Language Selection

புலிகளின் தேசியத்தின் முன், நான் செய்த குற்றம் என்ன? தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைக் கோரி போராடியது தான். இதனால் இந்த மக்களைக் கண்டு அஞ்சிய புலிக் கோழைகள், இனம் தெரியாத நபர்களாக மாறினர். இந்த கோழைகள் வேஷத்தில் தான், புலிகள் என்னைக் கடத்தினர். இரகசியமாக செய்த இந்த கடத்தலை உரிமை கோரததுடன், தாம் அதைச் செய்யவில்லை என்று உலகின் முன் சத்தியம் செய்தனர். தமக்கு இது பற்றி எதுவும் தெரியாது என்றனர். தாம் இது போன்ற நடவடிக்கைகளில், ஒரு நாளும் ஈடுபடுவதில்லை என்றனர்.

எனது குடும்பத்துக்கு முன்னும், தமிழ் சமூகத்துக்கு முன்னும், பகிரங்கமாக இதை தாம் செய்யவில்லை என்று புலிகள் அறிவித்தனர். இப்படித்தான் பல கொலைகளை, கடத்தல்களை, மனித விரோத செயல்களை, புலிகள் செய்தது என்பது வரலாறாகும்;. செய்துவிட்டு மறுப்பது, மற்றவர் மீது அதை குற்றம்சாட்டுவது புலிகளின் அரசியல் பண்பாடாகும்;. இதன் மூலம் தாங்கள் தங்கள் புனிதர்களாகவும், ஒழுக்கமுள்ளவராகவும், இந்த புரட்டுகள் மூலம் தம்மைத் தாம் மீண்டும் நிலைநாட்டிக் கொண்டனர். நான் அவர்களின் சித்திரவதை முகாமில் இருந்து தப்பித்து வரும்வரை, வழக்கம் போல் புலிகள் தம்மை எனது விடையத்தில் புனிதமானவராக நேர்மையாளராக காட்டினர். இந்த கோழைத்தனமான கடத்தலுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்று சொல்லி, தேசியத்தின் பெயரில் அதன் தியாகங்கள் மேல் சத்தியம் செய்தனர்.

மக்கள் இந்த கடத்தலுக்கு எதிராக போராடின், புலிகள் தாமும் இணைந்து போராடவும், குரல் கொடுக்கவும் தயாராக இருப்பதாகவும் கூறினர். குற்றத்தை மற்றவன் மீது சுமத்தவும் கூடத்  தயாராக இருந்தனர். தம் மீது இது குற்றச்சாட்டாக வரும் போது, இவை எல்லாம் பொய்யானவை என்றனர்.  இது அவதூறு கொண்ட புலி எதிர்ப்பு பிரச்சாரம் என்றனர். புலிகளின் பிந்தைய வரலாறு போல், அன்றும் தாம் இதைச் செய்யவில்லை என்று திரிந்தனர்.

என்னை ஏன் இந்த கோழைத்தனமான கடத்தலுடன் கூடிய சித்திரவதையையும், படுகொலையையும் செய்ய முயன்றனர். இங்கு இதுவே அடிப்படையான மையமான கேள்வியாகும்;. தமிழ்; மக்களின் மீதான அனைத்து அடக்குமுறைகளையும் எதிர்த்து போராடவும், மற்றைய இன மக்களுடன் ஐக்கியத்தை முன்வைத்தும் போராடவும், மக்களை நான் அமைப்பாக்கியதை புலிகளால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. அவர்கள் இதற்கு பதிலாக, அனைத்து அடக்குமுறையும் தக்கவைக்கும் தமது குறுந்தேசிய இனவாதத்தை முன்வைத்தனர். இதை தமிழ் மக்கள் மீது திணித்து தமது பாசிச அதிகாரத்துடன் கூடிய சர்வாதிகார அடக்கு முறையையும் தேசியம் என்றனர். இதன் மூலம் மற்றைய இன மக்கள் மீது படுகொலை வெறியாட்டத்தை தமது அடிப்படை கொள்கையாக்கி, அதை ~~தமிழீழ தாகமாகவும்|| கொண்டனர். இதனால் இதற்கு முரணான நாங்கள், அழிக்கப்பட வேண்டியவர்கள் என்பது புலிப் பாசிசத்தின் தத்துவமாக இருந்தது.

