30 வருடங்களுக்கு முன் தமிழ் மண்ணில் வாழ்ந்த மக்கள், தமிழ் தேசியத்தால் வரலாறு அற்றவர்களாக போய்விடவில்லை. ஆம் 1980 களில் 10000 மேற்பட்ட சிங்கள மக்கள் யாழ்குடாவில் வாழ்ந்தார்கள். 1990 வரை ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட முஸ்லீம் மக்கள் யாழ் குடாவில் வாழ்ந்தார்கள். இது தமிழ்தேசியத்துக்குள் புதைந்து போன ஒரு வரலாறல்ல. அந்த மக்கள் அங்கு வாழ்ந்தார்கள் என்றால், தமிழ்மக்களின் சொந்த இணக்கத்துடன் தான். அவர்களுக்கு இடையில் எந்த குறுகிய இனத் துவேசமும் இருக்கவில்லை. அதுதான் அவர்களை அங்கு வாழவைத்தது. இது எம்மைச் சுற்றிய கடந்த இணக்கமான ஒரு வரலாறு. யாழ்நகரில் ஒரு விகாரையும், சிங்கள மகாவித்தியாலயம் என்ற ஒரு பாடசாலையும் கூடத்தான் அங்கு இருந்தது.

இதைத் தகர்த்தது யார்? காலாகாலமாக சிங்கள இனவாதம் இருந்தும், குறுந் தமிழ்தேசிய  உணர்வு இருந்தும் கூட, இனவாதம் அந்த மக்களிடம் தலைகாட்டவில்லை. அந்தளவுக்கு மக்களை மக்களாக மதிக்கும் பல சிந்தனைகளும் உணர்வுகளும் கூட இருந்தன. 

நியாயத்தை புரிந்து கொள்ளும், இனம் கடந்த மனித உணர்வுகள் அங்கு இருந்தன. இதை தமிழ்மண்ணில் தகர்த்தவர்கள், ஆயுதம் ஏந்திய இனவாத தமிழ் இளைஞர்கள் தான். இனவாதக் குண்டை வைத்து விகாரை முதல் பாடசாலை வரை  தகர்க்கும் வரை, அந்த மக்கள் வாழ முடியாது என்று துப்பாக்கி கொண்டு மிரட்டும் வரை, அந்த மக்கள் அங்கு உழைத்துத்தான் வாழ்ந்தார்கள். இவை எதுவும் அரசு திட்டமிட்டு நடத்திய எந்த சிங்கள குடியேற்றத்திற்கும் உட்பட்டதல்ல. எப்படித் தமிழ் மக்கள் சிங்கள மண்ணில் வாழ்ந்தார்களோ, அப்படி சிங்களமக்களும் தமிழ் மண்ணில் வாழ்ந்தார்கள். இது எங்கள் மக்களின் வரலாறு. இது இன்று திரிக்கப்படுகின்றது, மறுக்கப்படுகின்றது.

சிங்கள இனவாதிகள் தமிழ்மக்களை இனக்கலவரங்கள் மூலம் அடித்து விரட்டியது போன்று, தமிழ் இனவாதிகளும் சிங்கள மக்களையும் விரட்டினர். இது எந்த வகையில் நியாயம்? இதை யார் உணர்வுபூர்வமாக இன்று திரும்பிப் பார்த்து குரல் கொடுக்கின்றனர். ஒருபுறம் தமிழினவாதிகள், மறுபுறம் சிங்கள இனவாதிகள், இதற்கிடையில் நியாயம் மறுக்கப்பட்ட மக்கள் கூட்டம்.  அன்று தமிழ்மண்ணில் கூடி உழைத்து வாழ்ந்த மக்களின் வாழ்வை அழித்தவர்கள், இதன் மேல் இனவாத எண்ணையைத்தான் ஊற்றினர். பற்றி எரிந்தது இலங்கை மட்டுமல்ல, அதற்குள் தமிழ் இனமும் சேர்ந்துதான். நாதியற்ற தமிழினமாக அழிந்து, சீரழிந்து சின்னாபின்னமாகி விட்டது. 

சிங்கள அரசுக்கு எதிரான தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம், சிங்கள மக்களையே எதிரியாக காட்டியது. தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தையே இது அழித்தது. சிங்கள மக்களுடன் சேர்ந்து நடத்தவேண்டிய போராட்டத்தை, வெறும் குறுகிய இனவாத எல்லைக்குள் ஆழப் புதைத்தனர். ஏன் மூஸ்லீம் மக்களை கூட எதிரியாக்கினர்.

