05272023
Last updateபு, 02 மார் 2022 7pm

தமிழக மக்களுக்கு மின்தடை! பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையில்லை!!

கொளுத்துகிற இந்தக் கோடை இரவை நிம்மதியாகக் கழிக்க குறைந்த பட்சம் நீங்கள் ஒரு நகரவாசியாக மட்டுமே இருக்க வேண்டும். அதுவும் சென்னை மாதிரியான பெரு நகரங்களில் பிறந்திருந்தால் மட்டுமே ஆறு மணி நேர உறக்கம் சாத்தியம். நகர்ப்புறங்களுக்கப்பால் கிரோமப்புறப் பகுதியில் நீங்கள் இருந்தால் ஓடிக் கொண்டிருக்கிற விசிறி பாதியிலேயே நின்று பல மணி நேரம் உங்கள் இரவுத் தூக்கத்தை பலிவாங்கி விடும். இப்படித்தான் கடந்த பல மாதங்களாக தமிழக மக்களின் வாழ்வை அன்றாடம் தாக்கி அதிர்ச்சி ஷாக் கொடுத்துக் கொண்டிருக்கிறது மின் தட்டுப்பாடு.

தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்வதுதான் மின் தட்டுப்பாட்டிற்குக் காரணம் என்று கருணாநிதி மீது குற்றம் சுமத்துகிறார் ஜெயலலிதா. அதிமுக ஆட்சியில் போதுமான மின் திட்டங்கள் செயற்படுத்தப்படாததே இந்நிலைக்குக் காரணம் என்று பழியை ஜெயலலிதா மீது திருப்புகிறார் கருணாநிதி. ஆனால் மக்களின் மின்சாரத்தைத் திருடி அந்நிய முதலாளிகளுக்கு வாரி வழங்கிவிட்டு மக்களை இருளில் தள்ளி கபடியாடுகிறார்கள் கருணாநிதியும் ஜெயலலிதாவும்.

நகரம், பெரு நகரம், கிரோமம், சேரி, பெரிய கிரோமம், பேரூரோட்சி என விதவிதமாக பிரித்து வகை வகையாக மின் தடையை கொடுக்கிறது தமிழக அரசு. குறைந்தது மூன்று மணி நேரத்தில் துவங்கி ஆறு மணிநேரம் வரை அறிவிக்கப்படாத மின் வெட்டு அமுலாகிறது. சில இடங்களில் சீரமைப்புப் பணி நடைபெறுகிறது என்று அறிவித்தும் செய்கிறார்கள். பின்னலாடை ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும் திருப்பூரில் மட்டும் மூன்று மணி நேரம் மின் தடை. ஏற்கனவே மூலப்பொருட்களின் விலையேற்றத்தாலும் பன்னாட்டு நிறுவனங்களின் நெருக்கடியாலும் விழிபிதுங்கி நின்ற திருப்பூர் சிறு நிறுவனங்கள் மாதக்கணக்காக கம்பெனியை இழுத்து மூடிவிட்டுச் செல்லும் நிலை. இந்தத் தொழிலை நம்பியே காலத்தைக் கழித்து வந்த தொழிலார்களோ பட்டினியின் விளிம்பில்.

சென்னையில் மின்வெட்டு இல்லையா?

ஒரு வழியாக கிரோமப்புறங்களில் மின்வெட்டு இருக்கிறது என்பதை ஒத்துக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.ஆனால் சென்னையில் மின்வெட்டிலிருந்து விதி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்று கூசாமல் பொய் சொல்கிறது மின்வாரியம். ஆனால் பராமரிப்புக் காரணங்களைக் காட்டி சென்னை நகரின் பெரும்பாலான இடங்களில் நாள் தோறும் நான்கு மணி நேரம் வரை மின்வெட்டு கடைபிடிக்கப்படுகிறது.

