அறுசுவைகளில் இனிப்பை மட்டும் ருசியாக கொண்டாடும் பேர்வழிகளைத் தவிர்த்த மற்றவர்களை அங்காடித் தெரு ஏதோ ஒருவிதமாய் பாதித்திருக்கிறது. தமிழகத்தின் புகழ்பெற்ற ஒரு பேரங்காடியில் குவிக்கப்பட்டிருக்கும் வண்ணமயமான பொருட்களோடு பொருளாக, ஆனால் சாயம் போய் வாடிப்போயிருக்கும் உயிருள்ள ஊழியர்களை காட்டுவதற்கு ஒரு தமிழ் சினிமா இயக்குநர் துணிந்திருப்பது பாராட்டத்தக்கதுதான். ஆனால் பாராட்டுபவர்களும், படத்தின் சோகத்தை அருந்தியவர்களும் ஒரு பொதுவான மனிதாபிமானம் என்பதைத் தாண்டி ஒரு அழுத்தமான பாதிப்பை அடைந்திருப்பார்களா என்பதில் நிறைய ஐயமிருக்கிறது.

ஏழ்மையை பார்த்து மட்டுமே ஏற்படும் மனிதாபிமானம் எத்தகையது? விபத்து, தற்கொலை, இரத்தம், எதிர்பாராத அடிகள், துன்பங்கள் என்பதைக் காட்டித்தான் ஏழ்மையைக் காட்ட முடியுமென்று இயக்குநர் நினைத்திருப்பது "ப' வரிசைப் படங்களின் காலத்திலிருந்து தமிழ் சினிமா மரபு கொண்டிருக்கும் உத்திதான். நல்லதங்காள் கதை கேட்டு வளர்ந்த நாடுதானே இது! ஆனால் இன்று நல்லதங்காள் அன்றாடம் நாளிதழில் அடிபடும் ஒரு செய்தித் துணுக்காக மாறிவிட்டாள்.

கண் முன்னே கொடுரமாகத் தாக்கப்பட்டால்தான் ஒரு எளியவனின் துன்பத்தை உணர முடியுமென்றால் நாம் எந்தக் காலத்திலும் உழைக்கும் வர்க்கத்தின் துன்பத்தை புரிந்து கொள்ள முடியாது. ஏழைகளை மெல்லக் கொல்லும் "அமைதியான' சகஜகமான வாழ்க்கைக்குள் இழையோடும் துயரத்தை, ஊடுறுவிப் பார்ப்பதற்கு கலை கற்றுக் கொடுக்கவேண்டும். விபத்தில் செத்துத்தான் ஒரு ஏழை தனது துயரத்தைப் புரியவைக்க முடியுமென்றால் சாகாத ஏழைகளின் கதி?

கே.கே. நகர் விபத்து, லிங்கத்தின் தந்தை விபத்து, இரக்கமற்ற முதலாளி அண்ணாச்சி, கொடுரமான கங்காணி அண்ணாச்சி, இதயத்தை உலுக்கும் அந்த காதல் பெண்ணின் தற்கொலை, அவள் காதலனது மனமுடையும் அவலம், கனியின் தங்கை நாகம்மையின் சித்தரிப்பு, நின்ற கால் வியாதியால் சாகும் தொழிலாளி, மந்தைகளைப் போல அடைந்து வாழும் சிப்பந்திகள் என்று படம் முழுவதும் வரும் சோகங்கள்... அவை உண்மையாக நடக்கக் கூடியவை என்றாலும் அதிர்ச்சியை மிகையாக ஏற்படுத்தும் நோக்கம் கொண்டவையாகிவிட்டன. இவ்வாறின்றி தான் தோற்றுவிக்க விரும்பும் உணர்ச்சியை தோற்றுவித்திருக்க முடியாது என்று இயக்குநர் கருதியிருப்பார் போலும்.

