மத்திய குழுக் கூட்டங்கள் இரண்டு மூன்று தடவை நடைபெறுகிறது. ஒவ்வொரு தடவையும் பிரபாகரன் தனது அதிர்ப்தியைத் தெருவித்துக்கொள்கிறார். புதியபாதையின் ஒரு இதழ் மட்டுமே வெளிவருகிறது. மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் வெளிவந்த அந்த வெளியீட்டின் பின்னர் அது நிறுத்தப்பட்டு விடுகிறது. அப்போது நடைபெற்ற மூன்று மத்திய குழு ஒன்று கூடல்களுக்கும் பிரபாகரன் தவறாமல் வருகிறார்.
இராணுவ வழிமுறை தான் சரியானது என மீண்டும் மீண்டும் வாதிக்கிறார். இலங்கை அரசின் பேரினவாத அடக்குமுறைக்கு எதிரான எமது நடவடிக்கைகள் குறித்து மத்திய குழுவில் பேசப்படுவதைவிட எமது உள்முரண்பாடுகள், இயக்கத்தின் திசைவழி ஆகியவற்றைச் சுற்றியே விவாதங்கள் தொடர்கின்றன. வெகுஜன அமைப்புக்களை உருவாக்குவது என்பது பிரபாகரனிற்குத் தேவைவற்ற ஒன்றாகவே தென்படுகிறது. புதிய தாக்குதல்கள் மேற்கொள்ள வேண்டும்; ஆயுதங்களையும் அவற்றைக் கையாளத் தெரிந்தவர்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பது மட்டும் தான் அவரது நோக்கமாக இருந்தது.
ஒரு வகையில் இன்றைய புறநிலைகளிலிருந்து சிந்திக்கும் போது இந்த விவாதங்கள் என்பன ஒரு அரசியல் இயக்கத்தின் செல் திசை நோக்கிய ஆரம்ப விவாதங்களாகவே அமைந்திருக்கலாம் என்று கருதுவதுண்டு. இரண்டு முரண்பட்ட பக்கங்களிலும் அனுபவமின்மை அரசியல் வளர்ச்சியின்மை போன்றன விவாதங்கள் தனிநபர் பிரச்சனைகளாக மாறியதுண்டு. தவிர, தமிழர் விடுதலைக் கூட்டணி தமது உணர்ச்சி அரசியலூடாக ஏற்படுத்தியிருந்த தேசிய அலையின் சூழ்நிலைக் கைதிகளாக பலர் மாற்றமடைந்திருந்தனர்.
இன்று கூட்டம் கூட்டமாக மக்களைக் கொலைசெய்யும் நிலைக்கு வளர்ச்சியடைந்திருக்கும் இலங்கை நவ பாசிசப் பேரினவாதம் அன்று தனது வேர்களை தமிழ் மக்கள் மீது ஆழப்படரவிட்டுக்கொண்டிருந்தது. 79ம் ஆண்டு காலப்பகுதியில் பயங்கரவாதத் தடைச்சட்டம் இலங்கை அரசால் மேலும் தீவிரப்படுத்தப்படுகிறது.
பிரபாகரன் சார்ந்தவர்கள் எமக்கு எதிரான பிரச்சாரங்களை உறுப்பினர்கள் மத்தியில் மேற்கொள்கின்றனர். மறுபுறத்தில் சுந்தரம் போன்றோரும் தமது பிரச்சாரங்களை பிரபாகன் மீதும் அவர் சார்ந்த குழுவினரின் மீதும் விமர்சனங்களாகப் பிரச்சாரம் செய்கின்றனர். பிரபாகரனிற்கோ சுந்தரம் போன்றோருக்கோ இவ்விணைவிலும் மத்திய குழுவின் இருப்பிலும் எந்த நம்பிக்கையும் இருந்ததில்லை. அவர்கள் இணைவை விரும்பவும் இல்லை.
பல சந்தர்ப்பங்களில் சுந்தரத்தினதும் பிரபாகரன் குழுவினரதும் விமர்சனங்கள் தனிமனித வசைபாடல்களாகவும் காணப்பட்டன.
சுந்தரம் சார்ந்தோர் தவறுகள் அனைத்திற்கும் பிரபாகரன் தான் காரணம் என்ற வகையில் அவரின் இயல்புகள், நடைமுறைகள் குறித்த வசைபாடல்களையும், மறு புறத்தில் பிரபாகரன் சார்ந்தோர் நான் உட்பட சுந்தரம் போன்றோருக்கு எதிரன பிரச்சாரங்களை உறுப்பினர்கள் மத்தியிலும் ஆதரவாளர்கள் மத்தியிலும் மேற்கொண்டனர்.
