"எங்களுக்கு அப்பொழுது வேறு வழிதெரியவில்லை", அதனால் "எப்படியாவது" என்று கூறி, அனைத்தையும் சொந்த மக்கள் மேல் திணித்தவர்கள் தான் இந்தச் தீபச்செல்வன்கள். அதைத்தான் இங்கு தீபச்செல்வன் மறுபடியும் நியாயப்படுத்துகின்றார். இப்படி இவர்கள் வேறு "வழிதெரியவில்லை" "எப்படியாவது" என்று கூறி ஏற்படுத்திய சமூக விளைவை, கவிதை இலக்கியம் என்று எந்தக் கூச்சமுமின்றி அதை அரசியலாக்குகின்றனர். இதைத்தான்  காலாகாலமாக புலிகள் செய்து வந்தனர்.

 இது எப்படி அனைத்தும் தளுவிய உண்மையாக இருக்க முடியும்? அன்று வேறு வழி இருந்தது. "எப்படியாவது" என்று கூறி செய்ய வேண்டிய எந்த அவசியமும் இருக்கவில்லை. தங்கள் தவறுகளை மறுப்பதன் மூலம், இதை நியாயப்படுத்த முனைகின்றனர். இவை அனைத்தும் மக்கள் விரோதமாக இருந்தது. இதை நியாயப்படுத்தும் தீபச்செல்வன் தான் "யுத்தம்தான் என்னை உண்மையான எழுத்தையும் இலக்கியத்தையும் நோக்கி நகர்த்தியது." என்கின்றார்.

கேலிக்குரியது மட்டுமின்;றி வக்கிரமானது. இங்கு உண்மை கிடையாது. புலிகளின் பின் என்றும் உண்மை இருக்கவில்லை. மக்கள் நலன் இருக்கவில்லை. யுத்தம் புலிக்கானதாக இருந்தது. இங்கு உண்மை என்பது மக்களுக்கானதாக ஒருநாளும் இருக்கவில்லை.   "எங்களுக்கு அப்பொழுது வேறு வழிதெரியவில்லை" எனக் கூறும் ஒருவர் "உண்மையான எழுத்தையும் இலக்கியத்தையும்" எப்படி எங்கிருந்து படைக்கமுடியும்? "நாங்கள் எங்கள் மக்களுக்காக நடத்திய போராட்டம்" என்று கூறிக் கொண்டு, எப்படி மக்களின் உண்மைகளை தரிசிக்க முடியும்? ஊமையாகிப்போன மக்களின் வாழ்வில் தான், என்றும் உண்மை இருந்தது.

யுத்தம் ஏற்படுத்திய பொது அவலம் எல்லையற்றது. அது எப்படி ஏன் உருவானது என்பது,  உண்மை மற்றும் பொய்யின் கலப்பிலானது. உண்மை இதற்கு வெளியில், மக்களுடன் இயங்கியது. "நாங்கள்", "வேறு வழிதெரியவில்லை" என்ற கூறுகின்ற பொய்யைச் சார்ந்து, உண்மை இருப்பதில்லை. மக்களுடன் "நாங்கள்" இருக்காத வரை, அந்த உண்மை  பொய்யிலானது. "நாங்கள்" என்பது மக்களில் இருந்து அன்னியமானது. இது தன்னை வேறுபடுத்தியபடி சொல்லுகின்றது "எங்கள் மக்களுக்காக நடத்திய போராட்டம்" என்று. இதுவே அப்பட்டமான முழுப்பொய். இங்கு "எங்கள் மக்கள்", "நாங்கள்" என்று நீங்கள் காணும் வேறுபாட்டை பிரித்து அணுகாது அதை ஒன்றாகக் காட்டி குதர்க்கமாக அணுகும் போது, "உண்மையான எழுத்தையும் இலக்கியத்தையும்" எழுத்தில் கொண்டுவர யாராலும் முடியாது. பொது மனித அவலத்தின் மீது, புலிக்கு சார்பான வலதுசாரிய இலக்கியமாகவே மக்களுக்கு எதிராக அது பரிணமித்தது.