அழகான, சுத்தமான, நவீனமான வாழ்க்கையில் முங்கித் திளைத்திருக்கும் நடுத்தர வர்க்கத்தை இப்படிக் காட்டித்தான் அழவைக்க முடியுமென்றால் அந்த அழுகையின் ஆயுள் சில மணித்துளிகள் மட்டும்தான். ஏழைகளின் அவலத்திற்கு காரணமான வாழ்க்கையை வாழக்கூடியவர்களில் நானும் ஒருவன் என்ற குற்றவுணர்ச்சியையோ, இதனைக் கண்டும் காணாமல் சென்றவர்களிடம் ஆழமான மன உறுத்தலையோ இந்தக் கதைக்களம் ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஏற்படுத்தவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஜி8 குழும நாடுகளது அதிபர்களின் கூட்டம் நடந்த போது, மேலைநாடுகளின் தன்னார்வக் குழுக்கள் "Makes poverty history" (வறுமையை வரலாறாக்குவோம்) என்ற முழக்கத்தின் கீழ் பணக்கார நாடுளிடம் ஆப்பிரிக்காவுக்காக வேண்டுகோள் விடுத்தார்கள். ஆப்பிரிக்க நாடுகளின் கடன்களை மேலைநாடுகள் இரத்து செய்யவேண்டுமென்பதுதான் அவர்கள் கோரிக்கை.

மேற்கத்திய நாடுகளின் பிரபலமான எல்லாப் பாடகர்களும் அதில் பங்கேற்ற இசைநிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் நேரடி ஒளிபரப்பாயின. இசை நிகழ்ச்சிகளின் இடையில் அவ்வப்போது ஆப்பிரிக்க நாடுகளின் வறுமை புள்ளிவிவரங்களையும், காட்சித் துணுக்குகளையும் காட்டினார்கள்.

ஒரு ஆப்பிரிக்க குடிசையில் குழந்தைகள் அம்மாவிடம் ""பசிக்கிறது'' என்று அடிக்கடி பலவீனமான குரலில் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அம்மாவும் ""சமையல் தயாரோகிறது'' என்று அடுப்பையும், பாத்திரத்தையும் காட்டியவாறு இருக்கிறாள். பாத்திரத்திலிருந்து சமையலின் புகை பரவுகிறது. அதைப் பார்த்தவாறே குழந்தைகள் ஏக்கத்தில் தூங்கிப் போகிறார்கள். அந்தப் பாத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்தவை சில மரக்குச்சிகள் மட்டுமே என்பதை காமெரோ பின்னர் நமக்குக் காட்டுகிறது.

பார்த்தவுடன் செய்திகளாலும் புள்ளி விவரங்களாலும் உணர்த்த முடியாத ஒரு வேதனை தோன்றியது.எனினும், ஆப்பிரிக்காவின் அந்த வறுமையை உற்பத்தி செய்தவர்களே ஜி8 பணக்கார நாடுகள்தான் என்பதைப் புரிந்து கொண்வருக்கு ஏற்படும் வேதனைக்கும், ஜி8 நாடுகளிடம் கருணையை எதிர்பார்ப்பவர் கொள்ளும் வேதனைக்கும் வேறுபாடு உண்டல்லவா? நேரிட்டு பார்க்கும் யதார்த்தம் தானே உண்மையை விளங்கச் செய்து விடுவதில்லை. ஏற்கெனவே பழக்கப்படுத்தப்பட்ட கண்ணோட்டத்தின் வழியாகத்தான் ரசிகன் அதனைப் பார்க்கிறான், புரிந்து கொள்கிறான்.

வசந்த பாலன் அங்காடித் தெருவை எடுப்பதற்காக நிறைய முயற்சிகள் செய்து விவரங்கள் சேகரித்திருக்கிறார். ""உண்மையை உள்ளொளியில் கண்டு கொள்ளலாம்'' என்ற ஜெயமோகனது மேதைமை அவரிடமில்லாதது மகிழ்ச்சிக்குரியது. ஆனால் ஒன்றோடு ஒன்று இணைந்தும், முரண்பட்டும் தோன்றுகின்ற எதார்த்தத்தின் ஊடாக உண்மையைத் துலங்கச் செய்கின்ற பார்வையை இயக்குநரால் வழங்க முடியவில்லை. இதனை ஈடுகட்டுவதற்குத்தான் மிகையான சோகக்காட்சிகள் போலும்.

