தங்களுக்குப் புதியதொரு இசை மேதை கிடைத்துவிட்டானென மகிழ்கிறது லண்டன் பிலார்மோனிக் குழு. ”உலகத்தில் சொல்ல வேண்டியதை எல்லாம் 3000 வருடங்களுக்கு முன்பே கங்கைக் கரையிலும் காவிரிக்கரையிலும் சொல்லி முடித்துவிட்டதாக மமதை கொண்டிருக்கும் அரிசி உணவை உட்கொள்ளும் பிராணிகளோ” (புதுமைப்பித்தன்) சங்கடத்தில் நெளிகின்றன.
இளையராஜாவின் சிம்பனி பற்றி எழுதவேண்டும்; ஆனால் எழுதக்கூடாது. இதைச் சனாதனிகள் செய்து விட்டார்கள் – எழுத வேண்டியதை எழுதாமல் இருட்டடிப்பு செய்ததன் மூலம். ராக் என்றால் என்ன? ராப் என்றால் என்ன? மைக்கேல் ஜாக்சன் கொண்டு வரும் இசைக் கருவிகளின் மொத்த எடை என்ன? பாபாசெகல் வெற்றியின் ரகசியம் என்ன? – என்று கூவத்தில் முக்குளித்து முத்தெடுக்கும் பார்ப்பனப் பத்திரிகைகள், சிம்பனி என்றால் என்ன, இளையராஜாவுடைய சாதனையில் பரிமாணம் என்ன என்ற கேள்விகளை மட்டும் எழுப்பிப் பரிசீலிக்கவில்லை. இந்த மவுனத்திற்குக் காரணம் அழுக்காறு, அச்சம்.
அவாள், ஆசார, நியமங்களை மீறிக் கடல் கடந்தார்கள்; ஆங்கிலக் கல்வி கற்றார்கள்; குடுமியை மறைத்து டர்பன் கட்டினார்கள்; கோட்டு, சூட்டு போட்டார்கள்; வெள்ளைக்காரியைக் கூத்தியாளாக வைத்துக் குடித்தனம் நடத்தினார்கள்.
ஏனென்றால் இசை இதயத்தின் மொழி; ஆன்மாவின் கவிதை. சநாதனிகளுடைய ஆன்மாவின் மொழியோ அக்கிரகாரத்தைத் தாண்டியதில்லை. இசையை மடடுமல்ல, இந்தியச் சமூகத்தையே எந்தத் துறையிலும் வளரவிடாமல் தடுப்பது இந்தப் பார்ப்பன இந்துப் பாரம்பரியம்தான். இந்த உண்மையை அம்பேத்கார் துணிந்து வெளியிட்டபோது அதையும் இருட்டடிப்பு செய்தார்க்ள. அதனால்தான் உயிர்வாழும் பிணமான சங்கராச்சாரி ( செத்துப்போன சீனியர் சங்கராச்சாரி ) முன்னால் மணிக்கணக்கில் மண்டியிட்டுக் கிடக்கும் தொலைக்காட்சிக் காமெரா இளையராஜாவை ஏறெடுத்தும் பார்க்க மறுக்கிறது.
ஒருவேளை ”இசை முழுவதுமே – சிம்பனி உட்பட – தியாகப் பிரும்மத்துக்குள் அடக்கம்” என்று இளையராஜா சரணடைந்து இருந்தால் அவாள் ஆசீர்வதித்திருக்கக்கூடும். மாறாக, ஹேய்டன், பாக், மொசார்ட், பீத்தோவன் ஆகியோரின் வரிசையில் தியாகய்யரையும் சேர்த்தார் இளையராஜா. அப்படிச் சேர்த்தது அவர்களுக்குப் பொறுக்கவில்லை. (தியாகய்யரைப் போய் அம்மேதைகளுடன் சேர்த்தது நமக்கும்தான் பொறுக்கவில்லை). அவர்களைப் பொறுத்தவரை ‘கர்நாடக இசையென்னும் மந்திரச் சிமிழுக்குள், உலகமே அடக்கம். ‘சரஸ்வதி மஹாலின் சமஸ்கிருத ஓலைச்சுவடியைத் திருடிச் சென்றுதான் வெள்ளக்காரனே ராக்கெட் விட்டான்’.
‘சங்கரா பரணம்’, ‘தில்லானா மோகனாம்பாள்’ என்று டஜன் கணக்கில் படமெடுத்து, அவற்றில் இரண்டு மேற்கத்திய இசைத் துணுக்குகளை இசைத்துக் காட்டி எல்லாம் எமக்குள் அடக்கமென்று அற்பத்தனமாகப் பெருமைப்பட்டுக் கொண்டார்கள். அல்லது மேற்கத்திய இசையை விபச்சாரத்திற்கு இணையாக வைத்துக் கொச்சைப் படுத்தினார்கள். இதையெல்லாம் நடுவீதியில் போட்டு உடைத்தார் இளையராஜா. அந்த ஆத்திரம்தான் இந்த மகா மவுனத்திற்கு காரணம்.
மக்கள் எல்லா அறிவையும் பெற உரிமை படைத்தவர்கள்; இசைத் துறையிலும் மக்களின் பாமரத்தனத்தை அகற்ற வேண்டும். அதைச் செய்யாமல் மக்களின் அறியாமை குறித்து வருந்திப் பயனில்லை. ஆனால் மெல்ல மெல்ல அறிவொளி பெறத் தொடங்கும் மக்களை முட்டாள்களாகவே வைத்திருப்பது எப்படி என்று கவலைப்படுகிறார்கள் சனாதனிகள்.இல்லையென்றால் பார்ப்பனர்களிலேயே நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது பேருக்கு பரிச்சயமில்லாத கர்நாடக இசையைப் பற்றி பக்கம் பக்கமாக விமர்சனம் எழுதுபவர்கள் சிம்பனியை அறிமுகப்படுத்தி ஏன் எழுதக்கூடாது? சிம்பனி இசை வடிவம் ஐரோப்பியப் பாரம்பரியம். 200 ஆண்டு பாரம்பரியம் இருந்தும் இந்த இசையை ரசிக்கத் தெரிந்தவர்கள் அங்கேயே குறைவு. இசை அமைக்கத் தெரிந்தவர்களோ வெகு குறைவு. இது ஆசியர்களுக்கு, இந்தியருக்கு, தமிழர்களுக்கு வெகுதூரம்; தாழ்த்தப்பட்டவர்களுக்கோ வெகு வெகுதூரம்.
