10012023ஞா
Last updateபு, 02 மார் 2022 7pm

உமாமகேஸ்வரன் விசுவாசிகள் போன்று நடிக்கக் கோரினர், நடித்தோம் (புளட்டில் நான் பகுதி – 17)

அராஜகத்தின் மொத்த உருவமாக விளங்கிய புளட் தனது போலி "மார்க்சிய" சித்தாந்த வாய்ச்சவாடால், பல படுகொலைகளுக்கு நியாயம் கற்பித்தது. இவ்வாறு நியாயம் கற்பித்த போதும், தளத்தில் வேலை செய்த பல தோழர்கள் ஒதுங்கினர். இவர்கள் ஒதுங்கிய போதும், விடுதலைப் போராட்டத்தில் இருந்து ஒதுங்கவில்லை. புளட்டில் வேலை செய்தவர்கள் ஒதுங்கியது, முதலாவதாக சுழிபுரம் படுகொலையுடன் தான். இவர்கள் ஒதுங்கி சும்மா இருக்கவில்லை. மாறாக புளட்டின் பின்தளத்தில் நடந்த உட்படுகொலைகளை மையமாக வைத்து, பலர் தம்மால் முடிந்த அளவிற்கு புளட்டுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அவ்வாறு பிரச்சாரத்தில் ஈடுபட்டதால், பலரை துப்பாக்கிக் கரங்கள் துரத்தின. இந்த வகையில் பல தோழர்கள் நேரிடையான எனக்கு தெரிந்த சுகந்தன், அவருடன் வேலை செய்த பரந்தாமன், சுகன் போன்றோரோடு பல்கலைக்கழக மட்டத்தில் விமலேஸ்வரன், தர்மலிங்கம், நந்தா, வனிதா, கலா, ஹப்பி போன்றோர்களும் ஜ.பி, பிரசாத், ஜீவன், குருபரன், கவிராஜ் போன்ற ரெசோ மாணவர் மற்றும் மக்கள் அமைப்பினரும் புளட்டுக்கு எதிரான பிரச்சாரத்தை நம்பிக்கையான தோழர்கள் மட்டத்திலும் மக்களமைப்புக்கள் மாணவ தோழர்கள், மாற்று இயக்கங்களிலிருந்த தமது சொந்த இயக்க அராஜகத்தை எதிர்த்து நின்ற மாற்றியக்க தோழர்களோடு இணைந்து மக்கள் மத்தியில் நேரிடையாகவும் ரெசோ அமைப்புக்குள்ளிருந்தவாறே அவ் அமைப்புக்குள்ளும் பிரச்சாரம் செய்தனர்.

இவ்வாறு புளட்டுக்கு எதிரான வேலைகள் தளத்தில் நடந்து கொண்டிருந்தது. பின்தளத்தில் பயிற்சிகளின் உக்கிரம் அதிகரித்தது. அதன் ஒரு வடிவமாக புதிய பயிற்சி முகாங்களும், புதிய வியூகங்கள் அடங்கிய இராணுவ வகுப்புகளும் நடைபெறத் தொடங்கின. மாணிக்கதாசனால் ஹய் கொமாண்டஸ் என்றும், சேகர் மாஸ்ரரால் கொமாண்டோ என்றும், சுனில் என்பவரால் தடபாடா என்று இன்னொரு பயிற்சி முகாமும் உருவாக்கப்பட்டன. சாதாரணமான பயிற்சி முடிந்தவர்கள் தெரிவு செய்யப்பட்டு இவற்றிற்கு அனுப்பப்பட்டனர்.
சாதாரண பயிற்சி முகாம்களில் அரசியல் வகுப்பு நிறுத்தப்பட்டு, இராணுவ வகுப்புகள் முன்பு தேனி முகாமில் பயிற்சி பெற்றவர்களால் நடத்தப்பட்டது. இதை மாற்றி புளட்டின் மத்திய குழுவில் இருந்த இந்திய உளவுப்படை ரோவின் பிரதிநிதியான சேகர் என்பவரால், இராணுவ வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்த இராணுவ வகுப்பிற்காக ஒரு கை நூலும் தயாரிக்கப்பட்டது. நான் அறிந்தவரையில் இதுதான் தமிழில் வெளிவந்த முதல் இராணுவ யுத்திகள் அடங்கிய கைநூல். இதை தேனி பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற தயாமயூரன், மணி, அன்ரனி (திருமலை மாவட்டத்தை சேர்ந்தவர்) போன்றவர்கள் தயாரிக்க, அதற்கு மேற்பார்வையாளராக இருந்தவர் இந்த சேகர் மாஸ்ரர். இந்த கைநூலே புளட்டின் இராணுவக் கைநூல். இது குறிப்பிட்ட காலத்தில் ஒரு சில திருத்தங்கள் செய்து வெளிவந்தது.


