மற்றொரு புலி சரணடைவு பற்றிய உண்மையையும், அவர்கள் எங்கே என்ற கேள்வியையும் மகிந்த பேரினவாத அரசின் முன் எழுப்பியுள்ளது. "இங்கு ஒரு சின்ன ஈ அசைந்தால் கூட அது அவருக்குத் (ஜனாதிபதிக்கு) தெரிந்திருக்கும்" என்று, தன் கணவன் எங்கே என்று கொலைகார மாண்பு மிகு ஜனாதிபதியிடம் ஆனந்தி சசிகரன் கேட்டிருக்கின்றார்.

மகிந்த அரசு தங்கள் போர்க்குற்றங்களை மூடிமறைக்கவும் சர்வதேசத்தை ஏய்க்கவும், ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது. தாங்கள் சரணடைந்தவர்களைக் கொல்லவில்லை என்பதும், அவர்கள் யாரும் இந்த நாட்டில் காணாமல் போய் விடவில்லை என்று சொல்கின்ற புரட்டை நிலைநிறுத்தும் நாடகங்கள் தான் விசாரணைகள் முதல் ஆணையங்கள் வரையான கூத்துக்கள்.

புலிகள் தான் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு தடை என்றவர்கள், புலிகளை அழித்த பின் தான் தீர்வு என்றவர்கள், அவையெல்லம் பேரினவாத தொடர் நாடகங்கள் என்பதை மறுபடியும் இன்று நிறுவியுள்ளனர். தமிழ்மக்கள் தான் இதற்கு தடை என்பதை பேரினவாத நடத்தைகள் மூலம் நிறுவுகின்றனர். இன்று தமிழ்மக்களின் பாரம்பரிய பிரதேசத்தை இல்லாததாக்கும் வன்முறைகளை ஏவியுள்ளனர். இப்படி தமிழ்மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காண்கின்றனர். இந்த நிலையில், அதே பாணியில் அமைக்கப்ப்பட்டது தான் "படிப்பினை மற்றும் நல்லிணக்க ஆணையகம்." இதன் மூலம் தாங்கள் குற்றங்கள் எதுவும் செய்யவில்லை என்று சொல்வதே, பேரினவாத நோக்கமாகும்.

கண்காணிப்பு, கைது, வெள்ளை வான் கடத்தல் தொடரும் சூழலில், ஆணையகத்தின் முன்  சாட்சியமளிக்க கோருகின்றது "ஜனநாயகம்". அரசுக்கு எதிராக சாட்சியமளித்தால், பின் விளைவுகள் எதிர்பார்த்து துணிய வேண்டிய அச்சம், அவலங்கள் கூடிய சுப முகூர்த்தத்தில் தான், புலிகளின் திருமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஆனந்தி சசிகரன் சாட்சியமளித்தார். இந்தச் சாட்சியங்கள் எதையும் சுதந்திரமான ஊடகங்கள் பார்வையிடாத வண்ணம் தடையிட்டவர்கள், சுதந்திரம் இழந்த கொலை அச்சுறுத்தலுக்குள் இயங்கும் ஊடகங்கள் மட்டும் விசாரணைகளை பார்க்க அனுமதிக்கப்பட்டனர். மக்களின் சாட்சியங்களை சுதந்திர ஊடகங்கள் தகவல் சேகரிப்பதை தடுத்தவர்கள், தமக்கு ஊதுகுழலாக இயங்க கூடியவர்களை மட்டும் அனுமதித்தனர்.

இப்படி ஊடக ஜனநாயகம் இருக்க, மக்கள் நடந்த உண்மையின் சாட்சியாக இருக்கின்றனர். அரசு - புலி என்று இரு பக்கக் குற்றங்கள் பற்றியும், இறுதியில் என்ன நடந்தது என்பதை அரசும் அல்ல, புலிகளுமல்ல, மக்கள் தான் சொல்ல வேண்டும். இந்த உண்மைகள் வெளிவராத வண்ணம், அவை தடுக்கப்படுகின்றது.

"படிப்பினை மற்றும் நல்லிணக்க ஆணையகம்" முன், மீள யுத்தத்தை தொடக்கி வழி நடத்திய  மாவிலாறு எழிலன் என்று அடையாளம் காணப்பட்டவரின் மனைவியான ஆனந்தி சசிகரன் என்ன சாட்சியத்தை அளித்தார் என்பது வெளி உலகுக்கு தெரியாது. ஆனால் அவரை பிபிசி தமிழ் சேவை பேட்டி கண்ட போது இதில் பல உண்மைகள் வெளிவந்துள்ளது.