உலகளவில் விஞ்ஞானிகளோ, ஓவியர்களோ, திரைப்பட இயக்குநர்களோ தத்தமது துறை பற்றி ஒன்றாகக் கூடி விவாதித்துவிட முடியும்; ஆனால், இசைத்துறை அப்படியல்ல. இசை விவரணைக்கு அடங்காதது. உணர்ச்சிச் செறிவானது. வேறு எந்த வடிவத்திலும் சொல்ல முடியாததை இசை சொல்கிறது. மங்கலான மேக வலைப் பின்னல்களாக நம்மைச் சுற்றிக் கவியும் இசை, மாயத தோற்றமல்ல; உண்மை. சுலபமாக உணர்ந்து மற்றவர்க்கும் எடுத்துச் சொல்ல இசை கணிதமல்ல. விஞ்ஞானங்களில் ஆகத் துல்லியமானது கணிதம்; கலைகளில் ஆகச் சூக்குமமானது இசை. மார்க்சிய இசையறிஞர் ஐஸ்லர் சொல்வது போல ஐன்ஸ்டீனின் ”ஆற்றல் பற்றிய விதி”யைக் கூட ஜனரஞ்சகமாக விளக்கிவிடலாம்; ஆனால் பீத்தோவனின் ஆக்கத்தை அவ்வாறு எளிதாக விளக்கிவிட முடியாது.
இத்தகையதொரு துறையில்தான் இளையராஜா சாதனை படைத்திருக்கிறார். பாக், மொசார்ட், பீத்தோவனை ரசிக்கத் தெரிந்தவர்களெல்லாம் புதிதாக சிம்பனியைப் படைத்துவிட முடியாது. அதற்குப் பயிற்சியும், ஆற்றலும் மட்டுமல்ல, மன எழுச்சியும் வேண்டும். அது கர்நாடக இசை ‘மேதை’களிடம் கிடையாது. செக்குமாடுகள் மான்களாக முடியாது. கர்நாடக இசையில் செய்வதாகச் சொல்லிக் கொள்ளப்படும் புது முயற்சிகள் கூட வெறும் கழைக்கூத்துகளே.
இன்னொருபுறம் அவர் பாவலருடன் இசைக் குழுவிலிருந்தார், இசையுடனேயே வளர்ந்தார். இன்று சிம்பனி அமைத்துவிட்டார் என்று கூறுவது பாமரத்தனமானதும் அவரது கடும் முயற்சியைக் குறைத்து மதிப்பிடுவதுமாகும். இசை பற்றிய நமது அறிவை, ரசனையை விரிவாக்கிக் கொள்ளும்போதுதான் நமக்கு மறுக்கப்பட்ட அறிவின் பரிமாணம் புரியும். இல்லையேல் நாளை ராஜாவின் சிம்பனி வெளிவந்து அதை உலகவே ரசிக்கும் போது நாம் ரசிக்க முடியாது. நம்மூர் ஆள் போட்ட சிம்பனியை நம் காதிலேயே நுழைவிடாமல் இசை மடமை நம் காதை அடைத்துக்கொண்டிருக்கும்.
திரை இசை இல்லாமல் தனியானதொரு மேதைமையிலிருந்தும் ஊற்றெடுத்து சிம்பனி வந்து விடவில்லை. இதை இளையராஜாவே கூறுகிறார். நமக்குத் தெரிந்த இளையராஜா சினிமா இசை அமைப்பாளர்தான். பல படங்களில் அவரது பின்னணி இசையைக் கேட்கும்போது காட்சியைப் பார்க்காமல் கண்ணை மூடிக் கொள்ளத் தோன்றுகிறது. பாடல் இசை அமைப்புக்களைக் கேட்கும்போது அந்தப் படத்தைப் பார்த்துவிடக் கூடாது என்ற உணர்வேற்படுகிறது. ஒருசில இயக்குநர்களின் படங்களைத் தவிர மற்ற எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். அவரது இசை பிரம்மாண்டமான வண்ண ஓவியமாக விரிகிறதென்றால் திரைப்படத்தின் காட்சிகள் பொங்கல் வாழ்த்து அட்டைகளை நினைவுபடுத்துகின்றன. இந்தக் கணிப்பில் ஒருவேளை சில பிழைகள் இருக்கலாம்; ஆனால் பொதுவில் இதுவே உண்மை.
அப்படி அவர் இசையில் என்னதான் இருக்கிறது? ‘வீட்டுக்கு வீடு வாசப்படி வேணும், தெருக்கூத்துக்கும் பாட்டுக்கும் தாளகதி வேணும்…’ – இயற்கையில் தாளகதி இருக்கிறது; மனித உடலின் உள் இயக்கத்தில் இருக்கிறது; மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள உறவில் இருக்கிறது. மனித உணர்ச்சிகளுடன் ஒட்டிப் பிறந்தும் அதன் ஒரு வெளிப்பாடும் தாளம். ‘காட்டுவழி போற புள்ளே கவலைப்படாதே…’ போன்ற ராஜாவின் பழைய பாடல்களிலும், ‘பண்ணைப்புற ராசாவே, கட்டினமெட்டிது லேசா…’,. ‘நட்டுவச்ச ரோசாச்செடி ஆமா, ஆமா…’ போன்ற பாடல்களிலும் விதவிதமான தாளகதிகள் வருகின்றன. பறையின் தாள ஒலியைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, இமைக்கும் நேரத்தில் ஆப்பிரிக்கப் பழங்குடி மக்களின் ஆட்டம் தாளகதியாகக் காதில் பாய்கிறது. வெகு இயல்பாக ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தாவிச் செல்கிறது.
ஆனால், ”செவ்வியல் (Classical) இசை உயர்ந்தது, நாட்டுப்புற இசை தாழ்ந்தது” என்ற திமிர்த்தனம் கொண்ட சனாதனிகள் இந்த ‘அநீதி’ கண்டு கொதிக்கிறார்கள். ‘குனித்த புருவமும்…’ வேகம் குறைந்த கதியில் தொடங்கி, ‘ராக்கம்மா கையத்தட்டு…’ என்ற வரிகளின்போது, துரிதகதியில், ‘டப்பாங்குத்து’ தாளத்துக்குத் தேவாரத்தை இழுத்துச் சென்றிருப்பதை அவர்களால் எப்படிச் சகித்துக்கொள்ள முடியும்? (காட்சியில் தேவாரத்திடம் டப்பாங்குத்து மனதைப் பறிகொடுப்பது வேறு விஷயம்.) ஆம்! மேட்டுக்குடி வர்க்க வாழ்க்கை இயக்கத்தின் கதியும், உழைக்கும் மக்களின் வாழ்க்கை இயக்க்தின் கதியும் வேறு. இயக்குநர் பாலசந்தர் சொல்லைக் கேட்டுக் கொண்டு, தியாகய்யரின் கீர்த்தனைகளைத் தமிழாக்கி சேரிக்குச் சேரி ஒலிபரப்பினாலும் சத்தம்தான் சேரிக்குச் சேருமே ஒழிய சரக்கு சேரிக்குச் சேரவே சேராது.
