Language Selection

பி.இரயாகரன் -2010
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வழமையான நாட்கள் போன்றே 28.4.1987 அன்றும். மக்கள் தத்தம் வாழ்வு சார்ந்த இயற்கையான கடமை உணர்வுடன் விரைவாக நகர்கின்றனர். இப்படி அவர் அவர் தேவைக்கு அமைய விரைவாக நகருவோரும், மெதுவாக நகருவோரும் என்று, தெல்லிப்பளை வீதி எங்கும் துவிச்சக்கர வண்டிகள் நிறைந்து காணப்பட்டது. இடைக்கிடையே மோட்டார் வாகனங்கள் செல்லுகின்றன. பாதசாரிகள் அவரவர் இயக்கத்துக்கும், தேவைக்கும் ஏற்ப விரைகின்றனர். இயக்கங்களின் மோட்டார் சைக்கிள்கள் பெரும் சத்தத்துடன், வீதியையே அலற வைத்தபடி சீறிச் செல்லுகின்றன. பெரிய நீளமான சேட்டு அணிந்தவர்கள் தமது துப்பாக்கி சகிதம் புது ஏசியா சைக்கிளில், கோயில் தேர் போல் வீதியில் போகும் பெண்களை நோட்டமிட்டபடி, தமது துப்பாக்கி மூலம் பாசிச அதிகாரத்தை தொடர்ந்தும் பாதுகாக்கும் வேட்டையை நோட்டமிட்டபடி, வீதிகளில் பவனி வருகின்றனர்.

யுத்த பூமிக்கே உரிய உசாருடன், வாயைப் பொத்தியபடி, கண்ணை மூடியபடி, காதுக்கு பஞ்சை அடைந்தபடி, மக்கள் எச்சரிக்கையாகவே நகர்கின்றனர். எங்கிருந்தும் ஒரு குண்டு தம் மீது விழுந்து விடும் என்ற பீதி. பாசிச இயக்கத்தின் சந்தேகம் தம் மீது விழாதபடி இருக்க, மக்கள் உணர்விழந்தவர்களாக  உணர்ச்சியற்றவராக மாறி நடைப்பிணமாக அலைபாய்கின்றனர். இனவெறியைப் பறைசாற்றி, தனது இனவழிப்பு வெறியாட்டத்தை தமிழ் மக்கள் மீது குண்டுகள் மற்றும் செல் மூலம் நடத்த விரும்பும் எதிரி, வழக்கம் போல் அன்றும் இவற்றை தயார் செய்கின்றான். மறுபுறத்தில் இராணுவம் வெளியேறாத வண்ணம், இராணுவத்துக்கும் இயக்கங்களுக்கும் இடையில் உள்ள உத்தியோகபூர்வமற்ற எல்லைக் கோட்டில் ~~இயக்க பெடியள்|| ஏனோ தானோ என்று சோம்பலுடன் பதுங்கிக் கிடக்கின்றனர். தனது சொந்தப் பீதியையும் மீறி, தலைமையின் அதிகார அடக்குமுறையை விடுதலையின் பெயரால் சகித்துக் கொண்டும், எந்தவிதமான உணர்ச்சியுமின்றி பெண்களை பற்றி வக்கிரமாக நிர்வாணப்படுத்திய படி, தூசணத்தால் பரஸ்பரம் கதைத்து திட்டி வம்பளந்தபடி அங்கு காத்துக் கிடக்கின்றனர்.