"எனது கண்ணுக்கு முன்னாலேயே முல்லைத்தீவில் அவர் சரணடைந்தார்" தன் கணவன் எழிலன் எங்கே என்ற கேள்வி மட்டுமின்றி, மக்களுடன் மக்களோடு மக்களாக 18ம் திகதி வெளியேறிய போது நடந்த மற்றொரு சரணடைவு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. "ஆங்கில மொழிக்கல்லூரி அதிபர் பாதர் பிரான்ஸிஸ் தலைமையில்" நடந்த இந்தச் சரணடைவை, முதல் முதலில் அம்பலத்துக்கு கொண்டு வந்துள்ளார். இது "ஆமியின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சனம் எல்லாம் வந்த பிற்பாடு முல்லைத்தீவு வட்டுவாகையைத் தாண்டி ஒரு இடத்தில் ‐ அது முல்லைத்தீவுப் பிரதேசம் தான் ‐ அதில் தான் அவர்கள் எல்லோருமாய் அணிதிரண்டு போய் சரணடைந்தார்கள்." என்கின்றார் எழிலனின் மனைவி ஆனந்தி சசிகரன். இதை தன் கண்ணால் கண்டதாகவும், தானும் அவர்களுடன் செல்ல முற்பட்டதாகவும் கூறுகின்றார். இதன் போது நூற்றுக்கணக்கான முக்கிய புலிகள் சரணடைந்ததையும்,  அவாகளுக்கு என்ன நடந்தது என்பதையும் அம்பலத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

இந்தச் சரணடைவின் போது "அரசியல் துறைத் துணைப் பொறுப்பாளர் தங்கன். நிர்வாகத்துறைப் பொறுப்பாளர் பூவண்ணன். பிரியன், இளம்பரிதி, விளையாட்டுத் துறைப்பொறுப்பாளர் ராஜாவும் அவரோடு சேர்ந்த மூன்று பிள்ளைகள், லோறன்ஸ் திலகர், யோகி, குட்டி, தீபன், பாபு ஆகியோருடைய பெயர்களைத் தான் தெரியும். ஏனையவர்களைத் தெரியும். ஆனால், அவர்களின் பெயர் தெரியாது." என்றார். இது யுத்தத்தின் இறுதியில் நடந்த உண்மைகளை மேலும் வெளிச்சத்துக்கு கொண்டு வருகின்றது. 

இன்று இவர்கள் எங்கே என்பது தான் அவரின் கேள்வி. சமூகத்தால் கைவிடப்பட்ட நிலையில், இவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி அறிதல் இலங்கையில் உயிர் வாழ்வதற்கு எற்புடைய ஒரு செயல் அல்ல என்ற நிலையில், குடும்ப உறுப்பினர்கள் மட்டும் அவர்களைத் தேடுகின்றனர். இப்படி தேடுவது கூட ஆபத்தானது. உண்மைகளைத் தெரிந்து தேடுபவர்கள், காணாமல் போய்விடுவார்கள் என்பது இலங்கையில் உள்ள அரசியல் எதார்த்தம். மகிந்த ஆட்சி இப்படித்தான் முடிசூடியுள்ளது.

இதை மீறியும் ஆனந்தி சசிகரனின் பேட்டி, எதற்காகவோ கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக வெளிவந்துள்ளது. இந்த அபாயகரமான நிலையை சுட்டிக்காட்டி "இதனால் பின்விளைவுகள் ஏதாவது வரும் என்று அச்சமடைகிறீர்களா?" என்று கேட்ட போது
 
"இல்லை இல்லை எனக்கு வந்தாலும் பிரச்சினையில்லை. நான் பயப்படவில்லை. வந்தால் எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். வாழ வேண்டும் என்ற விருப்பத்துடன் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை என இன்றைக்கும் ஆணைக்குழுவுக்கு முன்னிலையிலும் சொன்னேன்." என்கின்றார். இப்படி ஒரு நிலையில் தான், மகிந்த அரசின்  உண்மை முகத்தை துணிந்து சொல்லமுடிகின்றது. "வாழ வேண்டும" என்ற ஆசை கடந்து "எதையும் எதிர்கொள்ளத் தயாராக" உள்ளேன் என்று துணிவுடன் அவர் இதை அம்பலமாகியுள்ளார்.    

