கடந்த சில மாதங்களாக ‘காஷ்மீரில் வன்முறை’ ‘வன்முறைச் சம்பவங்களில் 17 பேர் உயிரிழப்பு’ என்று செய்தி ஊடகங்கள் தொடர்ந்து குறிப்பிட்டு வருகின்றன. இராணுவத்தை எதிர்த்து காஷ்மீரிகள் கல்லெறியும் காணொளிகள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு அதை பயங்கரவாதச் செயல் போல் சித்தரிக்கின்றன. யார் வன்முறையாளர்கள்? யார் எதிர்கொள்பவர்கள்? என்பதற்கு தேசியம் எனும் சொல்லே அளவுகோலாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் காஷ்மீரில் எறியப்படும் கற்கள் இவர்களின் தேசியக் கேடயத்தையும் துளைத்துக்கொண்டு செல்லும் வீரியத்தை நாளுக்கு நாள் பெற்றுவருகிறது.

காஷ்மீர் விவகரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை அனுமதிக்க முடியாது. காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது, இந்தியாவுக்கு சொந்தமானதை பாகிஸ்தானும் சீனாவும் அபகரித்து வைத்துக்கொண்டுள்ளன. இந்தியாவை துண்டாட நினைக்கும் சக்திகள் இப்படித்தான் தேசியப்பார்வைக்காரர்களின் கோணம் இருக்கிறது. ஆனால் உண்மை இதற்கு மாறாக இருக்கிறது. காஷ்மீர் இந்தியா, பாகிஸ்தான், சீனா எனும் மூன்று நாடுகளிலும் பிரிக்கப்பட்டுக் கிடக்கிறது. இதில் பெரும்பகுதி நிலத்தை வைத்திருக்கும் இந்தியா ஏனையவை தனக்கே சொந்தம் என்று கருதுகிறது. காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமா? பாகிஸ்தானுக்கா? என்பதைவிட காஷ்மீரிகளுக்கு சொந்தம் என்பதை யாரும் உணரத் தயாராக இல்லை. காஷ்மீரிகளை ஒதுக்கிவிட்டு இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் பற்றி பேச்சுவார்த்தை நடத்துகின்றன.


1947ல் காஷ்மீர் இந்தியாவுடன் இணையும்போது, காஷ்மீரிகளிடம் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்பதை இந்தியாவும் ஏற்றுக்கொண்டது. ஆனால் இன்றுவரை அந்த வாக்கெடுப்பு நடத்தப்படவே இல்லை. மாறாக தொடர்ந்து தேர்தல் என்ற பெயரில் முறைகேடுகளின் மூலம் தில்லியின் பொம்மைகள் அதிகாரத்தில் அமர்த்தப்பட்டனர். 1987ல் காங்கிரசுடன் கூட்டு வைத்திருந்த தேசிய மாநாட்டுக்கட்சி தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதற்காக வெல்லும் நிலையிலிருந்த, காஷ்மீரின் பல அமைப்புகள் இணைந்த எம்யூஎப் எனும் கூட்டணி ஓரிரு இடங்களையே வென்றதாக அறிவிக்கப்பட்டது. இதுதான் காஷ்மீர் பிரச்சனையை ஊதிவிட்டு ஆயுதப் போராட்டமாக உருவெடுக்க வழி செய்தது. கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் பாகிஸ்தானும் களத்தில் குதித்தது. காஷ்மீர் மக்களின் உணர்வுகளையும், வாக்கெடுப்பு நடத்தப்படும் என தான் அளித்த வாக்குறுதியையும் காற்றில் பறக்கவிட்ட இந்தியா இந்தப் போராட்டங்களைப் பயன்படுத்தி காஷ்மீரில் இராணுவத்தைக் குவித்தது.

இந்திய இராணுவம் காஷ்மீரில் செய்தது, செய்துகொண்டிருப்பது என்ன? தீவிரவாதிகளிடமிருந்து மக்களைக் காப்பதற்காக இராணுவம் போராடிக்கொண்டிருப்பதாக அப்பாவித்தனமாக நம்பிக்கொண்டிருப்பவர்கள் இந்தப் புள்ளிவிபரங்களை கொஞ்சம் உற்று நோக்கலாம். காஷ்மீரின் போலீஸ்படையைத் தவிர்த்து இராணுவத்தினர் மட்டும் 5 லட்சம் பேர் காஷ்மீரில் நிலை கொண்டிருக்கிறார்கள், அதாவது இருபது காஷ்மீரிகளுக்கு ஒரு இராணுவச் சிப்பாய் எனும் அள‌வில் இராணுவம் அங்கு குவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 70000க்கும் அதிகமான காஷ்மீரிகள் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர். விசாரணை என்ற பெயரில் இழுத்துச் செல்லப்பட்டவர்களில் 8000 பேர் எந்தவித அடையாளமும் இன்றி ‘காணாமல்’ போய்விட்டனர். அண்மையில் ஷோபியானைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு ஆற்றில் வீசி எறியப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம், இதுபோல் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு கணக்கொன்றுமில்லை. இப்படி ஆயுதங்களின் முனையில் தங்களின் வாழ்வைச் சிதைத்த இராணுவத்திற்கு எதிராக போராடாமல், காஷ்மீரிகள் சினிமா பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என இந்திய அரசு எதிர்பார்க்கிறதா?


