பெயர் குறிப்பிட விரும்பாத 40 வயதேயுடைய தாய் ஒருவர், தனது சொந்த அனுபவங்களை இங்கு தந்திருக்கின்றார். ஒரு தாயின் குறிப்புக்கள் இவை. தனது பிள்ளையுடனும் கணவனுடனும் இந்த யுத்தத்தில் தப்பிப் பிழைத்த போது, சமூகம் எதைச் சந்தித்ததோ அதை இங்கு எழுதியிருக்கின்றார். ஓரே மூச்சில் மிகச் சுருக்கமாகவும், எளிமையாகவும்  சொல்லியுள்ளார். எமக்கு கையெழுத்துப்பிரதியாக மூன்றாம் தரப்பு மூலம் இவை கிடைக்கப் பெற்றது. போர்க்குற்றங்களை வெளிச்சமிடும் குறிப்புக்கள் தான் இவை. வன்னியில் வாழ்ந்து போரின் குரூரங்களுக்குள் அகப்பட்டு, சொந்தமாகவே அனைத்து அவலத்தையும் அனுபவித்து தப்பிப்பிழைத்தவர்களின் பொதுவான கதையிது.

ஒரு சமூகப் பொறுப்புள்ள ஆசிரியையாக, தன் அனுபவத்தை எழுதி தன்னை அடையாளப்படுத்துகிறார். மூன்றாவது தரப்பால் எமக்கு கையெழுத்துப் பிரதியாக இது கிடைக்கப் பெற்றது அதனை அப்படியே இங்கு தட்டச்சு செய்திருக்கின்றோம்.

இவை பொதுவானவை. குறிப்பாக இதை அவரின் அனுபவத்தில் நாங்கள் தெரிந்து கொள்ளவும், அதை மற்றவர்கள் தெரிய வைப்பதற்காக அவருடன் நாம் நேரடியாக உரையாட வேண்டியுள்ளது. இங்கு பொதுவானவை இன்று பலரும் தெரிந்தது தான். குறிப்பாக யாரும் அதை இன்னும் எழுதவில்லை.    எவ்வளவோ நிகழ்வுகள், மனித அவலங்கள், இழப்புக்கள். அதை யாரும் சொல்லி அழக் கூட, இன்னும் அனுமதிக்கவில்லை. அவைகளை தமக்குள் போட்டு புதைக்கக் கோருகின்றனர்.    பேரினவாத போர்க்குற்றங்கள், புலிகளின் போர்க்குற்றங்கள் பற்றிய விபரங்கள், அவருடன் சம்பாஷணை செய்வதன் ஊடாக, அவரை எழுதத் தூண்டுவது எமது கடமையாக உள்ளது. இந்தக் கட்டுரை வெளிவந்த பின் தான், நாம் அந்த மூன்றாம் தரப்பு ஊடாக  உரையாட ஏற்பாடு செய்வதாக வாக்களித்து உள்ளார். எனினும் அந்தத் பெண்ணிடம் அதற்கான சூழல் இருக்குமா என்ற கேள்விக்குறியோடு தற்போது கிடைக்கப்பெற்ற கையெழுத்துப் பிரதியினை இங்கு வெளியிடுகின்றோம்.

அதே நேரம் பலவற்றைச் குறிப்பாக சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். யுத்தம் எப்படி, மக்கள் மேல் திணிக்கப்பட்டது. இதில் புலி – அரசு என இரண்டினதும்; பங்கு என்ன? மக்கள் எதை விரும்பினர். யார் எதை எப்படி எப்படி எல்லாம், எந்த வழிகளில் தடுத்தனர். யுத்த அழிவில் இருந்து மக்கள் தம்மை வெளியேற்ற முனையவில்லையா? யுத்தத்தில் பலி கொடுப்பு எப்படி எந்த வழியில் நடந்தது? மக்கள் எப்படி வாழ்ந்தனர்? எப்படி உணவைப் பெற்றனர். எப்படி உண்டனர். எப்படிக் குடிக்கத் தண்ணீர் கிடைத்தது? பச்சிளம் குழந்தைகளின்; நிலை என்னவாக இருந்தது.? மக்களின் தங்கத்தை யார் வாங்கியது? என்ன விலையில் அதை வாங்கத் தொடங்கினர். கிடைத்த உணவை யார் விற்றனர்? என்ன விலையில் யாருக்கு விற்றனர்? எப்படி விற்ற அவர்களுக்கு உணவு கிடைத்தது? யுத்தம் நடந்த காலத்தில் புலிகளுடன் மக்களின் உறவு என்ன? குழந்தைகளை புலிகள் இழுத்துச் சென்ற போது, மக்கள் என்ன செய்தனர்? யுத்தத்தின் பின் அகதிமுகாமில் என்ன நடந்தது.? அங்கு பட்ட கஸ்டங்கள் என்ன?. மக்கள் இந்த யுத்தம் இப்படி ஏன் போனது என்று, என்ன கருதினர்? இப்படிப் பல தொடர் கேள்விகள். கண்முன்னான மரணங்கள் ஏற்படுத்திய உணர்வுகள் தான் என்ன? நடக்கக் கூடாதது நடந்தபோது ஏற்பட்ட எதிர் வினைகள் என்ன? இப்படி பல.
    
