பிள்ளத்தாச்சிப் பெண் மீது எல்லோருக்கும் ஒரு அனுதாபம் உண்டு. என்னைக்கேட்டால் பத்து மாதம் சுமக்கும் துன்பம் (அப்படி சொல்லக் கூடாதோ) ஒரு தடவை இரண்டு தடவையில் முடிந்து விடும். கருத்தரிக்காததனால் மாதம் தோறும் அனுபவிக்கும் துன்பம் இருக்கிறதே, அதுதான் ஆயுள்தண்டனை.

ஃப்ரீடம், ஸ்டேஃப்ரீ, விஸ்பர்... எல்லா நாப்கின் விளம்பரங்களிலும் துள்ளித் திரியும் பெண்கள்... எந்தக் கவலையும் இல்லாமல் தூங்கி, காலையில் முழு உற்சாகத்துடன் சிரித்தபடி படுக்கையிலிருந்து எழும் பெண்கள்...

மெடிக்கல் ஷாப்களின் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்த நாப்கின்களை தூரத்திலிருந்தே ஏக்கத்துடன் பார்த்தபடி செல்லும் ஏழைச் சிறுமிகளைப் பார்க்கிறேன். இந்த ஏக்கத்தை நான் அனுபவித்ததில்லை. நான் பருவத்துக்கு வந்த நாளில் இதெல்லாம் இருந்ததா என்றே எனக்குத் தெரியாது.

தாமதமாகப் பூப்பெய்துவது ஏழ்மை பெண்ணுக்கு அளிக்கும் வரப்பிரசாதம் என்றுதான் சொல்லவேண்டும். எனக்கு அப்போது வயது 16. அரை வயிறு சோறு. அதுவும் ஒரு நாளைக்கு ஒரு வேளை. அதுவும் நிச்சயமில்லை. பள்ளி இறுதியாண்டு. அரைப் பரீட்சை நெருங்கிய நேரம். என்ன ஏது என்று அப்போது புரியவில்லை. வீட்டில் என்னை வைத்து ஒரு சின்ன கொண்டாட்டம். கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது.

முதல் ஆறு மாதங்களுக்கு வலி எதுவும் இல்லை. அப்புறம் அந்த நாட்களில் உதிரப் போக்கு அதிகமானது. இரண்டு கி.மீ நடந்து பள்ளிக்கூடம் போகவேண்டும். பஸ்சுக்கு காசு கிடையாது. காலையில் கிளம்பினால் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வரும் வரை தாக்குப் பிடிக்கின்ற அளவுக்கு பழந்துணிதான் பாதுகாப்பு. ஈரமான பகுதியைக் கீழே மாற்றி, உலர்ந்த பகுதியை மேலாக மாற்றி மடித்து வைத்துக் கொண்டு நடக்க வேண்டும்.

நல்லவேளையாக அது பெண்கள் பள்ளி. அரசுப் பள்ளியின் கழிப்பிட வசதி பற்றிக் கேட்க வேண்டுமா? தண்ணீர் இருக்காது. 10 நிமிட இடைவெளியில் வகுப்பில் உள்ள எல்லாப் பெண்களும்சென்று வரவேண்டும். இடையில் கேட்டால் டீச்சர் திட்டுவார்களோ என்று பயம். நடந்து வீட்டுக்கு வரும்போது ரத்தக் கசிவினால் ஈரமான துணி இருபக்கத் தொடையையும் உரசிப் புண்ணாக்கி இருக்கும்.

வீட்டுக்கு வந்தால் கழிப்பறை எப்போதும் மூடியே இருக்கும். நீண்ட காம்பவுண்டின் கோடியில் பத்து வீட்டுக்கும் பொதுவாக ஒரு கழிப்பறை. குழாய் கிடையாது. 2,3 முறை வந்து தண்ணீரை எடுத்துப் போக வேண்டும். இரவிலும் போக வேண்டியிருக்கும். வீட்டு ஓனரின் மகன் ஒரு பொறுக்கி. இருட்டில் வந்து மார்பில் கை வைப்பான். துணைக்கு அம்மாவைக் கூப்பிடலாம் என்றால், தம்பியோ தங்கையோ அம்மாவிடம் பால் குடித்துக் கொண்டிருப்பார்கள். அப்பாவைக் கூப்பிடலாம். இருந்தாலும் கூச்சம்.

