Language Selection

28.04.1987 என் சுதந்திரத்தை இழந்த, மறக்கமுடியாத ஒரு மாலைப் பொழுதாகிவிட்டது. அன்று கொலைகார புலிக் கும்பலின் கண்காணிப்பில் நான் இருந்ததை அறிந்திருக்கவில்லை. அன்று மாலை  எனது ஊரான வறுத்தலைவிளானில் இருந்து தெல்லிப்பழையை நோக்கி இராணுவம் முன்னேற முயன்றதால், புதிய மோதல் புலியுடன் தொடங்கியிருந்தது. துப்பாக்கி வேட்டுகளும், இடை இடையேயான செல்லுமாக சத்தம் இரைந்து கொண்டிருந்தது. நான் நிலைகொண்டிருந்த இடத்துக்கும் (மகாஜனாக் கல்லூரிக்கு அருகில்)  மோதல் நடைபெற்ற இடத்துக்கும் இடையில் ஒரு மைல் தூரமே இருந்தது.

நான் இரவு தங்கி தலைமறைவாகும் இடத்தை தெரிவு செய்தபடி, அங்கு தொலைக்காட்சியை பார்க்கும் எண்ணத்துடன் வீதியை நோக்கி சைக்கிளை நகர்த்தினேன். அப்போது காலை முதல் மோட்டார் சைக்கிளை தள்ளி இயக்க முனைந்த நபர் (தீபன்), வீட்டு வாசலைக் கடந்து எனக்கு முன்பாக வீதியில் நடந்து செல்வதைக் கண்டேன்;. உடனடியாக அவர் என்னிடம் தானும் எனது சைக்கிளில் தெல்லிப்பழைச் சந்தி வரை வரப்போவதாக கோரினார். நான் தெல்லிப்பழை சந்திக்குச் செல்லவில்லை என்று கூறிய போது, அவர் கொஞ்ச தூரமாவது கொண்டு சென்று விடும்படி கெஞ்சினார். அந்த இடத்தில் காலை தொடக்கம் ஒரு மோட்டார் சைக்கிளை தள்ளி இயக்க முடியாத பரிதாபத்தை கருத்தில் கொண்டு, உதவும் நோக்கில், சைக்கிளில் ஏற்றிக் கொண்டேன்;. நான் பரிதாபப்பட்ட அதேநேரம், அவரும் அப்படியே கோரினார்.

அவரை ஏற்றும் போது தெல்லிப்பழைச் சந்தி வரை அல்ல, நான் செல்லும் இடம் வரை கொண்டு சென்று விடுவதாகவே வாக்குக் கொடுத்தேன். அந்த இடம் நான் அவரை ஏற்றிய இடத்தில் இருந்து 100 மீற்றர் தூரத்தில் இருந்தது. சைக்கிளில் ஏறியவரின் இடுப்பில் இருந்த ஆயுதம், என் கையில் இடிபடுவதை உணர்ந்தேன். அப்போதே அவரின் அகன்ற பெரிய சேட்டை அவதானித்தேன். ஆயுதங்களை இடுப்பில் மறைக்க அச் சேட்டை பயன்படுத்தியதை அவதானித்தேன். இது விசேடமாக புலிகளுக்குரிய விசேட உடுப்பாக அன்று இருந்தது. அப்போது நான் அவரிடம் அவரின் துப்பாக்கி எனது கையில் இடிபடுவதை வெளிக்காட்டாது, நீங்கள் புலியா? என வினாவினேன். அவர் இல்லை என்றார். அப்போது நான் அவரிடம் அடுத்த கேள்வியாக நீங்கள் வேறு இயக்கமா? என மீண்டும் கேட்டேன். அதற்கும் அவர் இல்லை என்றார். அன்று புலிகளைத் தவிர வேறு யாரும் ஆயுதங்களுடன் திரிவதில்லை. எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதே நேரம் எமக்கிடையில் மௌனம் ஒரு மொழியாகியது.

