"பாங்கு ஊதியாச்சு போலருக்கு, தட்டி எழுப்பிவிடலாம்ல? நான் வேற நல்லா தூங்கிட்டேன்''

"எத்தனை தடவை தட்றது, சரி இன்னிக்கு ஏவாரத்துக்கு போவல போலருக்குன்னு நெனச்சேன்...

'' விலக மறுத்த கெட்டாவியை ஏவ்வ் என சத்தமாக விட்டபடி விஜயா தலைமுடியை முடிந்து கொண்டே கண் எரிச்சலோடு எழுந்தாள். பேருக்கு அவசர அவசரமாக முகத்தைக் கழுவிக்கொண்டே,

"அலுப்பை பாத்தா முடியுமா? கோடை சீசன்ல தினம் போனாதான் தவணை கட்டலாம்!

உஹ்ஹ.. உஹ்ஹ.. இந்த வரட்டிருமல் வேற அடிக்கடி தொண்டை வலிக்குது.. நீராகாரத்த குடிக்க முடியல..

''பேசிக்கொண்டே பெட்டிக் கட்டும் கயிறு, ஹாரன், நாலு நீண்ட உரசாக்கு பை இவைகளை கைகளில் சுருட்டிப் பிடித்தபடி.. வா! வா! பெட்டியைத் தூக்கு! என்று மனைவியை அழைத்துக் கொண்டே வாசல்பக்கம் ஓடினார் சாமிநாதன்.

"இப்படி இருமுறீங்களே.. போற வழியுல பெரியாசுபத்திரில்லதான் காட்றது!'

"அவன்கிட்ட போய் ஓ.பி. சீட்டு வாங்கறதுக்குள்ள ஐஸ் பெட்டியே கரைஞ்சிடும். நைட்டு சித்தரத்த கசாயம் போடு! ஹம் நல்லா புடி.. போட்டு உடச்சே.. கம்பெனிக்காரன் எம் பொட்டிய ராவிடுவான்! சரி, சரி உப்பைக் கொடு! நீயும் வருசக் கணக்குல பொட்டியத் தூக்கி விடுற... கைல காசுதான் நிக்கல.. இந்த இருமலாவது நிக்குதா? உஹ்ஹம். ''அலுத்துக்கொண்டே கேரியரில் பெட்டியை இறுகக் கட்டி முடி போட்டு, ஹாரனை ஹேண்ட் பாரில் வாட்டமாக வைத்துக் கட்டியவாறு, சரியாக இருக்குதா என்று அசைத்துப் பார்க்க, விஜயாவுக்கு எரிச்சல் வந்தது.

"எல்லாம் சரியாத்தான் இருக்கு போங்க.. தேரை ஜோடிக்குற மாதிரி தான்.. பெருசா சரிபாத்துகிட்டு'' பேசியதைக் கேட்டு பக்கத்து வீட்டில் சாணி கரைத்துப் போட்டுக் கொண்டிருந்த ராணி,

"என்னக்கா இப்படி சொல்லிட்டீங்க.. சொன்னாலும், சொல்லாட்டாலும் அண்ணன் வண்டி தேருதான்! எத்தனைய மாட்டிகிட்டு போறாரு!''

"வீட்ல உக்காந்துகிட்டு ஒரு கிலோ பூ கட்றதுக்கே இதுங்க அலுத்துக்குது.. இந்த வேகாத வெயில்ல.. இந்த பெட்டிய பதினஞ்சு, இருபது கிலோ இருக்கும், இதுக்குள்ள ஐஸ்ஸை வேற வச்சி கிட்டு நான் பிரேக்கையும் புடிக்கணும் ஹாரனையும் அடிக்கணும்.. இதுங்களுக்கு என்னா தெரியுது சொல்லு! முட்ட வுடுற கோழிக்குத்தான் வலி தெரியும்..'' சாமிநாதனின் பேச்சைக் கேட்டு ராணி குபுக்கென சிரித்தாள். ""ஒரு கிலோ பூவகட்டுனா தெரியும் நரம்பு வலி..!'' விஜயாவின் பதிலுக்கு மெலிதாக சிரித்தபடி பெட்டியில் வலது கையை பொருத்தி ஒரு உந்தில் சைக்கிள் பாரில் லாவகமாக காலைத் தூக்கிப் போட்டு கிளம்பினார் சாமிநாதன்.

•••

"என்னங்க நாங்க கருக்கல்ல வந்துட்டோம் எங்கள விட்டுட்டு அவுருக்கு மொதல்ல சரக்குப் போடுறீங்க?'' ஐஸ் கம்பெனி முதலாளியிடம் விளையாட்டாகக் குறைபட்டுக் கொண்டான் முத்து.