முதலாளி அண்ணாச்சியின் சித்தரிப்பு ஒரு எடுத்துக்காட்டு. அவர் தீவிர கடவுள் பக்தர், எச்சக்கையை ஆட்டினால் இங்கேயே ஆள் கிடைக்குமென்ற திமிர். விளம்பரத்திற்காக சினேகாவை முந்தானையை விரித்து ஆடச் சொல்வது, பொய்ப் புகார் கொடுத்து கடைச் சிப்பந்தியான லிங்கத்தை போலீசு மூலம் அடிக்க வைப்பது, வியாபார நலனுக்காக இரக்கமின்றி பேசுவது.. எல்லாம் முதலாளி அண்ணாச்சியைப் பற்றிய உண்மையான சித்தரிப்புகள் தான். என்றாலும் அவையே முழு உண்மையல்ல.

அம்பானி, டி.வி.எஸ், ஹண்டாய் முதலாளிகளெல்லாம் அண்ணாச்சிகள் போல கடுஞ்சொல் பேசி சாட்டையைச் சுழட்டும் நம்பியார் டைப் வில்லன்களல்ல. ஒரு வேளை வசந்தபாலன் அவர்களைப் பற்றி படமெடுக்க விவரங்கள் சேகரித்திருந்தால் அவரால் மணிரத்தினத்தின் "குரு' திரைப்படம் போலவோ அல்லது அதற்கு கம்மியாகவோ தான் எடுத்திருக்க முடியும். எனினும் இந்த நாகரீக முதலாளிகள்தான் "அநாகரீக' அண்ணாச்சிகளைக் காட்டிலும் கொடூரமாக முழு சமூகத்தையும் சுரண்டுகிறார்கள். சட்டீஸ்கரின் கனிவளங்களைக் கைப்பற்றுவதற்காக பழங்குடி மக்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் உள்நாட்டுப்போரில் டாடாவோ, அனில் அகர்வாலோ கையில் துப்பாக்கியுடன் களத்தில் நின்று கொக்கரிக்கவில்லை. அவர்கள் அங்கே ஆஸ்பத்திரி கட்டுகிறார்கள், ஆலயம் கட்டுகிறார்கள். ஆயினும் அவர்கள்தான் அந்தப் போரின் சூத்திரதாரிகள்.

படத்தின் கதையில் கடைச் சிப்பந்திகளது வில்லன்களாகத்தான் அண்ணாச்சி வருகிறார். ஆனால் முதலாளிகளான அண்ணாச்சிகளது ஆளுமையின் உருவாக்கம் என்பது அவர்களது தனிப்பட்ட பண்புநலன்களால் மட்டுமே ஆனதல்ல. பல்வேறு சமூகக்காரணிகளின் பின்புலத்தில்தான் அவர்கள் 'அப்படி' இயங்குகிறார்கள்.

ஒருமுறை தீபாவளி நாளில் கடையைத் திறந்து வைத்திருந்த அண்ணாச்சியிடம், "தீபாவளிக்கு ஊருக்கு போகவில்லையா'' என்று கேட்டேன். "பொழப்புக்காக மஞ்சப்பையை எடுத்துட்டு என்னைக்கு வந்தமோ அன்னையிலிருந்து தீபாவளியாவது, பொங்கலாவது' என்றார் சலிப்புடன்.

அண்ணாச்சியாக நடித்திருக்கிறார் பழ.கருப்பையா. செட்டியார் சாதிதான் தமிழகத்தின் மரபார்ந்த வணிக சாதி. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வட்டிக்கடையின் மூலம் சொத்து சேர்த்து பர்மாத் தேக்கில் அரண்மனை வீடுகள் கட்டி இன்று ப.சிதம்பரமாகவும், எம்.ஏ.எம். சிதம்பரமாகவும், ஸ்பிக் முத்தையாவாகவும், அரசுவேலை, தொழில் என்று நடுத்தரவர்க்கமாகவும் இருக்கும் செட்டியார்களுக்கும், புதிய வணிக வர்க்கமாக தலையெடுத்திருக்கும் நாடார்களுக்கும் பாரிய வேறுபாடு உண்டு.

