உண்மைகள் என்பது நேர்மையான மக்கள் சார்ந்த அரசியலில் இருக்கின்றது. எம் மக்களுக்கு எதிரி செய்த கொடுமைகளைப் பேசுவதன் மூலம், மறுபக்க உண்மைகளை மூடிமறைக்கவே வலதுசாரியம் எப்போதும் முனைகின்றது. இப்படி எதிரி செய்த கொடுமைகளை, தாங்கள் செய்த கொடுமைகளை மூடிமறைப்பதற்காக பயன்படுத்துகின்றது. இது திட்டமிட்ட மக்கள் விரோத சதி அரசியலாகும். இந்த அரசியலோ மனித நேயமற்ற இழிவரசியலாகும். இவை மக்கள் மேலான மறுபக்க கொடுமைகளை, நியாயப்படுத்துவதாகும்.
தீபச்செல்வன் கூறுவதைப் பாருங்கள். "களமுனைகளில் விடுதலைப் புலிகளுக்கு களங்கம் ஏற்படும் விதமாகப் படைகள் மக்கள் மீது துப்பாக்கி சுடுகளை நடத்தியிருக்கின்றன. இதில் காயமடைந்த பலரை சிகிச்சையளிக்கக் கொண்டு செல்கிறோம் என்று சொல்லிவிட்டு கொண்டுபோன இராணுவம் அவர்களை திருப்பிக் கொடுக்கவில்லை. ஈழப் போராட்டத்தையும் ஈழப்போராளிகளையும் தவறாக காட்டுவதற்கு இராணுவம் இறுதி யுத்தகளத்தில் செய்த கொடுமைகள் குறித்து நான் நிறைய அறிந்திருக்கிறேன்." உண்மைகள் மீதான பொய்யும், புரட்டும், திரிபுகளும். "புலிகளுக்கு களங்கம் ஏற்படும் விதமாகப் படைகள் மக்கள்மீது துப்பாக்கி சுடுகளை நடத்தியிருக்கின்றன" என்பது அரசியல் திரிபு. ஒரு புரட்டு. இங்கு புலிக்கு "களங்கம்" ஏற்படுத்துவதற்காக, மக்களைக் கொல்லவில்லை. இனத்தை அழிப்பதற்காகவே மக்களைக் கொன்றது. நடந்தது இனவழிப்பு. வெறும் களங்கமல்ல. புலிகளுக்கு களங்கத்தை ஏற்படுத்த, தமிழ்மக்களை கொல்லவில்லை. புலியை நியாயப்படுத்த, அதை "களங்கம்" ஏற்படுத்தும் சதியாக கூறுவது, வலதுசாரிய சதியாகும். உண்மையைத் திரிப்பதாகும்.
இதன்பின் புலி பலி கொடுக்க, பலியெடுத்த அரசின் இனவழிப்பு அரசியல் வக்கிரங்களை பூசி மெழுகுவதாகும். இங்கு புலிகளுக்கு "களங்கத்தை" ஏற்படுத்தத்தான் தமிழ்மக்களை கொன்றது என்பது, உண்மையில் புலிகள் தமிழ்மக்களை அரசு மூலமும் கொன்றதை திரிக்கின்ற அரசியல் பித்தலாட்டமாகும். மறுபக்கத்தில் பலிகொடுப்புக்கு உடன்படாத தமிழ் மக்களை புலிகளே சுட்டுக்கொன்றனர். இதைச் சுயவிமர்சனம் செய்யாத வலதுசாரியம் தான், புலிக்கு "களங்கம்" ஏற்படுத்த சுட்டுக் கொன்றதாக அதைத் திரித்துக் கூறுகின்றனர். "படைகள் மக்கள்மீது துப்பாக்கி சூடுகளை" நடத்தியது புலியைக் களங்கப்படுத்தவல்ல. இனத்தை அடிமைப்படுத்தவும், அழிப்பதற்காகவும் தான்.
