இரண்டாவது வதைமுகாமுக்கு, வைகாசி மாதம் இரண்டாம் திகதி மதியமளவில் கொண்டு செல்லப்பட்டேன். மதிய உணவு தரப்படவில்லை. அநேகமாக அவர்களைப் பொறுத்தவரையில் நான் புதிய கைதி என்பதால், எனக்கு பார்சல் உணவு அங்கு இருந்திருக்காது. அன்றைய மாலை, மிகமிக மெதுவாக நகர்கின்றது. தண்ணீர் விடாய் மண்டையை வெடிக்க வைக்குமாற் போல் இருந்தது. முதல்நாள் இரவு ஒரு குவளை தண்ணீர் கிடைத்தது. எழு மணியளவில் மூன்று குழல் பிட்டு ஒரு பார்சலில் தரப்பட்டது. அத்துடன் ஒரு குவளை தண்ணீர் தரப்பட்டது. அன்று மலசலகூடம் செல்ல அனுமதிக்கவில்லை. உணவு உண்ட பின், வெறும் நிலத்தில் நிர்வாணமாக அயர்ந்து உறங்கினேன்.

 காலை எட்டு மணியளவில் உதைத்து எழுப்பியவர்கள், மலசலகூடம் செல்லக் கோரினர். என்னை நிர்வாணமாக பலர் பார்த்து நிற்க, கண் கட்டப்படாத நிலையில் அழைத்துச் செல்லப்பட்டேன். அந்த மலசலகூடம் அந்த வீட்டின் உள் அமைந்ததாக இருந்தது. ஒரு கல் வீட்டின் நவீன வசதிகளை அடிப்படையாக கொண்ட இந்த மலசல கூடத்திற்கு, குழாய் மூலமே தண்ணீர் வந்தது. மலம் கழிக்க விட்டவர்கள், என் முன்பாக ஏ.கே-47 னுடன் ஒருவன் பார்த்துக் கொண்டிருந்தான். விரைவாக வரும்படி உறுமிக் கொண்டும் மிரட்டிக் கொண்டுமிருந்தான்;. எனக்கு மலம் வரவில்லை. அவர்களின் விருப்பப்படி, உயிரியல் அமைப்பு திடீரென மலத்தை வெளியேற்றுவதில்லை என்பதை, அந்த துப்பாக்கி ஏந்திய பாசிச மரமண்டைகளுக்கு தெரிவதில்லை. துப்பாக்கி அனைத்தையும் சாதிக்கும் என்று நினைப்பவர்கள், இயற்கையை மீறி மலத்தைக் கழிக்க கோருகின்றனர். ஆனால் இயற்கையாக மலம் வரும் போது, துப்பாக்கி முனையில் பலாத்காரமாக நிறுத்தக் கோருகின்றனர். இதை அவர்கள் எந்த வெட்கமும் இன்றி செய்வதில், இதையே சாதனையாகவும் வீரமாகவும் கருதுகின்றனர். நான் மலம் கழிக்காத நிலையில் மீண்டும் கொண்டு வரப்பட்டு, அறையில் விட்டுச் செல்லுகின்றனர். கொண்டு வரும் போது அவர்கள் காலை உணவை உண்பதை அவதானித்தேன். ஆனால் அன்று காலை எனக்கு உணவு தரவில்லை.