"ஏய் நீ தொழிலுக்கு வந்து ஒரு வருசமாகுமா.. அவுரு எங்க அப்பா காலத்துலேந்து ஏவாரம் பாக்குறாரு.. எனக்குத் தெரிஞ்சு முப்பது வருசமா இந்த ஐஸ் பெட்டியை தூக்கறாரு.. மன்னார்குடியிலேருந்து திருத்துறைபூண்டி வரைக்கும் லைன் போறாரு, நீ போவியா!.. அம்பத்தஞ்சு வயசுல தினமும் அம்பது மைல் சைக்கிள் மிதிக்குறாரு நீ மிதிப்பியா!.. நாலு பள்ளிகூடத்தையும், பெரிய கோயிலையும் சுத்தி வர்றதுக்குள்ள மேலு வலிக்குதுன்னு வாரத்துல மூணு நாள் பெட்டியைக் கழட்டிப்போட்டுர்ர.. அவுரு அப்படியா.. கொஞ்சம் பொறுங்கடா!'

"இப்ப உள்ள பசங்களுக்கு என்ன? வேர்க்காமலே சம்பாதிக்கனும்னு நெனக்குறானுங்க! எதிர்காத்துல மிதிக்குற மிதியுல சைக்கிள் போக்ஸ் கம்பி காலுக்கு வந்துரும்! என் கெண்டைக்காலயும், சாமிநாதன் கெண்டைக்காலயும் பாரு அது நரம்பு இல்ல இரும்பு!'' சாமிநாதனுக்காக பரிந்து பேசி சேர்ந்து கொண்டார் மாரி.

"ஏய் முத்து பெரிச பாத்தியா டயலாக்க! இரும்பாம்!'' சிரித்தனர் இளைஞர்கள்.""சும்மா இல்ல தம்பி! என் கையைப் பாரு.. ஐஸ்ஸை எடுத்து எடுத்து ரோஸ் கலர்ல ரத்தக் கட்டு போல இருக்கு பாரு!'' சாமிநாதன் உள்ளங்கையை விரித்துக் காட்ட மாரி, ""இங்க பாருங்கடா.. உள்ளங்கையே செத்துப்போச்சு.. பொணத்து கை மாதிரி மரத்துக் கிடக்குது பாரு!'' பார்த்த மாத்திரத்தில் இளைஞர்களுக்கு கேலித்தனம் போய் முகம் உன்னிப்பானது.

"சரி, சரி, மாரி.. அடுத்தவாரம் முத்துப்பேட்டை பள்ளிவாசல் திருவிழாவாம்! பத்துப்பெட்டி போனா கூட தாங்கும்!..'' சாமிநாதன் தகவல் சொல்ல.. ""அண்ணே! நாங்களும் வர்றோம்.. ஏவாரம் நல்லா இருக்கும்னு கேள்விப்பட்டுருக்கோம்..'' முத்துவும், சீனுவும் ஆவல்பட்டனர்.

"வர்றது பெரிசு இல்ல அங்க வந்து ஒழுங்கு மொறயா ஏவாரம் பார்த்தா.. பள்ளிவாசல்ல பிரியாணியும் தருவாங்க.. இந்த கேலி, கிண்டல் வச்சிகிட்டா ஒழுங்கா ஊர் வந்து சேரமுடியாது..''

"இல்லண்ணே! ஏவாரத்துக்கு போற இடத்துல அதுவெல்லாம் வச்சுப்போமா.. டேய் அண்ணனுக்கு சரக்குப் பெட்டியைத் தூக்கி விடுறா..'' முத்துவும், சீனுவும் தூக்கிவிட்டனர்.

"பாத்தியா சாமிநாதா.. தனக்கு தனக்குன்னா முடியும் கள வெட்டுமாம்! காரியம் ஆகணும்னோன என்னான்னா பண்ணுறானுக பாரு!''

சாமிநாதன் வேலையில் கவனமாக இருந்தார்.

"நூறு குச்சி, ஐம்பது பாலு, சேமியா ஐம்பது கோலா அம்பது..'' முதலாளி கணக்குச் சொல்ல சாமிநாதன் தலையாட்டிக் கொண்டார்.

"ஏன் பால் ஐஸ் கொஞ்சம் கூட போட்டுக்கறது''

"வேணாங்க கிரோமத்துல சேமியாதான் ஓடுது''

பெட்டிக்கு இடைவெளியில் மரத்தூளைக் கொட்டி, பனிக்கட்டி சிதறல்களை சிறிதுப் போட்டு, வீட்டிலிருந்து கொண்டுவந்த உப்பைக் கொட்டி அதற்குத் தகுந்த கட்டை குச்சியில் இடித்தார் சாமிநாதன்.