– தமிழரங்கம்


கல்தோன்றி மண்தோன்றுமுன் தோன்றிய தமிழ், தமிழுக்கு அமுதென்ற பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" ஆம் தமிழின் இனிமையை, பெருமையை, பழமையைப் பாடலிலே பாடி என்ன பயன்? அதுவும் தமிழ் இனத்திற்கு அதிலும் இலங்கையில் தமிழர் படும்பாடுகள், வேதனைகள், இழப்புக்கள், இறப்புக்கள் தான் எத்தனை எத்தனை? கால காலமாக வதைக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு, நெருக்கப்பட்டு, நொருக்கப்பட்ட இனமாக இருந்தாலும், ஒவ்வொரு இழப்புக்களிலும் மனந்தளராது உறுதியுடன் எச்சத்திலும் எழுவோம்" என வீறுகொண்டு எழும் மானத் தமிழராக எம் மக்கள் வாழ்ந்தனர். எம் வன்னி மண்ணில் என்னத்துக்கையா பஞ்சம்? பண்டாரவன்னியனின் வீரம் கூறும் மண்ணிலே கட்டிய மாட மாளிகைகள் தான் எத்தனை? நெய்தலும் மருதமும் இயற்கை வளங்களும் ஒருங்கே ஒத்துழைக்க மக்கள் வாழ்வாங்கு வாழ்ந்தனர். அது மட்டுமா தமது பிள்ளைச்செல்வங்களை கல்வியிலும், ஒழுக்கத்திலும் மறையறிவிலும் மிகவும் நிதானமாக வழிநடத்தினர். இவ்வாறு சவால்களுக்கு சவாலாக வாழ்ந்த மக்களின் வாழ்விலே வந்தது பேரிடி. ஆம் 2009 ஜனவரி வன்னிச்சமர்.

ஜயகோ எம்மக்கள் எழமுடியாதளவில் மண்ணோடு மண்ணாக மாய்ந்த சோகக் கதைகள் ஆயிரம் ஆயிரம். கூடும் இல்லை குஞ்சும் இல்லை. பரிதவித்த உள்ளங்கள் தான் எத்தனை? பாதுகாப்பு வலயம் என்று வேலி போட்டு அதற்குள்ளே வஞ்சம் அறியாத எம்மக்கள் மாட்டி, போன உயிர்கள் தான் எத்தனை? மிருகங்களும் மனிதர்களும் ஒன்றாக பாதையிலே மரணித்த பேரவலம் எங்கு தான் நடக்குமையா? "மனிதன் மாண்புடன் படைக்கப்பட்டான், இறைசாயலில் உன்னதமான வகையில் உண்டாக்கப்பட்டான்" எனத் திருவிவிலியம் மனிதப் படைப்புப்பற்றிக் கூறுகின்றது. ஆனால் வன்னிபெருநிலப்பரப்பில் அந்த மாண்பு எங்கே? மனித நேயம் எங்கே?

ஆரம்பத்தில் வள்ளிபுனம், தேவிபுரம், சுதந்திரபுரம், என்று பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட,  அகப்பட்ட பொருட்களை எடுத்துக்கொண்டு தம் உயிரைக் காக்க ஓடினார்கள். முல்லை-பரந்தன் வீதி இப்படி ஒரு சன நெரிசலை ஒருபோதும் கண்டதில்லை. தண்ணீரும் வெள்ளமும் தேங்கி நிற்க தள்ளாடினர் எம்மக்கள். இதிலும் காலூன்ற வந்தன கொத்துக் குண்டுகள். குலைகுலையாக கொல்லப்பட்டார்கள். எங்கு பார்த்தாலும் தரப்பாள் கொட்டில்கள், தண்ணீருக்குள்ளும் பதுங்கு குழிகள். அவற்றிலும் வந்தன செல்மழை, விமானக்குண்டுகள். உடல் சிதறி தசை கூடத் தெரியாமல் போன உடல்கள் தான் எத்தனை? எங்கு எப்போ குண்டு வடிவில் யமன் வருவான், யாரைக் கொன்று போடுவான், அடுத்தது யார்? என ஏங்கின மக்களின் உள்ளங்கள். எதற்காக எல்லாவற்றையும் விட்டு ஓடி வந்தார்களோ அங்கேயும் அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. எங்கும் சாவு. உடலும் மனமும் ஒன்றாகச் சோர அங்கிருந்து மீண்டும் கரையோரப் பாதுகாப்பு வலயம் நோக்கி ஓடினர். இதுவும் அறிவிக்கப்பட்டது. இப்போது உடமைகள் எதுவுமின்றி உயிரை மட்டும் கொண்டு ஓடினார்கள். மாத்தளன், பொக்கணை, வலைஞர்மடம் செல்லும் வழியில் சிதறிய உடல்கள் தான் எத்தனை? வந்தாரை வாழ்வாங்கு வாழவைக்கும் வன்னி மண்ணில் எம் மக்களுக்கே கால் ஊன்ற இடமில்லை. என்ன கொடுமையையா? வீதிவிதியாக மனித உயிர்கள். பச்சிளம் குழந்தை முதல் பாலூட்டும் தாய் வரை, அதுமட்டுமா? எத்தனை வயோதிபர், இளமை பொங்கும் வாலிபச் சிட்டுக்கள், பள்ளிப்பிஞ்சுகள். ஆ ஆண்டவனே! எத்தனை எம் உறவுகள் வீதியிலே அநாதைப் பிணங்களாக வீசி எறியப்பட்டனர்.? அந்நேரம் மண்ணை முத்தமிட்டு மரித்தவர்கள் அதிஷ்டசாலிகள். அத்தனையும் நிஜம். மிஞ்சினோர் கதறிக்கதறி ஓடினர். எங்கே? மீண்டும் மூன்று குக் கிராமங்களில் மூன்று இலட்சம் மக்கள். என்ன அவலம்! உணவு, நீர், மலகூடம், சுகாதாரம் எதுவும் இல்லை. ஏன் கொட்டில் போடக்கூட சிறுநிலமில்லை. ஒதுங்கி நிற்க மர நிழலுமில்லை. எதுவித வசதி வாய்ப்பும் இல்லை. அங்கிருந்த மரங்களெல்லாம் வெட்டப்பட்டு பதுங்குகுழிகளும், கொட்டில்களும் போடப்பட்டன. உணவு இல்லையென்றாலும் அங்கு உயிர் வாழலாம். ஆனால் பங்கர் இல்லை என்றால் முடிந்தது கதை.
 
