ஆதரவாளர்கள் தமது முயற்சியை கைவிடவில்லை. லண்டனிலிருந்து வந்திருந்த ராஜா மற்றும் குலம் ஆகியோர் இணைவுக்கான புதிய திட்டங்களோடு எமது உறுப்பினர்கள் அனைவரையும் சந்திக்கின்றனர். பிரபாகரன் குழுவிலிருந்த உறுப்பினர்களையும் பலதடவை தனித்தனியாகச் சந்திக்கின்றனர். இடைவிடாத இவர்களின் முயற்சியின் பலனாக அனைத்து உறுப்பினர்களும் சந்த்தித்து உள்ளக வாக்கெடுப்பு ஒன்றை நிகழ்த்த வேண்டும் என்று முடிவாகிறது. பிரபாகரன், நாகராஜா, பேபிசுப்பிரமணியம், நான் உட்பட ஏனைய அனைத்து உறுப்பினர்களையும் அழைத்து வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கான திகதியும் குறிக்கப்பட்டுவிட்டது.
ராஜாவின் வீடு ஊர்காவற்துறையை அண்மித்த பகுதியில் பாதுகாப்பான இடத்தில் அமைந்திருந்ததால் அனைத்து உறுப்பினர்களையும் ஒருங்கிணைப்பதற்குப் பொருத்தமான இடமாகத் தெரிவுசெய்து கொள்கின்றனர். தீவுப்பகுதியான ஊர்காவற் துறையில் அப்போதெல்லாம் பொலீஸ் இராணுவக் கெடுபிடிகள் பெரிதாக இருந்ததில்லை. ஒன்றுகூடலுக்கான பாதுகாப்பான பிரதேசமாக அமைந்திருந்தது. அன்று அதிகாலையே அனைவரும் மிகுந்த நம்பிக்கையோடு ஊர்காவற்துறையை நோக்கிப் பயணிக்கிறோம். வழி நெடுகிலும் எம்மைப் போன்ற இளைஞர்களைச் சந்திக்கிறோம். எந்தத் துரயமும் இன்றி நண்பர்களோடு உல்லாசமாய் தெருக்களில் கூடித்திரிந்த இளைஞர்களைக் கடந்து செல்கிறோம்.
பிரபாகரன் குழுவில் இருந்தவர்கள் கூட எங்கோ தொலைவில் தெரிந்த நம்பிக்கையோடே அங்கு வந்திருந்தனர்.
அங்கு வந்திருந்த அனைவரும் எதோ நோக்கத்திற்காகக் கூடியிருந்த இளைஞர்கள். எங்காவது ஒரு புள்ளியில் மரணித்துக் கூடப் போய்விடலாம் என்று தெரிந்திருந்தும் தாம் சார்ந்த மக்கள் கூட்டத்திற்காகப் போர்குரல் கொடுக்க வந்திருந்தவர்கள்.
நிண்ட நேர விவதங்களைக் கடந்து செல்கிறோம். நமது தேசத்தின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் அனைவரையும் மீண்டும் ஒரு புள்ளியில் இணைக்கிறது. போராடவென்று முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட நமது முன்னோக்கிய அசைவியக்கம் குறித்த அக்கறை அனைவரிடமும் காணப்பட்டது.
ஒரு சிலரைத் தவிர யாருக்கும் பிரிந்து சென்று தனித்தனிக் குழுவாக இயங்குவதில் விருப்பு இருக்கவில்லை. அனைவரும் ஒன்றிணைந்து ஏதாவது சாதித்துவிட வேண்டும் என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
அந்த விவாதங்களில் நடுவே பிரபாகரன் குறித்த விமர்சனங்கள் வந்து செல்கின்றன. ஆக, பன்முகத் தன்மை கொண்ட, ஜனநாயகத்தையும் மத்தியத்துவத்தையும் ஏற்றுக்கொள்கின்ற மத்திய குழு அமையுமானால், நிலவும் பிரச்சனைகளை முடிவிற்குக் கொண்டுவரலாம் என்ற கருத்து பெரும்பான்மையாகிறது.