அதேநேரம் "அவருக்கு ஒன்றும் நடந்திருக்க வாய்ப்பில்லை." என்று கூறும் ஆனந்தி சசிகரன் அவருக்கு என்ன நடந்தது என்பதை கூறும் போது "இது இலங்கை ஜனாதிபதிக்குத் தெரியாத ஒன்றல்ல. இங்கு ஒரு சின்ன ஈ அசைந்தால் கூட அது அவருக்குத் தெரிந்திருக்கும். ஆனபடியால் அவரை எங்கோ மறைத்து வைத்திருக்கிறார்கள் என்று தான் நான் நினைக்கிறேன்." என்கின்றார். இது அரசின் பொய்முகத்தை, அதன் வக்கிரத்தை துல்லியமாக பறைசாற்றியுள்ளது. ஆம் இந்த அரசு இதன் பின்னணியில் என்ன செய்கின்றது. தங்கள் சிறையில் உள்ளவர்கள் விபரத்தை பகிரங்கமாக முன் வைக்க மறுக்கின்றது. இதன் மூலம் சரணடைந்தவர்களில் கொல்லபட்டவர்கள் யார் என்ற உண்மை வெளிவந்து விடும் என்பதும், தொடர்ந்து கொல்வதற்குரிய நபர்களை இனம் காட்டாமல் இருப்பததற்குமான, இரகசியமான தொடர் படுகொலைகளை இந்த அரச தொடர்ந்து செய்கின்றது. இப்படிப்பட்ட ஜனநாயகத்தின் பின்புலத்தில்தான், மகிந்த முடிசூடியுள்ளார்.     

ஒரு சுதந்திரமான சர்வதேச விசாரணை இலங்கையில் நடக்கும் என்றால், கொடுமைகளும் கொடூரங்களும் செ;யத குற்றக் கும்பல்கள் மக்களை ஆண்டதும் ஆள்வதும் தெரியவரும்.

பிபிசி பேட்டியில் புலிகளின் போர்க்குற்றம் பற்றிய கேள்வியை ஆனந்தி சசிகரனிடம் எழுப்புகின்றனர். "அதேநேரத்தில் நீங்கள் போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்தீர்கள். அந்த இறுதிநாட்களில் விடுதலைப் புலிகள் பல அத்துமீறல்களைச் செய்தார்கள். சிறார்களைப் படையில் சேர்த்தார்கள். போர்ப்பிரதேசத்தில் இருந்து வெளியேறியவர்களைச் சுட்டார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் எல்லாம் வந்து கொண்டிருந்தது. இன்றைக்கு நீங்கள் சாட்சியம் அளித்த போது அதுபற்றி ஏதாவது கேட்டார்களா?" என்று பிபிசி கேட்ட போது, அவர் ஒரு புலியாகவே பதிலளித்தார்.

"இல்லை. அதுபற்றி எதுவும் கேட்கவில்லை. அந்த நேரத்தில் ஒரு திறந்த வெளி பங்கருக்குள் தான் நாங்கள் இருந்தோம். விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்துக் கொண்டு நாங்கள் இருக்கவில்லை. முன்னர் எல்லோரும் விடுதலைப் புலிகளை ஆதரித்துக் கொண்டு இருந்தார்கள். இப்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் வந்து விட்டால் இராணுவத்துக்குச் சார்பான கதைகளைக் கூறிக்கொண்டு தான் இருக்க வேண்டும்." என்றார்.

இப்படி இவரின் சாட்சியம் உண்மையின் ஒரு பக்கத்தை தன் நலன் சார்ந்த எல்லைக்குள் குறுக்கி சொல்லி இருப்பதால் தான், இப்படி பலர் இயங்குவதாலும் தான், அரசு தன்னை நியாயப்படுத்தி கொள்கின்றது. போர்க் குற்றங்களில் அரசு மற்றும் புலி என இரண்டுக்கும் எதிரான உண்மையான சாட்சியங்கள் தான், அரசை தனிமைப்படுத்தி அவர்களைக் குற்றவாளியாக்கும். இது போன்ற சாட்சியங்கள் ஒரு பக்க உண்மைகளைப் பேசும் போது, சர்வதேச சமூகத்தில் முன் சாட்சியம் பலவீனமடைகின்றது. அதை அரசு பொய் என்று சொல்ல முடியும்.

ஆனந்தி சசிகரன் "முன்னர் எல்லோரும் விடுதலைப் புலிகளை ஆதரித்துக் கொண்டு இருந்தார்கள். இப்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் வந்து விட்டால் இராணுவத்துக்குச் சார்பான கதைகளைக் கூறிக்கொண்டு தான் இருக்க வேண்டும்." என்பதன் மூலம், மக்கள் முன்பு புலிக்கு "சார்பான கதைகளைக் கூறிக்கொண்டு தான் இருக்க வேண்டும்." என்ற உண்மையை அவரை அறியாமல் வெளிப்படுத்தியுள்ளார். சில உண்மைகளை கூறுபவர்கள், தங்கள் பக்கத்தில் நடந்த கடந்தகால உண்மைகளை  மக்கள் வெளிப்படுத்தும் போது அதை ஜீரணிக்க முடியாதுள்ளனர். மககள் இயல்பைக் குற்றம்சாட்டுகின்றனர்.