வளமுள்ள கிராமங்கள் மூன்றும் பாலைவனமாக்கப்பட்டு மக்கள் நெருசலில் தள்ளாடின. வீதியில் நடக்க முடியாத நெருசல். பஞ்சடைந்த கண்கள், கந்தைத்துணி, உணவின்றி வீதியோரங்களில் செய்வதறியாது திகைத்து நின்றனர். என்ன பரிதாபம் தம்மிடம் இருந்த பணம் நகை எல்லாம் முடிந்துவிட்டது. உணவின்றி, உறக்கமின்றி ஏன் குடிக்க நல்ல நீர் கூட இல்லை. அத்தோடு குந்தியிருக்க இடமுமில்லை. வாழ்வா? சாவா? எனப் போராடும் நிலையில் திடீரென ஓர் சத்தம்.

ஜ.சி.ஆர்.சி கப்பலில் உணவுப் பொருட்கள் வந்ததாம். அடடா நிவாரணமாம் என்று கேள்வியுற்று உயிர்த்தன கால்கள். வரிசை கட்டினர் எம் மக்கள். பசித்தவயிற்றுடன் நீண்ட வரிசையில் எங்கும் விழிகளுடன் காத்து நின்றனர். வந்தது குண்டுமழை, பசித்த வயிறுடனே பலியாகினர் பலர். இதுவா உங்கள் நிவாரணம்?. இது மட்டுமா? பசி தோய்ந்த உடலில் உணர்வில்லை. ஆனாலும் நோய்களுக்கோ பஞ்சமில்லை. மருந்தும் இல்லை. மருத்துவமும் இல்லை. அதிலும் வரிசை கட்டினர். அங்கும் வந்தது ஷெல் அம்பு. ஜயனே நோயுற்ற உடலிலும் பாய்ந்தது ஷெல் துண்டு. அங்கும் மாய்ந்தனர் எம்மவர். இவ்வளவு பயங்கர யுத்த முழக்கங்களுக்குள்ளும், பாதுகாப்பிற்கென்று பல கஷ்டப்பட்டு, பதுங்குகுழிகள் அமைத்து அதற்குள்ளே தமது குடும்பத்தோடு பதுங்க, அடடா அதற்குள்ளும் வந்து வெடித்தது பாரிய குண்டுகள். குடும்பம் குடும்பமாக மடிந்தனர். புதைப்பதற்கு சவக்குழிகள் வெட்டும் வேலையும் இல்லை. அதற்குள்ளே சமாதி. சரித்திரமாகிவிட்டார்கள்.

இப்படி எத்தனையோ பதுங்குகுழிகள், எம்மவரின் உடல்களுக்கு புதைகுழியாயின எம் மண்ணில். அத்தனையும் நிஜம். இவர்களும் கொடுத்து வைத்தவர்கள், ஏன் தெரியுமா? சாவிலும் பிரிவில்லை ஒன்றாக மடிந்தார்கள். அதுமட்டுமா? ஜயோ இறுதியில் தெய்வம் தான் துணையென்று பாதுகாப்பு வேண்டி மனநிம்மதிக்காக ஓடி ஆலயத்திற்கு அழுதனர் கதறினர் கண்ணீர் வடித்தனர். என்ன அநியாயம் அங்கும் தான் அடித்தது சாவுமணி. சிதறிய குண்டுகளில் வீழ்ந்தனர் எம்மக்கள். ஜயோ தெய்வங்களும் செத்தனவோ ஷெல்லில் தாக்குதலில் என்று கதறினோம். யார் கேட்டார் எம் அலறலை? யார் துடைத்தனர் எம் கண்ணீரை? பசித்த வயிற்றுக்கு பச்சைத் தண்ணியாவது குடித்தால் கொஞ்சம் பலம் என்று நல்ல தண்ணீருக்கு வரிசையில் நின்றனர். அதிலும் வந்து தெறித்தன குண்டுமழை. அந்தோ பரிதாபம் தாகத்திற்கு தண்ணீர் கூடக் கிடைக்காமல் பிரிந்தன உயிர்கள். உருண்டன தலைகள். விறகு வெட்டக் காட்டுக்குச் சென்றவர், மீன் வாங்க வீதிக்கு வந்தவர், மலம் கழிக்க கழிப்பறையில் இருந்தவர் இப்படியே எத்தனையோ அவசரத்தேவைகளுக்கு வெளியே சென்றவர்கள் மீண்டும் திரும்பி வரவில்லை தம் வீடுகளுக்கு. என்ன மாயம் அவர்களும் மரணித்தவர்கள் பட்டியலில் தான்.