"நேத்தெல்லாம் வண்டியிலேந்து ஏறி, ஏறி இறங்கி இடுப்பெலும்பு தேஞ்சதுதான் மிச்சம்.. கூப்புடுறானுவ சரின்னு இறங்குனா ஒத்த ஐஸ் வாங்க பத்து பசங்க சுத்திக்குறான்.. நில்லு வர்ரேன்னு பசங்க வீட்டு பக்கம் போனா... திசைய பாத்து பாத்து கண்ணு மரத்ததுதான் மிச்சம். என்னதான் ஹாரனை அடிச்சுக் கௌப்புனாலும் ஒரு பய கிளம்ப மாட்டேங்குறான்.. பழைய மாதிரி ஏவாரம் இல்ல, மாரி!''

"ஆமாம், ஆமாம்! முன்னெல்லாம் மன்னார்குடிலேர்ந்து சவளக்காரன் போறதுக்குள்ளயே ஒரு முப்பது ரூவாய்க்கு விக்கும். இப்ப கூத்தா நல்லூர் தாண்டுனாலும் இல்ல! மூலைக்கு மூலை கோன் ஐஸ், இந்த கப் ஐஸ்லாம் வந்துட்டான்.. கிராமத்து சனந்தான் நம்ம ஏவாரம்... முன்னமாதிரி விவசாயமும் இல்ல.. காசு இல்ல.. சனங்க இதுல எங்கேர்ந்து ஐஸ் வாங்கும்.. ரெண்டு ஐஸ் வாங்கி நாலு சாப்புடுது! நம்ப மச்சான் சோடா கலர் ஏவாரமும் டல்லுதான்.. என்ன எழவோ! முன்ன மாதிரி இல்ல, நாலு காசை பாக்கறதுக்குள்ள தாவு தீருது போ! வா பாக்கலாம்.. எங்க டிபனு?''

"போற வழியுல வடை, டீதான்!'' ஒரு தம்கட்டி உந்தி காலைத்தூக்கிபோட வெறும் வயிறு துவண்டு துடித்தது, சைக்கிளும் முணகத் தொடங்கியது.

•••

பூம்.. பார்ம்.. ஹாரனை விடாது அழுத்தி. ஐஸ்.. சேமியா பால் ஐஸ்.. ஹாரன் ஒலியோடு ஏறி இறங்கி அடித்தொண்டையிலிருந்து வந்த குரல்.. பள்ளிவாசல் தெருவின் வீட்டுக் கதவுகளை திறக்க வைத்தது..

"ஐஸ்சு, ஐஸ்சு..'' கத்திக்கொண்டே ஒரு பையன் வேகமாக விரட்டி ஓடிவந்தான்.. குரலையும், ஹாரனையும் பொருத்தியபடி கொஞ்சம் நிழற்பாங்கான திண்ணையோரம் போய் இறங்கி சைக்கிளோடு பெட்டியை விலாவில் சாய்த்துப் பிடித்துக் கொண்டார் சாமிநாதன்.

"நாலு சேமியா.. ஒரு பால் ஐஸ்சு..'' அதையே திருப்பித் திருப்பி நச்சரித்தான் பையன்.

"டேய்.. கைல தரமுடியாது கீழ விழுந்துரும் போய் ஏனம் எடுத்துட்டு வா.. பயப்படாத போக மாட்டேன் இங்கதான் நிப்பேன்..

'' சந்தேகப் பார்வையுடன் கண்களை அடிக்கடி ஐஸ்காரர் மேல் வைத்தவாறே வீட்டுபக்கம் ஓடிப்போய் பாத்திரத்தோடு திரும்ப வந்தான்.

"இந்தா.. புடிச்சுக்க.. பாக்கி காசு.. பத்திரம்..''அவசரமாக ஒரு ஐஸை நக்கியபடியே பாத்திரத்தோடு போனவனை ""வந்துதான் தின்னேன்'' என்று திட்ட ஆரம்பித்தாள் ஒரு பெண்.

"ஐஸ்காரரே.. நாளைக்கு புள்ளை பயணம் போறான், பிரியாணி போடுறோம்.. வந்துடுங்க உங்களுக்கு நாளைக்கு எங்க வீட்லதான் சாப்பாடு! என்ன?'' உரிமையோடு கட்டளையிட்டார் பாய்.

"சின்ன தம்பிங்களா! சின்ன புள்ளைலேந்து பாத்த பையன். பயணம் போற அளவுக்கு வளந்துட்டாங்களா! நல்ல மகராசனா போயிட்டு வரட்டும்! ரம்ஜானுக்கு கூட தம்பிதான் கூப்புட்டு வீட்டுக்கு பிரியாணி கொடுத்து விட்டுச்சு...'