"மாவிலாறு எழிலன் என்று இனம்கண்டு இராணுவத்தினர் அழைத்துச் சென்றார்கள் என்று தமிழ் சமூகத்திடமே ஒரு அபிப்பிராயம் இருக்கிறது. இந்தப் போர் ஆரம்பித்ததற்கே காரணம் மாவிலாறு போர் நடவடிக்கை தான் காரணமென்றும் அதை எழிலன் சரியாகக் கையாளவில்லை என்றும் அதனால் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்த போதோ அல்லது இப்போதோ ஏதாவது அழுத்தங்கள் வருகிறதா?" என்று பிபிசி  கேட்ட போது

"எங்களுடைய சமூகத்தைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். நான் 40 வருடம் அதோடு இருந்தனான். மாவிலாறை பூட்டுவது என்கிற முடிவு எழிலன் தன்னிச்சையாக எடுத்த முடிவில்லைத் தானே. அதுக்கென்று ஒரு மத்தியகுழு இருக்கிறது. அங்கு கதைத்துப் பேசி எடுத்த முடிவு அது. மாவிலாறைப் பூட்டியதால் கையாள முடியாமற் போனது என்பது பொய்க்கதை. அதைப் பூட்டியதால் வரும் பிரச்சினைகள் குறித்து அவர்களுடைய அமைப்பு பொறுப்பாளர்கள் தீர்மானித்திருக்க வேண்டிய ஒன்று. நல்லது நடந்தால் நல்லதாகச் சொல்வதும் அதால் ஏதாவது சிறிது தவறு நடந்தாலும் கெட்டதாகச் சொல்வதும் சமூகத்தின் இயல்பு தானே?" என்கின்றார்.

இப்படி சமூகத்தைப் பற்றிய அவரின் சுயவாக்கு மூலம். மக்களை இப்படித்தான் புலிகள் வழிநடத்தியிருந்தனர் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. "நல்லது நடந்தால் நல்லதாகச் சொல்வதும் அதால் ஏதாவது சிறிது தவறு நடந்தாலும் கெட்டதாகச் சொல்வதும் சமூகத்தின் இயல்பு தானே" என்பது மிகத் தவறானது. இது சமூகத்தின் இயல்பல்ல. சமூகம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது, புலிகளின் அரசியல் தீர்மானித்தது. சமூகம் இந்தச் செயலில்  ஈடுபடவில்லை என்பது இதன் சாரமாகும். சமூகத்தின் பெயரில் புலிகள் செய்தனர். இதனால் சமூகம் அதை பொறுப்பேற்காது. சமூகத்தை பார்வையாளராக்கி விட்டு கூத்தாடிய புலிகள் பற்றி, சமூகத்தின் கருத்தும் மதிப்பீடும் இதுதான். இதுதான் உண்மை.      
 
"கடைசி நேரத்தில் என்ன நடந்தது?" என்ற கேள்விக்கு ஆனந்தி சசிகரன் "கடைசி நேரத்தில் ஏதாவது ஒரு நாட்டில் இருந்து எங்களுக்கு ஏதாவது ஒரு தீர்வு கிடைக்கும். இவ்வளவு கஸ்டப்பட்டதற்கும் அவலப்பட்டதற்கும் ஏதோ ஒரு விடிவு வரும். ஒரு நல்ல மத்தயஸ்தினூடாக ஏதாவது  வரும் என்று தான் நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் ஒன்றும் வரவில்லை.  எல்லாமே கை மீறிப் போய் நடைப்பிணங்களாகத் தான் இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் நாம் வந்தோம்." என்கின்றார்.

இப்படி "ஏதாவது ஒரு நாட்டில்" இருந்து எதாவது கிடைக்கும் என்று நம்பி செயல்பட்ட முட்டாள்கள் பற்றிய உண்மை இது. அதற்காகவே மக்களின் பிணத்தை உற்பத்தி செய்த, புலிகளின் நடத்தையை இந்த எதிர்பார்ப்பு தெளிவாக்கியுள்ளது. புலிகள் அழிவதால் தலையீடு நடக்காது, மக்கள் அழிவதால் "ஏதாவது ஒரு நாட்டின்" தலையீடு நடக்கும் என்று கருதி  மக்களை புலிகள் பலிகொடுத்தனர். இது இங்கு துல்லியமான புலியின் இறுதி அரசியலாக அம்பலமாகின்றது.

பி.இரயாகரன்
19.09.2010