உட்கார்ந்து தின்பவனின் நிதானம் உழைப்பவர்கள் வாழ்க்கையில் இருக்காது. அவர்களது இசையின் தாளத்திலும் இருக்காது. ஒன்று மற்றொன்றுக்கு உறுத்தத்தான் செய்யும். அதேபோல, மேற்கத்திய ‘ராக்’ போன்ற இசை வடிவங்களின் வெறிகொண்ட தாளம் ஏகாதிபத்தியத்தின் வெறித்தனம் மற்றும் அராஜகத்தின் வெளிப்பாடு.
நமக்குப் பழக்கமான, நமது வாழ்க்கைக்கு நெருக்கமான தாளகதியில் காலூன்ற வைத்து இசையுலகத்தை நமக்குச் சுற்றிக் காட்டுகிறார் ராஜா. அவர் அமைத்துள்ள சிம்பனி பற்றி கருத்து கூறும்போது மைக்கேல் டவுன் எண்ட் (Michael Townend இவர் ராஜாவின் சிம்பனிக்குப் பதிவு இயக்குநர்) அவற்றில் இளையராஜா பயன்படுத்தியுள்ள தாள வகைகளையே குறிப்பிட்டுச் சொல்லுகின்றார்.
அப்படியானால், தாளம்தான் அவரது தொழில் ரகசியமா? ‘அன்னக்கிளி’ வந்தபோது அப்படித்தான் பலர் சொன்னார்கள். ”இது தவுல் கம்பெனி, ரொம்பநாள் நிக்காது” என்றார்கள். தமிழ்த் திரையிசைக்கு வடக்கே இருந்து ஷெனாய் வந்தது; ஐரோப்பாவிலிருந்து பியானோ, அக்கார்டியன் வந்தது. ஆப்பிரிக்காவிலிருந்து டிரம்ஸ் வந்தது; ஆனால் உள்ளூரிலிருந்து (மன்னிக்கவும் ஊர் அல்ல சேரியிலிருந்து) தப்பும் பம்பையும் உறுமியும் மட்டும வரவில்லை. அதற்கு ‘உரியவர்’தான் அவற்றை எடுத்து வந்த தமிழகத்தை ஆக்கிரமித்திருந்த இந்தி மயக்கம் என்னும் பேயை விரட்டினார்.
இதற்கு முன்னாலும் திருவிழாவில் தலைகாட்டுவதுபோல அந்த இசைக்கருவிகள் தமிழ்ச் சினிமாவில் தலைகாட்டியிருக்கலாம். ஆனால் அந்தத் தவில் வேறு, இந்த மேளம் வேறு. அந்த நாதஸ்வரம் வேறு. இந்த நாயனம் வேறு; இரண்டுக்கும் கொடுக்கப்பட்ட மரியாதைகளும் வேறுவேறுதான்.
பலர் விரும்பியதைப்போல அவர் வெறும் ‘தவுல் கம்பெனி’யாக மட்டும் இருந்திருந்தால் 750 படங்களுக்கு இசை அமைத்திருக்க முடியாது. ‘அன்னக்கிளி’க்கு முன்பு ஜி.கே.வெங்கடேஷ் குழுவில் இசைக்கலைஞனாகப் பணியாற்றி போதே பல இசைத் துணுக்குகளை எழுதி சக கலைஞர்களுடன் சோதனை செய்து பார்த்திருக்கிறார். இளம் இசையமைப்பாளர் இசைவாணன் கூறுவதைப்போல ”’அன்னக்கிளி’ முதல் ‘வள்ளி’ வரை அவர் அள்ளி வழங்கியிருப்பவை விதவிதமான ஹார்மனி நெசவுகள். நாட்டுப்புற இசையோடு ஹார்மனியை இணைத்து நெய்து கொடுத்திருப்பது ‘அன்னக்கிளி’யின் சிறப்பம்சம். முதல் படத்தில் அடிவைக்கும்போதே ‘அடாஜியோ’ என்ற குறைந்த வேகத்திலமைந்த ‘அன்னக்கிளி உன்னைத் தேடுது…’ என்ற சோகப் பாடலை முயற்சித்து அவரது துணிச்சலான செயல்.”
துணிச்சலுக்குக் காரணம் புதிய முறைகளைச் சோதனை செய்து பார்ப்பதில் அவருக்கிருந்த ஆர்வம், தன்னம்பிக்கை. ‘இளமை எனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு…’ என்ற பாடலில் திரையில் பிளாஷ் பேக்கில் கதைக் காட்சிகளாக நகர்ந்து செல்லும்போது அதன் பின்புலத்தில் ஓவர்ச்சர் என்னும் (ஓபரா இசை நாடக முன்னுரைப் பாணி – சிம்பனிக்கு முன்னோடியானதொரு வடிவம்) இசை நகர்ந்து செல்லும். ‘நிழல்கள்’ படத்தில் இந்திய இசை முறைகளைக் கையாண்டும், ‘மூடுபனி’யில் ஏற்கனவே புழக்கத்திலுள்ள ராகங்களுக்குப் பதிலாக காட்சியின் தேவைக்கேற்ப புதிதாக ‘இசை கரு’க்களை (Theme) உருவாக்கியும் காட்டினார். ‘ராஜபார்வை’யில் இந்திய, மேற்கத்திய தாளகதிகளையும், ஹார்மனியையும் சோதனைக் களன்களாக்கினார். நெசவில் டெக்ஸ்ச்சர் (இழை நயம்) என்று கூறுவார்களே, அதை இசையில் காட்டுகிறது ‘பூமாலையே தோள் சேரவா…’ என்ற பாடல். இப்பாடலின் பண்மிசைப் பண்ணாக, ஒன்றின் மீது இன்னொரு பண் உராய்வின்றி மிதந்து செல்லும் அழகைக் காணலாம். ராஜா பெரிதும் போற்றும் இசை மேதை பாக் – கை ‘பண்மிசைப் பண்ணின் (Counter Point)) தந்தை’ என்பார்கள். தந்தைக்கேற்ற தனயன்.