நாங்கள் தமிழ் மக்கள் மீதான சிங்கள இனவொடுக்கு முறையை எதிர்த்தும், உழைக்கும் தமிழ் மக்கள் மீதான தமிழ்ச் சுரண்டலை எதிர்த்தும், தமிழ் பெண்கள் மீதான தமிழ் ஆணாதிக்கத்தை எதிர்த்தும், உயர் சாதித் தமிழர்கள் தாழ் சாதி தமிழர்களை ஒடுக்குவதை எதிர்த்தும், யாழ் பிரதேசவாதத்தை எதிர்த்தும், இதுபோன்ற சகல சமூக ஓடுக்குமுறைகள் மேல் போராடினோம். அதேநேரம் எமது தேசிய போராட்டமோ, தேசிய பொருளாதாரத்தை கட்டமைக்கவும், அதை பாதுகாக்கவும், ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடியது. தேச எல்லை கடந்த அன்னியர் எம்மக்களை சூறையாடும் சுரண்டலை எதிர்த்தும், மக்களை அணிதிரட்டினோம். இப்படி சமூகத்தில் நிலவிய பல ஆயிரம் மனித அவலங்களை இனம் கண்டு, அவற்றைக் களையவும் அதற்கு எதிராக மக்களை ஒன்றினைத்து ஸ்தாபனமாக்கியும் போராடினோம்;.

இந்த வகையிலான போராட்டம் அனைத்து இயக்கத்தினதும், மக்கள் விரோத போக்கிற்கு எதிராக அமைந்தது. இயக்கங்கள் வெறுமனே இனவாதத்தை எதிர்த்தபடி, ஆளும் தமிழ் அதிகாரப் பிரிவுகளின் நலன்களை பாதுகாக்கும் வகையில் போராட்டத்தை நடத்தின. அதாவது தரகு முதலாளிகள் உட்பட நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் நலன்களையும், யாழ் மைய்யவாத மேலாதிக்கம் கொண்ட சாதிய கண்ணோட்டத்தில் உயர்ந்த கௌரவமான தொழில்களை செய்தவர்களின் நலன்களையும் மற்றும் பணப்பலம் படைத்தோரின் நலன்களையும் சார்ந்து நின்று தேசியம் பேசினர். இதை எதிர்த்து தமிழ் மக்களுடன் நின்றவர்களுக்கு, புலிகள் படுகொலை மூலமே பதிலளித்தனர். இதையே அனைத்து இயக்கமும் செய்தன. இதன் மூலம் தமிழ் அதிகாhர வர்க்கத்தின் நலன்களை பாதுகாப்பதில், இந்த இயங்கங்கள் முரண்பாடின்றி ஒன்றுபட்டு, ஒரு நோக்கம் கொண்டு செயற்பட்டன. தமிழ்மக்கள் மீது ஒடுக்குமுறையையே தமது அரசியலாக்கி, நிலவிய வர்க்க சாதிய பிரதேச ஆணாதிக்க அதிகார வர்க்கத்தின் நலன்களை பாதுகாக்கவும், தங்கள் விசுவாசத்தை தெரிவிக்கவும் தமக்கிடையிலும் போட்டி போட்டன. இதை நிறுவ, மக்களுடன் நின்றவர்களை போட்டுத்தள்ளின.

தமிழ் மக்கள் தமது அற்ப ஜனநாயக உரிமைகளை தக்கவைக்கவும், அதை வெளிப்படுத்தும் உரிமையையும் தக்கவைக்க முனைந்தனர். இதை மறுத்து, அதை துப்பாக்கி முனையில் அடக்கியொடுக்கினர். இப்படி இந்த அதிகார வர்க்க நலன்களை பூர்த்தி செய்வதன் மூலம் கிடைக்கும் அற்ப எலும்புகளை நக்குவதில் ஏற்பட்ட முரண்பாடு, இயக்கங்களிடையே ஒன்றையொன்று படுகொலை செய்வதிலும் போட்டியிட்டது. அதேநேரம் இப்படி நக்கி வாழும் போராட்டத்தை எதிர்த்து குரல் எழுப்பி போராட முற்பட்டவர்களை, சொந்த இயக்கத்தில் வைத்தே படுகொலை செய்தனர். இதை அம்பலம் செய்தவர்களை, வீதிவீதியாக படுகொலை செய்தனர். இந்த  ஜனநாயக மறுப்பு படுகொலை வரலாற்றில், புலிகளின் தனிச் சர்வாதிகார பாசிச வழிமுறை தாம் அல்லாத அனைவரையும் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யும் அளவுக்கு பாசிசமயமாகியது. தம்மைக் கண்டு அஞ்சும் வண்ணம் அச்ச சூழலை உருவாக்கியதன் மூலமே, புலிகள் தங்கள் மக்கள் விரோத பாசிச சர்வாதிகர அதிகாரத்தை மக்கள் மேல் நிறுவினர்.