நான் திரும்ப வேண்டிய இடம் வந்தவுடன் அவரிடம் இறங்கும் படி கோரினேன். அவர் தெல்லிப்பழை சந்தியில் விடும்படி மீண்டும் கெஞ்சினார். மிக அருகில் இராணுவத்துடன் சண்டை நடப்பதால் தான் போக வேண்டிய இடத்துக்கு போக்குவரத்து இல்லாது போய்விடுமாதலால், தன்னை விரைவாக சந்தியில் கொண்டு சென்று விடும்படி கெஞ்சினார். இந்த நிலையில் அவரை நான் சந்தி வரை அழைத்துச் செல்ல தொடங்கினேன். கொஞ்ச தூரம் (நான் ஏற்றிய இடத்தில் இருந்து 200 மீற்றர் தூரத்தில்) சென்றவுடன், திடீரென வந்த ஒரு ஏ-40 பச்சை நிற கார் சட்டென்று திரும்பி சைக்கிள் முன்பாக நின்றது. நான் விபத்தை தடுக்க சைக்கிளின் பிரேக்கை அழுத்தி நிறுத்தினேன். என்னுடன் சைக்கிளில் வந்தவர், தனது துப்பாக்கியை எடுத்து எனது காதில் வைத்தார். எல்லாம் ஒரு கணம் தான், அடுத்த கணம் வலுக்கட்டாயமாக என்னைக் காரில் திணித்தனர்.

மங்கலான இருட்டு நேரமாக இருந்தாலும் வீதியில் மக்கள் நடமாட்டம் மெதுவாக இருந்தது. கடத்திய இடத்தில் வாழும் மக்கள் அனைவரும் என்னை நன்கு தெரிந்தவர்களாக இருந்தபோதும், நான் கடத்தப்பட்ட செய்தி ஒரு துளிதன்னும் வெளிவரவில்லை. எல்லாம் மிகக் குறுகிய கணத்தில் நடந்து முடிந்தது. என்னைக் காணவில்லை என்ற செய்தி மட்டும் தான், மக்களுக்குள் இரகசியமாக பேசும் ஒரு விடையமாக சுருங்கிக் கொண்டது. இதைவிட பல வதந்திகளையும், அவதூறுகளையும் புலிகள் கட்டிவிட்டனர்.