இராணுவக் கண்ணோட்டத்தில் மாத்திரம் அக்கறை கொண்டிருந்த புளட், தனது வெளிநாட்டவர்களின் தொடர்பால் ஆயுதங்களையும் கொள்வனவு செய்தது. புளட்டுக்கு என ஆயுதங்கள் திருவனந்தபுர விமான நிலையமூடாக கொண்டுவர ஏற்பாடுகள் நடைபெற்றது. திருவனந்தபுரத்தில் ஆயுதங்கள் வந்து இறங்கின. இவர்களின் சோம்பேறித்தனமோ அல்லது றோவின் வேலையோ, ஆயுதங்களை பொறுப்பேற்க சென்றவர்கள் குறித்த நேரத்தில் அங்கு செல்லவில்லை. மாறாக இரு நாட்கள் கழித்து அங்கு சென்ற போது, அதை ஒப்படைக்க மறுத்த சுங்க அதிகாரியை புளட் மிரட்டியது. கந்தசாமி (சங்கிலி) “இந்த பொருட்களைத் தராவிட்டால் உனது பிள்ளையைக் கடத்துவேன்” என மிரட்டியதால், அந்த அதிகாரி ஆயுதங்கள் அதனுள் இருப்பதை பகிரங்கப்படுத்தி இவர்கள் எடுக்காதபடி செய்தார். இதனால் புளட்டின் இரணுவ நகர்வானது பின்தள்ளப்பட்டது.


இக்காலங்களில் நாம் தொடர்ந்தும் சிறையினுள்ளேயே இருந்தோம். எம்மை வந்து சந்திப்பவர்களின் அளவும் குறைந்தது. முகாமில் இருந்த தோழர்கள் எம்முடன் சரளமாக பழகத்தொடங்கினர். திடீர் என ஒருநாள் நாம் இருந்த கூடாரத்தை விட்டு எம்மை வெளியில் எடுத்து, முகாமில் உள்ள தோழர்களுடன் இருக்கும்படி வாமதேவன், செந்தில் போன்றோரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனடிப்படையில் நாமும் அவர்களுடன் சாதாரணமாக இருந்தோம். எம்மால் பயிற்சி எடுக்க முடியாததால், நாம் முகாமின் உள் இருக்க மற்றைய தோழர்கள் பயிற்சி எடுக்கச் சென்றனர். அப்போது எமது முகாமை நோக்கி ஜீப் வண்டியில் உமாமகேஸ்வரன், கண்ணன் உட்பட பலர் வந்தனர். வந்தவர்கள் முகாமை சுற்றிப்பார்த்துவிட்டு, முகாமில் உள்ள தோழர்கள் (நாம் உட்பட) அனைவருக்கும் ஒரு கூட்டத்தை நடத்திவிட்டு மீண்டும் புறப்பட்டனர். இவர்கள் சற்றுத் தூரம் சென்றிருப்பார்கள், முகாம் பொறுப்பாளர் வளவன் எம்மை அழைத்து மீண்டும் எமது கூடாரத்துக்குள் அடைத்தார். எமக்கு ஒன்றும் புரியவிலை. ஏன் இந்த நாடகம் என்று. மீண்டும் கூடாரத்தினுள் இருந்தபடி புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினோம்.