தொன்னூறுகளின் தொடக்கத்தில் காஷ்மீரில் நடைபெற்ற ஆயுதப் போராட்டத்தின் போது இந்தியாவின் குரல் உலக‌ அரங்கில் எடுபட்டது. காரணம், அரசை எதிர்த்துபோராடுபவர்கள் பயங்கர‌வாதிகள் எனும் உலகின், இந்தியாவின் கருத்துக்கு வலுசேர்ப்பது போல் குண்டுவெடிப்புகள் காட்டப்பட்டன. ஆனால் கடந்த‌ சில மாதங்களாக நடைபெற்றுவரும் கல்லெறியும் போராட்டம், உலக அரங்கில் போராளிகளை பயங்கரவாதிகளாக காட்டமுடியாமல் திணறுகிறது இந்திய அரசு, அதேநேரம் இப்போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவரவேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறது. ஏனென்றால் இந்த கல்லெறி போராட்டம் நீண்டால், பலகாலமாக இந்தியா நடத்திவரும் ‘வெளியிலிருந்து வரும் தீவிரவாதத்திற்கு காஷ்மீர் இலக்காகிறது’ எனும் நாடகத்தை இனிமேலும் ஓட்டமுடியாமல் போகும். ஆகவே தான் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்தேனும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தாகவேண்டும் எனும் மனோநிலைக்கு இந்தியா இறங்கி வந்திருக்கிறது.

முதல்கட்டமாக ஆயுதப்படையின் சிறப்பு அதிகாரங்களை குறிப்பிட்ட சில பகுதிகளில் விலக்குவது குறித்து அரசு ஆலோசிப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன. அப்படியே விலக்கிக்கொள்வது என்று முடிவெடுத்து அறிவித்தாலும்கூட நடைமுறையில் அதை செயல்படுத்துவார்கள் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. அதற்குள்ளாகவே எதிர்க்கட்சிகளும், காவி வானரங்களும் குதிக்கத்தொடங்கிவிட்டன. முதல்வரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்பது தொடங்கி, இராணுவத்தின் அதிகாரத்தைக் குறைத்தால் அது நாட்டுக்கே அச்சுறுத்தலாகிவிடும் என்பதுவரை அவைகளின் கூச்சல்கள். இது உகந்த நேரமல்ல என்றால் கல்லெறி போராட்டத்திற்கு முன்பு சிலகாலம் காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தில் சற்று மந்தநிலை காணப்பட்டதே, அப்போது இராணுவத்தின் வரம்பற்ற அதிகாரத்தை குறைப்பது குறித்து பேசாமல் மௌனம் காத்தது ஏன்?

காஷ்மீர் பிரச்சனை என்பது ஆளும்கட்சிகளுக்கு (எந்தக் கட்சியாக இருந்தாலும்) இந்திய தரகு, பன்னாட்டு முதலாளிகளின் லாபத்திற்கான‌ பிராந்திய ஆதிக்கத்திற்காக ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதை நியாயப்படுத்த உதவும் ஒரு கருவி. எதிர்க்கட்சிகளுக்கு (எந்தக் கட்சியாக இருந்தாலும்) அடுத்த ஆட்சிக்காக ஓட்டுப் பொறுக்கவும், பிழைப்புவாத அரசியல் நடத்தவுமான கருவி. ஆளும்கட்சி, எதிர்க்கட்சி இரண்டுக்கும் பலன் தரக்கூடிய காஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு இந்த காரியவாதிகள் முன்வருவார்கள் என எதிர்பார்க்க முடியுமா?

துப்பாக்கி ரவைகளுக்கு எதிராக கல்லெறியும் போராட்டம் இந்திய இராணுவத்தின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திக்கொண்டிருக்கிறது. காந்’தீய’வழியில் இது அகிம்சை போராட்டமல்ல, வெடிகுண்டு என அலறிக்கொண்டே காஷ்மீரிகளின் வாழ்வை இரக்கமின்றித் தகர்க்க இது பயங்கரவாதமுமல்ல. அவர்கள் எறியும் கல் யாரையும் கொல்வதில்லை, ஆனாலும் அதிபயங்கர ஆயுதம் தரித்திருப்போரை கிலியடையச் செய்திருக்கிறது. தொடரவேண்டும், காஷ்மீரில் எறியப்படும் அந்தக் கல் தில்லியின் கதவுகளை நொறுக்கவேண்டும். அவர்களின் உரிமை வெல்லப்படும் வரை அந்தக் கற்களின் உந்துவிசை ஓயாது, ஓய்ந்துவிடவும் கூடாது.

http://senkodi.wordpress.com/2010/09/14/kashmir/