பார்ப்பனியத்தின் சாதிய அமைப்பில் கடைநிலையில் இருந்த நாடார் மக்கள் சீர்திருத்தத்தின் மெதுவான முன்னேற்றத்தில் மாறியவர்கள். சுயசாதி முன்னேற்றம் மற்றும் கூட்டுதவியின் மூலம் சற்று நிறுவனமயமான சாதியும் கூட. சிலர் முதலாளிகளாகவும், பெரும் வியாபாரிகளாகவும் வளர்ந்து விட்டாலும், பெரும்பாலானவர்கள் சிறு கடைகளை வைத்து அதற்குமேல் முன்னேற முடியாத நிலைமையில்தான் காலம் தள்ளுகிறார்கள்.

இந்த சிறு கடை அண்ணாச்சிகளின் வாழ்க்கை அங்காடித்தெரு காட்டும் வாழ்க்கைக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல. இந்தக்கடைகளில் பயிற்சிக்காகவும், எதிர்கால பிழைப்புக்காகவும் வரும் இளைஞர்களின் நிலையும் அப்படித்தான். சரவணா ஸ்டோர் அண்ணாச்சியைப் போலவோ இல்லை இன்னும் அதிகமாகவோ இந்த சிறு கடை வியாபாரிகள் தனது பணியாட்களை நடத்துவார்கள். "அப்படித்தான் நானும் கஷ்டப்பட்டு இளமையைத் தொலைத்து, தொழிலைக் கற்று கடைவைத்தேன்' என்று அதை நியாயப்படுத்தவும் செய்வார்கள். இது உழைத்து முன்னேறிய சிறு உடைமை வர்க்கத்துக்கே உரிய உக்கிரமான உடைமை உணர்வு. ஆனால் கடுமையான உழைப்பு மட்டுமே சிறுமுதலாளிகளைப் பெரு முதலாளிகளாக்கி விடுவதில்லை. சுரண்டலில் தொடங்கி தில்லுமுல்லுகள், முறைகேடுகள், ஆளும் வர்க்கம் மற்றும் அதிகார வர்க்கங்களுடனான கள்ளக் கூட்டுகள் ஆகியவற்றின் ஊடாகத்தான் ஒரு பெரு முதலாளி உருவாகிறான்.

எனினும், பெரும் கைகளாக உருவெடுத்திருக்கும் சரவணா ஸ்டோர், சரவண பவன், இதயம் நல்லெண்ணெய், தினத்தந்தி குழுமம் போன்றோர் தஙகள் கதையை "உழைத்து முன்னேறிய' கதையாக மட்டும் கருதிக் கொள்கிறார்கள். நம்மையும் அவ்வாறு நம்பச் சொல்கிறார்கள். பணம் பெருகப் பெருக இந்தக் கருத்து முன்னிலும் உறுதியாகப் பரப்புகிறார்கள். இந்த சுய முன்னேற்ற கொசுவத்தி இமேஜ், சுயசாதி ஏழைகளை ஏய்ப்பதற்கும் நயவஞ்சகமாக சுரண்டுவதற்கும் பெரிதும் பயன்படுகிறது. சுயசாதி ஏழைகளோ சாதிப்பற்று காரணமாகவும், சாதிய அமைப்பு கொடுக்கின்ற நிர்ப்பந்தம் காரணமாகவும் தமது முதலாளிகளிடம் சுயமரியாதை இன்றி அடங்கவும் செய்கிறார்கள்.

சேதுராமன் நடத்தும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை, கூச்ச நாச்சமில்லாத மருத்துவக் கொள்ளைக்குப் பெயர் பெற்றது. அங்கே நோயாளிகளாக எல்லா சாதி மக்களும் வந்தாலும் அங்கே வேலை பார்க்கும் பெரும்பாலான தேவர் சாதி ஊழியர்கள் என்ன பிரச்சினை வந்தாலும் நிர்வாகத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.டிவிஎஸ் முதலான நிறுவனங்களில் பார்ப்பனர்கள், கோவை ஈரோடு மாவட்டங்களில் கவுண்டர், நாயுடு சாதியினர், சென்னையில் மார்வாரிகள், அம்பானியின் நிறுவனத்தில் கணிசமான பங்குதாரர்களாக இருக்கும் பனியாக்கள்.. என்று சாதியும் வர்க்கமும் பிணைந்திருக்கும் இடம் இது. வெறும் சரவணா ஸ்டோர் விவகாரம் அல்ல.