இக்காலங்களில் எம்மிடையே சில முரண்பாடுகள் வரும். இதில் ஒன்று என்னை மையப்படுத்தியதாக இருக்கும். அதாவது நான் கதைக்கும்போது “டா” போட்டுக் கதைப்பேன். உதாரணத்திற்கு என்னடாப்பா என்று கதைப்பதால், எம்மை சந்திக்க வருபவர்களுடனும் அதே போன்று கதைப்பேன். இது எமது ஊரின் பேச்சுவழக்காக இருந்ததால், அவ்வாறு கதைப்பதால் எம்மில் முரண்பாடு ஏற்படும். காரணம் சந்திக்க வருபவர்களை நான் மரியாதை இல்லாமல் பேசுகின்றேன் என்று நினைத்து எம்மை தாக்குவார்கள். ஏற்கனவே வாமதேவனுடன் கதைக்கும்போது நான் அவரை மரியாதை குறைவாகக் கதைக்கின்றேன் என்று கூறி, தாக்கிய சம்பவம் உண்டு. ஆனால் என்னால் அதை மாற்ற முடியவில்லை காரணம் அது பழக்கத்தில் இருந்ததால், இதைப் பற்றி என்னை மற்றவர்கள் பேசும் போது ஜெகன் எனக்கு ஆதரவாகக் கதைப்பார்.


இவ்வாறு எமது காலம் அதனுள் முடக்கப்படடதாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில் அனைத்து முகாம் பொறுப்பாளராக இருந்தது சுபாஸ். இவர் அரசியல் ரீதியாக பெரிதாக வளராவிட்டாலும், தோழர்களின் பிரச்சனைகளை ஒரளவு சுமுகமாக கையாண்டு வந்தார். இதனால் பலருக்கு இவர் மீது நல்ல அபிப்பிராயம் இல்லாவிட்டாலும், இவர் மீது எதிர்ப்பு இருக்கவில்லை.


ஒருநாள் திடீர் என முகாமில் இருந்தவர்களை, கமாண்டோ பயிற்சிக்காக அழைத்துச் செல்வதற்கு வண்டி வந்து நின்றது. அதேவேளை எம்மையும் புறப்படும்படி கூறி, அவர்களின் ஜீப்பும் வந்து நின்றது. முகாம் தோழர்கள் கமாண்டோ பயிற்சிக்காக புறப்பட்டபோது, நாம் முகாம் மாற்றப்பட்டோம். அப்போது நாம் பிரிக்கப்பட்டோம். ஜெகன், சலா, சண், நக்கீரன் போன்றோர், இடைவெளியில் ஓரத்தநாட்டில் இறக்கிவிடப்பட்டனர். மிகுதியான அன்ரனி, கே.ஆர்.விஜயன், விஜி, சோசலிசம் சிறி, ஆனந்தன், நான் மாத்திரம் தொடர்ந்து ஜீப்வண்டியில் பிரயாணம் செய்து, ஒரு முகாமை அடைந்தோம். இம் முகாம் மற்றைய முகாங்களிலும் பார்க்க வேறுபட்டதாக காணப்பட்டது.