அந்த வதைமுகாமின் அமைப்பு பற்றி சிறிது பார்ப்போம். எனது அறையே, வீட்டின் பிரதான (சாமி அறையும் கூட) அறையாகும். எனது அறைக்கு அருகில் இன்னுமொரு அறை உண்டு. இந்த இரு அறையின் நீளத்தை உள்ளடக்கும் வகையில் ஒரு வரவேற்பு அறை உண்டு. அந்த வரவேற்பு அறையில் தான், இரண்டு அறையின் கதவுகளும் இருந்தன. இந்த வரவேற்பு அறை தான், பாசிட்டுகள் தங்குமிடம் முதல் அனைத்தும். அந்த அறையில் ஒரு தொலைக்காட்சி அதற்கான வீடீயோ, ஒரு ரேடியோ, ஒரு ஒலிநாடா (ரேப் றெக்கோடர்) என்பன இருந்தன. இரண்டாவது அறைவாசலில் பெரியதொரு மேசை இருந்தது. இது முன்பு அந்த வீட்டு உரிமையாளரின் சாப்பாட்டு மேசையாக இருந்திருக்கலாம். வரவேற்பு அறையில் பெரிய ஒரு கதிரையும் (செற்றி), சில சிறு கதிரைகளும் இருந்தன. இதைவிட ஒரு பெரிய அலுமாரி மேசைக்கு அருகில் இருந்தது. இந்த அலுமாரியின் உள்ளடக்கம், பலரின் உயிரை வதைத்து சித்திரவதை செய்து பலியிட்டு உருவாக்கிய பலரின் வரலாறுகளை அது கொண்டிருந்தது. இந்த அலுமாரி முதன்முதலாக புலிகள் வரலாற்றில், கைதிகள் பற்றிய ஆவணங்களை சேகரிக்க தொடங்கியதை நிறுவியது. கைதிகள் பற்றியும், தமது மக்கள் விரோதத்துக்கு ஏற்ற புதிய தகவல்கள் என்று, இந்த அலுமாரி நிரம்பிக் கிடந்தது. அத்துடன் கைப்பற்றப்படும் புதிய வகையான செய் ஆயுதங்கள் பற்றிய தரவுகள், அவை எந்த இயக்கத்துக்குரியது போன்ற விபரங்களை இந்த அலுமாரி தாங்கி நின்றது. இவை நான் அங்கு வதைக்கப்பட்ட நீண்ட நாட்களில், மலம் கழிக்க போகும் போது அன்றாட அவதானங்கள் முலம் தெரிந்து கொண்டவை. இந்த அலுமாரியில் கைதிகளின் படங்களை, இரண்டு வடிவங்களில் எடுத்து சேகரித்து வைத்திருந்தனர். என்னையும் இரண்டு தோற்றம் கொண்ட படங்களை இடையில் எடுத்தனர். இந்த வதைமுகாமில் இருந்துதான், மக்கள் விரோத பாசிச ஆவண காப்பகமாக அது வளர்ச்சி பெற்றது. எதிர்கால படுகொலை மற்றும் சித்திரவதைக்கு அமைவாக இவைகளை தயாரித்தனர். தமது பாசிச சர்வாதிகார மக்கள்விரோத வக்கிரத்தை நிறுவ, இது அவர்களுக்கு அடிப்படையாக அவசியமாகவிருந்தது.

வரவேற்பு அறையும் இரண்டாவது அறையின் சந்திப்பில், ஒரு கதவு இருந்தது. அந்த கதவு நடை பாதைக்குள் இட்டுச் சென்றது. இதன் வலதுபக்கத்தில் மலசலகூடமும், அதற்கு நேர் எதிராக குளிக்கும் அறையும் இருந்தது. இந்த நடைபாதையின்  இடது பக்கத்தில் சமையல் அறை அமைந்திருந்தது. இந்த நடை பாதையின் இடது பக்கத்தில் சமையல் அறையை தொடர்ந்து வெளிச் செல்லும் வண்ணம் கதவு ஒன்று காணப்பட்டது. இந்த சமையல் அறைக்கும் குளிக்கும் அறைக்கும் இடையில், அநேகமாக பொருட்கள் வைக்கும் அறை ஒன்று இருந்தது. எனது அறையும் வரவேற்பறையும் சந்திக்கும் இடத்தில் இருந்த கதவு, வீட்டிற்குள் வரும் சிறிய ஒரு முன் வரவேற்;பு அறைக்குள் இட்டுச்சென்றது. அந்த வரவேற்;பு அறை வெளியில் இருந்து உள் வரும், கதவை கொண்டிருந்தது. இந்த கதவுக்கு எதிராக ஒரு அறை இருந்தது. இந்த அறை எனக்கு பக்கத்து அறையும் கூட. இந்த கட்டிடத்தில் ஐந்து அறைகள் மூடப்பட்டு (குசினி உள்ளடங்க), அதற்குள் வதைகள் தொடர்ச்சியாக நிகழ்ந்தன. அவர்கள் மற்றைய இடங்களையே, தமது சொந்த தேவைக்கு பயன்படுத்தினர்.