""இந்த வேகாத வெயில்ல சூரியன தலையில வாங்கிகிட்டு எங்க புள்ளங்களுக்கு உங்க கையால ஐஸ் தர்றீங்களே ஐயா.. அத விடவா? பயணம் போன பசங்க பூர உங்ககிட்ட ஐஸ் வாங்கி தின்னவங்கதான். இருங்க.. பெரிய தம்பி அனுப்புன சட்டை துணி ஒன்னு இருக்கு தாரேன்..''

"வேணாங்க பரவாயில்ல...'' பாசத்தில் நெகிழ்ந்தார் சாமிநாதன்.

"இருப்பா.. அந்த காலத்துலேர்ந்து நீ கண்ணுக்கு நேரா கவுரமா உழைக்குற ஆளு.. இரு வந்துடறேன்...''

பேசிக்கொண்டே அனிச்சை செயலாய் ஹாரனை அடித்து ஒலியெழுப்ப ஓரளவு வியாபாரமானது.

சட்டைத் துணியை வாங்கி கொண்டு, ""வர்றங்க.. ரொம்ப நல்லது'' என நன்றி சொல்லி ரோட்டு பக்கம் விரைந்தார்.

நடவு நேரம். ""இப்படியா லேட்டா வர்றது.. மன்னார்குடி ஐசு.. என் மாமன் வீட்டு ஐசுன்னு இவ வேற.. உங்ககிட்டதான் வாங்குவேன்னு நின்னு கெடக்கா?'

"ஏய் உங்க வயசுல அவுருக்கு பொண்ணு இருக்கு! அவரே வெட்கப்படுற ஆளு.. நீங்க வேற!'' கேலியாய் பேசிய நடவாட்களை இடைமறித்து பழகிய தோரணையுடன் கரையேறினாள் முத்துலட்சுமி.

"என்ன ஐஸ்காரரே பொண்ண கட்டிக் குடுத்துட்டீங்களா?''

"எங்க எவன எடுத்தாலும் ஏழு பவுனுங்குறான்.. பத்து பவுனுங்குறான்.. விதி விட்ட வழி!

"அய்யோபாவண்டி முத்துலட்சுமி. இவரும் நான் சின்னப்புள்ளையா இருக்குறப்பலேந்து ஐஸ் விக்குறாரு.. வயித்துக்கும், வாயுக்கும் சரியாய் இருக்கு பாரு! உன் நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் ஐஸ்காரரே.. ஆண்டவன் மேல பாரத்த போடுங்க!...'' நடவாள் பவுனும் வருத்தப்பட்டு பேசினாள்.

"அய்யே! மனுசன வெயில்ல நிக்க வெச்சிகிட்டு கத பேசிட்டு! வேணுங்குற ஐஸை வாங்கிட்டு அனுப்புனாதான அவுரும் நாலு இடம் பாப்பாரு! ஏம் புள்ள எத்தனன்னு கணக்கு போட்டு வாங்கு! மச மசன்னு நிக்காதே!

"பதினொன்னு! சேமியாவா கொடுங்க! இந்தாங்க காச எண்ணிப்பாருங்க.. எவ்ளோ இருக்கு!'

"ஒரு ரூபா கொறையுது.. பரவாயில்ல.. நாளைக்கு தாங்க'' கிளம்ப இருந்தவரை பவுனு தடுத்தாள். ""அட நீங்க வேற அந்த பாவம் எங்களுக்கு ஏன்? இந்த ஒரு ரூபாய்க்கு தான ஐஸ்காரரே வெயில்ல சுட்டு, வேர்வைல அவியுற... தே! சின்ன பொண்ணு.. கொடு தாரேன்..'' பக்குவமாக வாங்கி கையில் திணித்தாள்.

"ஐஸ்காரரே நாளைக்கு வாங்க! ஒரு மரக்கா நெல்லு தாரேன்.. பொங்கி சாப்பிடுங்க பாவம்! அடுத்த வாரம் பாருங்க அறுப்பு முடிஞ்சு ஊரு கொஞ்சம் தெம்பா இருக்கும்.. ஐசும் விக்கும்.. காலனி பக்கம் போங்க.. விருந்தாளி வந்து கெடக்கு ஏவாரம் ஓடும்!'' அக்கறையுடன் வழிகாட்டினாள் முத்துலட்சுமி.

சொன்னமாதிரி காலனித்தெருவில் காசுக்கும், சிலபேர் நெல்லு போட்டும் ஐஸ் வாங்கினர். நெல்லுப்பை எடை ஏறிப் போனது.

