புலிகளுக்கு தலையாட்டிக் கொண்டது மட்டுமல்லாது, புலிகளின் தவறான நடவடிக்கைகளை சரியென்று நியாயப்படுத்தி மக்கள் மீது திணித்து மக்களை தவறான சிந்தனையில் வழி நடாத்தி வந்த இந்த கூட்டம்…,

இத்தனை ஆயிரம் மக்களின் அழிவிற்கு காரணமான புலிகளின் தவறான போராட்டத்திற்கு துணை போன இந்த சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் இன்று தங்களுக்கு எதுவும் தெரியாது போன்று புதிய வேடத்திலே மக்கள் முன் வந்துள்ளார்கள். இழந்து போன தமிழ் மக்களின் போராட்ட உணர்வினை மீண்டும் தட்டியெழுப்பி எதிர்காலத்தில் இன்னும் பல்லாயிரம் இளைஞர்களை பலி கொடுக்க பல திட்டங்களை தயார்படுத்தி தங்கள் பிழைப்பினை செழுமையாக்க முனைந்து கொண்டிருக்கிறது இந்த சந்தர்ப்பவாதக் கூட்டம். இன்றைய இலங்கை அரசியற் சூழல் இவர்களின் பித்தலாட்டத்திற்கு சரிவராதென்பதால் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் மத்தியில் தங்கள் பிரச்சாரத்தினை நடாத்தி வருகிறார்கள் இவர்கள்.

கடந்த முப்பது வருடப் போரினால் மக்கள் சலிப்படைந்துவிட்டார்கள், அவர்களின் இந்த சலிப்பினை போக்கி தமிழ்மக்களை அதுவும் இளம் சமூகத்தினரை வழி நடாத்தவே தங்கள் தனிப்பட்ட நடவடிக்கைகளை விட்டுவிட்டு முழுநேர அரசியலில் குதித்துவிட்டதாக கூறிக் கொண்டு மக்களுக்கு காது குத்தி தமிழ் மக்களை தொடர்ந்தும் குறுகிய சிந்தனையில் மந்தை நிலையில் வைத்துக் கொண்டு தாங்கள் பிழைப்பு நடாத்த முனைகின்றார்கள் தமிழ் கூட்டமைப்பு  அரசியல்வாதிகள்.

அரசியல் பிரச்சாரம் என்ற பெயரில் வெளிநாடுகளில் உள்ள தங்கள் சொந்தங்களிடமும், பழைய அரசியல்…, பாடசாலை நண்பர்களிடமும் சுற்றுலா வந்து சகல சுகபோகங்களையும் அனுபவித்து அந்த மக்களையும் குழப்பிவிட்டு போவது இவர்களுடைய இன்றைய தொழிலாகிவிட்டது. பெரும்பாலான தமிழ்மக்கள் வெளிநாடுகளில் பரவலாக புலம் பெயர்ந்து வாழ்வது இவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது. தங்களை புனிதர்களாகவும், தியாகமனம் கொண்டவர்களாகவும், கடந்தகாலத்தில் எந்தவித தவறும் செய்யாதவர்களாக காட்டிக் கொள்ளும் இவர்கள் கடந்தகால கூட்டு மொத்த அரசியற் தவறையும் அழிவையும் புலிகள் மீதும், சிங்கள அரசின் மீதும் சுமத்திவிட்டு தாங்கள் அடுத்த தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

புலிகளின் தவறான ஆயதப் போராட்டம் இலங்கை மக்களின் பேரழிவிற்கு காரணமாயிற்று என்பது உண்மையே. ஆனால் அவர்களை இந்த அரசியலுக்கு கொண்டு வந்து விட்டவர்கள் யார்…?

புலிகளிடம் அதாவது அன்றைய இளம் சமூகத்தினரிடம் தமிழ்தேசிய வெறியினையும், கொலை வெறியினையும் தூண்டிவிட்டவர்கள் யார்?, எந்த அரசியல்…?

சிவகுமாரனை தற்கொலை செய்ய வைத்ததும், பிரபாகரன் போன்ற இளைஞர்களை துப்பாக்கி ஏந்த வைத்ததும், பல இளைஞர்களின் கல்வியினை சீரழித்து அவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் நடுத் தெருவில் கொண்டுவந்துவிட்டது எந்த அரசியல்…?

