மீண்டும் மீண்டும் வரலாறு காணாத போராட்டங்கள். ஐரோப்பாவில் பிரஞ்சு தொழிலாளர் வர்க்கம் தான், மீண்டும் ஐரோப்பிய தொழிலாளர் வர்க்கத்துக்கு பாடம் நடத்துகின்றது.   நேற்று (17.10.2010) ஐந்தாவது முறையாகவும், நாடு தழுவிய அளவில் வீதி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. 30 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வீதிகளில் இறங்கியதுடன், 80 சதவீதமான மக்கள் இந்தப் போராட்டத்துக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

20.10.2010 சட்டமாக உள்ள நிலையில், வரும் நாட்கள் உலகத்தை பிரஞ்சு தொழிலாளி வர்க்கம் மீதான கவனத்தை குவிய வைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. மனித வரலாற்றுக்கு போராடுவது எப்படி என்பதை மறுபடியும் கற்றுக் கொடுக்கும்.

ஓய்வூதிய வயதை இரண்டால் அதிகரித்தல் என்ற சட்டமூலம், பிரஞ்சு வாழ் மக்கள் அனைவரையும் முதுமையிலும் வேலை செய்யக் கோருகின்றது. ஏற்கனவே இருக்கின்ற வேலையின்மையை, இது அதிகரிக்க வைக்கும். இளைய சமூகம் வேலையின்றி தொடருதல் தான், நடைமுறை விளைவாகும். ஏற்கனவே பல்கலைக்கழக பெண் மாணவர்களில் 30 சதவீதமானவர்கள், கல்விச் செலவுக்காக உடலை விற்பதும், சக ஆணுடன் உடலை பகர்வதாகவும் அண்மைய புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கின்றது. ஏற்கனவே கல்விச் செலவை ஈடு செய்ய தொழில் இன்மை, பெற்றோரால் அது ஈடு செய்த முடியாமை போன்ற காரணங்களால் தடுமாறும் இளம் தலைமுறை, இரண்டால் அதிகரிக்கும் ஒய்வூதிய வயது நேரடியாக அவர்களை பாதிக்கும். 

இந்தப் புதிய சட்ட மூலம் ஓய்வூதிய வயதை வெளிப்படையாக 60 இல் இருந்து 62 ஆக அதிகரிக்க கோருவதாக கூறப்பட்ட போதும், உண்மையில் இது 40 வருட வேலை செய்யும் காலத்தை 42 ஆக அதிகரிக்கக் கோருகின்றது. நடைமுறை வாழ்வில் 60, 62 வயதில் ஓய்வூதியத்தைப் பெற முடியாது. மாறாக 40 வருடம் கட்டாயம் வேலை செய்திருக்க வேண்டும். இதை 42 ஆக இச்சட்டம் மூலம் அதிகரிக்கின்றது. இதன் படி 25 வயது வரை கல்வி கற்கும் மாணவன், குறைந்தபட்சம் 67 வயது வரை வேலை செய்தால் தான் ஓய்வூதியம் என்ற உண்மை இங்கு மறைபொருளாக காண்படுகின்றது. அதாவது முதுமையில் வேலை செய்யக்கோருகின்றது.

உண்மையில் சில தொழிற்துறைகள் இந்த வயதில் வேலை செய்ய லாயக்கற்றவராக மாற்றுவதுடன், அவர்களை முதுமையில் வேலையில் இருந்து வெளியேற்றுகின்றது. ஒய்வூதியச்சட்டம் இறுதியாக பெறும் கூலியின் அடிப்படையிலும் கணிப்பிடப்படுவதால், முதியவர்களை வேலையில் இருந்து துரத்தி பின் குறைவான ஓய்வூதியத்தை வழங்க இந்த சட்ட மூலம் மேலும் உதவுகின்றது. அத்துடன் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களின் சராசரி ஆயுள் வயது இதற்கு குறைவாக இருப்பதால், அவர்கள் ஓய்வூதியம் பெற முன்னமே பெரும்பான்மையினர் மரணிக்கின்றனர். இப்படி இந்த சட்ட மூலம் மூலதனத்தின் நலனுடன், பல சதிகளைக் கொண்டது.

இச்சட்டம் 60 வயதில், இருந்து 62 ஆக அல்ல, வேலை செய்யும் வயது 40 இல் இருந்து 42 ஆக இருப்பதால்,  இது 65 இல் இருந்து 67 யாக அதிகரிக்கப்படுகின்றது. இந்தச் சட்டம் மூலம் முதலில் வெளிவந்த போது, மெதுவாக அரசு சார்ந்த தொழிலாளர்கள் மத்தியில் இருந்து தான் வேலைநிறுத்தமும், வீதிப்போராட்டங்களும் ஆரம்பித்தன. இது படிப்படியாக பொது வேலை நிறுத்தமாக இன்று மாறிவருகின்றது.