•••

மெல்ல ஹாரனை அழுத்திக் கொண்டே வேறு தெருவுக்குள் நுழைந்தார். கோவில் மரத்தடியில் சீட்டுக்கச்சேரி தூள் பறந்தது. சீட்டுக்கட்டை அவிழ்த்து போட்டபடி தன்னை மறந்து சத்தமாக பேசிக்கொண்டிருந்ததனர்.

"ஒரு வழியா கரும்பை வெட்டிட்ட போலருக்கு!''

"ஏன் கேக்குற உளுந்து பறிக்க தவிச்ச மாதிரிதான் ஆயிபோச்சு கரும்பு வெட்டவும்.. ஒரு பயமுன்ன மாதிரி கூலிக்கு கெடைக்க மாட்டேங்குறான். விருந்து வச்சு அழைக்க வேண்டி இருக்கு!'.

"ஊரப்பாத்து பயந்ததெல்லாம் பழனித்தேவர் காலத்தோட போயிடுச்சு போல.. இப்ப அவனவன் டவுனுக்கு போயி படிக்கறதென்ன? கால்ல பூட்ஸ் என்ன? இந்த பாரு நம்ப பொம்பளங்கெல்லாம் புடவைய ஏத்திக்கட்டிகிட்டு அலையுது. அவுளுகள பாரு தழைய தழைய இடுப்புச் சேலை ரோட்ல கெடந்து புரளுது! மொதல்ல இந்த பய மவன் கவர்மெண்ட் சரியில்லயா.. அவுனுகளுக்குதான சலுகை!'' பேசியபடி ""வக்கா....'' என்று கெட்ட வார்த்தையோடு மடியில் கிடந்த துண்டை அவசரமாக எடுத்து முதுகில் ஒட்டிய உண்ணிøய அடித்து விரட்டினான் பாலு.

"ஐஸ் காரரே என்ன வந்து ஒரு கை போடறது!''

"என்ன இத்தன பேரு இருக்கோம்.. கண்டுக்காம போறீங்க!'' ஆளாளுக்குப் பேச, கொஞ்சம் மிரட்சியோடு சைக்கிளிலிருந்து பொத்தென்று குதித்தார் சாமி நாதன்.

"அதெல்லாம் இல்லீங்க.. உங்க தெருவுக்குத்தான் போறேன்... இந்தாங்க.. எத்தன வேணும்? உங்களுக்கு இல்லாததா?'' பரபரத்தார். "ஏய் மாப்ள எத்தன பேரு..'' என்று ஒருவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே. நெருங்கி வந்தனர். ஒருவன் தானாகவே ஐஸ் பெட்டியை திறந்து கையை விட்டான். வகைவாரியாக அடுக்கி வைத்திருந்ததை அவன் கிளறி, கலைப்பதைப் பார்த்து ஆத்திரம் வந்தாலும் இவர்களிடம் வாய் கொடுத்து மீள முடியாது என்ற அச்சத்தில், ""நல்ல ஐஸ்தான்.. நான் தர்றங்க'' என்று பால் ஐஸை பாதுகாக்க எத்தனித்தார்.

"இருய்யா ஐஸ்காரரே! என்னா தங்கமா வச்சிருக்க பொத்திப் பொத்தி வக்கிற..'' என்றவாறு அவனே ரெண்டு பால் ஐஸை எடுத்தான், வரிசையாக கோலா, சேமியா என கலந்து எடுத்து கூட்டத்துக்கு விநியோகித்தான்.

"அப்புறம் பாதி ஏவாரத்த நானே பாத்துட்டேன்... காசு எவ்வளவு?'' சிரித்துக் கொண்டனர்.

"பதினைஞ்சு.. இல்ல பத்து.. டேய் எட்டுதான்டா..'' என்று ஆளாளுக்கு குழப்பினர்.

"ஐஸ்காரரே இன்னும் நாலு ஐசு கொடு! ஏய் ரமேசு இத வீட்ல கொடுத்துடு.. பழைய பிரோந்தி பாட்டில் ஒரு நாலு கெடக்கும். கொண்டாந்து ஐஸ்கார் கிட்ட கொடு.. காசுல பாட்ல கழிச்சுக்கய்யா..''

"சரிங்க''.. அலமலப்புக்கு இடையில் கணக்குப்போட்டு காசுகேட்க,

"என்னய்யா இருபது இருபத்தஞ்சுங்கற.. நாலு பிராந்தி பாட்ல கழிச்சுமா இவ்வளவு வருது!'' என்று அவரைக் குடைந்தான்.

"எல்லாம் பால் ஐசு, சேமியா, கோலா எடுத்தீங்கள்ல அதான் கூட வருது.''