மக்களை நாயாக அடக்கியபடி, தமிழீழ எல்லையைத் தவிர மக்களுக்கு எதைப் பெற்றுக் கொடுக்க போகின்றோம் என்று தெரியாத அப்பாவிகள் அவர்கள்.  போராளியாக, தம் உயிரை பணயம் வைத்து, எதிரியை சந்திக்கவும் எல்லைக்காக சண்டை போடவும் காத்துக் கிடக்கின்றனர். மறுபுறம் இந்த வயதை ஒத்த இளைஞர்கள் வீதி வழியாக செல்லும் பெண்கள் மீது கடைக்கண்ணை வீசி, தமது காமத்தை தணிக்க முயல்கின்றனர். யுத்தம் மற்றும் சுரண்டலின் கொடூரத்தால் பட்டினி வாழ்க்கை வாழும் மக்கள், அடுத்த நேர கஞ்சியை நினைத்தே மனம் வெதும்புகின்றனர். அன்றாட கூலி பெற்று வாழும் உழைக்கும் ஏழைகள் இன்று பிழைப்புக்கு என்ன வழி என்று தெரியாத ஏக்கத்தையும், பெரு மூச்சையும் விடுகின்றனர். தாழ்த்தப்பட்ட இளைஞர், யுவதிகள் சுதந்திரமாக காதல் செய்யவும், சொந்த விடுதலைக்கு யுத்தம் செய்யவும், பாடசாலை செல்லவும் உரிமையின்றி, தமிழனின் அடக்குமுறை பண்பாடு சார்ந்து அடிமைக்குரிய சமூகக் கடமைக்கு செல்லுகின்றான். சாதியக் கடமையைச் செய்யவும், உழைப்பைத் தேடி அலையும் இவர்கள், அன்றும் வழமை போல் தமிழ் மண்ணின் பொருளாதாரத்தை உருவாக்கும் உழைப்பில் இயந்திரமாகின்றனர். பெண்கள் குசினியைச் சுற்றியும், அயல் வீட்டு பெண்களுடன் அரட்டை அடித்தும் தமது நேரத்தை கரைக்கின்றனர். இப்படி சமுதாயத்தின் ஒவ்வொரு மனிதனும் வழமை போல், அன்றும் ஒவ்வொரு வினாடியும் இயங்கி கொண்டும் செயல்பட்டுக் கொண்டும் சிந்தித்துக் கொண்டும் தான் இருந்தான். மனித சமுதாயத்தின் சொந்த அடிமை நாளை, அன்றும் வழமைபோல் இயந்திர கதியில் கடத்துகின்றனர்.

உலகம் வழமை போல் சில விதிவிலக்குடன் சுற்றிக் கொண்டிருக்கின்றது. மனித அடிமைத்தனத்தை, மனிதனின் அனைத்து அடக்கு முறையையும் களைய சபதமேற்றவர்கள், சுறுசுறுப்பாக எதிரிக்கு எதிராக தம்மை ஒழுங்கமைப்பதில் விரைவாக செயல்படுகின்றனர். இந்த நிலையில் மக்களை எப்படி அடக்குவது என்று, போராளிகளின் பெயரில் ஒரு கூட்டம் வேட்டை நாயாக செயற்படுகின்றது. சமுதாய உண்மைகளை யார் மக்களுக்கு விளக்கிப் போராடுகின்றர்கள் என்பதை அடையாளம் காண்பது முதல், கைது செய்து சித்திரவதை செய்வது வரை அவர்களின் அன்றாட போராட்டக் கடமையாகின்றது. அத்துடன் எப்படி மக்களுக்காக போராடுபவர்களை சதிகள் மூலம் உரிமை கோராது கடத்துவது முதல் படுகொலைகளை எப்படிச் செய்வது என்பதே, போராளித் தலைவர்களின் அன்றாட சிந்தனையாகவும் நடைமுறை வாழ்வாகவும் இருக்கின்றது. அன்றாட நடைமுறையில் ஒரேவிதமாக சித்திரவதை மற்றும் படுகொலை ரசனையில் இருந்து வேறுபடும் வகையில் நவீனமாக எப்படி செய்வது என்பதே, அவர்களின் அன்றைய விதிவிலக்கான தலையிடி தருகின்ற பிரச்சனையாகின்றது. என்னை உரிமை கோராது கடத்தி வர அனுப்பிய குழுவிடம், ஏன் இன்னமும் கடத்தவில்லை என்று, அதிகாரத் தொனியில் புலிகளின் தலைவர் (மாத்தையா) மிரட்டுகின்றார். எனக்கு முதல் கைதாகி இருந்த வசந்தன் (சிவகுமார்) மீதான முந்திய நாள் சித்திரவதையில் களைத்துப் போன மாத்தையாவும், விசு (இவரே பின்பு அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரனை கோழைத்தனமாக மோசடியாக பேச்சுவார்த்தைக்கு சென்று  சுட்டுக் கொன்றவர்), சலீம் (இவர் மாத்தையாவின் அதிகாரம் நிலவிய காலத்தில் யாழ் மாவட்டத்தை வி;ட்டு வெளியேறுபவர்களின் அனுமதிச் சீட்டு பொறுப்பாளர்), மாஸ்டரும் என்னை இரகசியமாக உரிமை கோராது எப்படி கடத்துவது என்பது பற்றி தொடர்ந்து விவாதிக்கின்றனர். இதன் மூலமே எனக்காக போராடும் மாணவர்கள் மற்றும் மக்களின் எதிர்ப்பை தடுத்து நிறுத்தவும், சித்திரவதைகளையும் படுகொலையையும் செய்ய முடியும் என்பதை மீளவும் தமக்குள் உறுதி செய்கின்றனர்.