"நாங்கள்" என்று கூறும் நீங்கள் "எங்கள் மக்களுக்காக நடத்திய போராட்டம்" என்று பிரிந்து நின்று மக்களை அணுகும் போது, மக்களுக்கு உண்மையில் நடந்ததை மறுப்பதும் திரிப்பதும்  இயல்பாகின்றது. இது பொய்யில் இருந்து பிறக்கின்றது. உதாரணமாக நீங்கள் கூறுவதை எடுப்போம். "விடுதலைப் புலிகள் மக்களைத் தடுத்து வைத்திருந்தார்கள் என்பதை நான் மறுக்கிறேன். கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றிய பிறகு மக்கள் இராணுவத்தினரிடம் சரணடையத் தொடங்கிவிட்டார்கள்" என்று கூறுகின்ற பித்தலாட்டம் வக்கிரமானது. மக்கள் அங்கிருந்து வெளியேறாத வண்ணம் தடுத்தவர்கள் புலிகள். பேரினவாதம் வெளியேறுவதற்குரிய ஒன்றைச் செய்யவில்லை என்பதால், புலிகள் தடுத்தது பொய்யாகிவிடாது. அது இதை சாட்டியது, இது அதைச் சாட்டியது. யாரும் மக்கள் வெளியேறுவதை அனுமதிக்கவில்லை. புலிகள் தடுத்ததையும், புலிகள் மக்களை பலிகொடுத்ததையும், இந்தப் புலிகளின் பலிகொடுப்பில் இருந்து தப்பி வந்தவர்கள் கதை கதையாக சொல்லும்  துயரங்கள் சொல்லிமாளாது.

இதை நாம் தர்க்க ரீதியாக அணுகுவோம். மக்களை இந்த யுத்த பலியீட்டில் இருந்து வெளியேற்ற, புலிகள் என்ன நடவடிக்கைகளை எடுத்தார்கள். யுத்தத்தில் மக்கள் தொடர்ச்சியாக கொல்லப்படுதல், இலங்கை அரசுக்கு எதிரான சர்வதேச அழுத்தமாக மாறியிருந்தது. இந்தக் கட்டத்தில்,  யுத்த ப+மியில் இருந்து அந்த மக்களை வெளியேற்றவே அரசும் விரும்பியது. ஆனால் புலிகள் அதை விரும்பவில்லை. இந்த அழுத்தம் தான், புலிகள் விரும்பிய அரசியலாகியது. புலிகள் தாம் தப்பிப் பிழைக்கும் எல்லைக்குள், மக்களைப் பணயப் பொருளாக்கிப் பயன்படுத்தினர்.

இந்த எல்லையில் புலிகள் வைக்கும் மற்றொரு தர்க்கம், மக்கள் புலிகளை விட்டு வெளியேற விரும்பவில்லை என்றவாதம். தீபச்செல்வன் தன் தாய், அப்படித்தான் புலிகளுடன்  வாழ்ந்தார் என்று கூறுகின்றார். சரி அப்படித்தான் என்று எடுத்தால், அனைத்து மக்களும் அப்படி விரும்பினார்களா!? இல்லை நிச்சயமாக இல்லை. அவர்களை வெளியேற்ற புலிகள் முனையவில்லையே? யுத்தம் செய்ய விரும்பாதவனையே யுத்த முனையில் திணித்து அவர்களை பலியிட்ட (பெருமளவில் குழந்தைகள்) புலிகள், மக்களை மட்டும் எப்படி விட்டுவிடுவார்கள் சொல்லுங்கள்? எந்த மனிதாபிமானமுமற்ற காட்டுமிராண்டிப் பாசிட்டுகள் தான் புலிகள். 