பள்ளி முடிந்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்தேன். இடுப்பெலும்பில் வலி ஆரம்பித்தது. இடுப்பெலும்பின் சுற்று வட்டம் முழுவதும் அதன் நடுப்பகுதியில் ஒரு கம்பியை விட்டுக் குடைவது போன்றிருக்கும். வயிற்றின் முன்பக்கம் கீழ்ப்பகுதியில் தொடங்கி சிறுநீர்த்துவாரம் வரை அழுத்தும் வலி, தலை பாரம், கண்ணை இமை அழுத்தும். இடையிடையே வாந்தி, 4 நாட்களுக்கு அதிகமான உதிரப்போக்கு, எப்போதும் வாந்தி வருவது போன்ற உணர்வு, சாப்பிடப் பிடிக்காது, சாப்பிடவும் முடியாது, குளிர்ச்சியாக ஒரு சோடாவோ குளிர்பானமோ குடித்தால் கொஞ்சம் இதமாக இருக்கும். முடியாது. வறுமையில் அது ஒரு ஆடம்பரச் செலவு. படுத்துக் கொண்டு அம்மா, அம்மா என்று அரற்றுவேன். உருளுவேன். பரோல்கான் மாத்திரை சாப்பிட்டு ஓரிரு மணி நேரங்களில் அரற்றலும் உருளலும் குறைந்து அசையாமல் படுத்து கொஞ்ச நேரம் அரை உறக்கத்திலிருப்பேன். அந்த 4 நாட்கள் முடிந்து விட்டால்.. அதுதான் சுதந்திரம்!

மாத விலக்குக்கு ஒரு வாரம் இருக்கும் போதே பயமாக இருக்கும். வெறுப் பும் விரக்தியும் தோன்றும். ஆனால் யாரிடம் சொல்வது? எங்கே ஓடி ஒளிவது? நாள் நெருங்க நெருங்க செத்துப் போய் விட்டால் நல்லது என்று தோன்றும். வலி குறைந்தவுடன் இன்னும் மூன்று வார காலம் வலியின்றி இருப்போம், அடுத்த முறை வலி வருவதற்குள் செத்துப்போய் விட வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.

அம்மாவுடன் ஈ.எஸ்.ஐ ஆஸ்பத்திரிக்கு போனேன். இந்த வலிக்கு மருந்தில்லை, கல்யாணமானால் சரியாகி விடும் என்றார் டாக்டர். திருமணம் என்றால் மாலைதானே போடுகிறார்கள், அந்த மாலையை இப்போதே போட்டுக் கொண்டால்? அந்த அளவுக்குத்தான் அன்றைக்கு விவரம் தெரியும். அதையும் அம்மாவிடம் சொல்ல பயம்

.மாதங்கள் செல்லச் செல்ல உபத்திரவம் அதிகரித்தது. நான் படித்தது பெண்களுக்கான ஐ.ஐ.டி.தான் என்றாலும் சில பாடங்களுக்கு ஆண் லெக்சரர்கள் வருவார்கள். ஒரு வகுப்பு முடிந்து அடுத்த வகுப்புக்கு ஆங்கில லெக்சரர் வருவதற்குள் கழிவறைக்குச் சென்று வந்துவிட எண்ணி அவசரமாய் வெளியேறினேன். அப்போதும் துணி தான் உபயோகம். துணி நழுவிக் கீழே விழுந்தது. லெக்சரரின் கண்ணிலிருந்து அது தப்பியிருக்காது. கூசிப்போனேன்.