பசியின் கொடுமையால் துடிக்கதுடிக்க மரணித்த மனித உயிர்கள் தான் எத்தனை? யுத்தம் உச்சநிலை. உணவுப்பொருட்கள் எதுவும் இருப்பிலும் இல்லை. வரத்தும் இல்லை. கப்பலில் வரும் கொஞ்சப் பொருட்களை யாருக்கையா பங்கிடுவது? அதைத்தான் போய் வாங்க உயிருக்கு உத்தரவாதம் உண்டா? ஒரு கிலோ அரிசி 1000 ரூபாவிற்கு அதற்கு மேலும் விற்கப்பட்டது. காசு உண்டா? கதியுண்டா? கதறி அழுதனர். பிள்ளையின் பசிக்கொடுமையை எந்தப் பெற்றாரால் சகிக்க முடியும்? வேதனையால் துடித்தன இதயங்கள். ஏன் எமக்கு இந்த அவல நிலை? நாம் தமிழர் என்ற காரணத்தினாலா? இதே நிலை மற்ற இனங்களுக்கு வந்தால் பொறுப்பார்களா? பொறுப்பானவர்கள் வேலியே பயிரை மேய்ந்தது போல் பாதுகாக்க வேண்டியவர்களே பலியாக்கினர். இறுதியில் வன்னிமண்ணில் உரிமைக்காக, மண்ணுக்காகவல்ல, நமது போராட்டம் உயிருக்காக ஆம் இது தான் நிஜம்.

பந்தாடினர் பலரும் எம்மை. எங்கள் கண்கள் தூக்கம் அறிந்து எத்தனை நாட்கள்? பதுங்கு குழியிலும் பதட்டத்துடன் அழுதழுது உலகத்து தெய்வம் எல்லாம் வரம் கேட்ட நாட்கள் அவை. இறுதியில் கரையோரப் பாதுகாப்பு வலயம்(வலை) போட்டார்கள். அங்கே எத்தனை கொத்துக்குண்டுகள் ஷெல்வீச்சுக்கள், விமானக்குண்டுகள், றவுண்ஸ் மழை. இஞ்சிக் கணக்கில் வந்த குண்டுகள் தான் எத்தனை? மாறி மாறி எல்லாத்திசையிலும் வெடித்தன. அதிர்ந்தது எம் தேசம். தொடர்ந்து ஒலித்தது வேவுவிமானம். அது எங்கு தமிழர் உயிருடன் நடமாடுகிறார்கள் என உளவு பார்த்துச் சொல்ல, பெரிய விமானங்கள் கொண்டு வந்தன குண்டுகளை. வீசின கண்மூடித்தனமாக. மாண்டனர் எம்மவர். குண்டுகள் வெடித்த ஓசையும் விமானங்களின் பேரிரைச்சலாலும் வெடித்தன எம் காதுகள். அது மட்டுமா? இதயமும் தாங்க முடியாது மாரடைப்பினால் மரணித்தவர்களும் உண்டு. ஓடவும் இடமில்லை. ஒளிக்கவும் கதியில்லை. வைத்தியசாலைகளில் செத்த உடல்கள் நிரம்பி வழிந்தன. காயப்பட்ட உடல்கள் கணக்கிடமுடியாது. தொடர்ச்சியாக எல்லாப்பக்கங்களிலும் இருந்து காயப்பட்ட, இறந்த உடல்கள் வந்து கொண்டே இருந்தன. ஏன் வைத்தியசாலைக்குள் வெடித்த குண்டுகளில் எத்தனை காயப்பட்ட உடல்கள் உருக்குலைந்து அதற்குள்ளேயே மரணித்த சம்பவங்களும் உண்டு. கால் இல்லை, கையில்லை, கண் இல்லை, ஜயோ இதைவிட இறந்தவர்கள் பாக்கியசாலிகள். ஊனமுடன் வாழ்நாள் முழுவதும் வாழ்வதைப் பார்க்கிலும் இறப்பது நலம் தானே. மொத்தத்தில் எம்முறவுகள் இரத்தத்தில் கிடந்தன. தாயின் செத்த உடலில் பாலூட்டும் குழந்தை என்ன பரிதாபம்? எங்கு நடக்கும் இந்தக் கொடுமை? இறந்த குழந்தையை மடியில் வைத்து பாலூட்டும் தாய். கற்பனை செய்து பார்த்தால் விளங்கும் இந்த ரணம். தாயைத் தேடும் சேய், சேயைத் தேடும் தாய், கணவனைத் தேடும் மனைவி, குடும்ப உறவுகளை மாறி மாறித்தேடும் கண்கள். வீதியில் வீசப்பட்டு கிடக்கும் பிணம். ஜயோ இதுவா எம் உறவு என்று அழுதழுது தேடும் கண்கள் தான் எத்தனை? படித்தவன், பாமரன், ஏழை, பணக்காரன் இறப்பிற்கு வேறுபாடே இல்லை. எங்கள் தோம்புகள் எல்லாம் ஆலயத்தில் தூங்கின. ஆனால் மக்களின் இறந்த உடல்களோ எங்கும் சிதறிக்கிடந்தன. முன்பு எம் ஊரில் ஓர் இறப்பு நடந்தால் துக்கம் பகிர எத்தனையோ பேர் வருவர். பல நாட்கள் இழவு கொண்டாடுவர். ஆனால் இப்போது ஊரே பிணமாகக் கிடந்தது. யார் துக்கத்தை யார் துடைப்பது? யாருக்கு யார் ஆறுதல் கூறுவது? 

எஞ்சினோர் நடைப்பிணங்களாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக சுயநினைவற்றவர்களாக காட்சியளித்தனர்.