புலிகளின் பாசிச சர்வாதிகாரம் நிலவிய காலத்தில், மக்கள் வன்னியை விட்டு வெளியில் வருவதாயின் ஒருவர் அவருக்காக பணயம் நிற்க வேண்டும். நிரந்தரமாக வெளியேற வேண்டும் என்றால், சொத்துகளை புலிகளிடம் கொடுக்க வேண்டும். இப்படி மக்களை தம்முடன் பலாத்காரமாக பிடித்து வைத்திருந்தவர்கள் புலிகள். புலிகளுடன் சேர்ந்து போராட விரும்பாத மக்கள், உண்மையில் புலிகளுடன் வாழ விரும்பவில்லை. "நாங்கள்" என்ற புலியை, "எங்கள் மக்களுக்கான" போராட்டம் என்று சொன்ன புலியின் பாசிசத்துடன் மக்கள் சேர்ந்து போராட மக்களுக்கு எதுவுமிருக்கவில்லை. யுத்தத்தை மக்கள் நடத்தவில்லை. புலிகள் தான் நடத்தினர். "நாங்கள் எங்கள் மக்களுக்காக நடத்திய போராட்டம்" என்று, கூறிய புலிகள், இந்த யுத்தத்தைக் காட்டி மக்களை ஒடுக்கி அவர்களை வதைத்தனர்.

நீங்கள் அந்த மக்களுடன் நின்று, தவறாகவே உருவான புலிகளின் போராட்டத்தை கேள்விக்குள்ளாக்கவில்லை. இன்றும் கூட அதைச் செய்யவில்லை. நீங்கள் என்ன செய்தீர்கள் என்றால், பேரினவாதம் என்ற பொது எதிரியை முன்னிறுத்தி புலிகளின் தவறுகளை ஆதரித்தீர்கள். "எங்களுக்கு அப்பொழுது வேறு வழிதெரியவில்லை", அதனால் "எப்படியாவது" என்று எல்லாம் கூறியவர், இப்போது அதற்கு வேறு வழி தெரியவில்லை என்று கூறி அதை நியாயப்படுத்துகின்றார். அதை இன்றும் எந்த சுயவிமர்சனமின்றி நீங்கள் சரியென்று கூறுகின்ற மக்கள் விரோத நிலைப்பாடு தான், எதை முன்வைக்கின்றது என்று பார்ப்போம். "எங்களைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகள் எமது மக்களை பாதுகாப்பவர்கள் என்றே கருதுகிறோம். எமது மக்களை ஆயுதமாக, காயாகப் பாவித்து போராட்டத்தை அழித்துக்கொண்டிருந்த அரசை அதை நிறுத்த வேண்டும் என்று கேட்டோம். விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சு வார்த்தைக்கு போக வேண்டும் என்றும், உலகம் அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொடர்ந்து குரல் கொடுத்தோம்." என்கின்றார். இது வேடிக்கையாயில்லை?

தொடரும்
பி.இரயாகரன்

1.புலி அரசியலுக்கு மக்களின் பிணம் தேவைப்பட்டது. தீபச்செல்வனின் அரசியலுக்கு எது!? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 01)

 

2.வர்க்கம் கடந்து இன ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்களுக்கான குரல்கள், வர்க்கம் கடந்ததா!? மக்கள் சார்பானதா!? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 02)

 

3.கடந்தகால விமர்சனம், சுயவிமர்சனமற்ற சாக்கடையில் தான் அரசியல் மிதக்கின்றது (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 03)

 

 

4.தீபச்செல்வன் பற்றிய பொதுமதிப்பீடு மீதான அரசியல் திரிபு (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 04)

 

5.இனம் வர்க்கம் சார்ந்து குறுகிய வலதுசாரிய எதார்த்தம் தான் தீபச்செல்வனின் படைப்புகள் (தீபச்;செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 05)

 

6.தமிழ் மக்கள் தோற்றது என்? புலிகள் அழிக்கப்பட்டது ஏன்? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 06)

 

7."சிலர் போராட்டத்தைச் சரியாக உணராமல்" செயல்பட்டதால், தவறுகள் நடந்ததாம்! (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 07)

 

 

8. "எங்களுக்கு அப்பொழுது வேறு வழிதெரியவில்லை" அதனால் நாங்கள் (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 08)