1977, 78 இருக்கும். சானிட்டரி நாப்கின் பற்றி அப்போது வாரப் பத்திரிக்கைகளில் பார்த்திருக்கிறேன். வகுப்பில் கொஞ்சம் வசதியான பெண்களும் இருந்தனர். தோழி சாரதாவிடம் கேட்டதற்கு எலாஸ்டிக் பெல்ட் தாங்கி நிற்கும் நாப்கின் இருப்பதாகச் சொன்னாள். வீட்டில் காசு கேட்க முடியாது. வீட்டிலிருந்தது கல்லூரிக்கு வர இரண்டு பஸ் மாற வேண்டும். மொத்தம் 7 கி.மீ தூரம். ஒரு பஸ்ஸ{க்கு மட்டும்தான் வீட்டில் காசு தருவார்கள். டிக்கெட் விலை 25 பைசா. கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி மொத்த தூரத்தையும் நடந்து காசு சேர்த்தேன். அதில் பெல்ட் தாங்கி நிற்கும் நாப்கினை சாரதா வாங்கித் தந்தாள். துணியை ஒப்பிடுகையில் மிகவும் மெலிதாக பார்க்க அழகாக இருந்தது. முதல் முறை உபயோகித்து பத்திரமாக உறையில் சுற்றி வீட்டுக்கு எடுத்து வந்தேன். இவ்வளவு சுலபமான வழி நமக்கு தெரியவில்லையே என்ற நினைத்துக் கொண்டேன். சோப் போட்டுக் கசக்கினேன். நாப்கின் துண்டு துண்டானது.

யூஸ் அண்டு த்ரோவெல்லாம் அப்போது எனக்குத் தெரியாது. ஒருநாள் சுதந்திரத்தின் விலை எத்தனை கிலோ மீட்டர் நடை? இப்போது நினைத்தாலும் கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது.

படிப்பு முடிந்து ஒரு எலக்ட்ரிகல் சாமான் கடையில் வேலை. மாதம் 100 ரூபாய் சம்பளம். தம்பி தங்கைகளுக்கு ஒரு வேளை சாப்பாடு நிச்சயம் ஆனது. எனக்கு அளவு கடந்த நிம்மதி. காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை வேலை. வீட்டிலிருந்து கடை 5 கி.மீ. தூரம். மாதத்தின் முதல் 10 நாட்கள் பஸ்ஸில். மீதி நாட்கள் நடை. எனது நெருங்கிய தோழியும் அங்கு வேலைக்கு சேர்ந்தாள். துணைக்கு ஆள் வந்தது எனக்கு பெரிய பலம் போல இருந்தது. காலையிலும் சரி, மாலையிலும் சரி, ஒரு டீ குடிக்க வேண்டும் என்றால், ஓனர் சொல்வாரோ என்று காத்திருக்க வேண்டும். டீ சொல்வதும் சொல்லாததும் வாங்கி வரச்சொல்லும் நேரமும் அவர்களது மூடைப் பொறுத்தது. மாதவிலக்கு சமயத்தில் தொண்டையும் நாக்கும் உலர்ந்து ஒரு டீ கிடைக்காதா என்று தவிக்கும்.

இந்த சமயம் பார்த்து ஸ்டாக் எடுக்கும் வேலையும் வரும். ஏணியில் ஏறி, உயரமான ஷெல்ஃபுகளில் இருக்கும் பொருட்களை இறக்கி, எண்ணி எழுதி தூசி தட்டி வைக்க வேண்டும். எத்தனை முறை ஏறி இறங்குவது? நானும் அவளும் சேர்ந்து தான் செய்வோம். வலி உயிர் போகும். ஸ்டாக் எடுக்கும் வேலையை ஆண்களைச் செய்யச் சொல்லுங்கள் என்று அவள் ஓனரிடம் ஒருநாள் தைரியமாக சொல்லி விட்டாள். அவள் சம்பளத்தை நம்பி குடும்பம் இல்லை. எனக்கோ தம்பி தங்கைகளை நினைத்தால் தைரியம் வராது.