இதற்கான அரசியல் மூலம் எங்கிருந்து எப்படி தொடங்கியது. தனிமனித பாசிச சர்வாதிகார தலைமைக்கான போராட்டமும், அதை நிறுவ உருவாக்கிய துரோகி பட்டடியலும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியலில் இருந்தே வேர்விட்டது. அன்று கூட்டணி மேடைகளில் யாரை எல்லாம் துரோகி என அறிவித்து முழங்கினரோ, அவர்கள் எல்லாம் தொடர்ச்சியாக கொல்லப்பட்டனர். கூட்டணியால்; துரோகிகளாhக அடையாளம் காட்டப்பட்டு கொல்லப்பட்டவர்களை எல்லாம் யார் கொன்றார்களோ, அவர்களுடன் கூட்டணி கூடிக் குலாவியத்துடன் அவர்களை சிறைகளில் இருந்து மீட்கவும் பின் நிற்கவில்லை. கூட்டணி தனது தலைமையில் தனிச் சர்வாதிகார அமைப்பை உருவாக்குவதன் மூலம், தாம் மட்டும் தமிழ் மக்களை எமாற்றி சுரண்டும் உரிமையைக் கோரினர். இதனால் கூட்டணியின் துரோகப் பட்டியல் நீண்டு சென்றது. தமது துரோகப் பட்டியலில் உள்ளவர்களை கொல்வது, தமிழீழத்துக்கான முதல் காலடி என்றனர்.

அமிர்தலிங்கத்தின் வளர்ப்பு நாய்களாக உருவான பிரபாகரன், உமாமகேஸ்வரன், குட்டிமணி என அனைவரும், கூட்டணிக்கு வாலாட்டி நக்கிப் பிழைத்தபடிதான் பாசிசத்துக்கு வித்திட்டவர்கள். அமிர்தலிங்கத்தை அன்று பிரபாகரன் அடிக்கடி சந்தித்தவர். இப்படி அரசியல் கொலைகளைச் செய்தன் மூலம், கொலை செய்தலையே தேசியமயமாக்கி அத்திவாரம் இட்டனர். கூட்டணியை எதிர்த்து நின்றவர்களை, தேசியத்தின் துரோகியாக்கி படுகொலை செய்தனர். இதன்போது, இதைச் செய்தவர்களை "தளபதி" அமிர்தலிங்கம் அடிக்கடி சந்தித்து, பாசிசத்துக்கு களம் அமைத்தார். 1982 வரை இந்த "தேசிய" கொலைகாரர்களுடான தேன்நிலவு கூட்டணியின் வாழ்வுடன் நீடித்தது. இந்த கொலைகரார்கள், அன்று கூட்டணியின் அரசியலுகாக கொலைகளை மட்டும் செய்து கொண்டிருந்தனர். தனது அரசியல் எதிரிகளை கொலையை செய்ய உதவியது, தேசியத்தின் புனிதமான கடமை என்று கூட்டணி மகுடத்தை சூட்டியது. இந்த புனிதத்தை தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிழைப்புத்தனம் காலை வாரிய போது, அவர்களுக்கு இடையில் முரண்பாடு கூர்மையாகியது. அத்துடன் கொலை செய்தவர்களிடையே இருந்த முரண்பாடும், இதை முடிவுக்கு கொண்டுவந்தது.

தொடர்ந்து கூட்டணியின் துரோகமும் அக்கபக்கமாக உருவாகிய போது, கூட்டணி கொலைகார இயக்கம் மீது வைத்திருந்த கட்டுப்பாடு தகர்ந்து போனது. அன்று கொலைகளைச் செய்ய கொள்ளைகளை அடித்துக் கொண்டிருந்தவர்களிடம், துரோகிகள் பட்டியல் அரசியல் ரீதியாக அன்று இருக்கவில்லை. கூட்ணியின் பட்டியலே அவர்களிடம் இருந்தது. தொடர்ச்சியாக பல குழுக்களாக அவாகள் மாறிய போது, கூட்டணியின் அதே மக்கள் விரோத அரசியல் நோக்கம் கொண்டவர்களாகவே இருந்தனர். இவர்கள் இடையே தமிழ் மக்களை அதிகம் யார் சூறையாடுவது என்ற உள்ளடகத்தில் தான் முரண்பாடு அமைந்திருந்தது.