துரையப்பாவின் கொலையினால் பல இளைஞர்கள் தலைமறைவாகியதும், பலர் சிறையிலே துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதிற்கும் காரணமான அரசியற் பின்னணி எது? இவற்றுக்கெல்லாம் காரணமாக அமைந்தது அன்றைய தமிழரசுக் கட்சியினரும் அவர்கள் வழிவந்த தமிழர் விடுதலைக் கூட்டணியினருமேயாகும். தமிழ் மக்களுடைய உண்மையான பிரச்சனையினை மறைத்து இலகுவாக மக்களை…, அன்றைய இளைஞர்களை தூண்டிவிடக் கூடிய தமிழ்த்தேசிய உணர்வினை மேடைக்கு மேடை ஓலமிட்டு இளைஞர்களின் வாழ்க்கையினை சீரழித்தது இந்த அரசியல்வாதிகள் தான்.

ஒரு வயிறு சாப்பாட்டிற்கும், பிள்ளை பள்ளிக்கு அனுப்பி 3ம் வகுப்புவரை கூட படிக்க வைக்கவும் முடியாமல் தெண்டாடிக் கொண்டிருக்கும் மக்களிடம் தரப்படுத்தலையும், சிங்களக் குடியேற்றத்தினையும் மூச்சுவிடாது பேசிப்பேசி அதனையே தேசியப் பிரச்சனையாக்கி  இளைஞர்களை தவறான பாதையில் வழி நடாத்தியவர்கள் இந்த சுயநல அரசியல்வாதிகளே. இவர்கள் வழியில் வந்து இன்று தமிழ் கூட்டமைப்பு என்ற பெயரிலே உலகம் சுற்றிவரும் இந்த அரசியல்வாதிகளையும், இவர்களுடைய தவறான அரசியலினையும் மக்களாகிய நாங்கள் இனங்கண்டு கொள்ள வேண்டும்.

தமிழ்தேசியம் பேசிக் கொண்டு எங்கள் முன்வரும் இந்த நபர்கள்  எங்களுடைய இன்றைய இளம் சமூகத்தினரை இன்னொரு அழிவிற்கு கொண்டு செல்ல மீண்டும் அடிக்கல்லு நாட்ட முயன்று வருகின்றார்கள். தங்கள் சுயநலத்திற்காகவும், தாங்கள் சுகபோக வாழ்க்கையினை அனுபவிப்பதற்காகவும் இவர்கள் கூறுவரும் இனிப்பான போலிப் பேச்சினை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஈழத்திலானாலும் சரி அல்லது புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலானாலும் சரி எங்கள் பிள்ளைகளின் கல்வியினை சீரழித்து அவர்களின் எதிர்காலத்தினையே அழித்துவிட வழிவகுக்கும் இந்த தவறான தமிழ்தேசியவாத அரசியலில் இருந்து எங்கள் இளம் சமூகத்தினரை பாதுகாக்க வேண்டியது எங்கள் ஒவ்வொருவரோடுமுள்ள முக்கிய பொறுப்பாகும்.

அன்று தவறான அரசியலுக்கு நாங்கள் துணைபோனதாலேயே இன்று இத்தனை பெரிய அழிவினை சந்திக்க வேண்டி நேர்ந்தது. மீண்டும் அதே தவறினை நாமோ எமது இளம் சமூகத்தினரோ செய்யாமல் அறிவு பூர்வமாக சிந்தித்து செயற்பட வேண்டும்.

தமிழ் தேசியவாதிகளாக இருந்தாலும் சரி, சிங்கள தேசியவாத குழுக்களாக இருந்தாலும் சரி இரண்டும் மக்களுக்கு எதிரான சக்திகள் தான். இவர்கள் அனைவரும் மக்களோடு இருக்கும் உண்மையான பாரிய பிரச்சனைகளை மறைத்து சிறுசிறு பிரச்சனைகளை ஊதிப் பெருக்கி அப்பாவி மக்களின் சிந்தயினை மழுங்கடிப்பதே இவர்களுடைய குறிக்கோளாகும். சாதாரண மக்களை சுரண்டி தங்கள் நலன்களை பாதுகாப்பதே இவர்களுடைய முக்கிய கொள்கையாகும்.

மக்களுக்கு முற்றிலும் எதிரான இந்த சக்திகளை தொடர்ந்தும் வளரவிடாது தடுப்பது மக்களாகிய எமது கைகளில் தான் உண்டு.