அரசியல் ரீதியாக நீர்த்து போகச் செய்ய பல தில்லுமுல்லுகள். திசை திருப்பல்கள். மக்களின் அவலத்தை பார் என்கின்றனர். குகநாதன் பற்றிக் கதை சொல்லுகின்றனர். முதலில் இதில் இரயாகரன் பற்றி சொன்னவர்கள் தான், இப்போது இப்படிக் கூறுகின்றனர். 

இதன் மூலம் புதிதாகச் சொல்லும் அரசியல் உள்ளடக்கம் என்ன? அருள் சகோதரர்கள் செய்தது சரி என்பதே. இதனால் நாவலன்-அசோக் ஈடுபட்டதும் சரியாகிவிடுகின்றது. இதை மூடிமறைக்க, முடிவற்ற திசைதிருப்பல்கள். இதில் சம்பந்தப்பட்டவர்கள் முதல் அரசியல் பச்சோந்திகள் வரை இந்த விடையத்தை அமுக்கிவிட முனைகின்றனர்.

இதுவா இன்று நாட்டில் பிரச்சனை என்கின்றனர்? ஏகாதிபத்திய தலையீடு முதல் தமிழ் மக்களின் அன்றாட அவலங்கள் வரை நிறைந்து போன பொதுச் சூழலில், அதைப் பற்றி கதையுங்கள் என்கின்றனர். அவற்றைவிடுத்து இதைப்பற்றி கதைக்கத் தேவையில்லை என்கின்றனர். இதனால் இது மிக முக்கியமான அரசியல் விடையமாகின்றது. இதன் மூலம் அவர்கள் என்ன சொல்ல விரும்புகின்றனர். தங்கள் அரசியல் அசிங்கங்களை மக்கள் முன் மூடிமறைத்து, மக்களை தம்முடன் அரசியல் விபச்சாரம் செய்யக் கூப்பிடுகின்றனர். மக்கள் மேல் அக்கறை இருந்தால், இதை விமர்சனம் சுயவிமர்சனம் செய்து இதை முடிவுக்கு கொண்டுவந்திருப்பார்கள். இதை அவர்கள் தவறு இல்லை என்பதால், நாம் தொடர்ந்தும் இதை அம்பலப்படுத்த வேண்டி ஏற்படுகின்றது.

முதலில் இரயா-நாவலன் தனிப்பட்ட பிரச்சனை என்றவர்கள், தனிநபர் தவறுகளை தூக்கி விமர்சிப்பதாக கூறியவர்கள், இதை அரசியல் நீக்கம் செய்ய முனைகின்றனர். இதைக் கண்டு கொள்ளாது இருக்கும், சூழச்சியான அரசியல் திசை திருப்பல்களை செய்ய முனைகின்றனர்.

இதில் ஒன்று குகநாதன் பற்றிய குறிப்பாக்கி, அதைப் பேச முற்படுகின்றனர். குகநாதன்  பணத்தை ஏமாற்றினார் என்று மூச்சிரைக்கக் கூறும் இந்தக் கட்டைப்பஞ்சாயத்து செய்த மார்க்சிய  கனவான்கள், புலிகள் அதில் பெரும் பகுதியை அபகரித்ததை வசதியாக மறந்து மறைத்துவிடுகின்றனர். எந்தத் தேசியத்தின் பெயரால் அருள் சகோதரர்கள் இந்தக் கடத்தல் கட்டைப் பஞ்சாயத்தை நடத்தினரோ, அதே தேசியத்தின் பெயரால் புலிகள் குகநாதனை மொட்டை அடித்தனர். இதனால் பணத்தை இழந்தவர்கள் பலர். இதற்கு உடந்தையாக இருந்தவர் குகநாதன் மட்டுமல்ல, நீங்களும் தான். நீங்கள் இல்லாத குகநாதனா? 