சம்மதிக்காதவனாய்,""என்னமோ போ! எங்க ஊர்ல வந்து ஏவாரம் பாத்துட்டு எங்களையே ஏமாத்தாம இருந்தா சரி.. ரமேசு இவ்ளவா வருங்குற?..'' அவனும் கணக்குப் பார்ப்பது போல் பாவனை செய்தான். கூட்டல், கழித்தல் தெரியாதவன் போல் அவன் விழி மழு மாறியது. ""சரியோ தப்போ ஒரு இருபதைக் கொடு!'' என்றான்.

"ரொம்ப குறையுதுங்க. ஒரு அஞ்சு சேத்து கொடுங்க.

"என்ன ஐஸ்காரரே ஒரு அஞ்சு ரூபாய்க்கு இந்த இழுப்பு இழுக்குற.. அப்புறந்தான் வாங்கிக்கறது, அஞ்சு ரூபாய்க்கு எங்க ஊரு மேல நம்பிக்கை இல்லையா.. நாங்களும் மன்னார்குடி தென் கொண்டார் வகையறாதான்யா.. என்ன! குரல் கொஞ்சம் அதட்டலாக வர, சாமிநாதன் உடனே,

"அதெல்லாம் ஒண்ணுமில்ல, பரவாயில்லீங்க கணக்குதான் சொன்னேன்'' என்று மேற்கொண்டு ஏவாரத்தை பார்க்க விட்டால் போதும் என்று தெருவுக்குள் சைக்கிளை வேகமாக அழுத்தினார்.

"என்ன ஐஸ்காரரே ஒரு தேங்காய்க்கு நாலு ஐஸ் தரக்கூடாதா?'' பெண்கள் தேங்காயைப் போட்டு ஐஸ் வாங்கிக் கொண்டே முனகினர். வலது பக்கம் உள்ள பையில் தேங்காயைப் போட்டபடி பதிலேதும் பேசாமல் சிரித்து சமாளித்தார். ஒரு வழியாக முக்கால் வாசி பெட்டி காலியானது மாதிரி காலுக்குத் தெரிந்தது. வேகமாக தெருவைத் தாண்டி சாலைக்கு வந்து மரத்தடியில் சைக்கிளை சாத்திவிட்டு அருகில் மதகிலேயே சற்று உட்கார்ந்தார். வெறும் வயிற்றோடு செருமிய செருமலுக்கு..

அரச மரக்காற்று சற்று மருந்து போல நெஞ்சை வருடிக் கொடுத்தது. குனிந்து ஒருமுறை தன் உடலைப் பார்த்து வாயால் ஊதிக் கொண்டார். வாயிலிருந்து வந்த காற்று உலையிலிருப்பது போல சூடாக வெறுப்பேற்றியது. கழுத்தை அறுத்துக் கொண்டு கொட்டுவது போல வியர்வை நரம்புகள் போல நாலாபக்கம் ஓடியது. விலா அரிப்புக் கொடுத்தது... முண்டாசை அவிழ்த்து உதற, முடிந்து வைத்திருந்ததைப் போல அதற்குள்ளிருந்தும் வேர்வை உதிர்ந்தது. இனி அவ்வளவுதான் டீ கடையில் ஏதாவது ஒரு கலப்புச் சோறு பொட்டலத்த தின்னுட்டு வீட்ட பாக்கப் போனா நேரம் சரியாயிடும்.. என்று தனக்குள் முடிவெடுத்தவாறு "அம்மா' என்று கையை மதகில் ஊன்றி எழுந்திருக்க இடுப்பு கழண்டு விழுந்தது போல இருந்தது. வீட்டை நோக்கி சைக்கிள் முகத்தை திருப்பியது.

•••

"ஏ விஜயா.. விஜயா..''

"வர்றப்பவே அலறிக்கிட்டே வாங்க! தோ வாரேன்..''உதிரிப்பூக்களை ஓரம் தள்ளிவிட்டு பூக்கட்டியதை பாதியிலேயே போட்டுவிட்டு வாசல் பக்கம் வந்தாள்.

"வர்றப்பவே முனகாத!.. பாத்து புடி.. இது பொட்டி அல்ல நம்ப இரைப்பை.. எங்க சாந்தி?''

"எங்க போறது அவளும் பூ கட்டி கிட்டுதான் இருக்கா!'' ""சலிச்சுகிட்டு என்ன ஆகப்போவுது! ஆகவேண்டியதப்பாரு! இன்னைக்கு நான் பட்டபாடு எனக்குதான் தெரியும்! நல்லவேளை மிச்ச ஐஸை வீணாக்காம, கரைஞ்சிராம, வேகமாக சைக்கிளை ஓட்டிகிட்டு வந்து திரும்பத் தள்ளிட்டேன்...''