பரிச்சயமற்ற சொற்றொடர்களால் ராஜாவின் இசையை விளக்கிக் கொண்டிருப்பது ஏன், என்று வாசகர்கள் வியக்கலாம். இவை இசையின் நவீன வடிவங்கள், ஆழமான முறைகள். மோனோடோன் என்பது இசையின் புராதன வடிவம், ‘கர்நாடக இசை’, ‘இந்துஸ்தானி இசை’ ஆகியவை இந்த ரகம்தான். ஸ, ரி, க, ம, ப, த, நி என்ற ஏழு சுரங்களில் ‘கர்நாடக’ இசையில் ஒரு தருணத்தில் ஒன்று மட்டும் ஒலிக்கும். ஒன்றுக்கொன்று இணையாகவோ, ஒன்றின்மீது ஒன்று தவழ்ந்தோ இந்தச் சுரங்கள் வராது. ஒன்றையொன்று பின்தொடர மட்டுமே செய்யும். இந்த இசையை நீண்ட நேரம் கேட்கும்போது அலுப்பு ஏற்படக் காரணம் இதுதான். ‘மனாடனஸ்’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் ‘சலிப்பூட்டுவது’ என்பதுதானே பொருள்! மோனோடோனுக்குப் பின் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பண்கள் ஒரே நேரத்தில் இசைக்கப்படும் பாலிபோனி (Polyphony) பிறந்தது.
ஹார்மனி, இவையிரண்டிலிருந்தும் வேறுபட்டது. ஒரு பண், சுர இயைபுகளோடும் (Chords) வேறு ஒலிகளுடனும், (இசைக்கருவிகளுடனும்) இசைய நெய்யப்படுவதே ஹார்மனி. தற்போது ராஜா அமைத்துள்ள சிம்பனியில் 80க்கும் மேற்பட்ட இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்கிறார்கள். நாம் பெருமிதம் கொள்வது கருவிகளின் எண்ணிக்கையினால் அல்ல; அவை பயன்படுத்தப்பட்டுள்ள – சிம்பனி – இசை வடிவம் காரணமாகத்தான். மேலும் 10 இசைக் கருவிகளைக் கூட்டி 90 ஆக்கி ‘நம்மூர்’ கர்நாடக சங்கீத வித்வானின் கையில் கொடுத்தால் என்ன நடக்கும்? மதுரை சோமு கச்சேரியை எட்டால் பெருக்கினால் என்ன விடை கிடைக்குமோ அதுதான் கிடைக்கும். ‘எந்தரோ மகானுபாவுலு…’ என்று செம்மங்குடி முதல் குரல் கொடுத்தால் 90 கருவிகளும் பள்ளிக்கூட கடவுள் வாழ்த்து போல அதையே திரும்பச் சொல்லும், அவ்வளவுதான். அதாவது, அறுக்கமாட்டாதவன் இடுப்பில் 58 கருக்கரிவாள்!
கர்நாடக இசையைக் கேவலப்படுத்துவதற்காக இதைச் சொல்லவில்லை; (இனிமேல் நாம் வந்து கேவலப்படுத்த அதில் ஏதும் மிச்சமில்லை என்பது வேறு விவகாரம்) இதன் வரம்பு அவ்வளவுதான். கர்நாடக இசையில் பாடகன்தான் (அல்லது முக்கியக் கருவி) சர்வாதிகாரி; மற்றவை பக்கவாத்தியங்கள் மட்டுமே. அவற்றுக்கு ‘தனி உரிமைகள்’ கிடையாது. ஆனால் ஹார்மனி ததும்பும் சிம்பனியில் எத்தனைக் கருவிகள் உண்டோ அத்தனைக்கும் தனிப்பங்கும் பாத்திரமும் உண்டு. அதனால்தான் சிம்பனி இசைப்பதிவு முடிந்தபின் அதில் பங்கேற்ற ஒரு கலைஞர் தனது கருவிக்கு வாய்ப்பு கொடுத்ததற்காக ராஜாவிடம் நெகிழ்ச்சியுடன் நன்றி சொல்லியிருக்கிறார். பக்கவாத்தியக்காரரை முக்கியப் பாடகர் கச்சேரியினூடாகவே கவிழ்ப்பதும், மிரட்டுவதுமே கர்நாடக இசை மரபு.
பத்து வண்ணங்களில் பட்டு நூலைக் கட்டுக்கட்டாகக் கொண்டு வந்து கொடுத்தால் கர்நாடக இசை அதைத் தாம்புக்கயிறாக்கும்; நூல் மிச்சமிருந்தால் இன்னும் தடியாக முறுக்கித் தேர்வடமாக்கும். ஆனால் சிம்பனியோ அதைத் தறியில் கொடுத்து நெஞ்சை அள்ளும் வண்ணத்தில் புடவையாக நெய்து காட்டும், பார்டராக, குறுக்குக் கோடுகளாக, புட்டாக்களாக, அள்ளி இறைக்கப்பட்ட புள்ளிகளாக… ஒவ்வொரு வண்ணமும் ஒரு தினுசு (Design) காட்டும். இந்தத் தினுசுகள்தான் சிம்பனியின் சுருக்கள் (Theme) . மொத்தப் புடவையும் தோற்றுவிக்கும் அழகியல் உணர்வுதான் ஒரு குறிப்பிட்ட சிம்பனி சொல்லும் செய்தி. கர்நாடக இசையில் பாடகன் எஞ்சின்; பக்கவாத்தியங்கள் அவன் பின்னே பிணைக்கப்பட்ட பெட்டிகள். சிம்பனியின் செய்தி என்பது சாலை விதி. அதை மீறாமல் சீறியும், பறந்தும், சுணங்கியும், நிதானமாகவும் செல்லும் பலவகை வாகனங்கள்தான் சிம்பனியின் உட்கூறுகளான இசைக்கருவிகள்.
இப்போது ராஜாவின் ‘நட்டுவச்ச ரோசாச்செடி…’, ‘பூமாலையே…’ போன்ற பல பாடல்களை மீண்டும் கேட்டுப் பாருங்கள். நெஞ்சை அள்ளும் விதவிதமான வண்ணங்கள் உங்கள் மனக்கண்ணில் விரியும். இந்த ‘வித்தை’ நமது சங்கீத மும்மூர்த்திகளில் முதல்வரான தியாகய்யருக்குப் பிடிக்காமல் ‘எவனோ ஒரு’ பீத்தோவனுக்கும் மொசார்ட்டுக்கும் கைவந்தது எப்படி? சிம்பனி திருவையாற்றுக் காவிரிக்கரையில் அவதரிக்காமல் வியன்னாவில் பிறந்தது ஏன்? சங்கீத சிரோன்மணிகளைக் குடையும் கேள்வி இது.