சனியன் பிடித்த பல்கலைக்கழக மாணவர்களின் ஒன்றுபட்ட வீரமிக்க போராட்டத்தை இட்டு புலிகள் மீளவும் அச்சப்பட்டதுடன், மக்கள் விரோத செயலுக்கு எதிராக எழும் போராட்டங்கள் புலிகளை அரசியல் அனாதையாக்கிவிடும் என்ற பீதியும் கொள்கின்றனர். மக்களை தனித்தனிய கைது செய்வதன் மூலம், அடித்தும் உடைத்தும் வெட்டியும் சித்திரவதை செய்வதன் மூலம் அல்லது படுகொலை செய்வதன் மூலம் அடக்கிவிடலாம் என்பது புலிகளின் பாசிச “ஜனநாயகம்“ அன்றும் அரங்கேற்ற முனைகின்றனர். புலிகளின் இந்த பாசிச சர்வாதிகாரம் ஆயுதக் கலாச்சார அதிகார அனுபவம் தான், அவர்களுக்கு சார்பாக அவர்களின் அரசியலாக இருந்தது. ஆனால் மாணவர்கள் என்ற அடிப்படையில் ஒன்றிணைந்து போராடும் பல்கலைக்கழகத்தில் நான் இருந்ததாலும், பல போராட்டத்தில் தலைமை தாங்கியதாலும், என்னை இரகசியமாக உரிமை கோராது கடத்தி விடுவது தான் மேல் என்ற முடிவை, மீண்டும் ஒருமுறை அன்று உறுதி செய்கின்றனர். இனவெறி சிங்கள அரசு இது போன்று உரிமை கோராது கடத்துவது முதல் கைது செய்யும் போது, அரசின் சொந்த சட்டத்துக்கே முரணாக செயற்பட்டு ஜனநாயகத்தை கேலிக்குள்ளாக்குவதை பற்றி வாய்கிழிய விமர்சிப்பவர்களே, இது ஒரு முரணாக இருப்பதையிட்டு வழக்கம் போல் அன்றும் அலட்டிக் கொள்ளவில்லை. இது போன்று புலிகளின் பினாமி அறிவுத்துறையினரும், அரசை மட்டும் விமர்சித்து புலிகளுக்கு ஜனநாயக மூகமுடி போடுபவர்களும், சுதந்திரமான பத்திரிகை துறையினரும் இந்த சித்திரவதை படுகொலைகளையிட்டு தமது வாழ்வில் ஒரு நாள் கூட மூச்சுவிடாது, நக்கி வாழும் பிழைப்புவாத ஜனநாயக விரோத ஆதரவை மறைமுகமாகவும் நேரடியாகவும் புலிகளுக்கு தெரிவித்து அன்றும் ஊக்கம் கொடுக்கின்றனர். இந்த நரபலி மூலம் தான், புலிகளின் பாசிச சர்வாதிகார படுகொலைக்கு ஆயிரமாயிரம் இளைஞர்கள் தம் உயிரை தியாகம் செய்தனர்.