ஒரு நீளமான பழைய வீட்டைத்தான் கடைக்காக வாடகைக்கு எடுத்திருந்தார்கள். கழிவறைக்கு மேலே கூரை கிடையாது. நின்றால் பக்கத்து மாடி வீடு, கடைகளில் உள்ளவர்களுக்குப் பார்க்க முடியும். அங்கும் தண்ணீர்ப் பிரச்சினை. மாதவிலக்கின் இரண்டாம் நாள் ஞாயிற்றுக் கிழமையாக இருந்தால் லீவு போட வேண்டாம். மற்ற நாட்களாக இருக்கும் பட்சத்தில் லீவு போடுவேன். ஓனர் கோபமாகக் கேள்வி கேட்பார். அழுவதற்கு என் தன்மானம் இடம் கொடுத்ததில்லை. வேலை செய்து கொண்டு அழுகையை அடக்கிக் கொள்வேன். ஒருநாள் இரண்டாவது பார்ட்னரின் மனைவி கடைக்கு வந்தார். வசதியான குடும்பத்திலிருந்து வந்தாலும் மனிதாபிமானி. நான் ரொம்பவும் சோர்ந்திருப்பதைப் பார்த்து, ""ஏன் இப்படி இருக்கிறாய்'' எனக் கேட்டார். "என்ன செய்வது, செத்துப்போய் விட வேண்டும் என்று தான் நினைக்கிறேன், ஆனால் சாக முடியவில்லை' என்று சொல்லி விட்டேன். அப்போது எனக்கு வயது 20. மிகவும் வருத்தப்பட்டார்.

ஒரு பெண் டாக்டரிடம் அழைத்துப் போனார். மருந்துகள் சாப்பிட்டும் வலி நிற்கவில்லை. ""வலி நிவாரணிகள் தவிர வேறு வழி இல்லை, வேறு சில மருந்துகள் உள்ளன, ஆனால் அதையெல்லாம் தொடர்ந்து உபயோகித்தால் வேறு பக்க விளைவு வரும். திருமணமானால் படிப்படியாக சரியாகி விடும்'' என்றார். அன்று திருமணம் என் தேவையாக இல்லை. குடும்ப நிலைமை அப்படி. ""கர்ப்பப் பையை எடுத்து விட்டால் இந்தப்பிரச்சினை இருக்காது என்கிறார்களே டாக்டர், செய்வீர்களா'' என்றேன்."இந்த வயதில் அதைச் செய்ய முடியாதும்மா'' என்றார் சோகம் கலந்த புன்னகையுடன். அப்புறம் நான் டாக்டரை பார்ப்பதில்லை. நான் லீவு போட்டால் ஓனரும் என்னைத் திட்டுவதில்லை.

அப்புறம் கொஞ்சம் நல்ல வேலை கிடைத்தது. எனினும் நாப்கின் வாங்கும் அளவு வசதி கூடிவிடவில்லை. துணிக்கு பதிலாக கட்டுக்கட்டாக பஞ்சு. வலி நீடித்தாலும், தொடை உரசிப் புண்ணாவது பெரிதும் குறைந்தது. அன்று அதுவே பெரிய சந்தோஷம்.

பின்னர் திருமணம். அந்த நாட்களில் நான் பட்ட வேதனையைப் பார்த்து அவரது கண்ணில் நீர் வழிந்தது. வலியை மறக்கும் அளவுக்கு அதுவே சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருந்தது. இரண்டாவது மாதம் சற்றே சோகமாக இருந்தார். மூன்றாவது மாதம் அந்த சமயத்தில் சினிமாவுக்குக் கிளம்பி விட்டார். கேட்டதற்கு "ஆமாம், உனக்கு வலியாக இருக்கும்போது நான் என்ன செய்வது? நானாவது சினிமாவுக்குப் போய் பொழுதுபோக்கிக் கொள்கிறேன்' என்றார். துக்கம் தொண்டையை அடைத்தது. என் வலியை அவரோல் வாங்கிக் கொள்ள முடியாது. ஆனால் அவர் இது போன்றொரு அவஸ்தையிலிருக்கும்போது நான் சந்தோஷம் தேட நினைத்திருப்பேனா?