ஏனென்றால் பின்னாளில் இரண்டு காதும் கேட்காத பீத்தோவன் ஐரோப்பாவில் உள்ள குமுறலை தன் இதயத்தால் கேட்டார்; தியாகய்யரின் காதில் காலை நேர கோயில் மணி சத்தமும், மதியத்து ஒற்றைக்காக்கை அழைப்பும், இரவில் காவிரிக்கரை தவளைகளின் இரைச்சலுமே விழுந்தது. ‘எழுச்சிபெறும் தொழிலாளி வர்க்கத்திற்கே எதிர்காலம்’ என்று முன்னறிந்த பீத்தோவன், ‘தொழிலாளர் படையே வருக’ என்று தனது 9 – வது சிம்பனியையே அதற்கு வரவேற்பிசையாக்கினார். ‘எச்சரிக்ககா ரா… ரா…. ஹே ராமச்சந்திரா’ (பார்த்து வாப்பா ராமா) என்று மோட்டுவளையைப் பார்த்துக் கதறிக் கொண்டிருந்தார் தியாகய்யர்.
முடியரசர்களின் தலையை அப்புறப்படுத்திவிட்டு, குடியரசு அமைக்கும் பாதையில் ஐரோப்பா நடைபோட்டுக் கொண்டிருந்தது; மணிமுடியை பிரிட்டிஷ்காரனிடம் போக்கியத்துக்கு விட்டுவிட்டு, அவனுடைய எச்சில் காசில் வாழ்ந்த ‘சரபோஜி’க்கள் தாங்களும் மகாராஜாக்கள் என்று இங்கே கம்பீரமாக நடமாடிக் கொண்டிருந்தனர் (சரபோஜி – தியாகய்யர் காலத்து தஞ்சை மன்னன்). பீத்தோவனின் மூளையில் மின்னலாக வெட்டிப் பின்னர் பற்றிக் கொண்ட தீப்பிழம்பல்ல சிம்பனி; மொசார்ட்டுக்கு கர்த்தர் அதை அருளிச் செய்யவுமில்லை. மன்னனுக்கும் மக்களுக்கும் அன்று நடந்த யுத்தத்தில் அவர்கள் மக்கள் பக்கம் நின்றார்கள்; ஜனநாயகத்துக்காகக் குரல் கொடுத்த ஃப்ரீமேசோனியச் சிந்தனைகளை ஆதரித்தார்கள்; அதைப் பிரகடனமும் செய்தார்கள்.
”சுதந்திரம் - சமத்துவம் – சகோதரத்துவம்; இயற்கை – பகுத்தறிவு – பேரறிவு” என்ற தங்கள் நம்பிக்கையை இசையில் வடித்தார்கள். ‘அடிமைத்தனம் – வருணதருமம் – இந்து ராஷ்டிரம்; பிரம்மம் – பரப்பிரம்மம் – அத்வைதம்” என்று நாடகமாடியவர்களிடமிருந்தும, ஆடிக் கொண்டிருப்பவர்களின் இதயத்திலிருந்தும் சிம்பனி ஊற்றெடுக்க முடியாது. எந்தப் ‘பெரியவாளும்’ இதற்கு ஆசீர்வதிக்கவும் முடியாது. இதுதான் காரணம்; இதுவே உண்மை. ‘வேத கணிதம்’ பற்றிப் பிதற்றிக் கொண்டிருக்கும் இந்து ராஷ்டிரப் பயித்தியங்கள் ‘வேதகாலத்திலேயே சிம்பனி இருந்திருக்க வேண்டும்” என்று எங்கேயாவதொரு மூலையில் ஓலைச் சுவடிகளைக் கிளறிக் கொண்டிருக்கும் அபாயமும் உண்டு.
இத்தகையப் பைத்தியங்கள் கர்நாடக இசைக்கு முட்டுக் கொடுப்பதற்காகவே எடுக்கப்பட்ட ‘சிந்து பைரவி’ படத்தை இன்னொரு முறை தரிசித்தால் பித்து தெளியக்கூடும். ‘மகா கணபதிம்…’ என்று சிவகுமார் கச்சேரியைத் துவங்கியவுடன் காமெராமேன் காமேராவைத் தூக்கிக்கொண்டு காட்டுக்கு ஓடுகிறார்; தொலைக்காட்சியாக இருந்தால் பாடகரின் முகத்தையே ஒரு மணி நேரம் காட்டிக் கொண்டிருக்கலாம். இது சினிமாவாயிற்றே. காமெரா கடல், மலை, ஆறு, பிள்ளையார் கோயில் மீண்டும் ஆறு, மலை, கடல், பிள்ளையார் கோயில் என்று திரும்பத் திரும்ப காட்சி படிமங்களைத் தேடி அலைந்து சோர்ந்து கடைசியில் பாடகர் காலிலேயே வந்து விழுகிறது. காரணம் என்ன? இகலோகத்து மாந்தர்களுக்கும் இந்த இசை – கீர்த்தனைக்கும் எள்ளவும் சம்பந்தம் கிடையாது.
மன்னர்கள், பிரபுக்களின் ஒற்றை ஆணைக்குரலை மீறி பல்வேறு மக்கட் பிரிவினரின் குரலும் ஒலிக்கத் தொடங்கியதன் சமூக விளைவு, புரட்சி – ஜனநாயகம். மோனோடோனின் கையிலிருந்த சவுக்கைப் பிடுங்கி எறிந்ததன் மூலம் புரட்சியானது இசைத்துறையில் ஹார்மனியாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. சமூகத்தைப் போலவே இசையும் அடுத்த நிலைக்கு முன்னேறியது.
இப்படி 18 -ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த, இசைத்துறை முன்னேற்றம் தான் ஹார்மனி. இதன் முக்கிய அங்கமான சுருதிக்கும் ஸ்தாயிக்குமுள்ள உறவை தேவதூதன் பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்னரே ஆராய்ந்தான் பித்தகோரஸ். (செங்கோண முக்கோணத் தேற்றம் – பித்தாகோரஸ்தான்) வெவ்வேறு அளவில், கம்பிகளை இழுத்துக் கட்டி ஸ்வர வரிசையை எழுப்பினான். செவியால் உணரக்கூடிய ஒலியைக் கணிதத்தால் அளந்தான். இசையே கணிதம் என்றான்; அவன் ஒரு தத்துவஞானி. எனவே ஒருபடி மேலே போய் ‘எல்லாம் கணிதமே’ என்றான். ஏறத்தாழ அதே காலகட்டத்தில் நம் ‘பாரத தத்துவஞானி’ கிருஷ்ண பரமாத்மா ‘எல்லாம் நானே’ என்று அர்ச்சுனன் தலையில் மிளகாய் அரைத்துக் கொண்டிருந்தான்.