பிரபாகரன், ராகவன், தனி, அன்டன், போன்றோர் முன்பிருந்தவாறே பிரிந்து செல்கின்றனர். நானும் சார்ந்தனும் எமது குழுவோடு இணைந்து கொள்கிறோம். பிரிவு நிரந்தரமாக, தனித்தனியாகச் செயற்பட ஆரம்பிக்கிறோம்.
இப்போதும் நாம் பிரிந்து செல்லும் வேளையில் குமரப்பா, மாத்தையா போன்றோர் மிகவும் மன வேதனையடைகின்றனர். மாத்தையா என்னிடம் மறுபடி வந்து நானும் பிரபாகரனும் தனது இரு கண்கள் போல தான் எங்கு செல்வது என்ற மனக் குழப்பத்தில் இருப்பதாகச் சொல்கிறார். குமரப்பா அரசியலிலிருந்து விலகிச் சென்றுவிடுகிறார்.
நாம் தனியாகச் செயற்பட ஆரம்பித்ததுமே புதியபாதை இதழின் வெளியீட்டுக்கான செயற்பாடுகளையும் ஆரம்பித்துவிட்டோம். சுந்தரம் மிகத் தீவிரமாகச் செயற்பட ஆரம்பிக்கிறார்.
இதே வேளை மாத்தையா, மனோமாஸ்டர், அன்டன், தனி, ராகவன்,ஆசீர்,பண்டிதர், சங்கர் , புலேந்திரன் போன்றோர் இணைந்த பிரபாகரன் சார்ந்த குழுவும் தனது செயற்பாடுகளை விரிவுபடுத்த ஆரம்பிக்கிறது. பிரபாகரன் குழுவிலிருந்த பெரும்பாலானோர் இராணுவத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தவர்கள். எது எவ்வாறாயினும், மத்திய குழுவற்ற கூட்டு முடிவுகளற்ற நடைமுறைகளின் எதிர் விளைவுகளை அவர்கள் உணர்ந்திருந்தனர். இதனால், அவர்கள் மத்திய குழு ஒன்றை உருவாக்குவதற்கான கோரிக்கை ஒன்றை முன்வைக்கின்றனர். இந்தக் கோரிக்கையுடன் பிரபாகரன் முரண்பட ஆரம்பிக்கிறார்.
ஒரு இராணுவக் குழுவிற்கு அதிகாரி போன்ற தனித் தலைமை ஒன்றே அவசியமானது என்ற கருத்தை வலியுறுத்துகிறார்.
பிளவு ஏற்படுவதற்கு முன்பதாக இருந்த மத்திய குழுவில் பிரபாகரனுக்கு ஏற்பட்ட அனுபவங்களும் கூட குறைந்தபட்ச ஜனநாயகத்தைக் கூட ஏற்றுகொள்ள முடியாத நிலைக்கு வருகிறார். உமாமகேஸ்வரன் இயக்கத்திலிருந்து விலகிச்சென்றதும் பிரபாகரன் ஏற்கனவே முற்றாக இந்த முடிவிற்கு வந்திருக்க வேண்டும் என்றே நம்புகின்றேன். இந்தியாவில் அவரோடு தங்கியிருந்த ஏனையோருக்கு குறிப்பாக ரவி போன்றோருக்கு தலைமைக்கு எதிராகப் பேசக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டதாக அறிந்திருந்தேன்.
இதே வேளை சுந்தரம் கண்ணன் போன்ற எமது குழுவிலிருந்தவர்களுக்கு உமாமகேஸ்வரனுடன் தொடர்புகள் ஏற்படுகின்றது. அவ்வேளையில் இந்தியாவிலிருந்த உமாமகேஸ்வரன் இலங்கைக்கு வருகிறார். எழுபத்தி ஒன்பதாம் ஆண்டு காலிறுதிப் பகுதியில் கண்ணன், சுந்தரம் போன்றோர் தாம் உமாமகேஸ்வரனைச் சந்தித்ததுப் பேசியதாக எமக்குத் தெரிவிக்கின்றனர்.
உர்மிளா தொடர்பான பிரச்சனையில் உமாமகேஸ்வரனைக் கொலைசெய்வதற்காக அனுப்பிவைக்க்பபட்டவர்களில் சுந்தரமும் ஒருவர். அவ்வேளையிலிருந்தே உமாமகேஸ்வரனுடன் சுந்தரத்திற்குத் தொடர்பிருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எம்மில் பலருக்கிருந்த சந்தேகம் இப்போது உறுதியானது போலிருந்தது.