புலிகள் என்ற பெயரின் தெரிவு கூட, 1960 இல் புலிகள் என்ற பெயரில் தமிழரசுக்கட்சி நடந்தி தாக்குதலின் போது உரிமை கோராப்பட்ட பெயராகும்;. காசியானந்தன் 1970 களில் தேசிய குறுந் தேசிய இனவெறியுடன் எழுதிய கவிதை வரிகளில்; இந்த பெயர் இருந்தது. அங்கிருந்து புலிகள் என்ற பெயரை எடுத்து, தம்மை புதிய புலிகளாக்கினர். மக்களை எமாற்றி அவர்களின் அற்ப உணர்வுகளை தட்டி எழுப்பி அதில் குளிர் காய்ந்த கூட்டணியின், குண்டர் படையாக ரவுடிகளாக உருவான தனிநபர்களே இயக்கத்தின் தலைவர்களானர்கள். ஆயுதம் எந்திய தனிநபர்களாகவும், குழுக்களுமாகினர். இதற்கு வெளியில் தமிழ் பாசிச இயக்கத்தின் வரலாற்றுக்கு, வேறு அரசியல் அடிப்படை எதுவும் கிடையாது. கூட்டணியின் அரசியல் அதை உருவாக்கியது. அந்த அரசியல் ஆயுதம் எந்தியதன் மூலம், அதன் அடக்குமுறை பாசிச மொழியாகியது.   

இந்த பாசிச வரலாறே விசித்திரமானது. தமிழீழக் கோரிக்கை முதன் முதலில் கேட்டவர் தமிழர் சுயாட்சிக் கழகத் தலைவர் நவரட்ணம். ஆனால் இவர் இந்த கோரிக்கையை முன்வைத்து தேர்தலில் நின்ற போது, தமிழரசுக் கட்சியிடம் தோற்றுப் போனவர் தான். இப்படியிருக்க, துரோக பட்டியலை எங்கிருந்து எப்படி முன்வைப்பது. பின்னால் நவரட்ணத்தின் கோரிக்கையை கூட்டணி தனது கோரிக்கையாக்கிய வரலாற்றில், அதை எதிர்ப்பதே துரோகமாகியது. இந்த குறுந் தேசியத்தின் முன், துரோகத்தின் பெயரால் கொலைப் பட்டியல் தொடர்ந்தும் நீண்டு சென்றதே ஒழிய, அது முடிந்துவிடவில்லை.

இந்த வகையில் கூட்டணி துரோகிப் பட்டியலிட்டு பிரச்சாரம் செய்தவர்களில், முதலில் குறி வைக்கப்பட்டவர் தியாகராசா. ஆனால் அன்று நடந்த தாக்குதலின் போது அவர் தப்பிவிட்டார். இந்த கொலையை திட்டமிட்டவர், வெளிநாட்டில் சென்று தங்கிவி;;ட்டார். இந்த தியாகராசாவை 1981 இல் மற்றொரு குழு கொன்றது. கொல்வதற்கான துரோகப் பட்டியல் தயாரித்து மேடையில் அதை பிரகடனம் செய்த போது, இளைஞர்களின் தன்மான உணர்வை தட்டிய கூட்டணி கொலைக்கு அவர்களை  எவிவிட்டனர். ~~தன்மானத் தமிழனுக்கு சோற்றைவிட சுதந்திரமே முக்கியம்|| என்று முழங்கினர். அரசுடன் கூடி நின்றவர்கள் அபிவிருத்தி பணிகளைச் செய்த போது ~~தமிழ் ஈழம் கிடைத்த பின்னர், நவீன சந்தைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்|| என்ற கூறி, அபிவிருத்திகளில் ஈடுபட்டவர்களை கொல் என்று அறை கூவினர். அரசுடன் நின்றவர்கள் கூட்டுறவு கடைகளை நிர்வாகித்த போது ~கூப்பன் கள்ளன்|| என பல அடைமொழி ஊடாக, அரசியலை வெறும் உணர்வுக்கு உட்படுத்தி அவர்களை கொல்லத் துண்டினார். பின்னால் அதற்கே பலியாகிய எமது வரலாறு தான், புலிப் பாசிசத்தின் வக்கிரமாகியது.