வேகமாக வீட்டுக்குள் நுழைந்து சட்டையைக் கழட்டிய வேகத்தில் சீப்பைத்தூக்கி, மனைவி கையில் கொடுக்க, வழக்கமான வேலைகளைச் செய்வதைப் போல் விஜயாவும் முதுகுப் பக்கத்தை சீப்பில் வருக், வருக்கென்று சொரிந்து கொடுத்தாள். ""இங்க குடு! என்னா செய்யுற! போட்டு முதுகு புடுங்கி எடுக்குது.. இப்பதான் நீ வீணை வாசிக்குற'' என்று எரிச்சலுடன் சீப்பைப் பிடுங்கி விலா பக்கம் கையைத் தூக்கி சொறிந்தார்.

"வெயிலு முதுக புடுங்கி எடுத்துடுச்சு..''

"போதும் வுடுங்க! தோலே செவந்து போச்சு.''

ஒரு வழியாக சொரிந்து முடித்து பையில் உள்ள சரக்கை வகைபிரித்தார். பிரோந்தி பாட்டில், சோடாமூடி, தேங்காய், நெல் என சிறிது சிறிதாக விழுந்தது. சிறிய துணிப்பையில் முடிந்து வைத்திருந்த காசை தரையில் கொட்டி கால்ரூபாய், ஐம்பது காசு, ஒரு ரூபாய் என பிரித்து அடுக்கினார்.

"ஊக்கும்.. முக்கி முனகி வித்தும் கடைசில இருநூற்றைம்பது ரூபாதானா? இதுல கம்பெனிக்கு போக என்ன கெடைக்கும்?'' சலித்துக் கொண்டாள் விஜயா.

"இப்பெல்லாம் இது கெடைக்குறதே பெரும்பாடா இருக்கு.. நீ வேற.. சரி சரி தண்ணிய ஊத்து குளிச்சிட்டு சாப்புடணும்...'' முதுகில் தண்ணீர் பட்டதும் கொள்ளிக்கட்டையால் சொரிந்தது போல எரிந்தது. இருமிக்கொண்டே தண்ணியை மொண்டு ஊற்றிக் குளித்து முடிக்கையில் பசியும், தூக்கமும் ஆளை இழுத்தது.

•••

ஒரு மாதமாய் சாமிநாதனுக்கு இருமல் கூடி, இழைப்பு வந்துவிட்டது. பெரியாசுபத்திரி போயும் பலனில்லை. போதாக்குறைக்கு கால் மூட்டுக்கள் வலி எடுத்து ஒரு அடி எடுத்து வைத்து நடப்பதே பெரும்பாடாகி விட்டது. கொல்லைப் பக்கம் போகும் போதெல்லாம் சந்துக்குள் அனாதையாக நிற்கும் தனது சைக்கிளை பார்த்து பார்த்து வருந்தத் தொடங்கினார். ""எத்தனை ஊரு நானும் இந்த சைக்கிளும் சுத்தியிருப்போம் இப்படி ஆயிடுச்சே.. பாரு லைனுக்கு போகாம துருபுடிச்சே போச்சு..'' வருந்திய கணவனிடம் விஜயா கடிந்து கொண்டாள்.. ""உடம்பே நடக்கமுடியாம போச்சு.. இதுல எதுக்கு இத்தன தடவை அந்த சைக்கிளை போய் போய் பாக்குறீங்க.. பேசாமல் ஒரு இடத்துல படுங்க... நடக்க முடியாம விழுந்து கிழுந்து வச்சிடாதீங்க..'' கைத்தாங்கலாய் பிடித்து இழுத்துவர, பார்த்துக் கொண்டிருந்த மகள் சாந்தி தேம்பித் தேம்பி அழுதாள்.

"அழாத சாந்தி, தைரியமா இரு! இல்லாதபட்டவங்களதான் ஆண்டவன் சோதிக்கிறான்.. அவரு பாட்டும் ஏவாரத்துக்குப் போயிட்டு வந்துட்டு இருந்தாரு.. எங்கேர்ந்துதான் வந்துச்சோ இந்த வியாதியெல்லாம்.. சரியா சாப்பிடாம வெக்காம சைக்கிள் மிதிச்சு மிதிச்சே இப்படி ஆயிடுச்சு போ! வயித்தெரிச்சலா இருக்கு..என்னதான் சொல்றாங்க டாக்டரு'' கண் கலங்கியவாறு பக்கத்து வீட்டு ராணி விசாரித்தாள்.