நாங்கள் எங்கள் வளமான மண்ணில் காய், கறி, பிஞ்சுகளை பயிர் செய்து எடுத்தோம். கடலிலும் மீன் மச்சங்களாக அள்ளி எடுத்தோம். மரங்களெல்லாம் நல்ல கனிகளையும் குளிர்மையான நிழல்களையும் தந்தன. ஆனால் இப்போ என்ன கொடுமை! அங்கு வெட்டவெட்ட ஆயுதங்கள் வருகுதாம். கடலுக்கு கீழும் நவீன யுத்தக் கருவிகள் இருக்குதாம். இது என்ன விந்தை? அங்கு இப்போ இருக்கவேண்டியது எம்மவரின் எலும்புத் துண்டுகளும் மண்டையோடுகளும் அல்லவா? தப்பி ஓடமுடியாது கடலுடன் சங்கமித்த அப்பாவி மக்களின் எச்சங்கள், இது தானே அங்கு மிச்சம். எங்கள் ஊரே சுடுகாடாகி அதுவுமில்லை. பிணங்கள் அங்கும் இங்கும் சிதறி சிதைந்து துர்நாற்றத்துடன் இலையான்களின் ஒப்பாரியோடு மூடிக்கிடக்கும். இது தான் நிஜம். இதை யாராலும் மறைக்க முடியாது.

இத்தனை சாவுகள், நோவுகள், பசி, பட்டினி, நோய், இழப்புக்கள், யுத்தமுழக்கங்கள், மத்தியிலும் பொல்லாத போராட்டம். விடுதலை, மண்மீட்பு, மக்கள் எழுச்சி, ஏதோ பாடிக்கொண்டு விடுதலை வேண்டுவோர் வீடு வீடாகத் தொடங்கினர், தங்கள் பிடியினை. மனித இரக்கமே இல்லாது அரக்கத்தனமாக "வாருங்கள் குடும்பத்துடன் போராட" என்ன கொடுமை இது. வளர்த்த கடாவே மார்பில் பாய்ந்தது. முதலில் இளம்பிள்ளைகள் எல்லோரும் சேருங்கள். பின் வலுவுள்ள அனைவரும். பின்பு பன்னிரண்டு வயதிலிருந்து. யாரை யார் காப்பாற்றுவது? போராடுவோம் அனைவரும், மக்கள் புரட்சி, என்று எங்கும் ஒலித்தது. இப்படியே வீடுவீடாக, வீதிவீதியாக சந்திசந்தியாக ஏன் அடைக்கலம் தேடி ஆலயத்திற்குள் ஓடினார்கள். துரத்தி துரத்திப் பிடித்தார்கள். ஒழித்து இருந்த இடமெல்லாம் எம் பிள்ளைகளை பிடித்து இழுத்துச் சென்றீர்கள்.

கதறக்கதற பலிக்களத்திற்கு அனுப்பினீர்களே! எத்தனை தாய்மாரின் மடியிலிருந்து அவர்களின் பிள்ளைகளை பலவந்தமாக கொண்டு சென்றீர்கள்? ஆண் பெண் வயது பேறுபாடின்றி அகப்பட்ட அனைவரையும் கதறக்கதற பலியிட கொண்டு சென்றனர். போனவர்கள் போனதுதான். தமது பிள்ளைகள் எங்கே என்று தேடும் உறவுகள் தேடிக்கொண்டே இருக்கின்றனர். இந்தக் கொடிய யுத்தத்தின் மத்தியிலும் ஓலமிட்டு அழுகின்றனர். எதற்கு ஒப்பாரி என்று கேட்டால் பிள்ளைகளைப் பிடிச்சிட்டுப் போட்டாங்க, பிள்ளையைக் காணவில்லை. காலையில் எழுந்தால் இதே ஒப்பாரியுடன் தான் எங்கள் தேசம் விடியும். உங்கள் போராட்டத்திற்கு வீரத்தோடு பிடித்த எங்கள் செல்வங்கள், முத்துக்கள், விலைமதிக்க முடியாத சொத்துக்கள். எம் பிள்ளைச் செல்வங்கள் எங்கே? இனி அவர்களை எங்கள் கையில் உயிருடன் தருவீர்களா? நாங்கள் ஊட்டி ஊட்டி வளர்த்த எம் இளம் சந்ததியை இனி எங்கே நாம் காண்போம்?

எல்லாம் கனவுகள், கற்பனைகள் ஆகிவிட்டது. எதிரியின் ஷெல் மழை ஒருபக்கம். நோய் பசி பட்டினி அது மறுபக்கம். எதிர்காலமே இருளாகி நிற்க, எங்களை மீட்கவந்தவர்களே நீங்களாவது எங்கள் கஸ்ரம், துன்பம், சாவு, நோவு, பசி, பட்டினி இவற்றைப் பார்த்து மனம் இரங்கினீர்களா? ஆம் நீங்களும்தான், அப்பாவி மக்கள் எங்களுக்கு துரோகம் செய்தீர்கள். இறுதியில் எங்கள் உயிரை மட்டுமே கொண்டு ஓட துரத்தி துரத்திச் சுட்டீர்கள். அடித்தீர்கள். பிடித்தீர்கள். எல்லாவற்றிலும் அழிந்தது எம் இனம். இனி யாருக்கு வேண்டும் பொல்லாத விடுதலை சுதந்திரம்?