இக்காலத்தில் துரையப்பாவை துரோகியாக கூட்டணி எடுத்துக் காட்டியது. துரோகியாக எடுத்துக் காட்டப்பட்ட துரையப்பாவே, நவீன யாழ் நகரத்தின் பல முக்கிய அபிவிருத்திகளை செய்தவர். யாழ் நூல் நிலையக் கட்டிடம், யாழ் நவீன சந்தை, யாழ் விளையாட்டு மைதானம் முதல் யாழில் வள்ளுவர் ஒளைவையாருக்கான சிலைகள் என பலவற்றை நிறுவியவர். இதை நிறுவுவதை துரோகமாக கட்டினர். இதை நிறுவியவரை துரோகியாக்கிக் கொன்றவர்கள், இதை பின்னால் சிங்கள இனவெறிக் கடையர்கள் இதை அழித்த போது, தமிழ் பண்பாடுகள் அழிக்கப்பட்டதாக கூறி கூக்குரல் இட்டு பாசிசத்துக்கு கடிவளம் இட்டனர்.

ஒடுக்கப்பட்ட தாழ்ந்த சாதி மக்களிடையே கம்யூனிஸ்ட் கட்சிக்கு இருந்த செல்வாக்கை தகர்க்க, துரையப்பா சாதி ரீதியாக பின் தங்கிய மக்கள் பிரிவினருக்கு திட்டமிட்டு உதவியதன் மூலம் பரந்த சமூகச் செல்வக்கை பெற்று இருந்தவர். அவரை துரோகியாக்கி கொன்ற இறுதிச் சடங்கில், பல ஆயிரம் மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். பலர் கண்ணிர் விட்டு அழுதனர். சாதி ரீதியாக யாழ் உயர் சாதிகளால் ஒடுக்கப்பட்ட பின் தங்கிய மக்கள் பலர், அவர் மூலம் வேலைகளை பெற்று இருந்தனர். இவரை துரோகி என கூட்டணி பிரச்சாரம் செய்தது. தனிநபர் பயங்காரவாத வழிகளில் 27.7.1975 அன்று துரையப்பவை பிரபாகரன் உள்ளிட்ட நால்வர் குழு கொலை செய்தது.

அரசுடன் இணைந்து இருந்து நின்றார் என்ற, ஒரே ஒரு காரணத்தை வைத்தே அனைத்தும் நியாயப்படுத்தப்பட்டது. ஆனால் துரோகி என முத்திரை குத்தி கொன்றவனின் அரசியல் நோக்கம், இங்கு கேள்விக்கு உள்ளாகவில்லை. துரோக பட்டியலை கூறியவன், அரசியல் ரீதியாகவே வரலாற்றில் தொடர்ச்சியாக துரோகத்தை தமிழ் மக்களுக்கு செய்து வந்தவன். ஆயுதம் எந்திய கூட்டணியின் கைகூலிகளால் தொடங்கிய படுகொலை அரசியல் வரலாறு, அவர்களை பழிவாங்கியது மட்டுமின்றி அதுவே தேசியமாகி அழிந்ததுபோனது.

துரோகம் என்பது கிடையாதா? எது துரோகத்தை வரையறை செய்கின்றது.? உண்மையில் மக்களின் நலன் சார்ந்த அரசியலே, இதை தெளிவாக வரையறை செய்கின்றது. பரந்துபட்ட மக்களின் உழைப்பை, அவர்களின் வாழ்வை உறுஞ்சி, ஒட்டுண்ணியாக வாழும் பிரிவே, உண்மையில் மக்களில் இருந்த விலகிய சமூகத் துரோகிகளாவர். சமூகத்தை சொந்த நலனுக்காக யார் பயன்படுத்துகின்றார்களோ, அவர்களே சமூக துரோகிகள் ஆவர். சமூக என்கின்ற போது ஒட்டு மொத்த சமூகத்தையும் இது குறித்து நிற்கின்றது. இதை விடுத்து சமூகத்தைச் சூறையாட, ஒருவனிடம் இருந்து சூறையாடும் சுதந்திரத்தை பறித்து, மற்றொருவன் செய்ய நினைப்பதை துரோகத்தின் பெயரால் நியாயப்படுத்த முடியாது. ஆனால் சமூகத்தைச் தாம் சூறையாட துரோகி என முத்திரை குத்துவதே, எமது தமிழ் தேசிய பாசிச வரலாறாக மாறியது.