அங்காடித்தெரு அண்ணாச்சியின் எடுபிடிகளது இரக்கமற்ற நடைமுறைகளும் இந்த சுயசாதி பலத்தை வைத்தே ஆடுகின்றன. சில வலையுலக மேதைகள் படம் பார்த்த எழுச்சியில் கம்யூனிஸ்டுகள் சரவணா ஸ்டோரில் ஏன் சங்கம் கட்டவில்லை என்று அதிகார தோரணையில் கவலைப்படுகிறார்கள். சரவணா ஸ்டோரில் சங்கம் கட்ட முயன்று தோல்வியடைந்த கதையை வைத்து இதைவிட உண்மைக்கு நெருக்கமான ஒரு படத்தை எடுத்திருக்க முடியும்.

தலித்துக்கள், ஏழைகள் போன்ற ஒடுக்கப்படும் மக்கள் அவர்களது மூடியிருக்கும் அவர்களுடைய உலகத்தில் இருந்து கொண்டு மட்டும் விடுதலை உணர்வைப் பெற இயலாது. ஒரு தலித் அவனது வாழ்க்கைத் தேவைக்காக கிரோமத்தை விட்டு வெளியேறலாம் என்ற ஒரு சூழல் உருவாகி நகரத்துக்கு சென்று அங்கே சமத்துவத்தை கண்டு, அனுபவித்து பின்னர் தனது கிரோமத்துக்கு திரும்பும் போது தீண்டாமையை எதிர்க்க வேண்டுமென்ற உணர்வைப் பெறுகிறான். அடுப்படியில் அடைபட்டிருக்கும் பெண்கள் கூட ஆண்கள் நிறைந்திருக்கும் சமூகவெளியில் புழங்கும்போதுதான் தமது சமூக அடிமைத்தனத்தை உதறவேண்டுமென்ற விருப்பத்தை அடையமுடியும்.

அங்காடித் தெரு அந்த "வெளிப்பார்வையை'க் கொண்டிருக்கவில்லை. மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளின் மூலம் ஊழியர்களின் சோகத்தை காட்டியிருப்பதற்குப் பதில் வெளியுலகோடு அங்காடித்தெரு கொண்டிருக்கும் பிணைப்புகளை யோசித்திருந்தால் "அமைதியான' முறையிலேயே இந்த "அவலத்தை' இயக்கும் விதிகளைப் பார்வையாளர்களுக்கு விரித்துக் காட்டியிருக்க இயலும்.

அந்தப் பேரங்காடியில் அண்ணாச்சியின் கருங்காலிகளாக வேலை பார்ப்பவர்கள் ரவுடிகளைப் போல இருக்கிறார்கள். அதைக் காட்டிலும், வேறு வழியற்ற நிர்ப்பந்தம் இருந்தாலும், ஊழியர்களிடையே நிலவும் "அமைதி'தான் நம் கவனத்துக்குரியது. இடித்துரைக்கப்பட வேண்டியது. தன் காதலியின் மீது கைவைத்தான் என்று சூபர்வைசரை பந்தாடும் லிங்கம், கூடவே அமைதியான அடிமைகளாக இருக்கும் தனது சக ஊழியர்களையும், வார்த்தைகளால் சுட்டிருக்க வேண்டும்.

கடை ஊழியர்களை நாயக நாயகியாக்கியிருப்பதற்குப் பதில் ஒரு சூபர்வைசரை மையமாக்கி அங்காடி தெருவின் கதையைச் சொல்ல முயன்றிருந்தால் சரவணா ஸ்டோரின் எல்லாவகைப் பரிமாணங்களையும் ஒரு இழையில் காட்டியிருக்கலாம் என்று தோன்றுகிறது. பேஜ்3 படத்தின் இயக்குநர் மது பண்டார்கர் முதலில் அந்தப் படத்தை மேட்டுக்குடியினரது வாகன ஓட்டுநர்களின் பார்வையில் சொல்ல நினைத்து பின்னர் மாற்றிக் கொண்டாரோம். அந்த மேட்டுக்குடி உலகத்தின் சுயரூபத்தை அந்த உலகித்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஒரே நேரத்தில் வாழும் வாய்ப்புப் பெற்ற ஒரு பெண் பத்திரிகையாளரின் வழியாக விவரிக்கிறது அந்தத் திரைப்படம். ஒரு ஓட்டுநரின் பார்வையில் கதை சொல்லப்பட்டிருந்தால் நிச்சயம் அந்த உலகத்தின் வக்கிரத்தை பார்வையாளன் தெரிந்து கொண்டிருக்க இயலாது.