என்னை அறையில் விட்டு சென்ற சிறிது நேரத்தில் மலம் கழிக்க இயற்கை கோரியது. கதவை நீண்ட நேரம் தட்டிய பின்பே திறந்தவர்களிடம், மலம் கழிக்க வேண்டும் என்று கோரினேன். அவர்கள் மறுத்தபடி என்னை எச்சரித்தனர். என்னால் மலத்தை அடக்க முடியாத நிலையில், வயிற்றைக் குழப்பியது.  அந்த அறையில் இருப்பதைத் தவிர எனக்கு வேறுவழியில்லை. இந்த அறையில் கொலுவீற்றிருந்த இருந்த உயிரற்ற சாமிகளுக்கு, அடிக்கடி நான் அவர்களின் துணையுடன்; இரத்தம் கலந்த மலம், சலம், இரத்தம் மூலம், நாற்றம் கொண்ட படையலை தொடர்ச்சியாக படைத்தேன்;. மனித அவலங்கள் மற்றும் அலறல் மூலம், அவர்கள் இன்னிசையைக் கேட்டும் ரசித்தும் தொடர அவர்களுக்கு அருள் வழங்கினர். கடவுளுக்கான உயிர்ப்பலி பூசை போல், சித்திரவதை பூசைகளையும் கூட, உயிரற்ற, மனிதனின் கற்பனையான கடவுள்கள் கண்டு கழித்து இன்புற்றனர். இந்த வதைகளையும், சித்திரவதைகளையும், மனித அவலங்களையும், இல்லாத கடவுள் எப்படித்தான் கண்டு கொள்ள முடியும்;. கடவுள் இருக்கின்றதாக நம்புகின்றவர்கள், இந்த கடவுள்கள் எல்லாம் மனித அவலத்தை ஏன் சகித்துக் கொண்டு அதற்கு அருளுகின்றார்கள் என்பதை விளக்குவதில்லை. மனித விரோதத்தை ஏன், உலக முழுக்கவும் உள்ள எல்லா கடவுள்களும் ஆதரித்து நிற்கின்றனர்.

மலத்தை அறையில் இருந்த பின்பு அவர்களை தட்டி அழைத்தேன்;. மலம் இருந்ததை கூறினேன். உறுமியவர்கள் திரும்பிச் சென்றனர். அரை மணித்தியாலம் கழித்து திரும்பியவர்கள், அதை துடைக்கக் கோரி பேப்பரை தந்து விட்டுச் சென்றனர். அரை மணித்தியாலம் கழித்து திரும்பி வந்தவர்கள், நெருப்புத் தண்ணீரை ஊற்றி விட்டு என்னை அழைத்துச் சென்று மலத்தை எறியக்; கோரினர். பின் மலம் கழிக்கக் கோரினர். அதன் பின்பு அறையில் விடப்பட்ட நிலையில், நேரம் மெதுவாக அறையின் ஈரலிப்பின் மேல் நகர்ந்தது. அன்றைய வெயிலின் கோர வெக்கை, அறையிலும் பிரதிபலித்தது. நெருப்புத் தண்ணீரின் ஈரலிப்புடன் கூடிய நாற்றம் கொண்ட மணத்தையும் மீறி, ஈரம் வெது வெதுப்பாக மாற்றி இருந்தது. நான் அந்த ஈரலிப்பின் மேல் இருந்தும், படுத்தபடியும் அன்றைய நாள் மெதுவாக நகர்ந்தது. அறைக்குள்ளான மலம் கழிப்பு, அங்கிருந்த நாட்கள் பூராவும் அடிக்கடி ஒரு பிரச்சனையாக இருந்தது. ஒரு கட்டத்துக்கு மேல் அவர்கள் அறையைத் திறக்க மறுத்தால், எந்த தயக்கமும் இன்றி  அறையில் இருந்து விடுவதை ஒரு வடிவமாகவே கொண்டேன்;. பிற்பட்ட காலத்தில் இடைக்கிடை தந்த பேப்;பர் மேல் மலத்தை கழித்து மூடிவைக்கவும் தொடங்கினேன். இந்த நாற்றம் கொண்ட அறையை என்றும் கூட்டியதோ கழுவியதோ இல்லை. மலம், மூத்திரம், இரத்தம், நெருப்புத்தண்ணீர் என அனைத்தும் கலந்த ஒரு கெட்ட நாற்றமே வீசியது. காற்று இன்றி, வெய்யில் படாத நிலையில் ஒருவிதமான சக்கு மணம் அறையை குமட்டியது. இதற்கு நான் படிப்படியாக இசைவாக்கப்பட்டேன். இது எனக்கான முதல்வதைக்குரிய சித்திரவதை அறையல்ல. இதற்கு முன்பும் இந்த அறை யாரோ ஒருவரின், தொடர் வதை அறையாகத்தான் இருந்து வந்துள்ளது. அறையில் கைக்கு எட்டாத உயரத்தில் படிந்து கிடந்த சிலந்திக் கூடுகள், இதை தெளிவுபடவே அதை உறுதி செய்தது. மனிதர்கள் பயன்பாடற்ற நிலையில், மனிதர்களை அரை உயிரில் வைத்து ஒநாய்கள் தமது வேட்டைகளை வதைத்து சிதைத்ததை, அறையில் மணம் முதல் உள் தோற்றம் வரை தெளிவுபடவே அதை வெளிப்படுத்தியது.