ஆனால் போட் கிளப், போயஸ் கார்டன், கோபாலபுரம் பகுதியில் தடையற்ற மின்சாரம், அதுவே உழைக்கும் மக்கள் அதிகம் வசிக்கும் திருவெற்றியூர், எர்ணாவூர், வியாசர்பாடி, காசி மேடு பகுதியில் பல மணி நேரம் மின்தடை என்று வசதிக்கேற்ப மக்களை வாட்டுகிறது அரசு.

காஞ்சிபுரம், தஞ்சை, கும்பகோணம், ஈரோடு, போன்ற பகுதிகளில் விசைத்தறி தொழிலாளர்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள். அறிவிக்கப்படுகிற மின் தடை என்பது வெறுமனே மின் தடையாக மட்டும் இல்லை. நூல் விலையேற்றத்திற்கும் அதுவே காரணமாகி விடுகிறது. தருமபுரி மாவட்டத்தில் மட்டும் அன்னாசாரம். பாரதிபுரம், பாபிரெட்டிப் பட்டி போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான விசைத்தறி நெசவாளர்களுக்கும், தறிகளை நம்பி காலத்தைக் கழிக்கும் கூலித்தொழிலாளர்களுக்கும் கஞ்சித் தொட்டி திறக்கும் அளவுக்கு நிலைமை சென்றுள்ளது.

விசைத்தறி நெசவாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 500 யூனிட் மின்சாரத்தை இலவசமாக இது வரை வழங்கி வந்தது தமிழக அரசு. விசைத்தறி உள்ளிட்ட நலிவடையும் எந்தத் தொழிலுக்கும் மானியம் என்றோ, இலவசம் என்றோ எந்த சலுகைகளும் காட்டாதே என்று மத்திய மாநில அரசுகளுக்கு பன்னாட்டு முதலாளிகள் உத்தரவிடுவதும் அதை அவன் சொல்வதற்கு முன்னமே இவர்கள் செய்து முடிப்பதும்தான் நடந்து கொண்டிருக்கிற நிலையில் விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தையும் நிறுத்தக் கோரின பன்னாட்டு நிறுவனங்கள்.

ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசு பட்ஜெட் போடுவதற்கு முன்னால் ஆலோசனை நடத்தும் இந்திய தொழில் கூட்டமைப்பினரும் இத்தகைய மானியங்களை நிறுத்துங்கள் என்றே பரிந்துரைத்திருந்தனர். இந்நிலையில்தான் விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரத்தை அரசு நிறுத்தி விட்டதாக செய்தி வெளியானது. ஆனால் மின் வாரியமோ இலவச மின்சாரத்தை நிறுத்தவில்லை என்று மறுப்பறிக்கை வெளியிட்டது. ஆமாம் உண்மைதான், இலவச மின்சாரத்தை நிறுத்தவில்லை பதிலுக்கு மின்சாரத்தையே நிறுத்தி விட்டார்கள்.

நாமக்கல் குமாரப்பாளையத்தில் சுமார் இருபதாயிரம் விசைத்தறி நெசவாளர்கள் மின்வெட்டைக் கண்டித்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்தனர். நாமக்கல் நகரமே அந்தப் போரோட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது. ஆனால் இன்றுவரை அங்கு விசைத்தறிகள் இயங்கவில்லை. அல்லது மின்சாரம் வருகிற நேரத்திற்காக காத்திருந்து நெய்வதால் உற்பத்தியின் முழு அளவையும் எட்ட முடியவில்லை.ஆனால் உழைக்கிற தொழிலாளிக்கு கூலியும் கொடுத்து முழு வேலையையும் பெறமுடியாமல் பலரும் மின்வெட்டு சரியாகட்டும் மீண்டும் நெய்யலாம் என வேறு வேலைகளுக்குச் செல்லத் துவங்கி விட்டார்களாம்.