~~தமிழ் ஈழம் கிடைத்த பின்னர், நவீன சந்தைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்|| என்ற அரசியல் கூற்றுகள், பலரை துரோகியாக்கியது. இந்த குறுகிய அரசியல் சூதாட்டம் புலிகளின் அரசியாலாக மாறியதுடன், துரோகிப் பட்டியல் இதில் இருந்தும் தயாரிக்கப்பட்டது. இப்படி தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியல் வாலாக உருவான புலிகள் வரலாறு, அதன் அரசியல் எல்லையை தண்டிவிடவில்லை. அபிவிருத்தி என்ற பெயரில் வரும் மக்களின் பணத்தை, யார் கொள்ளை அடிப்பது என்பதே இன்று வரையிலான துரோகப் பட்டியல் அரசியலுக்கான மூலமாக இருந்து வந்தது. அரசின் ஆதாரவுடன் அபிவிருத்திக்கு வரும் பணத்தை அரசின் ஆதாரவளர்கள் கொள்ளையடிப்பதை துரோகம் என்பதும், அதை தாம் கொள்ளை அடிக்க அனுமதிக்க கோருவதே எமது தேசியமாக இருந்தது. இதை அரசின் ஆதாரவு அல்லாத தளத்தில் கொள்ளை அடிப்பது தேசியமாக இருந்துள்ளது. இதை ஆயுதம் எந்தியவன் செய்ய நினைப்பதே, தேசியத்தின் எதார்த்தமாகியது.

இப்படி துரோகியாக்கபட்ட கொல்லப்பட்ட துரையப்பா கொலையில் பங்கு பற்றிய நால்வரில் இருவர் கைதானார்கள். தப்பிய இருவரில் ஒருவர் பிரபாகரன் மற்றவர் பற்குணராசா. பிரபாகரன் பற்குணராசா என்னும் சரவணனை பின்னால் சுட்டுக் கொன்றான். மட்டுநகர் மைக்கல் என்னும் மற்றொரு உறுப்பினரையும், 1976 இல் பிரபாகரன் சுட்டுக் கொன்றான். இப்படி பிரபாகரனின் கொலைகார அரசியல் வரலாறு அன்று, இயகத்தினுள்ளிருந்தே தொடங்கியது. இப்படி பிரபாகரன் துப்பாக்கி மூலம் தனது அதிகாரத்தையும், பாசிசத் சர்வாதிகார தலைமையை நிறுவிக் கொண்டான். இப்படித்தான் புலிகளின் தலைவர் முதல் புலியின் பாசிச வரலாறு தொடங்கின்றது. 1978 புலிக்குள் எற்பட்ட முரண்பாட்டை அடுத்து (இடைகாலத்தில் 1978-1981) புலிகளை விட்டு ஒடிய ~மேதகு| தலைவர் பிரபாகரன், மீண்டும் புலியில் இணைந்து கொண்டார். அதுவரை கொலை கொள்ளை என்று பலருடன் கூடித்திரிந்தவர். 1981 இல் புலியுடன் மீண்டும் இணைந்த பின், 2.1.1982 இல் புதியபாதை சுந்தரத்தை சுட்டுக் கொன்றான். இதன் மூலம் இயக்க மோதலை பிரபாகரன் தொடங்கி வைத்தான். இப்படி உள் இயக்க அழிப்பு, மாற்று இயக்க அழிப்பு என ஆயிரக்காணக்கானவர்களின் மனித உயிர்களைக் குடிக்கும் தேசியமாக, பாசிசம் எம் மண்ணில் இப்படித்தான் வளர்ச்சி பெற்றது