தொடரும்
பி.இரயாகரன்

28.மே 2ம் திகதி 1987 இல் புதிய வதைமுகாம் நோக்கி பயணம் (வதை முகாமில் நான் : பாகம் - 28)

 

27.முதலாவது வதைமுகாமில் எனது அறை (வதை முகாமில் நான் : பாகம் - 27)

 

26.முதல் நான்கு நாட்களும் தொங்கவிட்ட நிலையில் நடந்த சித்திரவதைகள் (வதை முகாமில் நான் : பாகம் - 26)

 

25.என்.எல்.எப்.ரி.யே என்னைக் கடத்தியிருப்பதாக சொன்ன முட்டாள் புலிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 25)

 

24.7.30 மணிக்கு தொடங்கிய சித்திரவதை (வதை முகாமில் நான் : பாகம் - 24)

 

23."தற்கொலை செய்வது பற்றி நீ என்ன நினைக்கின்றாய்" இதுதான் புலிகள் கேட்ட முதற் கேள்வி (வதை முகாமில் நான் : பாகம் - 23)

 

22.மாலை 6.30 மணிக்கு புலித் தளபதி தீபன் என் தலையில் துப்பாக்கியை வைத்துக் கடத்தினான் (வதை முகாமில் நான் : பாகம் - 22)

 

21.28.04.1987 புலிகள் என்னை கடத்திய அன்று (வதை முகாமில் நான் : பாகம் - 21)

 

20.புலி அல்லாத அனைவரும் சமூக விரோதிகள் - மாத்தையா (வதை முகாமில் நான் : பாகம் - 20)

 

19.புலிப் பாசிசத்துக்கு அஞ்சி, பத்திரிகைகள் அன்று வெளியிடாத எனது உரை (வதை முகாமில் நான் : பாகம் - 19)

 

18.என்னைக் கடத்துவதற்கு முன் (வதைமுகாமில் நான் : பாகம் - 18)

 

17.புலிகள் என்னை கடத்துவதற்கான என் மீதான கண்காணிப்பு (வதை முகாமில் நான் : பாகம் - 17)

 

16. எனது போராட்டமும் புலிகளின் கடத்தலும் (வதை முகாமில் நான் : பாகம் - 16)

 

15. ஈவிரக்கமற்ற கொலைகாரத்தனம் தலைமைத்துவத்தை வழங்க, அது தேசியமாகியது (வதை முகாமில் நான் : பாகம் - 15)

 

14. சுயநிர்ணயம் என்பது மனித உரிமையைக் கோருவதாகும் (வதை முகாமில் நான் : பாகம் - 14)

 

13. கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தை மறுத்து உருவானதே புலிப்பாசிசம் (வதை முகாமில் நான் : பாகம் - 13)

 

12. புலிப் பாசிசத்தின் தோற்றுவாய் (வதை முகாமில் நான் : பாகம் - 12)

 

11. புலிப் பாசிசத்தின் தோற்றமும் என்பது வரலாற்று நீட்சி (வதை முகாமில் நான் : பாகம் - 11)

 

10. புலிகள் பாசிட்டுகளே ஒழிய ஒரு மக்கள் இயக்கமல்ல (வதை முகாமில் நான் : பாகம் - 10)

 

09. பாசிசம் குறித்து அடிப்படையான தரவுகள் (வதை முகாமில் நான் : பாகம் - 09)

 

08. மக்கள் விரோத துரோகக் குழுக்களும், அவர்களின் பாசிசக் கோட்பாடுகளும் (வதை முகாமில் நான் : பாகம் - 08)

 

07. இனவாத யுத்தம் மக்களின் அவலங்களை முடிவின்றி பெருக்கியது (வதை முகாமில் நான் : பாகம் - 07)

 

06. சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிராக சிங்கள பேரினவாதம் (வதை முகாமில் நான் : பாகம் - 06)

 

05. பாசிசம் கட்டமைத்த அரசியல் மீது (வதை முகாமில் நான் : பாகம் - 05)

 

04. புலியின் இந்த வதைமுகாமுக்கு முன்னும் பின்னுமான படுகொலை முயற்சிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 04)

 

03. மக்களை ஒடுக்கும் தேசியம், பாசிசத்தை விதைக்கின்றது (வதைமுகாமில் நான் : பாகம் - 03)

 

02. 1987ம் ஆண்டு என் நினைவுக்குள் நுழைய முன்.. (வதை முகாமில் நான் : பாகம் - 02)

 

01. வதை முகாமில் நான் : மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை - (வதை முகாமில் நான் : பாகம் - 01)