இங்கு புலிகள் மக்களைப் பலிகொடுக்க, இராணுவம் அவர்களைப் பலியெடுத்தது. அரசின் இனவழிப்புக்கு புலிகள் உதவினர். புலிகள் தங்களை காப்பாற்றிக் கொள்ள, மக்களை இனவழிப்புக்குள்ளாக்கினர். இதுதான் உண்மை. சிங்களப் பேரினவாதம் காலாகாலமாக செய்ததை, புலியின் துணையுடன் செய்து முடித்தனர். இப்படியிருக்க "ஈழப் போராட்டத்தையும் ஈழப்போராளிகளையும் தவறாக காட்டுவதற்கு இராணுவம் இறுதி யுத்தகளத்தில் செய்த கொடுமைகள் குறித்து நான் நிறைய அறிந்திருக்கிறேன்." என்பதும் ஒரு பக்க உண்மை தான். ஆனால் இந்த உண்மை என்பது, புலிகள் செய்த கொடுமைகளையும் அது சார்ந்த உண்மையையும் பொய்யாக்கிவிடாது. நீங்கள் இங்கு இதைக் கூறுவதன் நோக்கம், புலி செய்ததை மூடிமறைக்கத்தான். இராணுவம் இதை இலகுவாக செய்தது என்றால், புலிகளின் இது போன்ற நடத்தைகள் சார்ந்து தான் அதைத் தன்பங்குக்கு அதைச் செய்தது.
இங்கு இராணுவம் செய்தது உலகறிந்தது. இதன் மூலம் புலிகள் செய்ததை மூடிமறைப்பதும், அதை சுயவிமர்சனம் செய்ய மறுப்பதும் கொடுமையிலும் கொடுமை. மக்களைது; தொடர்ந்தும் பாதாளத்தில் தள்ளிவிடுவதாகும்.
அரசியல் உண்மைகளை புதைப்பதாகும். பாருங்கள் "சமாதான காலத்தில் பல மக்கள் கொல்லப்பட்டார்கள். அந்த கொலைகளை யார் யார் நடத்தினார்கள் என்பது எப்படித் தெரியும்? அதை அரசே நடத்தி சமாதானத்தைக் குழப்பியிருக்கலாமல்லவா? மாவிலாறு அணையை மூடியதற்காக யுத்தம் தொடங்க வேண்டும் என்றில்லை. அதைப் பேசித் தீர்த்திருக்கலாம். அரசு எப்பொழுது யுத்தம் நடத்தலாம் என்று காத்துக் கொண்டிருந்தது. மாவிலாறு அணை நோக்கித் தனது எறிகணைகளை, பல்குழல் பீரங்கிகளை எதிர்பாராதவிதமாகப் பெரு விருப்பத்துடன், வெறியுடன் திருப்பியது. அதைச் சாட்டாக வைத்துக் கொண்டு தொடர்ந்து களங்களைத் திறந்து யுத்தத்தை நடத்தியது. புலிகள் யுத்த வழிமுறைகளில் செல்வதை விரும்பவில்லை. அவர்கள் சமாதானத்திற்காக இறுதிவரை அழைத்தார்கள். அரசுதானே யுத்தத்தில் பெரிய ஈடுபாடு காட்டியது." எந்த தார்மீக உணர்வுமற்ற புரட்டுகள். நேர்மையற்ற வலதுசாரிய வக்கிரங்கள்.
எப்படிபட்ட வக்கிரம் என்பதைப் பாருங்கள். "சமாதான காலத்தில் பல மக்கள் கொல்லப்பட்டார்கள். அந்த கொலைகளை யார் யார் நடத்தினார்கள் என்பது எப்படித் தெரியும்? அதை அரசே நடத்தி சமாதானத்தைக் குழப்பியிருக்கலாமல்லவா?" என்ற கூற்று, என்ன சொல்லுகின்றது. புலிகள் கொல்லவில்லை என்று கூற முனைகின்றது. இங்கு அரசு கொன்றதா இல்லையா என்பதல்ல கேள்வி. புலிகள் தமிழ்மக்களைக் கொன்றனரா இல்லையா என்பதுதான் கேள்வி. இதை மறுக்க, அரசு கொன்றதைப்பற்றி பேசுவது அபத்தம்.
இங்கு "எப்படித் தெரியும்?" என்பது, அதைவிட அபத்தமானது. 1000 பேர் அளவில் கொல்லப்பட்ட இந்த நிகழ்வை, அலட்சியப்படுத்துகின்ற குதர்க்கங்கள் புலியை பாதுகாக்காது. சரி "எப்படித் தெரியும்?" அடையாளம் காண இலகுவாக பல வழிகள் உண்டு. அரசு செய்த கொலைகள் என்ற புலிகள் உரிமை கோராத அனைத்தும், புலிகள் தான் செய்தனர். புலிகள் கண்டிக்காத அனைத்தையும், புலிகள் செய்தனர். இதைவிட கொல்லப்பட்டவரின் பின்னணியைக் கொண்டும், இதை அறியலாம். ஆம் இப்படி நடந்த கொலையில் பெரும் பகுதியை புலிகள் செய்தனர். யுத்த நிறுத்த மீறலை கண்காணித்த, கண்காணிப்புப் குழு அறிக்கை இதை மேலும் உறுதிசெய்கின்றது. இங்கு உண்மைகளை "எப்படித் தெரியும்?" என்று கூறி பிணத்தைப் புதைக்க முடியாது. கொலைகள் "சமாதானத்தைக் குழப்பியிருக்கலாமல்லவா?" என்ற கூற்று இன்னொரு உண்மையைப் போட்டு உடைக்கின்றது. கொலை செய்தால், சமாதானத்தைக் குழப்பும் என்ற உண்மையை. இங்கு புலிகள் செய்த கொலைகள், இதைக் குழப்பியிருக்கின்றது.