உரிமை கோராது ஜனநாயகத்துக்கு விரோதமாக கடத்தப்பட்டதற்கு முதல் நாள் (27.4.1987), என் மீதான கண்காணிப்பும் நான் சென்று வரும் இடங்கள் அவதானிப்புக்கும் உள்ளாகியிருந்தது. 27.4.1987 மாலை ஏழு மணியளவில் மங்கலான வெளிச்சத்தில் வெள்ளை நிறத்தை அடையாளம் கொண்ட ஒருவரை, புலிகள் பலாத்காரமாக கார் ஒன்றில் துப்பாக்கி முனையில் ஏற்றினர். நான் அடிக்கடி இந்த நேரத்தில் இந்த வீதியால் செல்வது வழக்கம். அவரிடம் ~~நீதானே றயா|| என்று சந்தேகத்தில் கேட்ட போது, அவர் இல்லை என்று கூறிய நிலையில், அவர்களின் சொந்த சந்தேகத்தை மீளவும் உறுதி செய்தே விடுவித்தனர். இதை நீ வெளியில் சொன்னால் கொன்று விடுவோம் என்று மிரட்டியே அவரை விடுவித்தனர். அவரின் மனைவியின் தாய் வீட்டுக்கே அந்த வீதியால் நான் சென்று வந்ததால், அவரை நான் என்று கருதியே மாறிக் கடத்திய சம்பவம் நிகழ்ந்தது. உடனடியாகவே அந்த இடத்தில் வைத்து என்னை சுடுவதற்காக கொலைகார நோக்கில் குறிவைத்து வந்திருந்தால், குறிதவறிய அப்பாவியின் படுகொலை வரலாற்றில் இனம் தெரியாது மர்மமாகியிருக்கும். அவனை ஒரு இனம்தெரியாத துரோகியாக்கி, தேசியம் தன் வரலாற்றை எழுதியிருக்கும். இப்படி எங்களைச் சுற்றி கதைகள் பல உண்டு. புலிகளின் மக்கள் விரோத பாசிச அதிகாரத்தில் கொல்லப்பட்டவனை, சமூகத் துரோகியாக எமது போராட்டம் கொச்சைப்படுத்தியே தூற்றியிருக்கும். இது போன்ற அப்பாவிகளை படுகொலை செய்த பின்பு, அவர்களை துரோகியாக முத்திரை குத்திய சம்பவங்கள் எமது போராட்ட வரலாற்றில் நிறைந்து காணப்படுகின்றது. நான் தான் என்று தவறுதலாக புலிகள் துப்பாக்கி முனையில் கடத்த முனைந்தவரை முன் கூட்டியே எனக்கு தெரிந்திருந்தும், அவர் இது பற்றி முன் கூட்டியே எனக்குச் சொல்லவில்லை. ஆனால் புலிகளின் சிறையில் இருந்து நான் தப்பிய பின்பு, இதை அவர் மூலம் நான் அறிந்து கொண்டேன்;.