"எக்ஸ்ரேயும் எடுத்துப் பாத்தாச்சு.. நெஞ்செலும்பெல்லாம் தேஞ்சு கெடக்கு.. ஆஸ்துமா வேற இருக்குறதுனால முடியாம இருக்கு.. சத்து மாத்திர குடுத்திருக்கோம்.. சாப்பிட்டா மூட்டுவலி சரியாப் போயிடும்.. பெட்ல சேர வேண்டாம்னு சொல்றாங்க.. தஞ்சாவூரு மெடிக்கல்லயும் இதத்தான் சொல்றாங்க.. என்னா பண்றதுன்னு ஒண்ணுமே புரியல போ! திடீர்னு இப்படிப் படுப்பார்னு கனவுலயும் நெனக்கல..'' கண்கள் கசிய சாமிநாதனை மெல்லப் பக்குவமாக பிடித்து வந்து படுக்க வைத்தாள்.

••• அவன் எதிர்பார்க்கவே இல்லை.. ஊரிலிருந்து இப்படி சேதி வருமென்று.. ""சாமிநாதன் எக்ஸ்பையர்டு ஸ்டார்ட் இம்மீடியட்லி'' தந்தியை படித்தவுடன் ஆடிப்போனான் முருகன். யோசிப்பதற்குள் எல்லாமே முடிந்துவிட்டது. பேசாமல் மெட்ராசுக்கே அவரை அழைத்து வந்து வைத்தியம் பாத்துருக்கலாம். கொஞ்சநாள் வாழ்ந்திருப்பார். காலங்கடந்த யோசனைக்கு தன்னையே நொந்து கொண்ட மனதோடு மன்னார் குடி பஸ்ஸைப் பிடித்தான். போய்ச் சேருவதற்குள் மணி மாலை ஐந்தாகிவிட்டது.

வாசல்பக்கம் பிணம் தூக்கியதற்கான தடயங்கள் தென்பட்டன. வீட்டிற்குள் செல்லவேண்டும் என்று கூட தோன்றவில்லை. உடனடியாக சுடுகாட்டுக்குச் செல்ல மனம் உந்தித் தள்ளியது.

"உங்களுக்காகத்தான் இவ்வளவு நேரம் வெச்சிருந்தாங்க.. லேட்டாகவும் இப்பதான் தூக்கிட்டுப் போனாங்க, டேய் சுரேசு அண்ணன சைக்கிள்ல ஏத்திகிட்டு வழிகாட்டுறா..'' நின்று கொண்டிருந்தவர் சுடுகாட்டுக்கு விரைவாகப் போக உதவி செய்தார். பையனை பின்னால் உட்காரவைத்து வழியைக் கேட்டுக்கொண்டே சைக்கிளை வேகமாக மிதித்தான். எவ்வளவு வேகமாகப் போயும் பலனில்லை. வறட்டியை அடுக்கி தீ மூட்டியாகி விட்டது. பார்த்து விசும்பி விசும்பி அழுதான்.

ஆறுதல் சொல்ல அவன் பக்கம் வந்தவர் ""நீங்கதானா மெட்ரோஸ்ல இருக்குற அவரு அண்ணன் பையன், உங்களுக்காகத்தான் தம்பி பாடிய ரொம்ப நேரம் வச்சிருந்தாங்க.. சீக்கா இருந்த உடம்பா லேட்டானா தாங்காது.. அதான் எடுத்துட்டாங்க.. இதுக்கே நீ நான்னு பக்கத்துல நாலு பேரு ஒதவி செஞ்சுதான் காரியம் ஆயிருக்கு.. நல்ல மனுஷன்.. சாகுற வரைக்கும் உழைச்சாரு.. ஊர் ஊராப் போயி எவ்வளவு ஐஸ் வித்துருப்பாரு தெரியுமில்ல... உழைப்பாளி மனுஷன்.. போய் சேந்துட்டாரு..

"ஏங்க இன்னுங் கொஞ்ச நேரம் வச்சிருக்கக் கூடாதா.. முகத்தைக் கூட பாக்க முடியாம போயிடுச்சே'' தேம்பினான்.

"சரிதான் தம்பி! பாடிய இன்னும் வெச்சிருக்கணும்னா ஐஸ் வேணுமே.. ஐஸ்ல வெக்கற அளவுக்கு அவங்களுக்கு வசதி இல்லையே தம்பி, என்ன பண்றது... ஐஸ் இல்லாமத்தான் பாடிய உடனே தூக்கும்படி ஆயிடுச்சு..'' பேசிக்கொண்டே நகர்ந்தார்.

உள்ளுக்குள் அழுதுகொண்டே கூட்டத்தோடு நகர்ந்த அவன் ஒருமுறை திரும்பிப் பார்த்தான். பொறுக்க முடியாமல் வெடித்துக் கிளம்பிய சிதையின் தீநாக்கு ஆத்திரமாக ஏதோ பேசுவது போல தெரிந்தது.

• துரை.சண்முகம்