காஞ்சிபுரம், கன்னியாகுமரி என எல்லா ஊர்களிலும் எல்லா தொழில்களும் பாதிக்கப்படுகின்றது. கரையோர மாவட்டங்களான சென்னை, கடலூர், நாகை, தஞ்சை, இரோமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மீன் பிடிப்பும், அதன் ஏற்றுமதியும் பிரதான தொழில்கள். ஆனால் மீன்பிடித்தொழிலில் ஈடுபடும் பன்னாட்டு நிறுவனங்கள் வாங்கும் மீனை பதப்படுத்த பிரமாண்டமான குளிரூட்டிகளை ஜெனரேட்டர்களைக் கொண்டு இயக்குகிறது. ஆனால் உள்ளூர் சில்லறை வணிகர்கள் ஆயிரக்கணக்கானோர், வாங்கிய மீனை பதப்படுத்த முடியாமல் திண்டாடி நிற்கிறார்கள்.

சிறிய தொழில் நிறுவனங்கள், சிறு வியாபாரிகள் என எல்லா தரப்பையுமே தொழிலை விட்டுத் துரத்துகிறது மின்வெட்டு. ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களை முதலில் நடத்தி விட்டு பின்னர் மசிந்து கொடுக்காத அரசைப் பார்த்து சலித்து விட்டு நகர்ந்து சென்று விடுகின்றார்கள் இவர்கள்.

சொல்லப்பட்ட காரணங்களும்.... பொய்களும்.....

நிம்மதியாக தொழில் செய்ய முடியவில்லை, வேலை இல்லை, வீட்டிற்கு வந்தாலும் கரண்ட் இல்லை இதுதான் இன்றைய கிராமத்து மக்களின் நிலை. மின்சாரத்தை தடுக்காதே.... எங்கள் தொழிலை பறிக்காதே... என்று அவர்கள் அரசை நோக்கிக் கேட்டால் அரசு சொல்கிறது காற்று வரட்டும் மின்சாரம் தருகிறேன் என்று. கன்னியாகுமாரி மாவட்டத்தின் ஆரல்வாய்மொழியை ஒட்டிய திருநெல்வேலி மாவட்ட எல்லையில் உள்ள குமாரபுரம், லெவிஞ்சிபுரம், காவல்கிணறு, பணகுடி, தண்டையார்குளம், சங்கநேரி, ஊரல்வாய்மொழி, இருக்கன்துறை, செட்டிக்குளம், மதகநேரி, வடக்கன்குளம், கோலியாங்குளம், யாக்கோபுரம் என ஆரல் கணவாயின் காற்று வீசும் பகுதியை ஒட்டிய கிராமங்களில் இந்த காற்றாலை மின்விசிறி வைக்கப்படுகிறது. சுமார் 3,500 மின் விசிறிகள் இப்பகுதியில் உள்ளதால் இதற்கு இணையான தொழிலாக வளர்ந்து நிற்கிறது ரியல் எஸ்டேட் தொழில்.

பத்து செண்ட் நிலத்தை பல லட்சம் செலவு செய்து வாங்கி ஒன்றரை கோடி ரூபாயில் காற்றாலை மின் விசிறியும் வைத்து விடுகிறார்கள்.. சினிமா நடிகர்களுக்கோ, தொழிலதிபர்களுக்கோ இந்தக் கோடிகள் ஒரு பிரச்சனையில்லை. காற்றிலிருந்து வரும் மின்சாரத்தை விட மின்சாரத்தின் மூலம் கிடைக்கும் சலுகைகள் தாராளம் என்பதால் அவர்கள் காற்றாலை மின் உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள்.

பெருமளவு தனியார் நிறுவனங்களாலும் பிரபலங்களாலும் தயாரிக்கப்படும் இந்த மின்சாரத்தை யூனிட் ஒன்றுக்கு ஏழு ரூபாய் கொடுத்து வாங்குகிறது அரசு. அதே நேரம் அரசுக்கு பல்லாயிரம் கோடி லாபம் ஈட்டிக் கொடுக்கும் நெய்வேலி மின்சாரத்தை யூனிட் ஒன்றுக்கு 2.50 காசுகள் மட்டுமே கொடுத்து வாங்குகிறது.

