Language Selection

சீலன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழரங்கம் தனிநபர் தாக்குதல் இணையத்தளமா? அல்லது சமூகத்தின் தாம் புரட்சியாளர்கள் என்று பிரச்சாரம் செய்து சமூகத்தை ஏமாற்ற நினைப்பவர்களை அம்பலப்படுத்தும் ஒரு இணையத்தளமா? தமிழரங்கம் ஒரு தனிநபர் தாக்குதல் இணையத்தளம் என்று சொல்பவர்கள் யார்? ஏன் எதற்காக இவ்வாறு கூக்குரல் போடுகின்றனர்.

சமூகத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்றும், புரட்சி நடத்த வேண்டும் என்றும், அதுவும் மார்க்சிய அடிப்படையில் நடத்தப்படவேண்டும் என்றும் கருத்துப்பட, பல்லாயிரக்கணக்கானோர் எழுதியும், மேடைகளில் பேசியும், ஏன் தமக்குள் சந்திப்புகளை நடத்தியும், மக்களை திரட்டி  போராடியும் வருகின்றனர்.

இதில் ஒரு சிலர் தம்மை மக்களின் முன் முற்போக்குவாதிகளாக காட்டி, அதனூடாக பிழைப்பை நடத்துவதற்கு முனைகின்றனர். சிலர் தம் மீதுள்ள அழுக்குகளை மறைத்து, புனிதர்களாக சமூக அக்கறை கொண்டவர்களாக காட்டுவதன் மூலம், தம்மை தூய்மைவாதிகளாக காட்டுவதற்கும், மறைப்பதற்கும் முனைகின்றனர். இன்னும் சிலர் மக்களை ஏமாற்றி, அதன் மூலம் தாம் தமது வாழ்வை மேம்படுத்தி வாழ்வதற்குமே இவற்றைப் பயன்படுத்துகின்றனர். இவர்கள் அல்லாத மற்றவர்கள் தான், உண்மையாகவும் நேர்மையாகவும் வாழ்கின்றனர்.

மார்க்சியத்தை புத்தகப் படிப்பாக மாத்திரம் பயன்படுத்தும் பலர் உள்ளனர். இவர்கள் மார்க்சியத்தை வைத்து கட்டுரை, கவிதை, கதை என்பவற்றை எழுதுவதுடன், மக்களை புரட்சியின் பெயரில் ஏமாற்றி விடுகின்றனர். மேடைகளிலும், அடுக்கு மொழியிலும், மக்களை மயக்கும் உணர்ச்சி ததும்பும் பேச்சுக்களை பேசும் இந்திய அரசியல்வாதிகள் போன்று, மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்களாகவும், பாமர மக்களுக்கு உதவுபவர்களாகவும், தம்மை மக்கள் முன் காட்டமுனையும் இந்த பாசாங்கு மார்க்சியவாதிகள், தமக்கு சாதகமாக எதை எவ்வாறு கையாள்வது என்ற கருத்தில் மிகவும் கவனமாக உள்ளனர். மார்க்சிய தத்துவத்தை இன்று வியாபார தத்துவமாகவும், தம்மை மக்கள் மத்தியில் முற்போக்காளர்களாக அடையாளப்படுத்தும் தத்துவமாக மட்டுமே, பலராலும் இன்று  பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இவ்வாறு இருக்கையில் இன்றைய காலகட்டத்தில் தாம் புரட்சியாளர்கள் என்றும், தாம் எழுதும் அனைத்துமே புரட்சிகரமானது என்றும், தம்மைத் தாமே கூறிக்கொள்ளும் இந்த புரட்சியாளர்கள், சமூகத்தில் நடக்கும் எந்த ஒரு அசைவின் மீதும் கருத்து சொல்வது கிடையாது. தாம் கொண்ட தத்துவத்தின் அடிப்படையில் கருத்துச்சொல்லாது, மதில் மேல் பூனை போன்று பதுங்கியபடி இருந்து வருகின்றனர் அல்லது எப்பவாவது ஒரு தடவை ஒரு கட்டுரையை வரைந்து, தமது மார்க்சிய புலமையை காட்ட முற்படுகின்றனர். இவர்கள் எப்பவாவது எழுதும் கட்டுரைகளில், சமூகம் பற்றி இவர்களின் பார்வை சரியானதாகவும் தத்துவார்த்த ரீதியில் மக்கள் சார்புடையதாகவுமே காணப்படுகின்றது இதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. மார்க்சிய தத்துவத்தை கற்றுவிட்டு, அதை அப்படியே ஒரு பொதுவான மேலோட்டமான விடையத்தின் மீது ஒப்புதல் செய்வது, ஒரு உண்மையான புரட்சிவாதியின் கடமையல்ல. மாறாக மார்க்சியத்தை கல்விப் பாடமாக கற்று அதை ஒப்புதல் செய்யும் சந்தர்ப்பவாத மார்க்சியவாதிகளுக்கு மட்டுமே அது சாரும்.