மற்றைய முகாம்கள் சவுக்கந்தோப்பை மையமாக வைத்து அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த முகாம் கரும்புத் தோட்டத்தையும், வயல் பகுதியையும், ஒரு கால்வாயையும் கொண்டிருந்தது. இந்த முகாமிற்கு எவ் முகாம் என்று பெயர் இட்டிருந்தனர். அந்த முகாமில் எமக்காக ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்த கூடாரத்தில், எம்மை விட்டார்கள். நாம் மீண்டும் இங்கு கைதிகளாக வரையறுக்கப்பட்டோம். இருந்த போதும் எமது நிலை பலருக்கு தெரிந்ததாலும், அத்த முகாம் பொறுப்பாளர் உட்பட பலரும் தோழமை மனங்கொண்டவர்களாக இருந்ததாலும், அங்கு எம்மை இவர்கள் தனிமைப்படுத்தவில்லை. எமது கூடாரத்தைச் சுற்றி காவலுக்கு பலரைப் போடவில்லை. மாறாக ஒருவரையே அதுவும் சுகயீனப்பட்டவர்களையே பெயருக்கு போட்டிருந்தனர். அங்கு ஒரு சில காலங்கள் இருந்தோம். அந்த முகாமிற்கு பொறுப்பாளராக இருந்தவர், பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் பயிற்சி முடித்தவர். அவரின் பெயர் ஞாபகம் இல்லை. அவர் எம்மை நன்கு கவனித்தார். இரவு வேளைகளில் ஒன்று கூடலின் போது, எம்மையும் அழைப்பார். நாமும் அவர்களுடன் இருந்து எமக்கு தெரிந்தவற்றை தோழர்களின் முன் செய்து காட்டுவோம். இக்காலங்களில் அந்த முகாம் பொறுப்பாளர் எம்முடன் கதைப்பார். அவர் எம்மை உளவறிந்தாரோ தெரியவில்லை. ஒன்று மட்டும் கூறினார், நீங்கள் உமாமகேஸ்வரனுக்கு விசுவாசிகள் போன்று காட்டினீர்கள் என்றால், உங்களை விடுதலை செய்வார்கள் என்றார். இதை முதலில் சோசலிசம் சிறியும் அன்ரனியும் மறுத்தனர். அவர்கள் பின் நாமும் மறுத்தோம். அப்போது பொறுப்பாளர் நீங்கள் இப்படியே இருப்பதை விட, நீங்கள நடித்தீர்கள் என்றால் நான் உங்களுக்காக பரிந்துரை சுபாசிடம் செய்து விடுவிக்கலாம் என்றார்.

 
இதை நாம் எமக்குள் கதைத்தோம். அப்போது ஆனந்தன் இப்படியே இருந்து சாவதிலும் பார்க்க, மனதளவில் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் வெளியில் நாம் இவர்களின் விசுவாசிகள் என்று வெளிக்காட்டினால், எம்மை நாம் பாதுகாக்கலாம் என்று கூறினார். இதை பின் அன்ரனியும் சோசலிசம் சிறியும் ஏற்றுக் கொண்டனர். அதன் பின் அவ்வாறு நடக்க (நடிக்க) ஆரம்பித்தோம். இதைப் பொறுப்பாளரிடமும் கூறினோம். அவரும் சரியான முடிவு எனக் கூறி, இது தொடர்பாக மற்றைய வேலைகளை நான் பார்க்கிறேன் என்று உறுதியும் அளித்தார். இவ்வாறு நடந்து இரண்டு மூன்று வாரங்களில் அன்ரனி, கே.ஆர்.விஜயன் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் அங்கிருந்த தோழர்களுடன் சேர்ந்து பயிற்சியும் எடுக்க ஆரம்பித்தனர். அப்போது எமக்கு நடந்தவற்றையும் அவர்களிடம் கூறினர். இவர்களின் இச்செயற்பாட்டாலும், இவர்களின் நடத்தையாலும், எம்மீது முகாம் தோழர்களுக்கு அதிகம் நம்பிக்கை ஏற்பட்டது.