28.4.1987 ம் திகதி காலையில் என்னை கண்காணிக்கவும், வசதியான இடத்தில் வைத்து ஜனநாயக விரோதமாக கடத்தவும் புலிகள் முயன்றனர். இதற்காக புலிகளின் ஒரு குழு என் பின்னால் திரிந்ததை, சித்திரவதை வதைமுகாமில் அவர்களே சித்திரவதையில் ஈடுபட்;ட போதே தெரிந்து கொண்டேன். நாள் முழுக்க மூன்றுக்கு மேற்பட்டோர் நீண்ட ஒரு கண்காணிப்பில் ஈடுபட்டனர். தமிழ் மக்களை மிரட்டிப் பெற்ற பணத்தில் வாங்கிய உயர் தொழில் நுட்ப வசதிகளுடன், கோழைத் தனமான மக்கள் விரோத கடத்தலுக்காக காத்துக் கிடந்தனர். இந்த உளவு மற்றும் சட்டவிரோத கடத்தல் நடவடிக்கையில் களைத்த போது, அருகில் இருந்த கடைகளில் இருந்து குளிரூட்டப்பட்ட கொக்கோ கோலாவை உறிஞ்சியபடி அங்குமிங்குமாக திரிந்ததையும், வதைமுகாம் சிறையில் என்னால் நினைவுக்குட்படுத்த முடிந்தது. இந்த ஊதாரித்தனமான ஏகாதிபத்திய பண்பாட்டை அடிப்படையாக கொண்டு, அவர்களின் உலகமயமாதல் நோக்கத்தை ஈடுசெய்யும் பண செலவழிப்பு எல்லாம், மக்களிடம் உழைப்பில் இருந்து பறித்தெடுக்கும் போராட்ட நிதியையும், போராட்டத்தை சிதைக்க அன்னியன் கொடுத்த நிதியில் இருந்தே செலவு செய்தனர். இதை யாரும் ஒரு வார்த்தை தன்னும் கேட்க முடியாத அளவுக்கு, எமது போராட்டம் பாசிசமயமாகியிருந்தது. கொழும்பில் புலிகளின் உளவாளிகளும், தற்கொலை தாக்குதலை நடத்துவோரும்  சொகுசாகவும் உல்லாசமாகவும் வாழ்ந்து காட்டியே, பணத்தை மூலதனமாக கொண்டே பண்பாட்டு சீரழிவூடாகவே எதிரியை வேட்டையாடினர். இதற்காக லட்சக் கணக்கில் பணத்தை வாரி இறைத்து, நவீன உலகமயமாதல் உணவகங்களிலும், காம களியாட்ட சூதாட்ட மையங்களிலும், தமது உளவுக்கான நபர்களை விலை கொடுத்து வாங்க காத்து கிடக்கும் போது, இந்தப் பணம் உழைக்கும் அடிமட்ட தொழிலாளியின் உழைப்பை போராட்டத்தின் பெயரில் பறித்தெடுத்தது என்பதை எந்தப் புலிகளும் உணர்ந்து கொண்டதில்லை.

1995 களில் ஒரு கோடி ரூபா பணத்தைக் கொடுத்து வாங்கும் பைரோ ஐPப்பில் பவனி வரும் புலித்தலைமைகளின், சொகுசையும்; ஆடம்பரத்தையும் கூட எமது போராட்டம் தனதாக இப்படித்தான்  சுவீகரித்துக் கொண்டது. புலிகளும் புலித் தலைமையும், என்றுமே சொந்த உடல் உழைப்பில் உழைத்து வருந்தி வாழ்ந்ததில்லை. மற்றவன் உழைப்பை உருட்டியும், மிரட்டியும், ஏமாற்றியும், சுரண்டியும், பலாத்காரமாக பறித்துமே, தமது சொந்த பாசிச சொகுசு வாழ்க்கையை நடத்தியதால், மக்களை இட்டு அவர்களின் அவலத்தை இட்டு அக்கறை அற்றவர்களாக இருந்தனர். தமது சொகுசு வாழ்க்கையை உழையாது பாதுகாக்க மக்களின் உழைப்பை அபகரிக்க, சொந்த மக்களையே எதிரியாக காண்டனர். பிரபாகரனின் குடும்பம் வெளிநாடுகள் சென்று ஆடம்பரமாக வாழ, போராட்ட நிதியை மோசடியாக பயன்படுத்தவும் தயங்காத உணர்வுகள் ஒரு கணமும் கூட அவர்களை அதிரவைக்கவில்லை. மொத்தத்தில் போராட்டத்தை கேவலமாக தவறாக பயன்படுத்தினர். மக்களின் போராட்டம் என்பது மக்களின் நலன்களை அடைவதாக, அவர்களின் நோக்கத்தை ஈடு செய்வதாக இருக்க வேண்டும்;. மக்களின் உழைப்பில் இருந்து அன்னியப்பட்ட வகையில், மக்களின் உழைப்பு சுரண்டப்படுவதை இட்டு கவலைப்படாத போராட்டம், என்றும் மக்களுக்குரியதல்ல. அது புலி என்ற குழுவினரது சொந்த வர்க்க நலன்களையும், மக்களைச் சுரண்டி வாழும் சுரண்டும் வர்க்கத்தினது நலன்களை மட்டும் அடிப்படையாகவும் ஆதாரமாகவும் கொண்டவை. இங்கு புலிகளின் சொகுசு என்பது நவீன வாகனங்கள் சகிதம், மக்களில் இருந்து வேறுபட்ட உணவுகளை உண்பது முதல் ஏகாதிபத்திய பண்பாட்டு குடிபானங்களை குடிப்பதையே இலட்சியமாக கொண்டதாக இருந்தது. இராணுவ ரீதியாக மக்களிடமிருந்து வேறுபட்ட வகையில், சப்பாத்து முதல் அவர்களின் அனைத்து பழக்க வழக்கமும் காணப்பட்டது. அதாவது மக்களின் உழைப்பில் இருந்து அன்னியமான வாழ்க்கையில், மக்களின் உழைப்பை சுரண்டி அதை மூலதனமாக கொண்டு காணப்பட்டது. மக்களுடன் தொடர்பற்ற ஒரு இறக்குமதி செய்யப்பட்ட பண்பாட்டை அடிப்படையாக கொண்டு வாழ்வதையே அது குறிக்கோளாக கொண்ட, சொகுசு வாழ்க்கையே புலிகளின்  போராட்டத்தின் உணர்வாக வெளிப்பட்டது.