மக்கள் புலிகளின் கொடூரமான பாசிசத்தின் படுகொலைக்கு பயந்து, தம்மைத் தாம் தமது சுதந்திரத்தை இழந்து மௌனமாகிவிட்டார்கள். மக்களின் சுதந்திரமான உரிமைகள், விமர்சனங்கள், அபிப்பிராயங்கள், கண்கண்ட சாட்சிகள் எல்லாவற்றையும், கோரமாக அழித்தொழிக்க புலிகள் என்றும் பின்வாங்கியதில்லை. தமது அதிகாரத்தை எதிர்ப்பாரின்றி நிறுவுவதன் மூலமே, தமது பாசிசத்தை கட்டமைத்து இருந்தனர். எதிர்த்து போராடும் நபர்களை இனம் கண்டு, ஏதாவது ஒரு குற்றச்சாட்டை சொல்லி அல்லது எதுவும் சொல்லாது அழித்தொழிப்பதன் மூலமே, புலிகளின் கோழைத்தனமான அதிகார வீரம் எம் மண்ணில் கோலோச்சியது. "மேதகு" தலைவர் பிரபாகரனின் தீர்க்கதரிசனம் கொண்ட அதி புத்திசாலித்தனமான அறிவால், இப் போராட்டத்தின் தலைமையை சொந்த இயக்கத்திலும் சரி, மக்களின் மேலும் நிறுவமுடியவில்லை. வந்தேறு குடிகளான பார்ப்பனர்களின் சதிகள் மூலம், எப்படி இந்திய மக்களை அடிமையாக்கி தங்கள் அதிகாரத்தை இந்தியாவில் நிறுவினார்களோ அவ்வாறே புலிகளும் செய்தனர். புலிகள் தங்கள் சதியுடன் கூடிய கோழைத்தனமான ஈவிரக்கமற்ற படுகொலைகள் மூலமே, புலிகளின் பாசிச ஆட்சியை மக்கள் மேல் திணித்தனர். இந்த தனிநபர் படுகொலையின்றேல், புலிகளும் இல்லை என்றளவுக்கு தனிநபர் படுகொலையையே தனது அரசியலாக கொண்ட ஒரு பாசிச இயக்கம் தான் புலிகள் இயக்கம். மக்களின் சுதந்திரத்தை ஈவிரக்கமின்றி துப்பாக்கி முனையில் படுகொலையால் தீர்ப்பளிக்கப்படுவது, எம்மண்ணின் போராட்ட வரலாறு இதுவாகும்;. சிறிலங்கா இனவெறி அரசுக்கு எதிரான புலிகளின் போராட்டம், மக்களுக்கு பெற்றுக் கொடுத்தது வாய்மூடி மௌனியாக சுதந்திரமிழந்து நடைப்பிணமாக எப்படி வாழ்வது என்பதைத்தான். வாய் உண்பதற்;கு மட்டும் என்பதையும், கை சுரண்டும் வர்க்கத்துக்கு உழைப்பதற்காவும், காது சொல்வதை கேட்பதற்கு மட்டும் என்பதையும், கண் பார்த்த உண்மையை மறுப்பதற்;கும் தான் கற்றுக் கொடுத்தது. இதை பலாத்காரமாக சமூகம் மீது திணிக்கவும் செய்தனர். இதை மீறுவது மாபெரும் தேசிய குற்றமாக, துரோகமாக அறிவித்து பாசிசத்தை ஏவினர்.  இந்த வகையில் படுகொலை செய்ய, மக்களின் போராட்டத்தையே பயன்படுத்தினர். புலிகளின் படுகொலை மொழி என்பது பேசும் வாய்க்குள்ளும், கேட்கும் காதுக்குள்ளும், பார்க்கும் கண்ணுக்குள்ளும் வக்கிரமாக துப்பாக்கியால் சுடுவதன் மூலம் அரங்கேற்றினர். இதன் மூலம் சிந்திக்கவும், செயலாற்றவும் முனையும் மூளையை, செயலிழக்க வைத்தனர். குறுந்தேசியம் பேசிய இந்த கும்பலிடம் "மண்டையில் போடுவது|| என்ற படுகொலை மொழியை தமிழ் மக்கள் கடன் வாங்கி, அதை பொழிப்புரைத்து பேசுமளவுக்கு இது சர்வசாதாரணமான தேசிய போராட்ட மொழியாகிவிட்டது.

மக்களை நேசிப்பவர்களை, அவர்களுக்காக போராடுபவர்களை மண்டையில் போடுபவர்கள் தான், என்னைக் காரில் பலாத்காரமாக திணித்தனர். அதேநேரம் என்னை காரின் நடுவில் தள்ளிவிட்டபடி, இருவர் எனக்கு அருகில் இருக்க, ஒருவர் காரை விரைவாக ஒட்டிச் சென்றார். என்னுடன் சைக்கிளில் வந்தவர் எனது சைக்கிளை எடுத்துச் சென்றார். எந்த அடையாளத்தையும், அவ்விடத்தில் விடவில்லை.  உடனடியாகவே எனது சேட்டைக் கழற்றி, அதைக் கொண்டே கையைப் பின்புறமாக கட்டினர். அதேநேரம் என் தலையை சீற்றின் கீழ் அழுத்தியபடி, எனது வாயைத் துணி கொண்டு கட்டினர். அதேபோன்று எனது கண்ணையும் துணி கொண்டு கட்டினர். எனது தலையில் துப்பாக்கியை வைத்தபடி, தெல்லிப்பழை சந்தியில் திமிறிக் கத்தினால் "கொல்லப்படுவாய்" என்று மிரட்டினர். அதைத் தொடர்ந்து ஒரு மணித்தியாலத்துக்கு அதிகமாக கார் தொடர்ச்சியாக தொடர்ந்து ஒடியது. தெல்லிப்பழையில் எனக்கு இருந்த பரந்த அறிமுகம், அவர்களை அச்சுறுத்தியது. நான் எங்கு கடத்திக்கொண்டு செல்லப்படுகின்றேன் எனத் தெரியாத வகையில், சீற்றுக்கு கீழ் வலிமையாக அழுத்தப்பட்டிருந்தேன். அந்த ஓநாய்கள் திமிறினால் "கொல்லப்படுவாய்" என்ற எச்சரிக்கைக்குப் பின்பாக, ஒரு வார்த்தை தன்னும் இந்த கோழைத்தனமான கடத்தல் தொடங்கிய நேரத்திலிருந்து அவர்களின் வதைமுகாம் வந்ததடையும் வரை பேசவில்லை.

