இலங்கையின் இன்றைய பிரச்சனைகள் தான் என்ன? அவை பற்றி நாட்டை ஆளும் கும்பல் அக்கறைப்படுகின்றதா? இல்லை. தேசிய இனப்பிரச்சனைக்கு அற்ப சலுகையைக் கூட அது கொடுக்க மறுக்கின்றது. இப்படி இனப்பிரச்சனையை தீர்க்க மறுக்கின்ற பேரினவாதிகள், தொடர்ந்து இலங்கையில் இன முரண்பாட்டை பிரதான முரண்பாடாக முன்தள்ளிய வண்ணம் உள்ளனர்.  

நாட்டை ஆளும் ஜனாதிபதியோ, நாட்டின் உடனடி பிரச்சனை என்று நினைப்பது என்ன? அடுத்தடுத்த ஜனாதிபதியாக தொடர்ந்து நானாக எப்படி இருப்பது என்பது தான், மகிந்தாவின் பிரச்சனை. இவரின் தயவில் இலங்கையை ஆளும், இவரின் குடும்பத்தின் பிரச்சனையும்  இதுதான். இதற்காக நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தையே மாற்றுகின்றனர். இதன் மூலம் இந்தப் பாசிசக் கும்பல் தொடர்ந்து நாட்டை அடிமைப்படுத்தி சுரண்டி கொழுக்க, தங்களை தொடர்ந்து ஒரு ஆளும் வர்க்கமாகின்றது.

இப்படி ஒரு தனிநபரின் ஆட்சியை மேலும் தொடர, அவசரம் அவசரமாக அரசியல் அமைப்பு சட்டத்தை இன்று திருத்த முனைகின்றது. எதிர்க்கட்சி உறுப்பினர்களையும், கட்சிகளையும் கூட, அது விலை பேசி விடுகின்றது. அவர்களை தங்கள் பாசிச சர்வாதிகாரத்துக்கு ஏற்ற அருவருடிகளாக, எடுபிடிகளாக்கியும் வருகின்றது.

கடந்த 30 வருடத்தில் இலங்கையில் 5 இலட்சம் பேரை படுகொலை செய்ய காரணமாக இருந்த தேசிய இனப்பிரச்சனையை தீர்க்கும் வண்ணம், அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்ற முனையவில்லை. தேசிய இன ஒடுக்குமுறையை தொடர்ந்தபடி, சிறுபான்மை இனங்களின் மேலான யுத்த அவலங்களைக் கூட கண்டு கொள்ளாத பேரினவாதிகளாகவே, நாட்டை தொடர்ந்து இன முரண்பாட்டுக்குள் திணித்து மக்களை காயடிக்கின்றனர். இதன் மூலம் தான் நாட்டின் ஆளும் வர்க்கமாக தொடர்ந்து இருக்க முனைப்பு கொண்டுள்ளது. தமிழ் மக்களை ஒடுக்கும் ஜனநாயகத்தின் மூலம் தான், தான் தொடர்ந்து ஒரு ஆளும் வர்க்கமாக இருக்க மக்கள் வாக்குப் போடுவார்கள் என்று இந்த பேரினவாதிகள் திட்டம் போட்டு ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளுகின்றனர்.

காலம்காலமாக தேசிய சிறுபான்மை இனங்கள் ஒடுக்கப்பட்டு, அவர்கள் சிதைக்கப்பட்டு, அவர்களின் வாழ்விடங்களாக இருந்த பூமி சூறையாடப்பட்டு, பேரினவாத குடியேற்றங்கள் மூலம் அவை தொடர்ந்து அழிக்கப்படுகின்றன. இதுவே இன்று தொடருகின்றது.

புலி பாசிசம் தக்கவைத்திருந்த யுத்தம் முடிவுக்கு வந்தபோது, சிறுபான்மை தமிழ் மக்களின் அடிமைத்தனத்தை தான் வடக்கின் வசந்தம் கிழக்கின் விடியல் என்றனர். இப்படி பேரினவாத இராணுவ வெற்றிகள் மூலம் அதிகாரத்தை நிறுவிய மகிந்த குடும்பம். இந்த பாசிசக் கும்பல் தன் ஆட்சியை தக்க வைக்கவே, இன்று இது அரசியல் அமைப்பைத் திருத்துகின்றது. மக்களின் எந்த நன்மைக்காகவுமல்ல. இதனால் மக்கள் எந்த நன்மையையும் பெறப்போவதில்லை.