"மாவிலாறு அணையை மூடியதற்காக யுத்தம் தொடங்க வேண்டும் என்றில்லை." என்பது, எந்த வகையில் உங்களை நீங்கள் நியாயப்படுத்த போதுமானது? இந்த விடையத்தில், அரசுதான் யுத்தத்தை அதன் மேல் நடத்தியது என்று வைப்போம். இதில் தோற்ற நீங்கள், என்ன செய்தீர்கள். உடனே மூதூரைக் கைப்பற்றி, மூஸ்லீம் மக்களை நாய் போல் கேவலமாக நடத்தினீர்கள். மாவிலாறு கடந்து யுத்தத்தை மூதூருக்கு கொண்டு சென்றதும் புலிகள் தான். இப்படித்தான் யுத்த முனைகளை ஒன்றன் பின் ஒன்றாக திறந்து வைத்த புலிகள், யுத்தத்தை தொடங்கி வைத்தனர். இதற்கு முன் மக்கள் படை என்ற பினாமிப்பெயரால் யாழ் மன்னார் வவுனியா பகுதிகளில் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தியதன் மூலம், நூற்றுக்கணக்கான இராணுவத்தை கொன்றனர். இப்படி பல வடிவத்தில் யுத்தத்தைத் தொடக்கியது புலிகள்.
"பேசித் தீர்த்திருக்கலாம்." என்பது குற்றம்சாட்ட உதவலாம். ஆனால் புலிகளிடம் பேச எதுவும் இருக்கவில்லை. பேச்சுவார்த்தை மேசையில் புலிகள் பேசிய விதமும், அதில் அவர்களின் கையாலாகாத்தனமும் உலகமறிந்தது. மக்களை முன்னிறுத்தி புலிகள் என்றும் பேசியது கிடையாது. தங்களை முன்னிறுத்தித்தான் புலிகள் என்றுமே பேசி வந்தனர். இதனால் மக்களுக்காக பேச புலிகளிடம் எதுவும் இருக்கவில்லை. இனப்பிரச்சனை தீர்வைக் கூட வைத்து பேச்சுவார்த்தையை புலிகள் நடத்தவில்லை.
இபப்டியிருக்க "புலிகள் யுத்த வழிமுறைகளில் செல்வதை விரும்பவில்லை. அவர்கள் சமாதானத்திற்காக இறுதிவரை அழைத்தார்கள். அரசுதானே யுத்தத்தில் பெரிய ஈடுபாடு காட்டியது." என்பது பொய். அரசு தீர்வை தர தயாராக இருக்கவில்லை என்பதும், புலிகள் அதைக் கோரியே பேசவில்லை என்பதும் தான் உண்மை. யுத்தம் தான், இருதரப்பு தீர்வாகவும் இருந்தது. யுத்தத்தை மறுபடியும் முதலில் கோரியது புலிதான், அரசு அல்ல. அரசு அதற்கேற்ற வகையில் காய்களை நகர்த்தியது. மக்கள் விரும்பாத ஒரு யுத்தத்தை, புலிகள் மக்கள் மேல் திணித்தனர். பேச்சுவார்த்தையில் தோற்ற புலிகளின், வாழ்வும் சாவும் யுத்தத்தை மீளத் தொடங்குவதன் மூலம் தான் சாத்தியம் என்ற நிலைக்கு சென்ற புலிகள், வலிந்து யுத்தத்துக்குள் சென்றனர்.
பி.இரயாகரன்
4.தீபச்செல்வன் பற்றிய பொதுமதிப்பீடு மீதான அரசியல் திரிபு (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 04) 6.தமிழ் மக்கள் தோற்றது என்? புலிகள் அழிக்கப்பட்டது ஏன்? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 06) 11.யுத்தத்தில் "மக்களை ஆயுதமாக, காயாகப் பாவித்தது" யார்? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 11)
17.இந்தியாவை நம்பக் கோருகின்ற சுயவிமர்சனமற்ற அரசியல் (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 17)