பி.இரயாகரன்
தொடரும்

21.28.04.1987 புலிகள் என்னை கடத்திய அன்று (வதை முகாமில் நான் : பாகம் - 21)

20.புலி அல்லாத அனைவரும் சமூக விரோதிகள் - மாத்தையா (வதை முகாமில் நான் : பாகம் - 20)

 

19.புலிப் பாசிசத்துக்கு அஞ்சி, பத்திரிகைகள் அன்று வெளியிடாத எனது உரை (வதை முகாமில் நான் : பாகம் - 19)

 

18.என்னைக் கடத்துவதற்கு முன் (வதைமுகாமில் நான் : பாகம் - 18)

 

17.புலிகள் என்னை கடத்துவதற்கான என் மீதான கண்காணிப்பு (வதை முகாமில் நான் : பாகம் - 17)

 

16. எனது போராட்டமும் புலிகளின் கடத்தலும் (வதை முகாமில் நான் : பாகம் - 16)

 

15. ஈவிரக்கமற்ற கொலைகாரத்தனம் தலைமைத்துவத்தை வழங்க, அது தேசியமாகியது (வதை முகாமில் நான் : பாகம் - 15)

 

14. சுயநிர்ணயம் என்பது மனித உரிமையைக் கோருவதாகும் (வதை முகாமில் நான் : பாகம் - 14)

 

13. கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தை மறுத்து உருவானதே புலிப்பாசிசம் (வதை முகாமில் நான் : பாகம் - 13)

 

12. புலிப் பாசிசத்தின் தோற்றுவாய் (வதை முகாமில் நான் : பாகம் - 12)

 

11. புலிப் பாசிசத்தின் தோற்றமும் என்பது வரலாற்று நீட்சி (வதை முகாமில் நான் : பாகம் - 11)

 

10. புலிகள் பாசிட்டுகளே ஒழிய ஒரு மக்கள் இயக்கமல்ல (வதை முகாமில் நான் : பாகம் - 10)

 

09. பாசிசம் குறித்து அடிப்படையான தரவுகள் (வதை முகாமில் நான் : பாகம் - 09)

 

08. மக்கள் விரோத துரோகக் குழுக்களும், அவர்களின் பாசிசக் கோட்பாடுகளும் (வதை முகாமில் நான் : பாகம் - 08)

 

07. இனவாத யுத்தம் மக்களின் அவலங்களை முடிவின்றி பெருக்கியது (வதை முகாமில் நான் : பாகம் - 07)

 

06. சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிராக சிங்கள பேரினவாதம் (வதை முகாமில் நான் : பாகம் - 06)

 

05. பாசிசம் கட்டமைத்த அரசியல் மீது (வதை முகாமில் நான் : பாகம் - 05)

 

04. புலியின் இந்த வதைமுகாமுக்கு முன்னும் பின்னுமான படுகொலை முயற்சிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 04)

 

03. மக்களை ஒடுக்கும் தேசியம், பாசிசத்தை விதைக்கின்றது (வதைமுகாமில் நான் : பாகம் - 03)

 

02. 1987ம் ஆண்டு என் நினைவுக்குள் நுழைய முன்.. (வதை முகாமில் நான் : பாகம் - 02)

 

01. வதை முகாமில் நான் : மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை - (வதை முகாமில் நான் : பாகம் - 01)