2500 ஆண்டுகளுக்கு முன் தன் புருவத்தை நெரித்து உலகை ஆராய்ந்து அறிவித்த அந்த மேதையின் வீரம் நம்மைச் சிலிர்க்கச் செய்கிறது. ஆம்! அறிவியல் துறைகளிலேயே துல்லியமான கணிதம் பேரண்டத்தின் புற உலகின் இயக்கத்தைப் புரிந்துகொள்ள முயல்கிறது; கலைத்துறை அனைத்திலும் சூக்குமான இசை, மன உலகின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முற்படுகிறது. இசையில் கணிதம் உண்டு; ஆனால் இசையே கணிதமல்ல. தாளகதியும் ஸ்வரமும், ஸ்தாயியும் கணிதத்தால் கட்டுப்படுத்தப்படுபவை. இசையைத் தூண்டும் மன உணர்வுகளும், இசையால் தூண்டப்படும் மன உணர்வுகளும் கணிதத்திற்குக் கட்டுப்படாதவை. இதை 2500 ஆண்டுகளுக்கு முன் பித்தகோரஸ் சிந்தித்திருக்க முடியாது.
”என்ன பெரிய இளையராஜா? பீத்தோவன் காலத்தில் கம்ப்யூட்டர் கிடையாது; இளையராஜா கையில் கம்ப்யூட்டர் இருக்கிறது. சிம்பனி அமைப்பதில் என்ன கஷ்டம்?” என்று சில மேதாவிகள் தங்கள் அறிவியல் ஞானத்தை காட்டுகிறார்கள். ‘அமெரிக்காவில் ‘டியூன் வங்கி’யில் ஒரு லட்சம் மெட்டுகளை கொட்டி வைத்திருக்கிறார்கள். வேண்டியவர்கள் வேண்டியதைப் பொறுக்கிக் கொள்ளலாம்’ என்கிறது விகடன். பொறுக்குபவர்கள் தங்கள் தேவைகளுக்கும் தம்மையொத்த பொறுக்கிகளையே பொறுக்கி எடுக்கிறார்கள். மணிரத்னம், ஷங்கர் வகையறா தங்கள் அலைவரிசையில் ரகுமானைக் கண்டுபிடித்துச் சேர்த்துக் கொண்டதில் வியப்பில்லை.ஏற்கனவே ஒரு லட்சம் மெட்டுகள் உள்ளன என்றால் ‘லட்சத்து ஒன்று’ என அடுத்தபடியில் கால் வைப்பவன்தான் இசையமைப்பாளன். புதிது புதிதாய் தன் கண் முன்னே விரியும் வாழ்க்கையை, அதன் உணர்வுகளை பிரதிபலிப்பவனே கலைஞன். ‘எல்லாம் கங்கைக் கரையிலேலே சொல்லியாகிவிட்டது’ எனும் கூட்டம்தான் ‘எல்லாம் கம்ப்யூட்டருக்குள்’ இருப்பதாகவும் கூறுகிறது.
ஹார்மனியில் ஒலி உடன்பாடு, ஒலி முரண்பாடு இரண்டின் இயக்கத்தையும் ஆய்வு செய்து மாபெரும் சிம்பனி இசை ஓவியங்களைத் தீட்டிய மொசார்ட்டும், பீத்தோவனும் இசையின் இயக்கத்தைக் கணக்காக நிரூபித்த பித்தகோரசையே தம் முன்னோடியாக அறிவித்தார்கள்.ராஜாவை இருட்டடிப்பு செய்ய முயல்வோர் பித்தகோரஸின் சமகாலத்திய கிருஷ்ண பரமாத்மாவின் வாரிசுகளாக இருக்கிறார்கள்! இது வரலாற்றின் நகைச்சுவை போலும்!
ஹார்மனி ததும்பும் இசைக்கோர்வைகள் திரையிசையில் வந்து விழ விழ ”என்ன, எல்லாம் சினிமா குப்பைதானே” என்று அவாள் முனகிக் கொண்டனர். ஆனால் தனி இசையாக ‘என்ன பெயரிட்டு அழைப்பது’ (How to name it) ‘காற்றைத் தவிர வேறிலலை (Nothing but wind) – ஆகிய இரு இசைப்பேழைகள் வந்தவுடன் இசை அறிஞர்கள் திரும்பிப் பார்த்தார்கள்; அவாளோ முகம் திருப்பிக் கொண்டார்கள். இப்போது ‘கிராண்ட் சிம்பனி’ ஒலிப்பேழையாக வருவதற்கு முன்பே ‘இது கலவை இசைதான் (Fusion) என்று ‘கிசுகிசு’ பரப்புகிறார்கள். ‘அக்மார்க்’ அய்யர்வாள் எல்.சுப்பிரமணியம் போன்றோரே செய்யத் துணியாத, முடியாத ஒன்றை ‘பண்ணைப்புரத்தான்’ செய்வதா என்ற வக்கிரம் தவிர இது வேறென்ன?
இளையராஜா அமைத்திருக்கும் சிம்பனி, ஐந்து இசையோட்டங்களில் அமைந்த முற்றிலும் மேலை இசை முறையிலானதுதான். எனினும் இந்திய இசை மரபிலிருந்து பெற்ற தாள முறைகள், பாணி, அலங்காரங்கள் ஆகியவை நிறைந்து காணப்படுவதாக பிலார்மோனிக் இசைக் குழுவினர் கூறுகின்றனர். அந்த சிம்பனியின் ஒலிப்பேழை வெளிவரும்போதுதான் அதன் செய்தி (உள்ளடக்கம்) குறித்து நாம் அறிய இயலும்.
”சிறந்த இசைக்கு வார்த்தைகளின் துணை தேவையில்லை” என்கிறார் ராஜா. அதாவது, தன்னளவில் முழுமை பெற்ற சுயேச்சையான கலை வடிவம்தான் இசை. மார்க்சிய இசை அறிஞரும், ஜெர்மனிய இசையமைப்பாளருமான ஐஸ்லர் ‘‘திரைப்படத்தில் பின்னணி இசை என்பது காட்சிக்குக் கனம் கூட்டுவதாக மட்டும் இருக்கக் கூடாது, காட்சியின் மீதான விமரிசனமாக இருக்க வேண்டும்” என்கிறார். ஆனால், நமக்குக் கோபத்தைத் தூண்டாத காட்சியில் ராஜாவின் இசையில் கோபம் கொப்புளிக்கிறது! நமக்கு அருவெறுப்பூட்டும் காதல் காட்சிகளில் அவரது இசை கொஞ்சுகிறது! நம்மைச் சிரிக்கச் செய்யும் சோகக் காட்சிகளில் அவரது இசை கண்ணீர் விடுகிறது. நாய்குடைகளாய் மறைய வேண்டிய பாடல் வரிகள் இசையமுதம் பருகி ஆலமரமாய் நிலை பெறுகின்றன. ராஜாவின் இசையெனம் நறுமலர்களால் மூடப்பட்ட மலங்கள் வாழ்வு பெற்று விடுகின்றன.