இப்படி இருக்க உங்கள் தமிழ் தேசிய அரசியல், புலித் தேசியம் போல் நீங்கள் சம்பாதிப்பதை அடிப்படையாக கொண்டது. இது எந்தக் கேள்விக்கும் அப்பாற்பட்டதாக இருந்தது. இதை முதல் நாம் எழுதிய போது, நாவலன் மார்க்சியம் பேசியபடி இதில் ஈடுபட்டதை மட்டும் மையப்படுத்தி குறிபாக்கினோம். இது நாவலன் பேசும் அரசியல் ரீதியாக தவறானது என்ற அடிப்படையில், நாம் இதை முன்வைத்தோம். இதை இரயாகரனின் தனிப்பட்ட தாக்குதல் என்றும், இதில் தான் தலையிடவில்லை என்றும் பல சுயமுரண்பாடுகளுடன் நாவலன் மறுத்தார். பொதுவில் இதை அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட நாவலன் இரயாகரன் விவகாரமாக காட்டி தாக்குதலை நடத்தினர்.

பல சுயமுரண்பாடுகளுடன் நாவலன் இதில் தான் தலையிடவில்லை என்று கூறியபோது,  இதில் ஈடுபடுவது அரசியல் ரீதியாக தவறானது என்ற அடிப்படையில் தான் நாவலன் இதைக் கூறுகின்றார் என்று நாம் நம்பினோம். ஆனால் தேசம்நெற் இதில் தலையிட்டவுடன், அரசியல் ரீதியாக தவறு அற்றது என்ற அவர்கள் நிலையை அம்பலமாக்கியது. தேசம்நெற்   தலையிட்டவுடன் இது இரயாகரனின் தனிப்பட்ட தாக்குதல் என்று கூறியும், இரயா-நாவலன் பிரச்சனை என்ற திசைதிருப்பிய கூத்து அரசியல் ரீதியாகவும் அம்பலமாகிப் போனது.

இந்த நிலையில் இதில் அருள் சகோதரர்கள் ஈடுபட்டது சரி என்ற நிலைக்கு, இனியொரு தன் நிலையை அரசியல் ரீதியாக முன்னனெடுத்துள்ளது அம்பலமானது..

இந்த வகையில் இந்த விவகாரத்தில்

1. இதில் ஈடுபட்ட நாவலன் உள்ளிட்ட இனியொரு தன் தவறை ஏற்றுக்கொள்ளவில்லை.

2. நாவலன் இது தவறான நடவடிக்கை  என்று கருதினால், அதை விமர்சனம் செய்து அதை ஏற்றுக்கொள்ள மறுத்தால் அருள் சகோதரர்களை இனியொருவில் இருந்து வெளியேற்றி இருக்க  வேண்டும். இதவும் நடக்கவில்லை.

3. இவை எதையும் செய்யாத நாவலனை உறுப்பினராகக் கொண்ட புதிய திசைகள், அவரை வெளியேற்றி தங்கள் நிலைப்பாட்டை தெளிவாக்கியிருக்க வேண்டும்;.

இவை அனைத்தும் இந்த நடத்தைகளை அரசியல் ரீதியாக நியாயப்படுத்துகின்றது, அதை பாதுகாக்கின்றது. இந்த வகையில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஏன்?     
                  
நாளை சமூகத்தை வழிநடத்தப் போவதாக கூறும் இவர்கள் பற்றியது இது. இதில் இவர்களின் நிலைப்பாடு தவறாக இருந்தால், எதிர்காலத்தில் மக்களை வழிநடத்த இவர்கள் எந்தத் தகுதியுமற்றவர்கள். இன்று எம் மக்கள் சந்திக்கின்ற விடையங்கள் பற்றி பேசும் இவர்கள், நாளை எம் மக்களை வழிநடத்துபவர்கள். ஆனால் என்ன தான் நடக்கும்? கடந்தகால இயக்கங்கள் போல், மனித விரோதக் கும்பலாக இருப்பார்கள். கடந்தகால இயக்கங்கள் மக்களின் பொதுவான துயரங்கள் முதல் மார்க்சியம் வரை பேசித்தான், எம் இனத்தை அழித்தனர். இது முடிந்து போன, எம் கண் முன் நடந்த வரலாறு. அங்கு தலைமைக்குள் இதுபோல் இருந்ததை மூடிமறைத்தனர். அரசியல் நீக்கம் செய்தனர். அதை வெறும் தனிமனித முரண்பாடாக, தனிமனித குறைபாடாக காட்டினர். இதை பேசத் தேவையில்லாத விடையங்களாக காட்டினர். பொது முரண்பாட்டின் மேல், இந்த இயக்க வக்கிரங்களை எல்லாம் மூடிமறைத்தனர். விளைவு பொது முரண்பாட்டின் மேல், சமூகவிரோத கும்பலாகவே தலைமை வளர்ந்து மக்களை ஒடுக்கியது. இது இரத்தம் சிந்திய வரலாறு.