இதன் விளைவாக நாம் பகலில் அக்கூடாரத்தில் (யாராவது தலைமையில் இருந்து வந்தாலும் என்பதற்காக) இருப்போம். இரவில் முகாம் தோழர்களுடன் போய் உறங்குவோம். பெயருக்கு நாம் கைதிகளாக காணப்பட்டோம். எமக்கான சுதந்திரம் அந்த முகாமில் முழுமையாக இருந்தது. ஒரு மாதத்திற்கு மேலாக இவ்வாறிருக்க, ஒருநாள் சுபாஸ் வந்து அன்ரனியையும் கே.ஆர்.விஜயனையும் அழைத்துச் சென்றார். அப்போது என்னையும் விஜியையும் விடுதலை செய்தார். அதன் பின் கைதிகள் என்ற போர்வையில் சோசலிசம் சிறியும், ஆனந்தனுமே அங்கு இருந்தனர். இதனால் அக் கூடாரம் அகற்றப்பட்டது. இவர்களும் முகாமில் தங்கினார்கள். என்ன இவர்கள் பயிற்சி எடுக்க முடியாது. மற்றப்படி அந்த முகாமில் எல்லாம் செய்யலாம். இவ்வாறு இருக்கையில், நான் விஜி இருவரும் பயிற்சி எடுத்தோம். எனக்கு கால் சுகயீனமாக இருந்த போதும், பயிற்சி எடுத்தேன். எமக்கு பயிற்சி தந்தவர்கள் எம்மை கட்டாயப்படுத்தி எதையும் செய்விக்கமாட்டார்கள்.

அங்கு கமாண்டோ பயிற்சிக்கு அனுப்புவதற்கான ஆட்தெரிவு நடந்தது. உண்மையில் கூறப்போனால் எனக்கும் விஜிக்கும் அந்தளவு உடல் பலம் இருக்கவில்லை. ஆனாலும் முகாம் பொறுப்பாளர் எம்மையும் அதில் இணைத்தார். இதனால் நாம் கமாண்டோ பயிற்சிக்காக புதுக்கோட்டைக்கு அழைத்துவரப்பட்டோம். அங்கு பயிற்சி எடுக்கும் பொது புளட்டின் பல புதிய விடையங்களை அறியக் கூடியதாக இருந்தது. மாணிக்கதாசனால் உருவாக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட்ட கைகொமாண்டோஸ் என்ற பயிற்சி முகாம், கொமாண்டோஸ் முகாமிற்கு அருகாமையில் தான் இருந்தது. அதில் பயிற்சி பெற்றவர்கள் பல விசேட பயிற்சிகளைப் பெற்றனர். கொமாண்டோசில் பயிற்சி கொடுப்பவராக இருந்தவர், என்னுடன் ஒன்றாக படகில் வந்த அருள் என்ற தோழர். இவருடன் மட்டக்களப்பைச் சேர்ந்த செல்லப்பா என்பவரும் இருந்தார். நானும் விஜியும் வந்ததும் எம்மை அவர்களுக்கு ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.

முதல்நாள் பயிற்சி என்னால் செய்யமுடியவில்லை காரணம் எனது காலின் பிரச்சனை. அதேபோன்று விஜியாலும் முடியவில்லை. அவருக்கு கழுத்து எலும்பு முறிந்ததால் குத்துக்கரணம் அடிப்பது அவரால் செய்ய இயலாது இருந்தது. இதனால் எம்மை முகாமில் பயிற்சிக்கு பொறுப்பாளராக இருந்த செல்லப்பாவும் அருளும் அழைத்து கதைத்தனர். எமது பிரச்சனையை கூறியதும், பயிற்றுனர்களுக்கு எம்மைப்பற்றி தகவல் தெரிவித்ததன் விளைவாக பயிற்சியில் எம்மீது கடினம் செலுத்தப்படவில்லை. அதேவேளை எமது நடிப்பு தொடர்ந்த வண்ணம் இருந்தது. விஜி பயிற்சியின் போது நன்றாக செய்ய ஆரம்பித்தார். என்னால் பாய்வது குதிப்பது போன்றவைகள் இயலாததால், நான் பயிற்சியில் அதிக திறமையாக இருக்கவில்லை. 21 நாட்களில் முடிந்த இந்த கொமாண்டே பயிற்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்கு உமாமகேஸ்வரன் வருகை தந்திருந்தார். அங்கு வந்த உமாமகேஸ்வரன் என்னையும் விஜியையும் அழைத்து எமது உடல் நிலவரம் பற்றி விசாரித்ததுடன் இனியாவது அமைப்பிற்கு விசுவாசமாக இருக்கும்படி கூறிச்சென்றார்.