சூபர்வைசர்கள் சிப்பந்திகளாகவோ இல்லை அண்ணாச்சியின் உறவினர்களாகவோ இருந்து வந்திருக்கலாம். அவர்களுக்கு கீழ்மட்டத்தின் இயக்கமும், முதலாளியின் இயக்கமும், கடையின் வெற்றிக்கான பின்னணியும் தெரியும். நேர்மையானவராகவும், மனிதாபிமானியாகவும் ஆரம்பிக்கும் ஒரு சூபர்வைசர் பின்னர் அமைப்பின் இயங்குதளத்தில் மெல்ல மெல்ல பக்காவான சூபர்வைசரோக மாறி, அதில் நிலை கொள்ள முடியாமல் தத்தளிக்கும் ஒருவரது பார்வையில் இந்தப்படம் சொல்லப்பட்டிருந்தால் அது நாமறியாத அந்தப் பேரங்காடியின் முழுமையை உணர்த்தியிருக்கக் கூடும்.

ஏழைகளும், நடுத்தர மக்களும் சரவணா ஸ்டோரை ஏன் விரும்புகிறார்கள் என்பதும், அதற்கு அண்ணாச்சி என்ன செய்தார் என்பதையும் அங்காடித் தெரு மருந்துக்கு கூட காட்டவில்லை. மற்ற கடைகளை விட மலிவு என்ற முறையில் மக்களிடம் இருக்கும் அங்கீகாரத்தை கேள்விக்குள்ளாக்காமால் என்ன புரிதலை அல்லது சோகத்தை ஏற்படுத்த முடியும்?

சரவணா ஸ்டோரின் விலை மலிவுக்கு என்ன காரணம்? வால் மார்ட்டின் மலிவுக்கான வலியை சீனத் தொழிலாளிகள் சுமப்பது போல ரங்கநாதன் தெருவின் மலிவுக்காக பல சிறு முதலாளிகளும், அவர்களது தொழிலாளிகளும் சுமக்கிறார்கள். எவர்சில்வர் பாத்திரங்களை தயாரிப்பவர்கள், பிளாஸ்டிக் பொருள் சிறு முதலாளிகள், தங்க நகை ஆசாரிகள், பட்டு நெய்யும் நெசவாளிகள் எல்லாரும் சரவணா ஸ்டோருக்காக கொத்தடிமைகளாக வாழ்கிறார்கள்.

அற்ப கூலிக்காக பீஸ் ரேட்டில் நெஞ்செலும்பை இழைத்து பாத்திரங்களை பளபளக்க வைக்கும் அந்த தொழிலாளிதான் படோபடமான அங்காடித் தெருவின் அடிப்படை. சரவணா ஸ்டோர் போன்று பெரிய ஆர்டர்கள் வரும் போது அதை ஏற்கும் சிறு முதலாளிகளும் தமது மார்ஜினை தக்கவைப்பதற்கு தொழிலாளிகளை மேலும் சுரண்ட நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். ஆக ஏழைகளுக்கு கிடைக்கும் மலிவு விலைக்கு இன்னொரு ஏழைதான் தன் ஊதியத்தை தியாகம் செய்கிறான்.

சரவணா ஸ்டோருக்கு வரும் கூட்டத்தை கட்டுப்படுத்துவதே அங்கிருக்கும் ஊழியர்களின் மையமான வேலையாக இருப்பதை பலமுறை பார்த்திருக்கிறேன். பண்டிகைக் காலங்களில் மலிவு விலைக்காக இத்தகைய கடைகளை மொய்க்கும் மக்கள் பன்றிக் கூட்டத்தைப் போல நடத்தப்படுவர் என்பதையும் ஊழியர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். இந்தப் பேரங்காடியின் ஊழியர்கள் ஒருவகையான மனிதரோபோக்கள்.