அப்போதுதான் ஒரு மத்திய குழுவை வாக்கெடுப்பின் அடிப்படையில் தெரிவு செய்யலாம் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. வாக்கிடுப்பின் பின்னர் உருவாகும் மத்திய குழு பத்திரிகை வெளியிடுவது குறித்தும் தீர்மானிக்கும் என்ற கருத்தும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
விவாதங்கள் அனைத்தும் முடிவடைந்து மதியத்திற்குச் சற்றுப் பின்னதாக வாக்கெடுப்பு ஒன்று உறுப்பினர்களுக்கு மத்தியில் நடத்தப்படுகிறது. பிரபாகரன் எம்மோடு அங்கு விவாதத்தில் ஈடுபட்டிருந்தாலும் அவர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ள மறுத்துவிட்டார். அவர் தவிர நந்தனும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ள மறுத்துவிட்டார். இவர்கள் இருவருமே அதற்கான காரணத்தை முன்வைக்கவில்லை. பலரின் வேண்டுகோளையும் அவர்கள் புறக்கணிக்கின்றனர். இறுதியில் அவர்கள் இருவரும் இல்லாமலே வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
பிரபாகரன் குழுவைச் சார்ந்தவர்களும் எம்மைச் சார்ந்தவர்களுமாக 27 போராளிகள் அங்கு கூடியிருந்தனர். இந்த வாக்கெடுப்பு ஒரு இரகசிய வாக்கெடுபாகவே நடைபெறுகிறது. அங்கு வந்திருந்த ஒவ்வொருவரும் தாம் விரும்பியவர்களது பெயர்களை சிறிய காகிதத்தில் எழுதி வாக்களிப்பதாகத் தீர்மானிக்கப்படுகிறது. பத்து வாக்குகளுக்குக் குறைவாகப் பெற்றவர்களை விடுத்து ஏனையோரில் விருப்புக்கொண்ட ஆறு பேரைக் கொண்ட மத்திய குழு ஒன்று உருவாக்குவதாகத் தீர்மானிக்கப்படுகிறது.
தம்பி ,ராகவன்,பண்டிதர்,மனோ,மாத்தையா,அன்ரன்,தனி,ஆசீர், கலாபதி,சங்கர் ,குமரப்பா,காந்தன்,பீரீஸ்,நாகராஜா,குமணன்,சாந்தன், மாதி,நிர்மலன்,சுந்தரம்,நந்தன்,அழகன், நெப்போலியன்,சிவம் ஆகியோரோடு இன்னும் சில தோழர்களும் என்னோடு கலந்துகொண்டிருந்தனர்.
அந்த வாக்கெடுப்பின் போது, சாந்தன் 27 வாக்குகளை உறுப்பினர்கள் மத்தியிலிருந்து பெற்று அனைவரினதும் அபிமானம் பெற்ற போராளியாகிறார்.
சாந்தனுக்கு அடுத்ததாக எனக்கும் அன்டனுக்கும் 26 வாக்குகள் கிடைக்கின்றன. பிரபாகரன் 25 வாக்குகளைப் பெற்றுக்கொள்கிறார். தனி 21 வாக்குகளையும், மனோமாஸ்டர் 19 வாக்குகளையும், ராகவன் 16 வாக்குகளையும் பெற்றுக்கொள்கின்றனர் நாகராஜா, பேபி, குமணன் போன்ற கோடிட்டுக் காட்டக் கூடிய பலர் பத்துக்கும் குறைவான வாக்குகளையே பெற்றுக்கொண்டனர்.
மனோமாஸ்டர் மத்திய குழுவில் இணைந்துகொள்ள விருப்பம் தெரிவிக்காத காரணத்தால் அவருக்கு அடுத்ததாக வாக்குகளுக்கு அதிகமாகப் பெற்றுக்கொண்ட ராகவனை மத்திய குழுவில் இணைத்துக் கொள்கிறோம். ஆக, இப்போது பிரபாகரன்,நான், சாந்தன்,அன்டன்,தனி,ராகவன் என்ற ஆறுபேர் கொண்ட மத்திய குழு உருவாகிறது.
இவ்வாறு மத்திய குழு ஒன்று தெரிவு செய்யப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்த பின்னர், பத்திரிகை வெளியிடுவதற்கான முடிவுககளை மேற்கொள்கிறோம்.
பத்திரிகையின் பெயர் தொடர்பான விவாதங்கள் எழுகின்றன. உணர்வு என்பது பிரபாகரன் குழுவினரின் சஞ்சிகையின் பெயராகவும், புதிய பாதை எமதாகவும் இருந்தது. வந்திருந்தவர்களின் எண்ணைக்கையில் இருபகுதியினருமே அரைவாசி அளவில் இருந்ததால், ஒரு முடிவிற்கு வரமுடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறோம். அவ்வேளையில் அங்கிருந்த குமரப்பா புதிய பாதை என்ற பெயரையே விரும்புவதாகத் தெரிவித்ததால், அப் பெயரையே இறுதியில் சஞ்சிகையின் பெயராக ஏற்றுக்கொள்கிறோம்.