ஆனால் போதிய பராமரிப்பின்மை, ஊழியர்களுக்கு தொழில் உத்திரவாதமின்மை போன்ற பிரச்சனைகளால் நெய்வேலி நிலக்கரி சுரங்கத் தற்காலிக தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் அன்றாட வாழ்வுக்கே தள்ளாடி நிற்கிறார்கள். தனியார் காற்றாலை முதலாளிகளிடம் இருந்து ஏழுரூபாய் கொடுத்து மின்சாரத்தையும் வாங்கி விட்டு அவர்களுக்கு ஏராளமான வரிச்சலுகைகளையும் கொடுக்கிறது அரசு.

இந்நிலையில்தான் மின் வெட்டு தொடர்பாக பல்வேறு தொழிலாளர்கள் போராட அதற்கு பதில் சொன்ன மின்வாரியமோ ""காற்றாலைகளின் மின் உற்பத்தி 400 மெகாவாட்டாக குறைந்ததுதான் மின் தட்டுப்பாட்டிற்கு காரணம்'' என்று காற்றின் மீது பழியைப் போட்டது. சமீபத்தில் காற்றும் புயலும் கடுமையாக வீசியதால் வாழை, சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு. இப்போது முதல்வர் சொல்கிறார் காற்று வீசி விட்டது ஆகவே மின் வெட்டை கிராமப்புறங்களில் மூன்று மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரமாக குறைத்து விட்டோம் என்று.

மக்களுக்கு போலியான மின் தட்டுப்பாட்டை உருவாக்கிய இந்திய ஆளும் வர்க்கங்கங்கள் அடுத்து மக்களுக்கு தடையற்ற மின்சாரத்தை வழங்கப் போகிறோம் என்று பன்னாட்டு நிறுவனங்களை மின் உற்பத்தியிலும் அனுமதித்து விட்டது. ஏற்கெனவே பிரான்ஸ் நாட்டின் அரேவா என்னும் அணு சக்தி நிறுவனம் இந்தியாவுக்கு இன்னும் சில மாதங்களில் 300 டன் யுரேனியம் சப்ளை செய்வதாகக் கூறி பெரும் காண்ட்ராக்ட்டை வாங்கியுள்ளது. இதுபோக தலா 1,600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 6 அணு உலைகளை இந்தியாவில் அமைப்பதற்கான பேச்சுவார்த்தையையும் அரேவா நிறுவனம் நடத்தி வருகிறது. பிரிட்டன், கனடா, ஜப்பானிய நிறுவனங்கள் இந்திய மக்களிடம் உருவாக்கப்பட்டுள்ள போலி மின் தட்டுப்பாட்டை ஒட்டி களமிறங்கக் காத்திருக்கின்றன.

தோஷிபா, கனடா அணுசக்தி லிமிடெட், எஸ் என்சி லவாலின், காமேகோ கார்ப்பரேசன் ஆகிய பெரும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் கமல்நாத்தை சந்தித்துப் பேரமும் பேசி முடித்து விட்டார்கள்.. அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான வெஸ்டிங் ஹவுஸ் எலக்ட்ரிக் கம்பெனி, இந்தியாவில் பல லட்சம் கோடி டாலர் அளவிற்கு அணுசக்தி வியாபாரத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக, மும்பையில் தெரிவித்திருக்கிறது. இந்தியாவின் மின்சாரம் தயாரிப்பதற்கான பிரமாண்ட அணு உலைகளை அமைக்கப் போவது இந்த நிறுவனம்தான். இன்றைய மின் வெட்டின் பின்னால் உள்ள ஷாக்கடிக்கும் கதைகள் இதுதான்.

