வன்னி மனித அவலத்தின் உச்சம் அரங்கேறிய காலம் அரசியல் பாதுகாப்பு வலயம் என காலத்துக்கு காலம் அறிவிக்கப்படும் பகுதிகளை நோக்கி மக்கள் இடம்பெயர்வார்கள். பின்புதான் தெரியும் அது பாதுகாப்பு வலயம் அல்ல உயிர்கொல்லும் வலயம் என்று. இவ்வாறு நாங்களும் அக்கராயனில் இருந்து பல இடப்பெயர்வுகளைச் சந்தித்து இறுதியாக அம்பலவன் பொக்கணை என்னும் ஊரில் இடைக்காடு என்னும் இடத்தில் குடியிருந்தோம். அங்கும் எறிகணைகளும் துப்பாக்கிவேட்டுச் சத்தங்களும் மக்கள் நடமாட்டம் பார்க்காது வீழ்ந்து உயிர்களை காவு கொண்டது. பலர் இரத்தவெள்ளத்தில் கிடந்து துடித்தார்கள். ஏராளமானோர் பதுங்கு குழிக்குள்ளேயே வாழ்க்கையை நடத்தினர். ஒருவேளை உணவிற்கே பட்டினியால் வாடி தவித்து கஞ்சி கொடுக்கும் இடங்களை தேடி அலைந்தனர். அப்போது இடம்பெற்ற இச் சம்பவம் என் உயிர் உள்ளவரை மறக்கமுடியாது.

08.04.2009 அன்று அதிகாலை 4.00 மணிக்கே எறிகணைகள் எமது பகுதி நோக்கி வந்து கொண்டிருந்தன. பிறகு சிறிது நேரம் எங்கும் அமைதியாக இருந்தது. காலை 6.00 மணிக்கு குழந்தைகளுக்கான பால்மாவினைப் பெற்றுச் செல்வதற்காக ஏராளமான மக்கள் இடைக்காடு முன்பள்ளியில்  வரிசையாக நின்றிருந்தார்கள். பசித்துத் துடிக்கும் தங்களின் பிஞ்சுக் குழந்தைகளின் வயிற்றைக் குளிர வைக்க வேண்டும் என்று எண்ணியவாறு கூவி வரும் எறிகணைகளையும் பொருட்படுத்தாது வரிசையில் காத்து நின்றார்கள். அவர்களின் நடுவில் எங்கிருந்தோ வந்த எறிகணைகள் நாலாபக்கமும் வீழ்ந்து வெடித்தது. அங்கு நின்ற மக்கள் கிடந்த கோரக்காட்சியை கண்ணால் பார்க்க முடியாது. அந்த வேளையில்தான் எனது சகோதரியையும் காணவில்லை என்று எல்லோரும் கத்திக்கதறுகின்றோம்.

அவர் தண்ணீர் எடுப்பதற்காக அவ்விடத்திற்கு போனது எவருக்கும் தெரியாது. பிறகு தான் குழாயடிக்கு ஒடிச் சென்று பார்த்தபோது அவர் இறந்து விட்டார் என்று தான் எண்ணினோம். இரத்தம் தோய்ந்த நிலையில் அவரையும் அங்கு கிடந்த உயிருக்காக போராடிய மக்களையும் மாத்தளன் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றார்கள். வைத்தியசாலையில் எதுவித சிகிச்சைகளுமின்றி பலரது உயிர் பிரிந்து விட்டது. எனது அக்காவின் கண் ஒன்று தோண்டி எறியப்பட்டுவிட்டது. அதற்கு மேல் பஞ்சை மட்டும் வைத்துள்ளார்கள். குருதியானது குபு குபுவென்று வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலை நீடித்தால் அவரது உயிருக்கு ஆபத்து என்ன செய்வது என்று எண்ணிய வேளையில் கப்பலில் காயப்பட்டவர்கள் ஏற்றப்பட்டர்கள். அவர்களுடன் எனது அக்கா, அத்தான், பிள்ளைகள் நால்வரும் ஏற்றப்பட்டார்கள். ஆனால் 60 வயதுடைய எனது அம்மாவை அவர்களுடன் செல்ல விடுதலைப்புலிகள் அனுமதிக்கவில்லை. பால் மறக்காத பச்சைக் குழந்தையுடன் அத்தான் என்ன செய்வார்? தயவுசெய்து அம்மாவை அனுப்புங்கள் என்று அவர்களிடம் மன்றாடினோம். ஆனால் மறுத்துவிட்டார்கள். உங்கள் அம்மா போவது என்றால் அக்காவின் மூத்த மகனை ( 12வயது ) அல்லது அத்தானை அக்காவுடன் அனுப்பமாட்டோம் என்றும் விரட்டினார்கள். எப்படி என்றாலும் அவர்களது குடும்பம் தப்பிப்பிழைக்கட்டும் என்று சொல்ல முடியாத வேதனையுடன் வீடு திரும்பினோம். இங்கு வந்தபின் தான் அறிந்தோம் அக்காவின் கணவர் சரியாக கஸ்டப்பட்டுத்தான் அக்காவை காப்பாற்றினார் என்று இந்த கொடிய நாளை என்னால் என்றுமே மறக்கமுடியாது.

எனவே காலங்காலமாக சின்னாபின்னமாக்கப்பட்டுச் சிதைந்து போயுள்ள தமிழ் மக்களின் சமுக வாழ்வைச் செப்பனிட வேண்டும். புனர்வாழ்வும் புனரமைப்பும் மேற்கொள்ளப்பட வேண்டும்; பிரிந்த உறவுகள் இணைக்கப்பட வேண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளோர் விடுதலை செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடுகளும், மீளமைப்பும் விரைவாக பூர்த்தி செய்யப்பட வேண்டும் விதவைகளுக்கான தொழிற்பயிற்சி கொடுத்து அவர்களது வாழ்வாதாரப் பிரச்சனைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஒழுங்குமுறையில் நடைமுறைப்படுத்த வேண்டும். சிறுவர்கள் துஸ்பிரயோகங்கள் இன்றி நல்வழிப்பாதையில் செல்வதற்கு ஆவன செய்யவேண்டும். அறிவார்ந்த ரீதியில் சிந்திப்பதற்கான ஆற்றலைப் பெறுவதற்கு வழிகாட்டப்படல் வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக மகுடம் வைத்தாற் போல் தமிழ் மக்களின் பண்பாட்டு விழுமியங்கள் காப்பாற்றப்பட வேண்டும்.

இந்தனை விடயங்களும் நிறைவேற்றப்பட்டால் அழிவுப்பாதையில் சென்று கொண்டிருக்கும் இனக்குழுமம் ஓரளவேனும் பாதுகாக்கப்படும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

வன்னியிலிருந்து
கண்மணி