தமிழீழ விடுதலை புலிகள் பிளவடைந்த வேளையில் விரக்தியுற்ற நிலையில் அரசியலிலிருந்து விலகிச் செல்வதாகத் தீர்மானித்த குமரப்பா, நாம் மீண்டும் இணைவதை அறிந்துகொண்டதும் கூட்டத்திற்கு வந்திருந்தார். இவரைத் தவிர செல்லக்கிளி போன்ற சில போராளிகள் எந்தத் தொடர்புமின்றி ஒதுங்கியிருந்தனர்.
மத்திய குழு தெரிவாகிவிட்டது. பத்திரிகைக்கான பெயரும் உருவாக்கப்பட்டுவிட்டது. மீண்டும் எதிர்காலம் குறித்த பேச்சுக்களை ஆரம்பிக்கிறோம். இணைவை ஏற்படுத்திய ராஜாவிற்கும் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்தும் நாளாகவும் அது அமைந்திருந்தது. அனைவருடனும் தனித்தனியாகப் பேசுகிறார். இந்த சந்தர்ப்பத்தில் பிரபாகரன் தான் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் பிரிந்து செல்லப்போவதாகவும் கூறுகிறார். அதற்கான காரணங்கள் எதையும் அவர் முன்வைக்கவில்லை எனினும் தனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறுகிறார். இப்போது அவர் பிரிந்து செல்வதாகக் கூறியதும் யாரும் தடுக்கவில்லை. பேபி சுப்பிரமணியமும் பிரபாகரனுடன் தானும் செல்வதாக எழுந்து செல்கிறார்.
இவ்வேளையில் சுந்தரம் பிரபாகரனை நோக்கி, கைத் துப்பாகியை ஒப்படைத்துவிட்டுச் செல்லுமாறு கோருகிறார். அதற்குப் பிரபாகரன் பதிலளிக்க முன்பதாகவே ஏனைய அனைவரும் துப்பாக்கியை அவர் தனது பாதுகாப்பிற்காக வைத்திருக்கட்டும் என ஒரு மனதாகக் கூறுகின்றனர்.
இணைவு முயற்சியை ஏற்பாடுசெய்த ராஜா கூட பிரபாகரனுட நீண்ட நேரம் உரையாடுகிறார். இணைந்து செயற்படும்படி கூறுகிறார். பிரபாகரன், பேபி சுப்பிரமணியம் ஆகிய இருவர் மட்டுமே பிரிந்து சென்று எதையும் சாதித்துவிட முடியாது என்றும் ஒற்றுமையாகச் செயற்படும்படியும் வலியுறுத்துகிறார். பிரபாகரன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பேபி சுப்பிரமணியத்தைப் பொறுத்தவரை பிரபாகரன் என்ன முடிவெடுக்கிறாரோ அது தான் அவரது முடிவும். நாங்கள் இணைந்திருந்த காலம் வரை பிரபாகரனுக்கு எதிராக அவர் எந்த சந்தர்ப்பத்திலும் நடந்து கொண்டதில்லை.
புதிதாக உருவான மத்திய குழுவில் பிரபாகரன் சார்ந்த நான்கு பேரும் எமது குழுவைச் சார்ந்த இரண்டு பேரும் உறுப்பினர்களாக தெரிவாகின்றனர். பிரபாகரன் பிரிந்து செல்வதாகக் கூறியதும் இந்தக் குழு ஐந்து பேராகச் சுருங்கிவிடுகிறது.
எது எவ்வாறாயினும் இரண்டு குழுக்களுக்கும் இடையிலான முரண்பாடு அரசியல் முரண்பாடாகவே அமைந்திருந்தது. எம்மைப் பொறுத்தவரை மக்கள் வேலைகளூடன தேசிய விடுதலை இயக்கத்தை உருவாக்குவதாகவும், தம்பியுடன் சார்ந்தோரைப் பொறுத்தவரை இராணுவத் தாக்குதல் நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தும் காணப்பட்டது. எமது கருத்துக்களுக்கு உட்பட்டவர்களின் விட்டுக்கொடுப்பும், எதிர்க்கருத்துடையவர்களின் நெகிழ்ச்சியும் இணைவை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையை மட்டுமே தளமாகக் கொண்டிருந்தது. பொதுவான அரசியல் தளம் ஒன்று அங்கு காணப்படவில்லை. அதற்கான முதிர்ச்சியும் எம்மிடம் இருந்திருக்கவில்லை.