இந்த அரசியல் அமைப்பு சட்டத் திருத்தம் மூலம் மக்கள் பெறப்போவது, தொடர்ந்தும் தங்கள் மேலான சர்வாதிகார ஆட்சியைத்தான். இன்று தங்களை அடிமைப்படுத்தி சுரண்டி ஆள்பவர்கள், தொடர்ந்தும் கொடுமையாக சுரண்டி சூறையாடவே இந்த அரசியல் அமைப்பு சட்ட திருத்தம் வழிவகுக்கின்றது. நிலவும் சர்வாதிகாரத்தை தொடர்ந்தும் மக்கள் மேல் திணிக்க, புதிய அரசியல் அமைப்பு வழிகாட்டுகின்றது.    

இந்த வகையில் நிலவும் ஜனநாயகத்தில் வாக்கை தமக்கு போடவைக்கும் முறைமை என்பது, சர்வாதிகார ஒழுங்குக்கு உட்பட்ட ஒன்றாகவே இது மாற்றி அமைக்கப்படுகின்றது.

இன்று நாட்டின் வாழ்வியல் முறை என்பது, மகிந்த குடும்பத்தின் தேவைக்கும் வரையறைக்கும் உட்பட்ட ஒன்றாக மாறிவிட்டது. இந்த வரையறை என்பது, இயல்பில் சர்வாதிகார நடைமுறைக்கு உட்பட்ட ஒன்றாகவே மாறுகின்றது. நாட்டில் கருத்துகள், செய்திகள் முதல் அனைத்தும், மகிந்த குடும்பத்தின் விருப்புக்கு உட்பட்ட ஒன்றாக இன்று இருப்பது போல், வாக்கு போடுவதும் கூட. அப்படித்தான் மக்களின் வாக்கு அறுவடை செய்யப்படுகின்றது.  எதுவும் இதை மீறியதல்ல.

ஆளும் வர்க்கமாக தன்னை தொடர்ந்து நிலைநாட்ட, மக்கள் வாக்கு போட்டு உருவான எதிர்க்கட்சிகளை இரகசிய பேரங்கள் மூலம் விலைக்கு வாங்கிவிடுகின்றது. இப்படி தன்னை தெரிவு செய்த ஜனநாயக வடிவத்தையே, அது கேலி செய்கின்றது. இதன் மூலம் நிலவும் ஜனநாயக அரசியல் அமைப்புச் சட்டத்தை திருத்தும் கும்பல், தன்னை வெல்ல வைக்க அது தனக்குத்தானே வாக்கையும் போட்டுக் கொள்ளும் என்பது சர்வாதிகார ஜனநாயகத்தின் அரசியல் உள்ளடக்கமாகும்.

புலித் தலைவராக தன்னை நிறுவிக் கொண்ட பிரபாகரன், தானே எல்லாம் என்று ஒரு கும்பல்  மூலம் ஆட்டம் போட்டது போன்றது இது. பிரபாகரன் தமிழ்மக்களை விரும்பிய நேரம் விரும்பியவருக்கு மக்களை கொண்டு வாக்கு போட வைக்க எந்த ஜனநாயக வடிவம் உதவியதோ,  அந்த சர்வாதிகார ஜனநாயகம் மூலம் தொடர்ந்தும் ஆளும் வர்க்கமாக மகிந்த குடும்பம் இருக்க உருவாகும் அரசியல் அமைப்புச் சட்ட திருத்தமாகும் இது.

இந்த சர்வாதிகார ஜனநாயக அமைப்பை, மக்கள் இதற்கு எதிராக அமைப்பாகி போராடுவதன் மூலம் தான் எதிர் கொள்ள முடியும்.

பி.இரயாகரன்
03.09.2010