நாம் காறி உமிழ்ந்துவிட்டு அரங்கை விட்டு வெளியேறும் காட்சிகளிலிருந்து ‘உணர்வெழுச்சி’ பெற்று அவரால் எங்ஙனம் இசையமைக்க முடிகிறது? ‘நான் ஈடுபாட்டோடுதான் செய்கிறேன்’ என்கிறார் ராஜா. இது அதிர்ச்சியூட்டுகின்ற, ஆனால் நாணயமான பதில். ரே, கோடார்டு, ஃபெலினி என்று பத்திரிகைகளில் அறிவு ஜீவியாக நடித்துவிட்டு, திரையில் ஜிகினா உடையில் அற்பர்களாக வாழும் வேடதாரிகளை ஒப்பிடும்போது இந்தப் பதில் நாணயமானது; அதேநேரத்தில் மசாலாக்களுக்கு ஈடுபாட்டோடு இசையமைக்கும் நபர் சிம்பனி படைக்கும் கலைஞனாக எங்ஙனம் உயர முடியம் என்பது முரண்பாடு.
”அற்பமான காட்சிகளுக்கு இவர் இவ்வளவு சிரமப்பட்டு ஏன் விரிவாக இசையமைக்கிறார்?” என்று அதிசயிக்கிறார் ராஜாவின் நண்பர் பம்பாய் இசையமைப்பாளர் சந்த்வார்க்கர். ‘‘நான் பரிசோதனைகள் செய்து பார்க்கிறேன்” என்கிறார் ராஜா. அந்த முரண்பாட்டுக்கு இதுவே பதில். திரையில் ஓடும் காட்சிகளுக்கல்ல. அவை தன் மனக்கண்ணில் தோற்றுவிக்கும் காட்சிகளுக்குத்தான் அவர் இசையமைக்கிறார். காட்சியின் சிறுமை இசையால் பெருமைப் படுத்தப்படுகிறது. இசையின் பெருமை காட்சியால் சிறுமைப்படுத்தப்படுகிறது. பாடல்களைப் பொறுத்தவரை, கதை, காட்சியமைப்பு பற்றித் தெரிந்துகொண்டு அவற்றை இசைப் படிமங்களாக்குகிறார் ராஜா. இவ்வாறு ஒலியின் கவிதை எழுதப்பட்டபின் அதன் பரிமாணத்தை எட்டிப்பிடிக்க முடியாமல் சொல்லின் கவிதை (பாடல்) தடுமாறுகிறது. இசைப் படிமங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் காட்சிப்படிமம் தோற்று விழுகிறது.
மலங்களும் குப்பைகளும் ‘சாகாவரம்’ பெறுவது இப்படித்தான் என்று நாம் விளங்கிக் கொள்ளலாம்; ஆனால் இவற்றுக்கு ராஜா ஏன் சாகாவரம் ‘அருள’ வேண்டும்? வியாபாரம் – அதுதான் பதில். அற்ப உணர்வுகளைக் காசாக்கும் நோக்கத்திற்காகவே படம் எடுக்கும் தயாரிப்பாளன், அவற்றின் நெடியைக் கூட்டத்தான் இளையராஜாவை அமர்த்திக் கொள்கிறானேயன்றி, ஐஸ்லர் கூறுவதுபோல இசை விமரிசனம் எழுதி வாங்குவதற்கு அல்ல. இளையராஜா மட்டுமின்றி தொழில் முறைக் கலைஞர்கள் அனைவருமே சந்திக்கும் பிரச்சினை இது. எனினும் கவிதையும் ஓவியமும் பேசும் மொழி இசையைக் காட்டிலும் துல்லியமானது; அது சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கமும் கூர்மையானது. இசையோ சூக்குமமானது. எளிதில் பிடிக்கு அடங்காதது.
வர்த்தக ஏடுகளின் கதை, கவிதைகளின் கருத்துக்கு ஏற்ப ஓவியம் வரையும் ஓவியன் தன் சொந்தக் கருத்தைச் சொல்ல ஓவியக் காட்சி வைக்கிறான்! ராஜா சிம்பனி அமைக்கிறார்! எனினும் இந்தக் கலை வியாபாரத்தில் ஒரு கலைஞர் செய்து கொள்ளும் சமரசத்தின் அளவு அவனுடைய நாணயத்தையும், ஆளுமையையும் ‘சகிப்புத் தன்மை’யையும் அளவிடும் அளவு கோலாகிறது. ”எண்சீர் விருத்தம் பாடுவதற்காக நான் சினிமாவுக்கு வரவில்லை” என்ற வாலியின் ‘பிரகடனம்’தான் இதன் பாதாளம் – ஆழம்.
அதேநேரத்தில், இந்தக் ‘குப்பைகளில்’ விழுந்து புரளாமல், மியூசிக் அகாதமியிலும் திருவையாற்றிலும் கச்சேரி நடத்திக் கொண்டிருந்திப்பாரானால், சத்தியமாக ராஜா சிம்பனி அமைத்திருக்க முடியாது. ஏனெனில் சினிமா – கோணல் மாணலாகவாவது – மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. தூய கலையோ தந்தக் கோபுரத்திலிருந்தபடியே குப்பையைச் சபித்துக் கொண்டிருக்கிறது. கோடம்பாக்கம் இகலோகத்திலேயே ‘போகாத ஊருக்கு’ வழிகாட்டுகிறது; நுங்கம்பாக்கமோ (சங்கீத வித்வ சபை) பரலோகத்திற்கு, ‘இல்லாத ஊருக்கு’ – வழி காட்டுகிறது. ஈயத்தைப் பார்த்துப் பித்தளை இளிக்கக்கூடாது.