ஆயுதம் தாங்கிய தமிழ் இனவாதிகளாக, இந்திய கூலிப்படையாக, அன்னியர்களின் கைப்பாவையாக மாறியவர்கள் தான், தமிழ்தேசியத்தைக் குத்தகைக்கு எடுத்தனர். தமிழர் அல்லாத அனைத்து மக்களையும் எதிரியாக காட்டியவர்கள் தான், சொந்த மக்களையும் ஓடுக்கினர். சொந்த மக்களை ஒடுக்கி, மற்றைய மக்களை கொன்றவர்கள் அவர்களை ஓட விரட்டினர்.

இப்படி போராட்டம் பல தளத்தில் சீரழிந்து அழிந்தும் போனது. அதன் விளைவுகள் தான்,  இன்று பாரிய சமூகப் பிரச்சனையாக மாறியுள்ளது. இதற்குள் திட்டமிட்ட இனவாதமும், மறுபக்கத்தில் உண்மையான அவலங்கள் சார்ந்த வாழ்வியல் அங்கலாய்ப்புகளும். மனிதம் சார்ந்த உணர்வுகளும், உணர்ச்சிகளுமற்ற அரசியல் தளத்தில், மக்கள் அடிமையாகி பரிதாபகரமாக கையேந்தி நிற்கின்றனர். இதற்கு மேல் நடக்கும் நாடகங்கள், உணர்ச்சி பொங்கிய அரசியல் நடிப்புகளாகின்றது.  

இங்கு சிங்கள் இனவாதம் மட்டுமல்ல, தமிழ் இனவாதம் கூட மக்களின் அவலங்கள் மீது தான், தங்கள் கோரமான பற்கள் கொண்டு குதறுகின்றன.

நாங்கள் இந்த மண்ணில் வாழ்ந்த மக்கள் என்ற உரிமையுடன், மீள குடியேற்றக் கோருகின்ற குரல் நியாயமானது. அது சிங்கள மக்கள் என்பதால் அதை யாரும் எக்காரணம் கொண்டும் நிராகரிக்க முடியாது. அவர்கள் இந்த மண்ணில் வாழ்ந்தார்கள் என்ற உண்மையை நாம் முதலில் அங்கீகரிக்க வேண்டும். சிங்களப் பேரினவாதம் எமக்கு என்ன செய்தது என்பது, இதை மறுக்கும் ஒரு காரணமாக அமையாது. இந்த மண்ணில் வாழ்ந்த மக்களை மீளக் குடியேற, தமிழ்மக்கள் தாமாக முன்வருவதன் மூலம் தான், சிங்கள இனவாதிகளை நாம் தனிமைப்படுத்த முடியும்.

இங்கு வாழ்ந்தவர்களின் இன்றைய பின்னணியில் இனவாதிகள் இருந்தால், அவர்களை தனிமைப்படுத்தும் வண்ணம் தமிழ்மக்கள் முன்முயற்சி எடுத்து நடந்து கொள்ளவேண்டும். இதற்கு மாறாக சிங்கள இனவாதிகளுக்கு எண்ணை வார்க்கும் வண்ணம், தமிழ் இனவாதிகள் நடந்து கொள்கின்றனர்.

தமிழ் மண்ணில் வாழ்ந்தவர்களை நாம் அடையாளம் காண்பதன் மூலம் தான், அவர்களுடன் இணைந்து நிற்பதன் மூலம் தான், எமது மக்களின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து எம்மை நாம் பலப்படுத்த முடியும்.

பொதுவான சிங்கள குடியேற்றத்துடன் இதைப் பொதுவாக்குவது, தமிழ்மக்களின் நியாயமான கோரிக்கைளை அரசியல் ரீதியாக இல்லாதாக்கிவிடுகின்றது. இன்று நடப்பது அதுதான். எம்மை சுற்றிய  கடந்தகால மனிதவிரோத கூறுகளை பொதுமைப்படுத்தாத கருத்துகளும், போராட்டங்களும், கூட்டுகளும், எம்மை மீண்டும் மீண்டும் படுகுழியில்தான் தள்ளுகின்றது. இதுதான் இன்று அரசியலாக எங்கும் நடக்கின்றது.

பி.இரயாகரன்                          
20.10.2010