தூத்துக்குடியையே நஞ்சாக்கிவரும் வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான "ஸ்டெர்லைட் தாமிரா" உருக்காலை நிறுவனம், வரிஏப்பு மூலம் ரூ.750 கோடியைச் சுருட்டியுள்ள விவகாரம் அண்மையில் வெளிவந்துள்ளது.


ஸ்டெர்லைட் ஆலையில் தாமிரக் கம்பிகள், தாமிர கேத்தோடுகள் முதலானவை உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்காக தாதுப் பொருளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து, அதே நாடுகளுக்கு உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்தால் இறக்குமதி வரியில் சலுகை வழங்கப்படும். ஆனால் இந்தியாவில் தாமிரப் பொருட்களுக்கு தேவை அதிகமிருப்பதால், உள்நாட்டிலேயே அவற்றை இரகசியமாக விற்றுவிட்டு, ஏற்றுமதி செய்ததாகக் கணக்கு காட்டி இந்நிறுவனம் கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் ஏறத்தாழ ரூ.750 கோடிக்கு இறக்குமதி வரிஏப்பு செய்துள்ளது.

மத்திய சுங்க மற்றும் கலால் வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வரிஏப்பு தொடர்பான ஆவணங்களைக் கைப்பற்றி, ஸ்டெர்லைட்டின் துணைத்தலைவர் வரதராஜனை கடந்த 24 -ஆம் தேதி தூத்துக்குடி நீதிமன்றத்துக்குக் கொண்டுவந்தனர். இச்செய்தியறிந்து மனித உரிமை பாதுகாப்பு மையம், நாம் தமிழர் இயக்கம் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் திரண்டு வரதராஜனை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக் கோரி முழக்கமிட்டனர். சமூக உணர்வு கொண்ட வழக்குரைஞர்களின் போராட்டக்குரல் எங்கும் எதிரொலிக்க, வரதராஜனைச் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். வெளியே கொண்டுவந்தபோது, வழக்குரைஞர்கள் முழக்கமிட்டவாறே மோசடி மன்னன் வரதராஜனை அடிக்க முயன்றனர். பெருமுயற்சிக்குப் பின்னரே போலீசார் அவனை மீட்டனர். இந்த வழக்கிற்காக இலண்டனில் இருக்கும் வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வாலைக் கைது செய்து, இந்த நச்சு ஆலையை முடக்கக் கோரி மக்களைத் திரட்டி பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வழக்குரைஞர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.


தகவல்: மனித உரிமை பாதுகாப்பு மையம், தூத்துக்குடி.