ஒரு புரட்சிவாதி என்றால் அவன் இந்த சமூகத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்ற துடிப்பும், உண்மையான சமூக ஆர்வமும் இருந்தால் இந்த சமூகத்தில் காணப்படும் ஒவ்வொரு முரண்பாடுகள் தொடர்பாகவும், அவனது பார்வை இருந்த வண்ணமே இருக்கும். இந்த சமூகத்தில் உள்ள அனைத்தையும் மாற்றியமைக்க புறப்பட்ட புரடசியாளர்கள், தமது கண்களுக்கு காதுகளுக்கு எட்டிய ஒவ்வொன்றின் மீதும் கருத்தை முன்வைக்க கடமைப்பட்டவர்கள். அதிலும் பிழைப்பிற்காக மார்க்சியத்தையும் புரட்சியையும் உச்சரிப்பவர்கள் பற்றி, கருத்து முன்வைக்காமல் விடுவது என்பது புரட்சிக்கு செய்யும் துரோகம். எனவே தான் இந்த சுயநல, திரிபுவாத, பஞ்சோந்தி மார்க்சியவாதிகளை சமூகத்தின் முன் அம்பலப்படுத்துதலை தமிழரங்கம் செய்து வருகின்றது. ஆனால் அதை இவர்கள் தனிநபர் தாக்குதல் என்று மொட்டையாகவும், அதேவேளை தம்மை தக்கவைப்பதற்காகவும் ஆங்காங்கே பிரச்சாரம் நடத்தி வருகின்றனர். இந்தப் பிரச்சாரங்களில் அவர்களின் உண்மை உருவம் வெளிப்படுகின்றது. இவர்கள் புரட்சியை, மக்கள் புரட்சியாக நடத்த விரும்பாதவர்களே.

எந்த ஒரு நபரும் புரட்சி என்று கூறிக்கொண்டு, புரட்சியைக் காட்டிக் கொடுக்க நினைக்கின்றார்களோ அவர்களை தமிழரங்கம் அம்பலப்படுத்துகின்றது. இதை தவறு, தனிநபர் தாக்குதல், கத்தரிக்காய், வெண்டிக்காய் என்று சொல்பவர்கள் எல்லாம், புரட்சியை வாயால் உச்சரித்து அதற்கு எதிரான வாழ்க்கைமுறையை நடத்துபவர்களுமே.

அண்மையில் வினவுதளத்தில் பதிவரசியல்: நட்புக்காக கொள்கையா கொள்கைக்காக நட்பா?  என்ற கட்டுரையை படித்தீர்களானால் எங்கேயோ ஒரு இடத்தில் நடந்த சம்பவத்திற்காக வினவு தளத்தினர் குரல் கொடுக்கின்றனரே. ஏன் இதுவும் சமூகத்தில் புரையோடியுள்ள ஒரு விடையம்தான். சமூகமாற்றத்தை கோருபவர்களுக்கு இந்த முதலாளித்துவ சமூகத்தில் உள்ள ஒவ்வொரு சமூக கட்டுமானத்தின் மீதும் தமது கருத்தினை முன்வைப்பது தவிர்க்க இயலாதது. இதை தனிநபர் தாக்குதல் என்றும் இந்த விடையம் இன்று எமக்கு அவசியமா என்றும், ஏன் இதை சம்மந்தப்பட்டவர்களுடன் கதைத்து விட்டு வெளியிட்டிருக்கலாமே என்றும் கூறுவது ஒரு சந்தர்ப்பவாதப் போக்கே.

மக்களுக்காக போராடப் புறப்பட்டவர்கள் எந்த ஒரு விடையமாக இருந்தாலும், அதை மக்கள் முன் பகிரங்கமாக வெளிக்கொண்டு வருவதே உண்மையானதும் நேர்மையானதுமான ஒரு நிலைப்பாடாகும்.

சீலன்
14.09.2010