Language Selection

தமிழ் மக்களின் பிணம் தான் புலி அரசியலாகியது. தமழ்மக்களின் அவலம் தான் தீபச் செல்வனின் கவிதையாகியது. இது தான் இவர்களின் அரசியல் சமன்பாடு. இதற்கு வெளியில் மக்கள் அரசியல் என எதுவும் கிடையாது. புலிகள் இருந்தவரை தீபச்செல்வன் புலியிசத்தைக் கவிதையாக்கியவர், அந்த  தவறான போராட்டத்தில் ஏற்பட்ட பொது மனித அவலத்தை, மீளவும் தன் கவிதையாக்கினார். இந்த பொது மனித அவலம் எல்லாம் பேரினவாதத்தின் செயலாக காட்டும் அதேநேரம் அதை விதி என்கின்றார். இது தங்களால் ஏற்பட்டதல்ல என்ற, புலியிசத்தை முன்தள்ளுகின்றார். பேரினவாதம் சார்ந்த பொது மனித அவலம் சார்ந்த உண்மையை ஆதாரமாகக் கொண்டு, தங்கள் வலதுசாரிய மனிதவிரோத அரசியல் நடத்தைகளை மூடிமறைக்கின்றார். இதை மிக நுட்பமாக தீபச்செல்வன், தன் கவிதைகள் மூலம் செய்கின்றார். நாம் உட்பட இந்த மூடிமறைத்த அரசியல் பித்தலாட்டத்தை, இனம் காண முடியாது போனது என்னவோ உண்மைதான். புலிகள் பிணத்தை உற்பத்தி செய்து அரசியல் நடத்திய போது, அந்த பிணத்தை வைத்து  நடத்திய அரசியலில் யார் போலிகள் யார் போலியல்ல என்பது தெரியாத ஒரு மயக்கத்தை எங்கும் உருவாக்கியது. இது போல் மனித அவலம் மீது இன்று கேபி, தீபச்செல்வன் முதல் யார் யாரோ எல்லாம் அரசியல் செய்கின்றனர்.

இன்று தொடரும் பல மூடுமந்திரங்கள். எங்கும் அரசியல் சதிக் குழுக்கள். அவை கடந்தகால இயக்க பாணியில் இயங்குகின்றது. மக்களை சார்ந்து நிற்றல், மக்களை அரசியல் மயமாக்கல் என்பது இன்று தொடர்ந்து மறுக்கப்படுகின்றது. குறிப்பாக தங்கள் கருத்துகள் என்ன என்பது கூட, வெளிப்படையாக கிடையாது. இடது வேடமிட்ட வலதுசாரிய தேசியத்தின் பின் இந்த சதிகள் அரங்கேறுகின்றது. அன்று புலிகள் முதல் அனைத்து இயக்கமும், எப்படி இடதுசாரியத்தை தங்கள் வலதுசரித்துக்கு தொட்டுக் கொள்ள பயன்படுத்தினரோ அதே பாணி அரசியல் சதிகள் அரங்கேறுகின்றது. அது வர்க்க அடிப்படையை மறுத்து, இன அடிப்படையை முன்னித்துகின்றது. இது தீபச்செல்வனின் இன்றைய வெளிப்படையான கருத்துகளுடன் ஓத்துப் போகின்றது. அந்த வகையில் விரிவாக இதை நாம் ஆராயவேண்டியுள்ளது.

புலிகளின் முடிவின் பின் இன்று எப்படி வலதுசாரியமும், இடது வே~ம் போட்ட வலதுசாரியமும் எப்படி தங்கள் கருத்துக்களையும் நடத்தைகளையும் மறுபடியும் நிலைநாட்டுகின்றது என்பதை நாம் இன்று புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இங்கு தீபச்செல்வன் சோபாசக்திக்கு வழங்கிய பேட்டி, மக்களின் அக்கறை கொண்ட இடதுசாரியம் போன்று மூடிமறைத்த வலதுசாரியத்தின் வெட்டமுகம். மக்களுக்கு இவர்கள் வைக்கும் அரசியல் தான் என்ன? வலதுசாரி சமூக ஓடுக்குமுறையை பொது சமூக ஓட்டத்தில் தக்கவைத்து ஒடுக்க, வலதுசாரிகள் மனித அவலத்தைப்பற்றி இனம் சார்ந்து பேசுகின்றனர்.      

இந்த வகையில் தான், புலிகளின் அழிவின் பின்னான மக்களின் அவலங்கள் பற்றி பல பத்து கவிதைகளை தீபச்செல்வன் எழுதியிருந்தார். இதில் ஒரு சில கவிதைகள் புலிகள் மேல் எதார்த்தம் மேல் கீறல் வீழ்ந்த உணர்ச்சி சார்ந்த அரசியல் அடிப்டையற்ற எதிர்மறை விமர்சனங்களை உள்ளடக்கியும் வெளிவந்தது. இதுவே சமூகம் சார்ந்த ஒன்றாக மயங்கவும், மயக்கவும் கூடிய அவரின் மொழியும், அவர் தன் அரசியல் முகத்தைக் வெளிக்காட்ட கிளம்பிய போது மெதுவாக இன்று அம்பலமானர்.

சென்ற தேர்தலில் வலதுசாரிய தமிழ் இனவாதக் கூட்டமைப்பின் ஒரு வேட்பாளராக அவரின் பெயரும் அடிபட்ட போது, சமூகம் சார்ந்த அவர் பற்றி மதிப்பீடு கேள்விக்குள்ளானது. இதன்பின் அண்மையில் சோபாசக்திக்கு அவர் வழங்கிய பேட்டியின் போது, இது நிர்வாணமானது. அவர் அதில் "நானோ விடுதலைப் புலிகள் தொடர்பான எனது நிரந்தரமான விருப்பை வைத்துக்கொண்டு பேசுகிறேன்" என்று கூறியவர், "தமிழ் மக்களின் கனவைக் குறித்து நன்கு புரிந்து அதற்காக போராடி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நான் நம்பிக்கையான அமைப்பாகப் பார்க்கிறேன்." என்கின்றார். இப்படி தான் யார் என்பதையும், மனித அவலங்களைப் பற்றி அவரின் அக்கறை இந்த அரசியல் பின்னணி கொண்டது என்பதை, இதன் மூலம் வெளிப்படையாக தெளிவுபடுத்தியுள்ளார்.   

இந்தப் பேட்டியில் கடந்தகால புலிகளின் நடத்தைகளை எல்லாம் சரி என்று கூறியதன் மூலம், தான் ஒரு புலியாக, வலதுசாரியாக இருந்ததையும் இருப்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார். அதை சரியென்று நியாயப்படுத்திய விதம், புலிகள் போன்ற கடந்தகால முட்டாள்களின் வாதங்களை விட மிக நுட்பமானது. வலதுசாரி அறிவுசார் சூக்குமத்துடன் கூடியது. இதை விரிவாக நாம் ஆராய்வோம். அதற்கு முன் வலதுசாரியம் மக்கள் மேல் கருசனை உள்ளதாக காட்டி நடிக்கின்ற அரசியல், அதன் போலியான தன்மையையும், அதன் மேலான அரசியல் மயக்கம், எப்படி இன்று அரசியல் ரீதியாக அம்பலமாகாது இருக்கின்றது என்பதை முதலில் பார்ப்போம்.

தொடரும்

பி.இரயாகரன்
06.09.2010