வலியுடன் இரவு நேரத்தில் வாந்தி வருவதும் வாடிக்கையாகியிருந்தது. திருமணத்துக்கு முன் அம்மாவோ, தம்பியோ, தங்கையோ வந்து முதுகை நீவி விடுவார்கள். முடிந்தவுடன் கொஞ்சம் வெந்நீர் கொடுப்பார்கள். இதமாக இருக்கும். ஒருநாள் இரவில் வாந்தி வந்தது. நடுநிசி. அவரை எழுப்பி விட்டு அவசரமாக பாத்ரூமுக்கு ஓடினேன். வாந்தி எடுக்கும்போது முதுகை நீவி விடும் கை இல்லை. திரும்பி வந்தேன். நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். மனம் கனத்தது. நாம் கூப்பிட்டது கூடத் தெரியாமல் அசந்து தூங்குகிறார் என்று சமாதானப்படுத்திக் கொண்டேன். "நான் கூப்பிட்டது கூடத் தெரியாமல் அசந்து தூங்கி விட்டீர்களா?'' என்று கேட்டு விட்டு ஆமாம் என்ற பதிலுக்காக காத்திருந்தேன். ""நான் தூக்கத்தை விட்டு வருமளவிற்கு இது என்ன பிரச்சினை, எப்பவும் வரும் வாந்தி தானே'' என்றார். வலித்தது. இந்த மாதிரியான வலிகளும் கூட பெண்களுக்கே உரியவை. இல்லையா?

அவர் கொடுமையான ஆணாதிக்கவாதியெல்லாம் இல்லை. மனைவியின் குடும்பத்தையும் தன் குடும்பமாக நினைத்து உதவும் அளவுக்கு நல்லவர். கை நீட்டாதவர். இருந்தாலும்.. எப்போதாவது சொற்களால் மட்டுமே சுடுகின்ற சரோசரி ஆண். நான் சொன்ன சம்பவம் ஆண்களின் மனதைத் தொடுமா என்று தெரியவில்லை. சின்ன உதாசீனங்களை நான் பெரிதுபடுத்துவதாகக் கூட நினைக்கலாம். ஆனால் ஒரு தலைவலியைச் சமாளிப்பதற்குக் கூட மனைவியின் துணையைத் தேடும் ஆண்கள், வீக்கர் செக்ஸ் என்று பெண்களை சொல்கிறார்களே, சிரிப்புதான் வருகிறது.

இதைப் படிக்கின்ற ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்கள் சிலருக்கும் கூட கொஞ்சம் அலுப்பாக இருக்கலாம். இன்றைய நடுத்தர வர்க்கப் பெண்களுக்கு "ஃப்ரீடம்' இருக்கிறது. எனவே "கேர் ஃப்ரீ'யாகவும் இருக்கலாம். ஆனால் இன்றைக்கும் சாதாரண ஏழைப்பெண்களுக்கு இது பிரச்சினைதான். இதை பெண்ணின் பிரச்சினை என்று சொல்வதா, ஏழையின் பிரச்சினை என்று சொல்வதா தெரியவில்லை.

குறிப்பிட்ட நாட்களில் லீவு போட்டால், ஆண்களின் ஏளனமான சிரிப்பு, இதை சாக்கு வைத்துக் கொண்டு வேலையை தட்டிக் கழிக்கிறார்கள் என்று கிண்டல், கடமையை வலியுறுத்தும் மேலதிகாரிகள், அவர்களிடம் தனது பிரச்சினையைச் சொல்வதற்கு தன்மானம் இடம் கொடுக்காததால் தவிக்கும் பெண் ஊழியர்கள்... நடுத்தர வர்க்கத்துப் பெண்களும் கூட அன்றாடம் இதையெல்லாம் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

சமீபத்திய தினமணியில் பார்த்தேன். இந்தியாவில் 65 சதவீத வீடுகளில் கழிப்பறை வசதி கிடையாது என்று ஒரு கட்டுரை. கிரோமமோ நகரமோ, காலைக் டனைக் கழிப்பதற்கே விடிவதற்கு முன் பெண்கள் புதர்களைத் தேடி ஓட வேண்டும். பிறகு இருட்டும் வரையில் காத்திருக்க வேண்டும்.