இறுதியில் கரையோர பாதுகாப்பு வலயத்தின் இறுதி இடங்களான முள்ளிவாய்க்கால், வட்டுவாய்க்கால் பிரதேசங்களில் மக்களின் இறப்புக்கள் கணக்கிட முடியாதளவில் நடந்தது. மக்கள் அப்பகுதிக்குள் பட்ட மரணவேதனை தான் எத்தனை! குழந்தைகள், முதியவர் காயப்பட்டோருடன் பதுங்குகுழியும் இல்லை இடைவிடாது வரும் ஷெல் மழையில் எப்படித் தப்புவது? அதிலும் செத்தவர்களை விட்டு ஓடினர். ஓடும் பாதையில் தான் எத்தனை மனித உடல்கள். இவற்றைக்கடந்து, மிதித்து அதன் மேல் விழுந்து எழுந்து ஓடினோம். அந்த நேரம் எங்கிருந்து வந்ததோ தெரியாது இந்தப்பலம். அல்லது சடலங்களைப் பார்த்து இப்படி நமக்கும் நடக்குமோ என்ற பயமோ தெரியாது. ஷெல் மழைக்குள்ளும் நிலத்தில் படுத்து தவண்டு உருண்டு குனிந்து பதுங்கிப் பாய்கின்றோம். யார் தப்பியது என்ற விபரமும் தெரியாது சிதறி, திக்குத்திக்காக ஓடினோம். வந்தது வட்டுவாகல் பாலம். அக்கரையில் ஆமி. இக்கரையில் போராளிகள். நடுவில் பொதுமக்கள். இரண்டுபக்கத்தாலும் அம்பு மழை மாறி மாறி தொடுக்கின்றனர். நடுவில் எங்கள் உயிர் ஊசலாடியது. நடுவில் ஒரு சிறு அமைதி அதைப்பயன்படுத்தி ஓடினோம் இராணுவத்திடம். மீண்டும் தொடர்ந்தது எறிகணைவீச்சு துப்பாக்கி வேட்டுக்கள். இனி எங்கள் உடலில் தெம்பு இல்லை. ஏதோ இருத்தினார்கள். நடத்தினார்கள். ஏற்றினார்கள். கொண்டுவந்து விட்டார்கள், வவுனியா செட்டிகுளம் நலன்புரி முகாம்களில் பறித்தார்கள். பல பேருந்துகளில் மக்கள் ஏற்றப்பட்டார்கள். ஏதோ அடிக்க கொண்டு போகும் ஆடுமாடுகளைப் போல் ஏற்றி இறக்கினார்கள். நாம் அங்கு வந்து கோலத்தைப் பார்த்தால் என்ன சொல்வது? கற்பனை செய்து பாருங்கள் எம் அவலத்தை. ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் ஒருவராக அங்கும் இங்கும் அழுத கண்களுடன் ஏங்கி நின்றோம். எங்கே என் குடும்பம்? உறவுகள? யாரைக் கேட்பது? பிரிந்த உறவுகளை எங்கே தேடுவது? நாங்களும் குடும்பமாக எம் மண்ணில் ஒன்றாக செத்திருக்கலாம் எனச் சிலர் வாய்விட்டு அழுதனர். எத்தனை துயரங்கள், இழப்புக்கள், பிரிவுகள். ஏதோ நடைப்பிணங்களாக தரப்பட்ட தறப்பாள் கொட்டில்களில் போய் ஒதுங்கினோம்.

ஓர் தரப்பாளை நான்கு தடிக்கு மேல் போட்டு அதற்குள் நிமிர்ந்து நிற்க முடியாது. நாங்கள் அந்த முகாம்களில் இருந்த காலம் கொடூரமான வெயில் காலம். அந்த தரப்பாளுக்கு மேல் நெருப்பு அள்ளிக் கொட்டியது போல் எமது மனமும் உடலும் எரிந்தது. அத்தோடு அந்த வனாந்திரத்தில் காற்று மிகவும் வேகமாக அடிக்கும். எமது கொட்டில்கள் மேலே போவதா கீழே விழுவதா என்று தள்ளாடி நடனம் ஆடும். நிலத்திலுள்ள மண், புழுதி, கரி எல்லாம் எங்கள் மேனி மீது அள்ளி வீசும். கரடு, முரடு, மேடு பள்ளமான நிலத்தில் எங்கள் உடல்கள் நோக கண்ணை மூடினால் நித்திரையில்லை. வருவதோ சண்டைக் காட்சிகள். அதிகாலையில் நாம் கண் திறக்குமுன் இலையான்கள் எமது மேனியைத் தொட்டு எழுப்பும். ஜயோ என்ன கொடுமை. இலையான்களோ ஒவ்வொரு கொட்டில்களிலும் நிரம்பி வழியும். எமது சுகாதாரத்தை என்னவென்று சொல்வது? இது போன்ற நோய்க்காவிகளால் எத்தனை குழந்தைகள் வயிற்றோட்டம் வாந்திபேதி, காய்ச்சல் எமது உடலின் தேசிய நோய்களால் தாக்கப்பட்டார்கள். நோயைத் தாங்குவதற்கு எமது உடலில் தெம்பு இல்லை. மருந்தும் இல்லை. மருத்துவரும் இல்லை. பல்லாயிரம் மக்களுக்கு ஒரு வைத்தியசாலை. அதில் ஒரு வைத்தியர். அவருக்கும் தமிழ் தெரியாது. எங்கள் வருத்தங்களை எப்படிக் கூறுவது? அதிகாலையில் எழுந்து நீண்ட வரிசையில் நோய் கொண்ட உடலோடு நீண்ட நேரம் நின்றாலும் மருந்து எடுக்க முடியாது. இப்படியே எம்மினம் மீண்டும் அழிந்தது. அந்த தற்காலிக வைத்தியசாலையைப் பார்த்தால் கடவுளே உனக்கு கண் இல்லையா? என்று கதறத்தான் மனம் ஏங்கும். அந்த வரிசையில் பலர் மயங்கி விழுவர். விழுந்தாலும் கேட்பார், இரங்குவார் யாருமில்லை. ஒவ்வொரு நலன்புரி முகாம்களிலும் 50க்கு மேற்பட்ட யுனிற்றுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு யுனிற்றிலும் கிட்டத்தட்ட 1500 குடும்பங்களுக்கான கொட்டில்கள் போடப்பட்டிருந்தன. 10-20 மீற்றர் இடைவெளியில் ஒவ்வொரு கொட்டில்களும் நெருக்கமான போடப்பட்டிருந்தன. அந்தக் கொட்டில்களில் நெருப்பு மூட்ட முடியாது.