இவரின் இக்கூற்று அமைப்பிற்கு விசுவாசம் என்பது, தனக்கும் தான் சார்ந்தவர்களுக்கும் விசுவாசமாக இரு என்பதை மீண்டும் உணர்த்தியது. தனிமனித வழிபாட்டை மையமாகக் கொண்ட இயக்கமாக உருவெடுத்ததால், இங்கு அவர் சார்ந்த நபர்கள் எது செய்தாலும் அது கழகத்தின் வளர்ச்சிக்காக என்ற பதம் மறைமுகமாக ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்டபோதிலும், பிற்காலத்தில் அது பகிரங்கமாக அங்கீகரிக்கப்பட்ட விடையமாகவும் காணப்பட்டது.

 
தொடரும்
சீலன்

16. தங்கள் கடந்த காலத்தை சுயவிமர்சனம் செய்யாத தீப்பொறி (புளட்டில் நான் - பகுதி 16)

15. காந்தன் தப்பியோட, நாம் அடிவாங்குகின்றோம் (புளட்டில் நான் பகுதி - 15)

14. எம்மை புதைக்க, நாம் வெட்டிய குழி – (புளாட்டில் நான் பகுதி 14)

13. சந்ததியாரின் வழிகாட்டுதலின் பேரிலேயே இது நடந்தது என்று எழுதித் தருமாறு கூறினர் - (புளாட்டில் நான் பகுதி - 13)

12. மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டால் என்னை அறியாது மலசலம் வரும் (புளாட்டில் நான் பகுதி - 12)

11. அடியில் மயங்கினேன், சிறுநீரோ இரத்தமாகவே சென்றது - (புளாட்டில் நான் பகுதி - 11)

10. எம்மில் யாராவது உயிருடன் தப்பித்தால், எமக்கு நடந்ததை மற்றவர்களுக்கு கூறும்படியும்…புளாட்டில் நான் பகுதி - 10)

9. புளாட் அமைப்பை விமர்சித்த எங்களை புலி என்றனர், துரோகி என்றனர் - புளாட்டில் நான் பகுதி - 09)

8. மகஜர் அனுப்பி தலைமையுடன் போராட்டம் - (புளாட்டில் நான் பகுதி - 08)

7. சாதிக்குடாகவே தீர்வை காணும் வழிமுறையை நாடிய தலைமை - (புளாட்டில் நான் பகுதி - 07)

6. நான் தோழர் சந்ததியரைச் சந்தித்தேன் - (புளாட்டில் நான் பகுதி - 06)

5. தேச விடுதலை என்றும், பாட்டாளி வர்க்க புரட்சி என்றும் பேசியபடி… - (புளாட்டில் நான் பகுதி - 05)

4. தண்டனை முகாமை எல்லோரும் "நாலாம் மாடி" என்பார்கள் - (புளாட்டில் நான் பகுதி - 04)

3. மூன்றே மாதத்தில் பயிற்சியை முடித்துக்கொள்ளும் கனவுடன்… (புளாட்டில் நான் பகுதி - 03)

2.1983 இல் இயக்கத்தில் இருப்பதென்பது கீரோத்தனமாகும் - (புளாட்டில் நான் பகுதி 2)

1.தாம் மட்டும் தப்பித்தால் போதும் என நினைத்த தீப்பொறியினர் - (புளாட்டில் நான் பகுதி - 01)


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்