சுந்தரத்தின் அனுசரணையோடு சுழிபுரம் பகுதியிலேயே உமாமகேஸ்வரன் தங்கியிருந்தாகவும் அவர்கள் எமக்குத் தெரிவிக்கின்றனர்.
உமாமகேஸ்வரனுக்கும் எமது கருத்தோடு உடன்பாடு இருப்பதாகவும் அவர் எம்மோடு இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்தாகவும் சுந்தரம் சில நாட்களில் எங்களுக்குத் தெரிவிக்கிறார். எம்மில் பலர் சுந்தரத்தின் இந்தச் செயற்பாடு குறித்து ஆச்சரியமடைகிறோம். உமாமகேஸ்வரனும் பிரபாகரன் போலவே தூய இராணுவக் கண்ணோட்டத்தை உடைய ஒரு போராளியாகவே வாழ்ந்த காலங்களை நாம்மில் பலர் அறிந்திருந்தனர். இதனால் எமக்குள் எதிர்ப்புக் குரல்கள் மேலெழுகின்றன. அழகன், நந்தன், நாகராஜா, நெப்போலியன் போன்றோருடன் நான் உட்பட பலர் உமாமகேஸ்வரன் உள்வாங்கப்படுவதை விரும்பவில்லை.
பல இழப்புகள் தியாகங்களுக்கு மத்தியில் உருவான எமது உறுப்பினர்களின் ஒன்றிணைவைப் பாதுகாக்கும் நோக்கோடு உமாமகேஸ்வரனின் வருகையை அதிகமாக விரும்பாத நான் உட்பட நம்மில் பலர் இறுதியில் அவரை ஏற்றுக்கொள்கிறோம். அதே வேளை இதனை முற்றாக எதிர்த்த நந்தன் சிவம் போன்றோர் விலகிச் சென்றுவிடுகின்றனர்.
குமணன் போன்ற பலர் மிகுந்த அதிர்ப்தியுடனேயே செயற்படுகின்றனர். உமாமகேஸ்வரனும் மக்கள் அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று கூறியதும் நான் அவரது இணைவை ஏனையோர் போல எதிர்க்கவில்லை. 1979 ஆம் ஆண்டு நவம்பர் மாதமளவில் எமது குழுவிற்கு ஒரு பெயர் ஒன்றைத் தெரிவி செய்யவேண்டும் என்ற கருத்துப் பரவலாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. சுந்தரம் முன்மொழிந்த பெயர் பின்னதாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்ப்படுகிறது. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)) என்ற பெயர் அப்போது தான் உருவாகிறது.
இதே காலப்பகுதியில் உமாமகேஸ்வரனின் இணைவைத் தொடர்ந்து சந்ததியாரும் எம்மோடு இணைந்து கொள்ள விருப்பம் தெரிவிக்கிறார். உமாமகேஸ்வரனுடனூடான தொடர்பின் வழியாக எம்மோடு இணைவதற்கு முன்வருகிறார். இறைகுமாரன் உமைகுமாரன் ஆகியோருடன் சந்ததியார் தனிக் குழுவாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார். அவர்களின் குழுவில் இணைந்திருந்தவாறே அவர்களுக்குத் தெரியாமல் சந்ததியார் எம்மோடும் இணைந்து தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கிறார்.
இப்போது புளட் அமைப்பிற்கு மத்திய குழு ஒன்றைத் தெரிவுசெய்து எமது செயற்பாடுகளை வேகப்படுத்த வேண்டும் என்ற முடிவிற்கு வருகிறோம்.
அந்த மத்திய குழுவிற்கு சாந்தன், உமாமகேஸ்வரன், சுந்தரம், நான், சந்ததியார் ஆகியோர் தெரிவுசெய்யப்படுகிறோம்.
மத்திய குழு தெரிவான பின்னர் நடைபெற்ற விவாதங்களில் இராணுவத் தாக்குதல்களைத் நிகழ்த்த வேண்டும் என்ற கருத்தை உமாமகேஸ்வரன், சுந்தரம், சந்ததியார் ஆகியோர் முன்வைக்கின்றனர். நானும் சாந்தனும் முதலில் வெகுஜன அமைப்புக்களை உருவாக்கி அதன் பலத்தில் இராணுவத் தாக்குதல்களைத் திட்டமிடுவோம் என்ற கருத்தை முன்வைக்கிறோம். பின்னதாக இரண்டு நடவடிக்கைகளையும் சமாந்தரமாக முன்னெடுக்கலாம் என்ற கருத்து மேலோங்கிறது.