இசைதான் சூக்குமமேயொழிய இளையராஜாவின் உலகக் கண்ணோட்டம் ‘பூதக் கண்ணாடி’ வைத்துக் கண்டுபிடிக்குமளவு சூக்குமமானதல்ல; அவர் பெரிதும் விரும்புகின்ற ஐரோப்பிய இசை மேதை பாக்கைப் போலவே ராஜாவிடமும் ஆன்மிகமும் மனிதாபிமானமும் கலந்தே இருக்கிறது. பார்ப்பன மரபுக்கெதிராகச் சிறுமியை வேதம் சொல்ல வைக்கிறார்; ‘நான் இந்து அல்ல’ என்று பிலார்மோனிக் குழுவினரிடம் கூறுகிறார்; கர்நாடக இசைக்குக் கேவலம் சினிமாக்காரர்களாகிய நாங்கள் ‘உயிரூட்ட’ முடியுமா என்று அடிவெட்டு வெட்டுகிறார். கர்நாடக இசையின் சம்பிரதாயங்களை உடைத்துச் சநாதனிகளைச் சீண்டுகிறார்; கர்நாடக இசையின் வரம்புகளைக் கூறி அதன் முட்டாள்தனமான தன்னகங்காரத்தைச் சாடுகிறார்; ‘கர்நாடக வித்துவான்கள் பாடும் இசையைப் போலவே நாய் குரைப்பதும் ஒரு இசைதான்’ என்று அத்வைதிகளின் மொழியிலேயே வியாக்கியானம் செய்து அவாளின் வெறுப்பைத் தேடிக் கொள்கிறார். புகழ்மிக்க பாடகர்களும், இசையமைப்பாளர்களும் ‘இசையுலகின் சூத்திரர்களாக’ அவாளிடம் கைகட்டி நிற்கும் திரையுலகில் இது அதிசயம்தான்; மேடைக் கச்சேரியொன்று நடத்தி வசிட்டர்களின் வாயால் பிரம்மரிஷிப் பட்டம் வாங்குவதை வாழ்க்கை லட்சியமாகக் கொண்டிருக்கும் அடிமைத்தனத்தின் மத்தியில் இது கலகம்தான்; இதுதான் இசைத்துறையின் உன்னதமான சிம்பனி என்னும் உண்மையை நோக்கி அவரை நகர்த்தியிருக்கிறது.
சிம்பனி – அது தன்னுடைய ஆன்ம விடுதலையைச் சூனியத்தில் தேடியலைந்த தனியொரு இதயத்திலிருநது கசிந்த இசை வடிவமல்ல; தங்கள் கைகளைப் பிணைத்திருந்த சங்கிலிகளை நொறுக்கி அதன்மூலம் ஆன்ம விடுதலையைச் சாதிக்க முயன்ற மனிதகுலத்தின் இதயத்திலிருந்து பீறிட்டுக் கிளம்பிய உணர்ச்சி வெள்ளம். அது இறைவனின் படைப்பாற்றலின் முன் வியந்து மண்டியிட்ட மனிதனின் அவலமல்ல; தன்னுடைய படைப்பாற்றலை அறிவித்த மனித குலத்தின் கம்பீரம். மேலைநாட்டின் புரட்சிகர இசைமரபுடன் நமது பறையும், சூழலும் இணைந்து உருவாக இருக்கும் ஒரு பிரம்மாண்டமான இசை ஓவியம் நம் கண்முன் மங்கலாக விரிகிறது. இளையராஜாவின் ஆற்றல் இதைச் சாதிக்கும். அந்த ஓவியம் உருவாக்கவிருக்கும் உணர்வை அவரது சித்தாந்தம் தீர்மானிக்கும்.
அம்பேத்கரின் அரசியல் சட்டத்தைப் பத்திரப்படுத்திக் கொண்டு, இந்து மதத்தின் மீதான அவருடைய தாக்குதலை இருட்டடிப்பு செய்தது பார்ப்பனியம்! இளையராஜாவின் ஆன்மீகத்தையும் சீரங்கம் கோபுரத்துக்குக் கொடுக்கும் காசையும் வெட்கமின்றிப் பயன்படுத்திக்கொள்ளும் பார்ப்பனக் கும்பலும், தன் இசை மடமையின் மீதும், போலித்தனத்தின் மீதும் இளையராஜா தொடுக்கும் தாக்குதலை மட்டும் கவனமாக இருட்டடிப்பு செய்கிறது. அதன் கோரமுகத்தைப் பச்சையாக உரித்துக் காட்ட இளையராஜா தயங்கினாலும், தனது எதிர் நடவடிக்கை மூலம் பார்ப்பனியம் தன் அற்பத்தனத்தை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொள்கிறது.
”இருபத்தியொன்றாம் நூற்றாண்டெங்கும் உலகம் இளையராஜாவின் இசையில் திளைக்கும்” என்கிறார் பிலார்மோனிக் குழுவின் நடத்துனர். இருபது நூற்றாண்டுகளாக முகவரியில்லாதவர்கள், வருணத்தில் சேராதவர்கள் என்று யாரை இருட்டடிப்பு செய்ததோ, அவர்களில் ஒருவரின் பெயரை ‘மேற்பார்வை முகவரி’யாகப் போட்டுத்தான் இசை உலகில் இன்று தன்னை பார்ப்பனக் கும்பலும் அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும். ‘மேஸ்டிரோ’ என்று அன்பு கலந்த மரியாதையுடன் அழைக்கிறார்கள் பிலார்மோனிக் குழுவினர்; ஆசியன் என்கிறது உலகம்; இந்தியன் என்று அவசரமாக முத்திரையிடுகிறது பாராளுமன்றம் – அதுவும் ஒரு தமிழன் முன்மொழிந்த பிறகு. தமிழன் என்று அரவணைக்கிறது தமிழகம்.
மாபெரும் மேதைகளின் வரிசையில் இன்னொருவன் உருவாகிவிட்டான் என்று பிலார்மோனிக் கலைஞர்கள் பெருமைப் படுகிறார்கள்; பண்ணைப்புரத்துப் பண்ணைகளோ கவலைப்படுகிறார்கள் – இன்னொரு ராஜா உருவாகிவிடக் கூடாதே என்று.
அந்தப் பண்ணைப்புரத்தில், ராசய்யாவின் (இளையராஜா) சகோதரர்கள் தேநீர் அருந்த இன்றும் எமது விவசாயிகள் விடுதலை முன்னணி போராடிக் கொண்டிருக்கிறது.பண்ணைப்புரத்து மக்களுக்கு முறைப்பாரி தெரியும்; தெம்மாங்கு தெரியும், ஒப்பாரி தெரியும்; இரண்டாயிரம் ஆண்டுகளாய் தங்கள் பாட்டன்மார் என்ன மெட்டுகளில் பாட்டுக் கட்டினார்களோ அவையெல்லாம் தெரியும்; அவை மட்டும்தான் தெரியும். அவர்கள் கைமாற்றித் தந்து சென்ற பறை தெரியும்.
அவர்களுக்கு சிம்பனி தெரியாது; புரியாது; அவர்களுக்கு இப்போது தேவைப்படுவதெல்லாம் ஒரு மெட்டு; இரண்டாயிரம் ஆண்டுகளாய் தங்களை அழுத்தும் சோகத்தை, தாங்கள் அழுத்தி வைத்திருக்கும் கோபத்தைப் பகிர்ந்து கொள்ள ஒரு மெட்டு – ஹார்மனியில் ஒரு இழை.
___________________________________
புதிய கலாச்சாரம் – அக்டோபர், 1993.