இன்று அசோக் நாவலன் - அருள் சகோதரர் போன்றோர், இதில் எந்த தவறுமில்லை என்கின்றனர். யாரும் சுயவிமர்சனம் செய்யத் தேவையில்லை என்கின்றனர். அவர்கள் இந்த அரசியல் நிலைப்பாடு மூலம், பொது முரண்பாட்டின் மீதான அவர்களின் அரசியல் செயல்பாடு என்பது கடந்தகால இயக்க அரசியல் போல் மக்களுக்கு எதிரானது. தனிப்பட்ட நபர்களின் குறைபாடு, முரண்பாடு, இது அரசியலல்ல என்ற காட்டுகின்ற பித்தலாட்டம் கூட மக்களுக்கு எதிரானது.

இதை இப்படி திசைதிருப்ப முடியாது. பொது எதிரிக்கு எதிராக நிற்பதாக காட்டுவது, இதை மூடிமறைக்க அவசரமாக அவைகளை வலிந்து எழுதிக் காட்டுவது கடைந்தெடுத்த பொறுக்கித்தனம். இது பொறுக்கித்தனத்துக்கு மாமா வேலை செய்வது.

இதைச் செய்தபடி குகநாதனை மாபெரும் மோசடிக்காரனாகக் காட்டுவதன் மூலம், தங்கள் செயலை நியாயப்படுத்த முனைகின்றனர். சரி நீங்கள் சொல்வது போல் குகநாதன் மோசடிக்காரனாக இருக்கட்டும். அருள்செழியனுக்கு ஒரு கோடி ஏமாற்றியதாக இருக்கட்டும்.  அதுவல்ல, இங்கு விவாதம். விவாதம் என்ன?

1. இப்படி ஈடுபடுவது சரியாதா?

2. இந்த வழிமுறையை மார்க்சியம் ஏற்றுக் கொள்கின்றதா?

3. இதில் ஈடுபட்டவர்கள் பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன? உங்கள் சகாக்கள் பற்றிய உங்கள்   நிலைப்பாடு என்ன?

4. நீங்கள் இதற்கு எதிராக என்ன செய்தீர்கள், என்ன நிலைப்பாட்டை நேர்மையாக முன்வைத்துள்ளீர்கள்? 

இது இன்றைய பொது அரசியலுக்கு என்ன செய்யும் என்பதல்ல விவாதம். அது உங்கள் முடிச்சு மாறித்தனம். இதுவும் ஒரு அரசியல்தான். எந்த மக்களை அரசியல் விழிபுணர்வு ஊட்டுவதாக கூறிக்கொண்டு, எதை தங்கள் சுயநலத்துடன் செய்கின்றனரோ அதைப் பற்றிய அரசியல் இது. மக்களை இதில் இருந்து விழிப்புற வைக்காதவரை, முன்னைநாள் மக்கள் விரோத இயக்கத்தலைவர்கள், பிரபாகரன் போன்ற  மக்கள் விரோதிகள் தோன்றுவதற்கு இது காரணமாகிவிடும்.                      

சம்பந்தப்பட்ட நபரான நாவலனை தங்களது அணியில் அடையாளப்படுத்தும் புதிய திசைகள் இவைபற்றி எதுவும் பேசாது மவுனித்திருப்பது சந்தர்ப்பவாதமாகும். இயக்கத்தலைமைகளின் தவறுகளை மூடிமறைத்த கடந்தகால அநுபவங்களிலிருந்து மீளவில்லை என்பதையும் காட்டுகின்றது. 

பி.இரயாகரன்
18.09.2010