எல்லோருக்கும் சமைத்த உணவு. காலையில் கஞ்சி அல்லது அவியாத கடலை. மதியம் தண்ணீரில் அவிந்தும் அவியாத பருப்பும், கத்தரிக்காய் கறியும். இரவு அவியாத ஏதோ ஒன்று. இதற்குள் இலையான்கள் தான் அதிகம். 1500 குடும்பங்களுக்கு ஒரு சமையல் என்றால் யார் தான் என்ன செய்ய முடியும்?. அந்த அவியாத, சுத்தமற்ற உணவை போசாக்கற்ற உணவை சாப்பிட்டவுடன் வாந்திபேதி, வயிற்றோட்டம், சத்தி. எங்களுக்கு தரப்பட்ட உணவு பெரும்பாலும் குப்பைத் தொட்டிக்குள் நிரம்பி அதற்குள் இலையான்களும் புழுக்களும் நிரம்பி தூநாற்றம் வீசும். அது ஒருபுறமிருக்க குடிப்பதற்கு தண்ணீரும் இல்லை. மதியம் ஒரு மணியளவில் தண்ணீர் பவுசர் வரும். வந்தால் ஒரு குடும்பத்துக்கு 20 அல்லது 30 லீற்றர் தண்ணீர் மட்டும் தான். அதில் தான் குடிப்பது, குளிப்பது, உடைகள் கழுவுவது, பாத்திரம் கழுவுவது, ஏன் எங்கள் எல்லாத் தேவைகளும் அதற்குள்ளே அடங்கும். அதிலும் குடும்பத்துடன் வயிற்றோட்டம் என்றால் எங்கள் கதை சோகம் தான்.

இதற்கிடையில் அனைத்தையும் இழந்தோம். எங்கள் குழந்தைகளின் கல்வியையும் இழப்பதா என்று தள்ளாடியது எம்மனங்கள். ஏதோ ஓலைக் கொட்டில்கள் போடப்பட்டு பள்ளிக்கூடமாம் இங்கு படிப்பாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. காலையில் தண்ணீர் இல்லை. சாப்பாடு இல்லை. எப்படிப் படிப்பது? காலைக்கடனை முடிக்காமல், முகம் கழுவாமல், சாப்பாடு உண்ணாமல், ஏன் உடுக்கச் சுத்தமான உடையில்லாமல், கையில் படிக்க புத்தகம் கொப்பி ஒன்றும் இல்லை. திறந்த கொட்டில்களில் வெறும் தரையில் அமர்ந்திருக்கின்றனர். பிள்ளைகளின் முகங்களில் சோகங்கள் ஏக்கங்கள். மிஞ்சிய பிஞ்சுகளின் மனங்களில் எத்தனை ரணங்கள். எப்படிக் கற்பது? எமது தாயை, தந்தையை, உடன்பிறப்புக்களை, சகபாடிகளை இழந்த பிள்ளைகள் தான் எத்தனை? அதிலும் உடலில் ஷெல் காயங்களுடன் ஷெல்துண்டுகளுடன் இருக்க முடியாது வேதனைப்படும் பிள்ளைகளின் காட்சியைத்தான் அங்கு காண முடியும். அழுக்கான உடைகளுடன் உடலெல்லாம் துர்நாற்றம் வீச கண்களில் ஏக்கங்களுடன் இருப்பார்கள். இருந்தும் "ரீச்சர் இருக்கமுடியல்ல என்ர ஷெல்பட்ட காயம் நோகுது, ஷெல் துண்டு இருக்குது, பசிக்குது, காய்ச்சல், வயிற்றோட்டம், கண்வருத்தம் கொப்புளிப்பான்" என்று அவர்களின் சோகக்கதைகளைக் கேட்டால் நெஞ்சு வெடிக்கும் போல் இருக்கும். இவர்களுக்கு இந்நிலையில் ஆறுதல் ஊட்டுவதா? அல்லது கல்வி ஊட்டுவதா? இதற்கிடையில் எம் ஆசிரியர்கள் நடைப்பிணங்களாக வருவார்கள். ஒவ்வொருவருக்கும் பலபல சோகங்கள். பிள்ளையை இழந்த சோகம், கணவனைப் பறிகொடுத்த வேதனை, சகோதர, சகோதரி, நண்பர்களைப் பிரிந்த கவலை எப்படிக் கற்பிப்பது? மாற்றிப் போட உடை இல்லை. முகம் கழுவத் தண்ணீர் இல்லை. அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாது எப்படிக் கற்பிப்பது? சாவு வீட்டில் வந்து இருப்பது போல் சோகம் பொங்க இருப்பார்கள். சிலர் அழுவார்கள். சிலர் மனநிலை பாதித்தவர்கள் போல் இருப்பார்கள். எப்படிப் கற்பிப்பது? எப்படிக் கற்பது? எங்களின் பிள்ளைகளின் கல்வி கேள்விக்குறியாகியது. எங்களின் பிள்ளைகளின் எதிர்காலம் ஜயோ தமிழ் இனத்தை வேரறுத்துவிட்டனர்.