அவர்களது மின்னல் வேக இயக்கத்தை, அதன் விளைவாக அவர்கள் மீது திணிக்கப்படும் எந்திரத்தனமான அணுகுமுறையை படத்தில் காண முடியவில்லை. இந்த மனித எந்திர இயக்கத்தை, அடிமைத்தனத்தை சென்னை நகரைச் சேர்ந்த வேறு தொழிலாளியிடம் எதிர்பார்க்க இயலாது. எனவேதான் தென்மாவட்டங்களிலிருந்து வரும் ஏழைகள் இதற்குத் தேவைப்படுகிறார்கள். தொழிலாளிகள் மலிவாக நடத்தப்படும் இந்த அவலமும்தான் மலிவு விலையை சாத்தியமாக்குகிறது. இது பற்றிய கேள்வியை படம் எழுப்பவில்லை.

அந்த குறுகிய அங்காடித் தெருவில் எல்லா வகை விதிகளையும் மீறி சரவணா ஸ்டோர் போன்ற கடைகள் பிரம்மாண்டமாக எழுந்திருப்பதும், சட்டத்திருத்தங்களும் நீதிமன்றத் தீர்ப்புகளும் அவற்றுக்கு முன்னே குனிந்து வளைந்து கும்பிடு போடுவதும் எப்படி சாத்தியமாகியிருக்கின்றன? ஓட்டுக்கட்சிகள், அதிகாரவர்க்கம், மீடியாக்கள் ஆகிய அனைவருக்கும் சென்னை தியாகரோயநகர் ஒரு அமுதசுரபி. தொழிலாளர்கள் மீதான சுரண்டலும் அடக்குமுறையும் கேட்பாரின்றி நடப்பதற்குக் காரணமும் அதுதான்.

நாயகி கனியின் கல்லூரி மாணவி போன்ற பாவனைகளை எக்காலத்திலும் அந்தக் கடையில் பார்க்க முடியாது. கனியை சற்று அழகாக காட்டவேண்டுமென்பதற்காக மற்ற பெண்களை வேண்டுமென்றே கருப்பைக் கூட்டிக் காண்பித்திருப்பது நல்ல இரசனையல்ல.

விளம்பரத்திற்காக சிநேகா அக்கா வருவதைதிருவிழா போல சிப்பந்திகள் கொண்டாடுவது அதிசயமல்ல, பொய்யுமல்ல. ஆனால் விளம்பரமே தேவைப்படாத அந்தக் கடைக்கு பல இலட்சம் செலவழித்து விளம்பரம் செய்ய வேண்டிய அவசியமும், அந்த செலவின் சிறிய பங்கு கூட தொழிலாளிகளின் வாழ்வை மேம்படுத்தியிருக்கும் என்பது ஒரு வசனமாகவோ, காட்சியாகவோ வந்திருக்கவேண்டும்.

இந்த விமரிசனத்தில் கூறப்பட்டிருக்கும் எல்லா விசயங்களையும் ஒரு சினிமாவாக எடுப்பது சாத்தியமா, என்று சிலருக்குத் தோன்றலாம். இரண்டு மணி நேரத்தில் இரண்டாம் உலகப்போரையே காட்ட முடியுமென்றால் அதோடு ஒப்பிடும்போது சரவணா ஸ்டோரின் களமும், காலமும் குறுகியதுதான். பிரச்சினையின் மையப்பொருள் குறித்த படைப்பாளியின் கண்ணோட்டம்தான் சாத்தியத்தையும் சாத்தியமின்மையையும் தீர்மானிப்பதில் முக்கியப் பாத்திரமாற்றுகிறது.

படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார் ஜெயமோகன். கொத்தனார் வேலை பார்க்கும் தொழிலாளி தனது மகனை பி.இ படிக்க வைக்கப் போவதாக பேசுகிறார். இது அபத்தம். குறுகிய காலத்தில் வென்று காட்டும் சூப்பர் மேன்களாக நாயகர்களை சித்தரிக்கும் மனோபாவம் இது. மாடிப்படியில் தண்ணீர் குடித்ததைப் போட்டுக் கொடுத்த சக ஊழியனை கோபத்தில் அடிக்கும் லிங்கம், வீட்டில் தன்னை ஒரு துரும்பைக் கூட எடுக்க விடாமல் அவனது தந்தை சீரோட்டி வளர்த்திருப்பதாகவும், குடும்பத்தின் கஷ்டத்திற்காகத்தான் இந்த அடிமைத்தனத்தை சகிப்பதாகவும் பேசுவான். கிரோமப்புற ஏழைகள் உழைப்புக்கும், வசதிகள் இல்லாத வாழ்க்கைக்கும் அஞ்சுபவர்களல்ல. ஏதோ அவர்களெல்லாம் வாழ்ந்து கெட்டவர்கள் போல ஜெயமோகன் கருதுகிறார். அதே போல கனி தனது சொந்த வாழ்க்கைத் துயரங்களை அழுது கொண்டு கூறுவதிலும் யதார்த்தத்தைக் காட்டிலும், ஜெயமோகனது நடுத்தர வர்க்கத்தின் உளவியலே வேலை செய்கிறது.

"யானை இருக்கிற காட்டில்தான் எறும்பும் இருக்கும்' என்ற பொருளற்ற, காலத்தின் உணர்வற்ற, கவித்துவமான வசனமெல்லாம் நம்மை ஈர்க்கவில்லை. ஆனால் கனியின் தங்கை நாகம்மை பெரிய மனிசியாக மாறிய பிறகு, வரும் காட்சியில் தனது தங்கை லிங்கத்தை யாரென்று அடிக்கடி கேட்டதாக கனி கூறும் போது "நீ என்ன சொன்னாய்' என்று லிங்கம் கேட்பான். ஒரு அழகான மௌனம், புன்னகைக்குப் பிறகு, "சிரிச்சேன்' என்று கனி கூறுவதுதான் நம்மைக் கவர்ந்த ஒரே இடம். ஆக ஜெயமோகன் எழுதாமல் அமைதியாக அடங்கும் இடம் அழகாகவே இருக்கிறது.

வாழ்வில் எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும், எத்தனை கனவுகள் நசுங்கினாலும், அவற்றையெல்லாம் புறந்தள்ளி முன் செல்லும் ஒரு எளிமையான அழகான பண்பு ஏழைகளிடம் இருக்கிறது. உழைப்புதான் அந்தப் பண்பின் வெளிப்பாடு. அறியாமையில் உழலும் போது அதில் வெளிப்படும் அவலத்தையும், அறியாமை அகலும்போது அது வெளிப்படுத்தும் வீரியத்தையும், இந்தப் படம் அடையாளம் காணவில்லை.

எனினும் சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகி நிலைத்திருக்கும் சரவணா ஸ்டோர் என்ற பேரங்காடியின் பின்னே இருக்கும் உழைப்பாளிகளது வாழ்க்கையை, ஆடை ஆபரணங்களுக்குள்ளும் பாத்திரக் குவியல்களுக்குள்ளும் புதையுண்டிருக்கும் அவர்களது துயரத்தை, அங்காடித் தெருவின் ஒளிவிளக்குகளால் நுகர்வோரின் கண்களிலிருந்து மறைக்கப்படும் அந்த "மனிதப் பண்டங்களை', திரையரங்கின் இருளில் காண்பதற்காகவாவது "அங்காடித்தெரு' வுக்குள் நுழையலாம்.

கனவு அவர்களிடம் உழைப்பு என்ற வர்க்கப் பண்பாய் வெளிப்படுகிறது. அதுதான் அவர்களைத் திரட்டி அந்த ஏழைமையை விரட்ட முடியுமென்ற நடைமுறை நம்பிக்கையை கம்யூனிஸ்ட்டுகளிடம் தோற்றுவித்திருக்கிறது. ஏழ்மையின் அந்த "அழகை' இயக்குநரும், வசனம் எழுதியவரும் புரிந்து கொள்ளவில்லை.(வினவு இணையத் தளத்தில் வெளிவந்த கட்டுரை)