மிருகபலி "மூடநம்பிக்கை" என்று சொன்னது ஆறுமுகநாவலர் வழிவந்த, யாழ் பார்ப்பனிய வெள்ளாள இந்துக்கள். மாட்டு இறைச்சியை தின்னாத, மூடநம்பிக்கையை கொண்ட இந்துக் கூட்டம். இன்று யாழ் மக்களில் பெரும்பான்மையானவர்கள், மாட்டு இறைச்சியை உண்ணுகின்றனர். இதற்கு வெளியில் சாதியம் பேசி, மத கலாச்சாரம் பேசிய ஆறுமுகநாவலரின் வாரிசுகள் தான், மிருக வழிபாட்டு உரிமையை தடுக்க முனைகின்றது. சிலாபம் முன்னேஸ்வர கோயியில் நடந்த மிருக பலியிலான வழிபாட்டு உரிமையை தடுக்க முனைந்த கூட்டம், இதை மூட நம்பிக்கை என்றனர். மிருக வதை சட்டத்தையும் கையில் எடுக்க முனைந்தனர்.

இதற்கு முண்டு கொடுத்து, இதன் பின் ஓடோடி வந்த பௌத்த பாசிசக் கும்பல். இந்து கோயில்களைத் தகர்த்த கூட்டம், பௌத்த ஆலயங்களை சிங்கள பேரினவாத  மேலாதிக்கத்துடன், தமிழர் பகுதியில் நிறுவும் கூட்டம் தான், இங்கு புழுதியைக் கிளப்பிக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தது. இதை மீறியும் பலி நடாத்தப்பபட்டது.

பௌத்த, இந்து பாசிட்டுகள் ஒன்றாக கூச்சல் கிளப்பிய நிலையில், இதை பௌத்த அழிப்பாக தமிழ் இனவாதம் இட்டுக்கட்டியது. இது சிறு தெய்வ வழிபாடு என்றும், பௌத்தம் சிங்கள ஒடுக்குமுறையின் அங்கம் எனவும் எல்லாம் இட்டுக் காட்டப்பட்டது.

இது வழிபாட்டு உரிமை மீதான பிரச்சனை. வழிபாட்டு உரிமையில், இப்படித் தான் வழிபட வேண்டும் என்று சொல்லும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. அறிவியல் பூர்வமாக அனைத்தும் மூட நம்பிக்கை. ஆதிக்கம் பெற்ற மதம், மற்றைய வழிபாட்டை அரசின் துணையுடன் தடுப்பது பாசிசமயமாக்கலாகும்.

யாழ்குடா உட்பட இன்று நடக்கும் மிருக பலி வழிபாடுகளை, 1980 களில் இயக்கங்கள் தான் முதலில் தடை செய்தன. பெரும்பான்மை இந்து சாதிய வெள்ளாள உயர் சாதி சார்பாக, இந்தத் தடையை அன்று விதித்தனர். இயக்கங்களின் அதிகாரங்கள் குறைந்த போது, மீண்டும் இந்த சடங்கு நடைபெற்று வருகின்றது. இயக்கங்கள் இதை மிருகவதையாக காட்டின. இயங்கங்களோ இந்த வதையைக் காட்டிலும், கேவலமான மனிதவதைகளை  நடத்தியது உலகமறிந்தது.

இந்த நிலையில் இன்று மிருகவதை, மூடநம்பிக்கை, காட்டுமிராண்டித்தனம் என்று எல்லாம் கூச்சல் எழும்புகின்றது. மிருக பலியீடு மூடநம்பிக்கை, காட்டுமிராண்டித்தனம் என்றால், பௌத்த மற்றும் இந்து வழிபாட்டு முறை கூட அப்படிப்பட்டதே. இதில் உள்ள வேறுபாடு

1. படைக்கும் பொருள் வேறுபடுகின்றது.

2. பணம் புரளுதலும், இதற்கு அனுசரணையான அரச அதிகாரமும், இங்கு இதை வேறுபடுத்துகின்றது.

3. சாதிய மற்றும் வர்க்க அடிப்படை இந்த வழிபாட்டு முறையை வேறுபடுத்துகின்றது.

அறிவியல் பூர்வமாக இங்கு மூடநம்பிக்கை என்பது, இரண்டு வழிபாட்டு முறையினதும் பொது சாரமாகும். மறுபக்கத்தில் இது அவரவர் மத நம்பிக்கை. மத நம்பிக்கை தனிமனித (உங்கள்) உரிமையாக உள்ள வரை, மற்றவர் வழிபாட்டு உரிமையில் யாரும் தலையிட முடியாது. இதற்கு சட்டம் போட்டு தடுக்க முடியாது.

இப்படி இருக்க மிருக வதை பற்றி கூச்சல் முதல் மிருக வதை சட்டத்தையும் தன்கையில் எடுக்கின்றனர் இந்து – பௌத்த மதவாதிகள். இந்தக் கூட்டம் தான் மனித வதை செய்யும் போது, அதற்கு ஆசியை வழங்கி வழிபாட்டை நடத்துபவர்கள். இன்று வழிபாட்டு உரிமையில் தலையிட்டு  மிருக வதையைப் பற்றி பேசுகின்றனர்.

மனிதவதைக்கு எதிரான சட்டம் இலங்கையில் இல்லைதான். மிருகவதை சட்டத்தின் கீழ், மனிதவதைக்கு எதிராக கூட குரல் கொடுக்காத பாசிசக் கூட்டம் தான் இது. உண்மையான கருணை கொண்ட மிருகவதை பற்றிய அக்கறை இருந்திருந்தால், வடக்கு கிழக்கு போர் முiனையில் பேரினவாதம் கொன்ற பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மிருங்களுக்காக சார்பாக அரசுக்கு எதிராக குரல் கொடுத்து இருப்பார்கள். அங்கவீனமாகிப் போன, லட்சக்கணக்கான  மிருகங்களுக்காக பரிந்து பேசி இருப்பார்கள்.

அதைப் பேசாத மிருகவதை பற்றி புலம்பும் காட்டுமிராண்டிகள், வழிபாட்டு உரிமை மீது தலையிடுகின்றது. ஆயிரம் ஆயிரம் மக்களை கொன்றபோது, பல பத்தாயிரம் மக்களை அங்கவீனராக்கியபோது சமூகம் பற்றிய எந்த அக்கறையுமற்றிருந்தது இந்த மதக் கூட்டம். மனித வதை பற்றி பேசாத பாசிச கூட்டம். இன்று இந்து – பௌத்த பாசிட்டுகளுடன் கூடி கூச்சல் எழுப்புகின்றது.

இந்த வருடம் பேரினவாத அரச பாசிட்டுகள், மக்களை பிரிதாளும் தந்திரத்துக்கு ஏற்ப இதை  கண்டும் காணமல் விட்டுவிட்டது. ஆனால் இந்த மிருக பலி வழிபாட்டு உரிமையை, எதிர்காலத்தில் இந்து - பௌத்த பாசிட்டுகள் ஒன்றாகக் கூட்டுச் சேர்ந்து அதை தடை செய்வார்கள் என்பது மட்டும் திண்ணம்.

பி.இரயாகரன்
26.08.2010