உயர்தர மாணவர்களும் போராட்டத்தில் இணைந்தது முதல், போராட்டம் பரந்த தளத்தில் கூர்மையாகியது. பிரஞ்சுப் பல்கலைக்கழகம் இன்னமும் இதில் தன்னை இணைத்துக் கொள்ளாத நிலையில், இனிவரும் நாட்களில் அவர்கள் ஈடுபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்வதுடன், முற்றாக விநியோகத்தை முடக்கியுள்ளனர். இதனால் நாடு தளுவிய அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், தனியார் போக்குவரத்து முடங்கிவருகின்றது.  சர்வதேச விமான சேவைக்கு ஒரு இரு நாட்களுக்கே விமான எரிபொருள் கையில் இருப்பதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே ஐரோப்பிய மற்றும் பிரஞ்சு ரயில் போக்குவரத்து முடங்கியுள்ளதுடன், உள்ளுர் போக்குவரத்துகள் பகுதியளவில் முடங்கியுள்ளது.

நாளை (17.10.2010) பாரிஸ் மற்றைய பெருநகரங்களை மூட, பெருவீதிகளை முடக்க உள்ளதாக அறிவித்துள்ள தொழிற்சங்கங்கள், பார ஊர்திகளை பெரும் வீதிகளில் நிறுத்தவுள்;ளது.

போராட்டத்தில் பங்கு கொள்ளும் அனாகிட்ஸ்டுகளில் ஒரு பகுதியினர் வீதி வன்முறைகளில் ஈடுபடுவதுடன், உயர் தர மாணவர்கள் அறிவிக்காத திடீர் தடைகளை தன்னிச்சையாக உருவாக்குகின்றனர்.

இவை பொலிஸ்சுடன் மோதலாக மாறி, யுத்தகளமாக மாறுகின்றது. எதிர்க்கட்சியான சோசலிசக் கட்சி இதற்கு ஆதரவாக வீதி ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றுவதுடன், அடுத்த தேர்தலில் தான் (2012இல் நடைபெற உள்ள) வென்றால், இந்த சட்ட மூலத்தை நீக்குவதாக அறிவித்துள்ளது.

எதிர்க்கட்சி அடுத்த தேர்தலில் வெல்வதை குறிக்கோளாகக் கொண்டு வீதியில் இறங்க, தொழிலாளர்கள் உடனடியாக இச்சட்ட மூலத்தை  நீக்கும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

தொழிலாளி வர்க்கம் மறுபடியம் போராடக் கற்றுக்கொள்கின்றது. மூலதனத்தின் ஆட்சியை இனம் கண்டு, அதை எதிர்த்து போராடுவதன் மூலம் கற்றுக் கொடுக்க முனைகின்றது. ஆளும் வர்க்கத்தின் ஜனநாயகம் என்பது மூலதனத்தை பாதுகாத்தான் என்பதை, பெரும்பான்மை பிரஞ்சு மக்களின் ஜனநாயகக் கோரிக்கை நிராகரிக்கப்படுவதை, அவர்களே தங்கள் சொந்த கோரிக்கைகள் மூலம் காண்கின்றனர். எந்தப் பேச்சுவார்த்தையும் செய்ய மறுக்கும் அரசின் ஜனநாயக விரோதப் போக்கை, சொந்த அனுபவத்தில் இருந்து இனம் காண்கின்றனர்.

ஏற்கனவே பெரும் பணக்கார கும்பலுடன் சேர்ந்து தின்;ற ஊழல்கள், நீதிமன்றத்தின் முன் அம்பலமாகி தடுமாறிய நிலையில் அதை மறைக்க வெளிநாட்டவர்கள் மேலான இனக்கொள்கையை கையிலெடுத்தது. குறிப்பாக ரூமேனிய மக்களை பெரும் எண்ணிக்கையில் நாடு கடத்தியது. 2ம் உலக யுத்தத்தின் பின் நடந்த இனச் சுத்திகரிப்பு என்று, ஜரோப்பிய பாராளுமன்றமே கூறுமளவுக்கு, அதன் மேலான கண்டனங்கள் விசாரணைகள் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் ஒய்வூதிய சட்டத்தை கொண்டு வந்த அதே நாட்களில் தான், முஸ்லீம் பெண்கள் அணியும் பர்தாவை அணியும் தடைச் சட்டத்தையும் நிறைவேற்றியது.

இதன் மூலம் ஒய்வூதியத்துக்கு எதிரான போராட்டத்தை வலதுசாரி பிளவு மூலம் சரிக்கட்ட, பர்தா அணிய தடைச் சட்டத்தைக் கொண்டுவந்தது. அதன் மூலம் போராட்டத்தை பிளக்க முடியாது போன நிலையில், இன்றைய பிரதமரை மற்றும் ஒரு விவாதத்தையும் இதற்குள் கொண்டு வந்துள்ளது.

ஏகாதிபத்திய பிரஞ்சு அரசு இந்தப் போராட்டத்தை உடைக்கும் பல முனை பிளவு நடவடிக்கைகளைக் கடந்து, போராட்டம் மேலும் கூர்மையாகி வருகின்றது. நாளை, நாளை மறுநாள் போராட்டம் தீர்மானகரமான ஒன்றாக மாறும். மேலும் பல்கலைக்கழக மாணவர்கள் இதில் பங்கு கொள்கின்ற பட்சத்தில், போராட்டம் பல பாடங்களை உலகுக்கு கற்றுக்கொடுக்கும். இதை தலைமை தாங்க ஒரு பாட்டாளி வர்க்கத்தின் தேவையை உணர்த்தி வருவதுடன், அதைக் போராடுவதன் மூலம் கற்றுக் கொடுக்கின்றனர்.

பி.இரயாகரன்
17.10.2010