மின் வாரியத்தின் பரிதாப நிலை

மின்சாரத்தை வாங்கி மக்களுக்கு மின்சாரத்தை பகிர்வது மின்வாரியம். ஆனால் போதுமான அளவுக்கு மின்தயாரிப்புத் திட்டங்களைத் துவங்கக்கூட மின்வாரியத்திடம் பணம் இல்லை. அது மீளாக்கடனில் மூழ்கி மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது. அண்டை மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கக் கூட காசில்லாத மின் வாரியம் தங்களுக்குச் சொந்தமான 17 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை அடமானம் வைத்துத்தான் மின்சாரம் வாங்கியது. இப்படி கடன் பட்டு வாங்கும் மின்சாரத்தை மின் வாரியம் பன்னாட்டு முதலாளிகளுக்கு 1.60 காசுக்கு அடிமாட்டு விலைக்கு விற்கிறது. இதை விட மலிவான விலையில் பெற்றுக் கொள்ளும் பன்னாட்டு முதலாளிகளும் உண்டு.

மின்சாரம் மக்களுக்கல்ல பன்னாட்டு முதலாளிகளுக்கே

நிலக்கரியில், காற்றில், நீரில், சூரிய ஒளியில், கரும்பில், சோளத்தில் என பல வழிகளில் நாம் மின்சாரம் தயாரிப்பதில் உலக நாடுகளுக்கு இணையாக இருந்தாலும் இந்திய விஞ்ஞானிகள் தோரியத்திலிருந்தும் நமக்குத் தேவையான மின்சாரத்தை தயாரித்துக் கொள்ளலாம் என்பதை ஆய்வுகள் மூலம் நிரூபித்தனர். ஆனால் இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த தோரியத்திலிருந்து மின்சாரம் தயாரிக்கும் எதிர்காலத் திட்டத்திற்கு அமெரிக்கா தடை போட்டது.

அமெரிக்காவின் அடியாளாக செயல்படும் இந்திய அரசின் கைக்கூலித்தனத்தை கண்டு மனம் நொந்த பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநரும், வியன்னாவில் இருக்கிற சர்வதேச அணுசக்தி முகமையின் ஆலோசகருமான அணு விஞ்ஞானி ஏ.என்.பிரசாத் இப்படிச் சொல்கிறார். ""நமது நாட்டில் உள்ள தோரியம் இருப்பைக் கொண்டு ஆண்டொன்றுக்கு 3,50,000 மெகாவாட் மின்சாரத்தை நாம் உற்பத்தி செய்ய முடியும் (தற்போது நாம் ஒரு இலட்சம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறோம்) நமது எதிர்கால எரிசக்தி தேவைக்கு உத்திரவாதம் வழங்க முடியும். இதை நீண்ட காலத்துக்கு முன்பே நாம் மதிப்பிட்டுள்ளோம். தோரியத்தை அடிப்படையாகக் கொண்ட 500 மெகாவாட் அதிவேக ஈனுலையின் முன்னேற்றத்தைக் கண்டு பல வளர்ந்த நாடுகள் புழுங்கிக் கொண்டிருக்கின்றன. இது நமது விஞ்ஞானிகளின் நாற்பதாண்டுகால உழைப்பு. இது அமெரிக்காவிற்கும் தெரியும். தோரியத்தை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும் நமது திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடுவதுதான் அமரிக்காவின் நோக்கம் என்பது வெளிப்படையாக தெரியவில்லையா?'' எனக் கேள்வி எழுப்பியிருந்தார் ஏ.என்.பிரசாத்.

இப்படி உள்ளூரில் மின்சாரம் தயாரிக்க எத்தனையோ வழிகள் இருந்தும் அமெரிக்க முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்காகவும் உள்ளூர் உற்பத்தியைக் கொன்ற மத்திய அரசு, வளர்ந்த நாடுகளில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்து அதிலிருந்தே மின்சாரத்தை தயாரித்து வருகிறது. உள்ளூர் உற்பத்தியை முடக்கியதுதான் இந்த மின் தட்டுப்பாட்டிற்குக் காரணம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் கிடைக்கிற மின்சாரத்தை பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகை விலையில் தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது மாநில அரசு.