இந்த புலிப் பாசிச வரலாறு என்ன? தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த ஆலாலசுந்தரம், தனது சொந்த தேவைக்காக, செட்டி என்ற கைக்கூலியைக் கொண்டு உருவாக்கியதே ~தமிழ் புதிய புலிகள்| என்ற இயக்கம். ~தமிழ் புதிய புலிகள்| என்பது ஒரு வெடிமருந்தின் பெயரால் நன்கு தெரிவு செய்யப்பட்டு, அதற்கு தேசிய விளக்கம் வழங்கப்பட்டு ரி.என்.ரி என்று பெயர் வைக்கபட்டது. இதில் தான், புலிகளின் பிந்தைய தலைவர் பிரபாகரன் இனைந்து கொண்டவர். ~தமிழ் புதிய புலிகள்| இயக்கத்தின் முன்னைய தலைவரான செட்டியை, இயக்கத்ததை விட்டு ஒடிச்சென்ற பிரபாகரன் குட்டிமணியின் துணையுடன் 1981 இல் சுட்டுக் கொன்றான். செட்டியின் தம்பியான செல்லக்கிளி பிரபாகரனைப் போல இயக்கத்தை விட்டு விலகிச் சென்று, இந்திய நகரமான பம்பாயில் ஒரு தாதவாக பெரும் கடத்தல்களில் ஈடுபட்டான். இப்படி ஒரு மக்கள் விரோதியான இவன், பின் தியாகியாகிய வரலாறு மர்மமானது. பிரபாகரனைப் போல் மீண்டும் புலிகளுடன் இணைந்த செல்லக்கிளி, 1983இல் 13 இராணுவத்தைக் கொன்று பெரும் இனக் கலவரத்தை தொடக்கிவைத்த திண்ணைவேலி தாக்குதலில் போது, மர்மமாகவே தியாகியானன். இந்த மரணம் பிரபாகரன் திட்டமிட்டு, பின் இருந்து கொன்றாக ஒரு தகவலும் உண்டு.

5.5.1976 இல் "தமிழ் புதிய புலிகள்" என்ற இயக்கப் பெயரை, தமிழீழ விடுதலைப் புலிகள் என மாற்றம் செய்யப்பட்டு பிரகடனம் செய்யப்பட்டது. இயக்க உள் முரண்பாட்டால் இந்த புலிகள் இயக்கத்தை கைவிட்டு ஒடிச் சென்ற பிரபாகரன், குட்டிமணி தங்கத்துரையில் தலைமையில் இருந்த கடத்தல் காரர்களின் தொழில் சார்ந்த இயக்கத்தில், இணைந்து கொண்டான். இப்படி ஒடிய போது ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டே ஒடியவர் தான். இப்படி சென்ற பிரபாகரன் குட்டிமணி குழுவுடன் இணைந்து 5.12.1978 இல் திருநெல்வேலி மக்கள் வங்கி கொள்ளையில் ஈடுபட்டனர். இதில் பிரபாகரன் பங்கு பற்றியதுடன் 12 லட்சம் கொள்ளையிடப்பட்டது. அதைத் தொடாந்து குரும்பசிட்டி நகைக்கடையை கொள்ளை இட்டனர். பிரபாகரன் குட்டிமனியுடன் இனைந்து நடத்திய இந்தக் கொள்ளையை எதிர்த்து மக்கள் போராடிய போது, இரண்டு பொது மக்களைச் சுட்டுக் கொன்றனர். மூவர் சூட்டுக் காயத்துக்கு உள்ளனார்கள். இப்படி கொள்ளையை எதிர்த்த மக்களை, தேசிய துரோகியாக்கினார்கள். 1981 இல் நீர்வேலி வங்கிக் கொள்ளை இவர்களால் நடத்தபப்பட்டது. இதில் பிரபாகரன், ஒப்பெரே தேவன், குட்டிமணி, தங்கதுரை, சிறிசபரத்தினம் போன்ற சிலர் பங்கு கொண்டனர். ரெலோவால் நடத்தப்பட்ட இந்த கொள்ளை பணமான 82 லட்சம் ரூபாவை பிரபாகரன் எடுத்துக் கொண்டு, புலிக்கு மீண்டும் ஒடிச் சென்றார். குட்டிமணி தங்கத்துரை பற்றி தகவல், இரகசியமாக மர்மமாகவும் பொலிசருக்கு கொடுக்கப்பட்டது. அவர்கள் கைதானர்கள். ஒப்பேரே தேவனை பின்னால் புலிகள் சுட்டுக் கொன்றனர். சிறிசபரத்தினத்தை புலிகள் பின்னால் கொன்றனர். தமிழ் மக்களின் மேலான பாசிசத்ததை தோற்றுவித்த தேசிய வரலாறு, இப்படி பல பக்கத்தைக் கொண்டது. கொலைகள் மூலம் பாசிச அதிகாரத்தை நிறுவிய வரலாற்றில், கொல்லப்பட்டவர்கள் பட்டியல் இப்படி நீண்டு செல்லுகின்றது.