தொடரும்
பி.இரயாகரன்  

16. எனது போராட்டமும் புலிகளின் கடத்தலும் (வதை முகாமில் நான் : பாகம் - 16)

15.ஈவிரக்கமற்ற கொலைகாரத்தனம் தலைமைத்துவத்தை வழங்க, அது தேசியமாகியது (வதை முகாமில் நான் : பாகம் - 15)

 

14. சுயநிர்ணயம் என்பது மனித உரிமையைக் கோருவதாகும் (வதை முகாமில் நான் : பாகம் - 14)

 

13.கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தை மறுத்து உருவானதே புலிப்பாசிசம் (வதை முகாமில் நான் : பாகம் - 13)

 

12. புலிப் பாசிசத்தின் தோற்றுவாய் (வதை முகாமில் நான் : பாகம் - 12)

 

 11.புலிப் பாசிசத்தின் தோற்றமும் என்பது வரலாற்று நீட்சி (வதை முகாமில் நான் : பாகம் - 11)

 

10.புலிகள் பாசிட்டுகளே ஒழிய ஒரு மக்கள் இயக்கமல்ல (வதை முகாமில் நான் : பாகம் - 10)

 

09.பாசிசம் குறித்து அடிப்படையான தரவுகள் (வதை முகாமில் நான் : பாகம் - 09)

 

8.மக்கள் விரோத துரோகக் குழுக்களும், அவர்களின் பாசிசக் கோட்பாடுகளும் (வதை முகாமில் நான் : பாகம் - 08)

 

7.இனவாத யுத்தம் மக்களின் அவலங்களை முடிவின்றி பெருக்கியது (வதை முகாமில் நான் : பாகம் - 07)

 

6. சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிராக சிங்கள பேரினவாதம் (வதை முகாமில் நான் : பாகம் - 06)

 

5.பாசிசம் கட்டமைத்த அரசியல் மீது (வதை முகாமில் நான் : பாகம் - 05)

 

4. புலியின் இந்த வதைமுகாமுக்கு முன்னும் பின்னுமான படுகொலை முயற்சிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 04)

 

3. மக்களை ஒடுக்கும் தேசியம், பாசிசத்தை விதைக்கின்றது (வதைமுகாமில் நான் : பாகம் - 03)

 

2. 1987ம் ஆண்டு என் நினைவுக்குள் நுழைய முன்.. (வதை முகாமில் நான் : பாகம் - 02)

 

1.வதை முகாமில் நான் : மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை - (வதை முகாமில் நான் : பாகம் - 01)