பொறுக்க முடியாத வலி என்பது என்னைப் போன்ற சில பெண்களைப் பிடித்த சாபக்கேடு. ஆனால் அந்த நாட்களின் உதிரப்போக்கும், களைப்பும் பெண்கள் அனைவருக்கும் உடன் பிறந்தவை. தாங்க முடியாத போது இப்போதெல்லாம் நான் லீவு போட்டு விடுகிறேன். அலுவலகத்தில் தரமான பாத்ரூம் இருக்கிறது. எனக்கு வாழ்க்கை மாறியிருக்கிறது.

ஆனால் வீட்டு வேலை செய்யும் பெண்கள், கடைகளில் நாள் முழுவதும் நின்று கொண்டிருக்கும் பெண்கள், கார்ப்பரேசன் பள்ளிகளின் படிக்கும் சிறுமிகள்.. இவர்கள் யாருக்கும் வாழ்க்கை மாறவில்லை. என்னைப் போல இவர்கள் விவரம் தெரியாத அசடுகள் இல்லை என்றுதான் நினைக்கிறேன். பெண்களுக்கு "'ஃப்ரீடம்' இருக்கிறது என்பது இவர்களுக்குத் தெரிந்திருக்கும்.

அந்த "ஃப்ரீடம்' தங்கள் கைக்கு எட்டாது என்பதும் புரிந்திருக்கும்.இடுப்பு எலும்பைக் குடையும் அந்த வலியுடன் நாப்கின் வாங்குவதற்காக போன மாதம் கடையில் நின்று கொண்டிருந்தேன். சாலை ஓரத்தில் மழைநீர் வடிகால் வேலை நடந்து கொண்டிருந்தது. ஒரு 16 வயதுச் சிறுமி கலவைக்கு ஜல்லி அள்ளிக் கொண்டிருந்தாள். கறுப்பான பொலிவான முகம். கொஞ்சம் சாயம் போன பாலியெஸ்டர் பட்டு பாவாடை சட்டை. வயசுக்கு வந்ததைக் கொண்டாட வாங்கித் தந்ததாக இருக்குமோ? நானும் அந்த நாளில் இப்படி ஏதோ ஒரு புதுப் பாவாடை சட்டை போட்ட ஞாபகம்.

கருங்கல் ஜல்லியை சட்டியில் அள்ளிப்போட்டு விட்டு சுற்றுமுற்றும் பார்த்தாள். தூக்கி விட ஆள் இல்லை. அவள் யாரையும் கூப்பிடவும் இல்லை. உதட்டை மடித்துக் கடித்துக் கொண்டு அந்தச் சட்டியைத் தூக்கினாள். எனக்குச் சுரீர் என்று வலித்தது.

அழுகையை அடக்கிக் கொண்டு, எலக்டிரிகல் கடையில் ஏணியில் ஏறி ஸ்டாக் எடுத்த அந்த நாள், நினைவுக்கு வந்தது. கல்லைக் கொட்டிவிட்டு அடுத்த நடைக்கு திரும்பிக் கொண்டிருந்தாள் அந்தப் பெண். பார்த்தேன். கொஞ்சம் கர்வமாகவும் இருந்தது.

• சங்கரி

தோழர் சங்கரி ஒரு ம.க.இ.க. ஆதரவாளர். தனியார் நிறுவனத்தில் வேலை, சென்னையில் குடும்பத்துடன் வாழ்கிறார். (வினவு இணையதளத்தில் வெளிவந்த கட்டுரை)