நான்குபக்கமும் முட்கம்பிகள் அடிக்கப்பட்டு திறந்தவெளிச் சிறைச்சாலைக்குள் இராணுவம் காவல் செய்ய நாம் கூண்டில் அடைக்கப்பட்ட பறவைகள் போல் வாழ்ந்தோம். வெளி உலகத்துடன் எதுவித தொடர்பும் கொள்ள முடியாது. குறிப்பாக தொலைபேசி, பத்திரிகை, வானொலி எதுவுமே நாம் பயன்படுத்த முடியாது. பார்க்க கேட்க முடியாது. எல்லாம் தணிக்கை. இராணுவம் எங்கள் கொட்டில்களைச் சுற்றி எந்த நேரமும் காணப்படுவர். அவர்களின் கெடுபிடிகள் மிகக் கொடுமை. புலிகள் எனப் பெயர் சூட்டி பல அப்பாவித் தமிழர்களை நாளுக்கு நாள் பிடித்துக்கொண்டே சென்றனர். ஒருபகுதி இராணுவம் தடை செய்த பொருட்களை (மதுபானம், கைபேசி) கறுப்புச்சந்தை, இலஞ்சம் என விற்க, மறுபகுதி அப்பாவி மக்களின் கொட்டில்களில் சோதனை செய்து அவற்றைப் பிடித்து அடித்து, கைது செய்து, வீதிவீதியாக இழுத்து இழுத்துச் சென்றனர். இங்கும் சத்தம் இல்லாத ஒரு யுத்தம் நடந்தது. சுகாதாரச் சீர்கேடுகள், கலாச்சார சீரழிவுகள். எனப் பலவகையிலும் எம் மக்கள் அழிக்கப்பட்டனர். பட்டகாலிலே படும் கெட்ட குடியே கெடும்". இது எமது வாழ்வில் நிஜம். எவராலும் மறுக்க முடியாது.

வன்னியில் இருந்து அகதிகளாக அநாதைகளாக அனைத்தையும் இழந்து வந்த மக்களை கதிர்காமர், ஆனந்தக் குமாரசவாமி, இராமநாதன், அருணாச்சலம், வலயம் நான்கு, ஆறு, ஆண்டியாப் புளியங்குளம், இப்படிப் பல முகாம்களில் அடைத்து வைத்திருந்தார்கள். அப்பகுதிகள் மனித நடமாட்டம், குடிகளே அற்ற பெரும் வனாந்திரங்கள். பெரும் காடுகளை அழித்து எரித்து எமது முகாம்கள் அமைக்கப்பட்டன. வன்னியிலிருந்து கடும் போரிடையே வெளியேறிய மக்கள் குடும்பங்கள் குலைந்து, சிதைந்து பல முகாம்களிலும் பிரித்துவிடப்பட்டனர். இதனால் தமது உறவுகள் உயிருடன் இருக்கின்றனரா என்று அறிய முடியாது அலறினர். இந்நிலையில் தமது உறவுகளை குடும்பங்களைத் தேடி ஒரு முகாமிலிருந்து மறு முகாமுக்கு திருட்டுத்தனமாக சென்ற மக்கள் பலர் இராணுவத்தால் பிடிக்கப்பட்டு, நீ புலி எனப் பட்டம் சூட்டப்பட்டு கடுஞ் சித்திரவதைகள் செய்யப்பட்டனர். முட்டுக்காலில் கடும் கல்வீதியில் நீண்ட தூரம் செல்லல், மரத்தில் கட்டி அடித்தல், நிர்வாணமாகவிட்டு அடித்தல், தடிகளால் துப்பாக்கிகளால் பலமாகத் தாக்குதல், மீண்டும் மீண்டும் உயரமான முட்கம்பிகள் மேலால் பலமுறை பாய்தல், பூருதல், நீண்டநேரம வெய்யிலில் முட்டுக்காலில் இருத்தல் இப்படிச் சொல்லொணாச் சித்திரவதைகளைச் செய்தனர். அது மட்டுமா? எமது பிள்ளைச் செல்வங்களை, கணவனை, மனைவியை, சகோதரனை, சகோதரியை புலி என்ற பேரில் கைது செய்து தடைமுகாம்களுக்கு கொண்டு போய்ச் சேர்த்தனர். ஒருநாள் புலிக்கு உதவினாலும் வந்து பதியுங்கள். இல்லையென்றால் அடுத்த கட்டம் விபரீதம் என பலவாறு அச்சுறுத்தி பல்லாயிரம் பேரை "புலிகள்" என்ற பேரில் கொண்டு சென்றனர். இவ்வாறு கொண்டு சென்ற உறவுகளுக்கு என்ன நடந்தது? எதுவித தொடர்பும் இன்றித் தவிக்கும் உள்ளங்கள் அங்கு எத்தனை? எமது உறவுகளை எண்ணி, ஏங்கி கண்ணீருடன் தினம் தினம் சாகும் எம் உறவுகள் தான் எத்தனை? தடைமுகாமில் எல்லாம் தணிக்கை. எத்தனை ரணங்கள். எதுவரை தாங்குவது? இப்படி இந்த வேதனையை எந்த இனமாவது தாங்குமா?

எமது வாழ்க்கையில் அனைத்தையும் இழந்து துடிக்கும் எம் இனமக்களுக்கு விடுதலை அளிப்பார் யார்? நடைப்பிணங்களாக, ஊனமுடன், மனமுடைந்து வாழும் எமது வாழ்வில் வசந்தம் வீசுமா?

இழந்த எம் உறவுகள் உணர்வுகள் மீண்டும் வருமா? எமது சொந்த ஊரில் சொந்தவீட்டில் சுதந்திரக் காற்றை சுவாசிப்போமா? நாம் முன்பு வாழ்ந்த நிம்மதியான, மகிழ்வான வாழ்வு எப்போது வரும்? விடிவிற்காய், விடியலுக்காய் ஏங்கி நிற்கின்றோம்.