இந்தியாவிலேயே வெளிநாட்டு முதலீடுகளைக் கவர்வதில் தமிழகம் முன்னணி மாநிலமாக இருக்கிறது என்று அடிக்கடி பெருமைப்படுகிறார் தமிழக முதல்வர். மின்சாரம் தயாரிக்க வரும் பன்னாட்டு நிறுவனங்களையும் தமிழகம் கவர்ந்திழுக்கத் தயங்காது என்பது கண்கூடாகத் தெரிகிறது. ஆனால் கவர்வதில் உள்ள கவர்ச்சி எதையும் தமிழகம் அனுபவிக்கவில்லை. அந்நிய முதலீடுகள் சென்னையில் கொண்டு குவிக்கப்பட குவிக்கப்பட, சென்னையின் பூர்வகுடிகள் எப்படி சென்னையில் இருந்து அப்புறப்படுத்தப்படுகிறார்களோ அதன் அடுத்தக் கட்டமாக இந்த பன்னாட்டு முதலீடுகள் மக்களுக்குக் கொடுத்திருக்கும் பரிசுதான் மின்வெட்டு.

நோக்கியா, மிட்சுபிஸி, மோட்டரோலா, செயிண்ட் கோபெய்ன், போர்ட், ஹண்டாய் என கார், மொபைல், கண்ணாடி என எல்லா தொழில்களிலும் முதலிட வரும் பன்னாட்டு முதலாளிகளுக்கு தமிழக அரசே நிலத்தை கிரயம் செய்து அடி மாட்டு விலைக்குக் கொடுக்கிறது. ஆனால் நிறுவனம் வருகிறது என்றாலே அந்தப் பகுதியில் உள்ள நிலங்களின் விலை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்து விடுகிறது. அடி மாட்டு விலைக்கு நிலம், தடையற்ற தண்ணீர், அது போல தடையற்ற மின்சாரம். இதுதான் பன்னாட்டு முதலீடுகளை தமிழகம் கவர்வதின் கம்ப சூத்திரம்.

நெய்வேலி மின்சாரத்தை 2.50 காசுக்கு வாங்குகிற அரசு மக்களுக்கும் அதே விலையில்தான் மின்சாரத்தைக் கொடுக்கிறது. ஆனால் பன்னாட்டு முதலாளிகளுக்கோ யூனிட் ஒன்று வெறும் இருபதே காசுகள்தான். அதுவும் தடையற்ற மின்சாரம். இதுபோக இவர்களுக்கு இலவச மின்சாரமும் உண்டு. அரோஜக உற்பத்திக்காக மக்களிடம் திருடி பன்னாட்டு முதலாளிகளுக்குக் கொடுக்கும் அரசு அந்த உண்மையை மறைத்து விட்டு காற்றின் மீது பழியைப் போட்டு தப்பிக்கப் பார்க்கிறது. ஆனால் மக்களிடம் திருடுகிற மின்சாரத்தை வாங்கிக் கொழுக்கும் பன்னாட்டு முதலாளிகளை வாழையிலை வைத்து மாநில அரசு வரவேற்பதற்கு அவர்கள் சொல்லும் ஒரே காரணம் அவர்கள் வேலை வாய்ப்பைக் கொடுக்கிறார்கள் என்பதுதான்.

அடிமாட்டு கூலிக்கு ஆளும் கிடைக்கிறது.... இலவசமாக மின்சாரமும் கிடைக்கிறது கடை விரிக்க நிலமும் கிடைக்கிறது என்று நோகாமல் நொங்கெடுக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்காக மக்களை நிரந்தரமான இருளில் தள்ளி வேடிக்கைக் காட்டும் அரசு, தண்ணீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாக பயன்படுத்த மக்களுக்கு அறிவுரை சொல்கிறது.

• இராவணன்