மறுபடி சிறிய அளவில் எம்மத்தியில் விவாதங்கள் ஆரம்பமாகின்றன. பல உறுப்பினர்கள் மத்தியில் விரக்தியும் வெறுப்பும் குடிகொள்கிறது. சுந்தரம், உமாமகேஸ்வரன், சந்ததியார் போன்றோர் எமது குழுவின் மீது அதித செல்வாக்குச் செலுத்துவதாகவும் தவறான வழியில் மறுபடி செல்வதாகவும் பலரால் உணரப்படுகின்றது.
இதன் மறுபக்கத்தில் எமக்கிருந்த பண நெருக்கடியும் ஒரு காரணமாக சுந்தரம், உமாமகேஸ்வர போன்றோரால் முன்வைக்கப்படுகிறது. எமது அன்றாட வாழ்விற்கான பணத்தைத் திரட்டிக்கொள்வதில் மிகுந்த சிக்கல்களை எதிர்கொண்ட நிலையில் உமாமகேஸ்வரன் சுந்தரம் போன்றோர் இதனை எதிர்கொள்வதற்காக கொள்ளை முயற்சி ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கின்றனர்.
மக்களிடம் சென்று அவர்கள் அவர்களில் தங்கியிருத்தல் என்ற நிலை நிராகரிக்கப்பட்டு மக்களிலிருந்து அன்னியப்படும் செயற்பாடுகள் ஆரம்ப்பிக்கப்படுகின்றன. இவற்றை இறுதியில் நாங்களும் நிராகரிக்கவில்லை. இதே வேளை பிரபாகரனுக்கும் அவர் சார்ந்த குழுவினருக்கும் இடையேயான முரண்பாடு உச்ச நிலையை அடைகிறது. பிரபாகரன் மத்திய குழு அமைப்பதற்கும் கூட்டு முடிவிற்கான தளத்தை ஏற்றுக்கொள்வதிலும் முழுமையான நிராகரிப்பைத் தெரிவிக்கிறார். அவர்களின் உறுப்பினர்களிடையேயான அதிர்ப்தி காரணமாக செயற்பாடுகள் எதுவுமின்றி நாட்களை நகர்த்துகின்றனர்.
(இன்னும்வரும்..) 01.20 வயது கூட நிரம்பாத இளஞன் தம்பி பிரபாகரன்-ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் 02.70களில் பிரபாகரன் எமக்கெல்லாம் ஒரு ஹீரோ – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் 03.தமிழீழ விடுதலைப் புலிகளின் தோற்றம் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (மூன்றாம் பாகம்) 05.பற்குணம் – இரண்டாவது உட்படுகொலை – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பகுதி ஐந்து) : ஐயர் 06.புலிகளின் உறுப்பினராகும் உமா மகேஸ்வரன்- ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் ஆறு) ஐயர் 07.புலிகளின் தலைவராகும் உமாமகேஸ்வரன் : ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் ஏழு) : ஐயர் 08.புதிய பண்ணைகளும் புதிய போராளிகளும் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் எட்டு) 09.சக போராளிகளுடனான எனது அனுபவக் குறிப்புகள் – ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் ஒன்பது) 10.நிசப்தம் கிழித்த கொலைகள் ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் ஐயர் பாகம் பத்து 11.கொலைகளை உரிமைகோரும் புலிகள்– ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பதினொன்று) 12.அடிமைச் சாசனம்- புலிகளின் எதிர்வினை – ஈழப்ப்போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 12) 13 வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்ட வங்கிக் கொள்ளை-ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 13) 14.பிரபாகரனை எதிர்க்கும் போராளிகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 14) : ஐயர் 16.கொல்லப்படுவதிலிருந்து தப்பிய உமாமகேஸ்வரன் (பாகம்16) 18.புத்தகத்தைப் பறித்தெறியும் பிரபாகரன் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்(பாகம்18) : ஐயர் 19.இரண்டாகப் பிளவுறும் விடுதலைப் புலிகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம்19) : ஐயர்
20.புதிய பாதையின் தோற்றம் – ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம்20) : ஐயர்
22.மீண்டும் ஒருங்கிணையும் விடுதலைப் புலிகள்- ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 22)