09222023வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

செம்மொழி மாநாடு: சக்கரவர்த்தியின் வெட்டிவிழா!

சக்கரவர்த்திகளின் பெருமை தம்மை உலகறிய பறைசாற்றிக் கொள்வதில் தங்கியிருக்கிறது. கருணாநிதிச் சக்கரவர்த்தியின் அந்திமக் காலமிது. காந்தி, நேரு, காமராஜ் வரிசையில் தானும் இந்திய அரசியலில் காவிய நாயகனாக நிலைபெற வேண்டும் என்ற ஆசை, அவரை வெறியாய் அலைக்கழிக்கிறது. தள்ளாத வயதிலும் குத்தாட்ட நடிகைகள் முக்கால் நிர்வாணத்துடன் அவரை போற்றிப் பாடும் நிகழச்சிகள் எதையும் அவர் தவறவிட்டதில்லை. அப்படி வருடா வருடம் பாராட்டிய ஜெகத்ரட்சகனுக்கு மத்திய அமைச்சர் பதவியே கிடைத்திருக்கிறது.


குடும்பச் சொத்தையும், கட்சிச் சொத்தையும் தனது வாரிசுகள் மனம் நோகாமல் பிரித்துக் கொடுக்க வேண்டும் எனற கவலை சக்கரவர்த்தியை வாட்டாமல் இல்லை. தென் மாவட்டங்களை ஆயுள் குத்தகைக்கு எடுத்திருக்கும் மூத்த இளவரசர் கட்சியில் முக்கியப் பொறுப்பைக் கேட்கிறார். இளைய இளவரசரோ துணை முதலமைச்சரிலிருந்து, முதலமைச்சராக முடிசூடக் காத்திருக்கிறார். இளவரசி கனிமொழிக்கு வெறும் நாடாளுமன்ற உறுப்பினர்தானா, அமைச்சர் பதவி இல்லையா என்று இரண்டாவது பட்டத்து ராணி நெருக்குகிறார்.

பேரன் பேத்திகளெல்லாம், தொலைக்காட்சி, படத்தயாரிப்பு என்று செட்டிலாகிவிட்டனர். கூடிய விரைவில் பாகப்பிரிவினைகளை சுமுகமாக முடித்துவிட்டு தனது ஓய்வையே ஒரு வரலாற்றுப் பிரகடனமாக அறிவிப்பதற்கு செம்மொழி மாநாடு.

மற்றவர்கள் கணிப்பது போல ஈழப்படுகொலைக்குக் காரணமான கறைபடிந்த கைகளை கழுவுவதற்கு மட்டுமல்ல இந்த மாநாடு. சென்ற தேர்தலில் செல்லுபடியாகாத ஈழம் அடுத்த தேர்தலில் பேசாப் பொருளாகி விடும் என்பது சக்கரவர்த்தி அறியாததல்ல. ஆனால் தனது வரலாற்றுப் பெருமைகளை நினைவுகூர்ந்து முடித்து விட அவருக்கு ஒரு பிரம்மாண்டமான களம் தேவை. இதுவரையிலும் அவரது அரசியலுக்கு செருப்பாய் உழைத்த தமிழ், இன்று அவரது இறுதி அத்தியாயத்துக்கு சேவைசெய்வதற்கும் காத்து நிற்கிறது.

கோவையில் செம்மொழி மாநாடு என்று அறிவித்தவுடனே, முழு அரசு எந்திரமும் அங்கே சென்றுவிட்டது. எல்லா அமைச்சர்களும் ஆளுக்கொரு பணிக் குழுவின் தலைவராய் முடுக்கி விடப்பட, கோவை மாவட்ட ஆட்சியர் மாநாட்டுக்கான அதிகாரியாகவே மாறியிருக்கிறார். அடுக்கு மாடிக் குடியிருப்புகள், செப்பனிடப்படும் சாலைகள், பிரம்மாண்டமாய் மாநாட்டின் கட்டமைப்பு பணிகள் எல்லாம் முழுவீச்சில் செயல்படத் துவங்கிவிட்டன.

சுனாமி வந்து ஆண்டுகள் சில கழிந்தும் அதன் நிவாரணப் பணிகள் முடியாத நாட்டில், இம்மாநாட்டுக்கான நிர்மாணப் பணிகள் கால இலக்கோடு முடுக்கி விடப்படுகின்றன. விலைவாசி உயர்வு, கல்விக் கட்டண உயர்வு, வேலையின்மையால் கவ்வப்பட்டுள்ள மக்களை, தமிழின் பெயரால் திசைதிருப்ப பல நூறுகோடிகள் கொட்டப்படுகின்றன.

சரி, போகட்டும். சக்கரவர்த்தியின் இந்த மாநாட்டால் தமிழுக்கு என்ன கிடைக்கும்? குடும்பத் தொலைக்காட்சிகளான சன்னும், கலைஞரும் தமிழைக் கொன்றுவரும் காலத்தில், கல்விவேலை வாய்ப்பில் தமிழுக்கு இனி எப்போதும் இடமில்லை என்று தீர்ப்பெழுதப்பட்ட காலத்தில், இந்த மாநாட்டின் பயன் என்ன? கணநேர வாண வேடிக்கையின் கணிப்பைத் தவிர எஞ்சப்போவது சாம்பல் மட்டுமே.

உழைக்கும் தமிழர்கள் கிராமங்களிலிருந்து விரட்டப்பட்டு நாடோடிகளாய் நகரங்களை நோக்கிப் படையெடுக்கும் காலத்தில், வன்னித் தமிழர்கள் விடுதலையை எதிர்பார்த்து வதை முகாம்களில் கண்ணீர் விடும் காலத்தில் செம்மொழி மாநாடு என்ன செய்யும்?

சக்கரவர்த்தியின் குடும்பத் தொலைக்காட்சிகள் தவிர்க்கவியலாமல் செம்மொழி மாநாட்டை ஒளிபரப்ப வேண்டியிருக்கும் என்பதால், 24 மணிநேர குத்தாட்டக் கொடுமையிலிருந்து சில மணிநேரங்களுக்காவது தமிழனுக்கு விடுதலை கிடைக்கும் என்று ஆறுதல் கொள்ளலாம். ஆயினும் சக்கரவர்த்தியிடம் தமிழ் சிறைப்படும் அதைத் தவிர்க்கவோ தப்பிக்கவோ தமிழால் ஏலாது.