பணம், அதிகாரம், ஈவிரக்கமற்ற கொலைகார நடத்தைகள் மூலம் தான், பிரபாகரன் புலிகள் இயக்கத்தில் தன் தலைமையை மீண்டும் உறுதி செய்தான். இயக்கத்தின் உள் தொடங்கிய படுகொலைகளின் தொடர்ச்சியாக, 29.5.1982 சென்னையில் உள்ள பாண்டிபசாரில் உமாமகேஸ்வரனை பிரபாகரன் சுட்டான். இப்படி இந்திய வரை, இயக்க மோதலை புலிகள் விரிவாக்கினர். புலி அரசியல் இப்படித்தான் தனிநபர் அதிகாரம் சார்ந்து புளுத்தது.

புலிப் பாசிசத்தின் மற்றொரு வீர வடிவம் தற்கொலை செய்வது. சயனைட்டை குடித்து தற்கொலை செய்யும் பாரம்பரியமான கோழைத்தனமும், அதன் வரலாறும் தனிக் கதையாக உள்ளது. இதையே புலிகள் வீரமென்றனர். 5.6.1974 வங்கி கொள்ளை ஒன்றில் சிவகுமரன் தோல்வியுற்று தப்பியோடி கைதான போது, அவன் சயனைட்டை அருந்தினான். இப்படி தற்கொலை வடிவத்துக்கு முதன் முதலில் வழிகாட்டியவன் அவன்தான். இப்படி எமது பாசிச வரலாறு உருவாகி வளர்ந்த கதை வக்கிரமானவை. ஆனால் அவை தியாயகமாக போற்றப்பட்டன. அதையே வீரமென்றனர். கொல்லுதல், தற்கொலை செய்தல் என அனைத்தையும் மக்களுக்கு எதிரான ஆயுதமாகவே பயன்படுத்தினார்கள். மக்களை மந்தையாக்கி அதில் தம்மைத் தாம் தேசிய வீரர்களாக்;கினர்.

தொடரும்
பி.இரயாகரன்

14. சுயநிர்ணயம் என்பது மனித உரிமையைக் கோருவதாகும் (வதை முகாமில் நான் : பாகம் - 14)

13.கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தை மறுத்து உருவானதே புலிப்பாசிசம் (வதை முகாமில் நான் : பாகம் - 13)

 

12. புலிப் பாசிசத்தின் தோற்றுவாய் (வதை முகாமில் நான் : பாகம் - 12)

 

 11.புலிப் பாசிசத்தின் தோற்றமும் என்பது வரலாற்று நீட்சி (வதை முகாமில் நான் : பாகம் - 11)

 

10.புலிகள் பாசிட்டுகளே ஒழிய ஒரு மக்கள் இயக்கமல்ல (வதை முகாமில் நான் : பாகம் - 10)

 

09.பாசிசம் குறித்து அடிப்படையான தரவுகள் (வதை முகாமில் நான் : பாகம் - 09)

 

8.மக்கள் விரோத துரோகக் குழுக்களும், அவர்களின் பாசிசக் கோட்பாடுகளும் (வதை முகாமில் நான் : பாகம் - 08)

 

7.இனவாத யுத்தம் மக்களின் அவலங்களை முடிவின்றி பெருக்கியது (வதை முகாமில் நான் : பாகம் - 07)

 

6. சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிராக சிங்கள பேரினவாதம் (வதை முகாமில் நான் : பாகம் - 06)

 

5.பாசிசம் கட்டமைத்த அரசியல் மீது (வதை முகாமில் நான் : பாகம் - 05)

 

4. புலியின் இந்த வதைமுகாமுக்கு முன்னும் பின்னுமான படுகொலை முயற்சிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 04)

 

3. மக்களை ஒடுக்கும் தேசியம், பாசிசத்தை விதைக்கின்றது (வதைமுகாமில் நான் : பாகம் - 03)

 

2. 1987ம் ஆண்டு என் நினைவுக்குள் நுழைய முன்.. (வதை முகாமில் நான் : பாகம் - 02)

 

1.வதை முகாமில் நான் : மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை - (வதை முகாமில் நான் : பாகம் - 01)