இரு புறத்திலுமே இவ்வகையான முரண்பாடுகளை வெறுமனே தனி நபர் முரண்பாடுகளாக மாற்ற முற்பட்டவர்களும் தனி நபர் முரண்பாடாகக் கருதியவர்களும் உண்டு. சுந்தரம். கலாபதி, நந்தன், மனோ போன்றோரின் தனிநபர் சிக்கல்கள் ஆளுமை செலுத்துவனவாகவும் அமைந்திருந்தன என்பதையும் மறுக்க முடியாது.
இச்சம்பவம் நடந்து சில நாட்களில் புதிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக மத்திய குழுக் கூட்டம் ஒன்று நடைபெறுகிறது. யாழ்ப்பாணப்பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. முதல் கூட்டத்திற்கு பிரிந்து செல்வதாகச் சென்ற பிரபாகரன் மறுபடி சமூகம் தருகிறார். பிரபாகரன் வெளியேறுவதாகக் கூறுவிட்டுச் சென்றிருந்தாலும் அவர் மீண்டும் மத்திய குழுவிற்கு வந்ததும் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்காமல் அவரை ஏற்றுக்கொள்கிறோம்.
அவர் வந்ததுமே மீண்டும் விவாதங்கள் ஆரம்பமாகின்றன. மக்கள் வேலை பயனற்றது என்றும் இராணுவ நடவடிக்கைகளே அவசியமானது என்றும் உடனடியாக நாம் இராணுவம் ஒன்றைக் கட்டமைக்க வேண்டும் என்றும் பிரபாகரன் வாதம் புரிய ஆரம்பிக்கிறார்.
சாந்தனும் நானும் கடந்த காலத்தின் அந்த வழிமுறை தவறானது என்பதை திரும்பத் திரும்ப அரசியல் காரணங்களோடு முன்வைக்கிறோம். பிரபாகரன் அந்த விடயத்தில் விட்டுக்கொடுப்பதாய் இல்லை. ஒரு பலமான இராணுவமும் அதற்குரிய தலைமையும் மட்டும்தான் அவசியம் என்று வாதிடுகிறார். இராணுவத் தலைமை குறித்த விவாதங்களுக்கு அப்பால் மேலதிகமாக அவர் எங்கும் செல்லவில்லை. எம்மால் அப்போது புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், பிரபாகரனுக்கும் எமக்கும் இடையிலான முரண்பாடென்பது தெளிவான அரசியல் முரண்பாடாகவே அமைந்திருந்தது. ராகவன் இரண்டு பகுதியினருக்கும் இடையில் சமரசத்திற்கு முயற்சிக்கிறார். இந்த இழுபறிகளுக்கு மத்தியில் புதிய பாதையின் ஒரு பிரசுரமும் வெளியிடப்படுகிறது.
(இன்னும்வரும்..)
01.20 வயது கூட நிரம்பாத இளஞன் தம்பி பிரபாகரன்-ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் 02.70களில் பிரபாகரன் எமக்கெல்லாம் ஒரு ஹீரோ – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் 03.தமிழீழ விடுதலைப் புலிகளின் தோற்றம் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (மூன்றாம் பாகம்) 05.பற்குணம் – இரண்டாவது உட்படுகொலை – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பகுதி ஐந்து) : ஐயர் 06.புலிகளின் உறுப்பினராகும் உமா மகேஸ்வரன்- ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் ஆறு) ஐயர் 07.புலிகளின் தலைவராகும் உமாமகேஸ்வரன் : ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் ஏழு) : ஐயர் 08.புதிய பண்ணைகளும் புதிய போராளிகளும் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் எட்டு) 09.சக போராளிகளுடனான எனது அனுபவக் குறிப்புகள் – ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் ஒன்பது) 10.நிசப்தம் கிழித்த கொலைகள் ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் ஐயர் பாகம் பத்து 11.கொலைகளை உரிமைகோரும் புலிகள்– ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பதினொன்று) 12.அடிமைச் சாசனம்- புலிகளின் எதிர்வினை – ஈழப்ப்போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 12) 13 வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்ட வங்கிக் கொள்ளை-ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 13) 14.பிரபாகரனை எதிர்க்கும் போராளிகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 14) : ஐயர் 16.கொல்லப்படுவதிலிருந்து தப்பிய உமாமகேஸ்வரன் (பாகம்16) 18.புத்தகத்தைப் பறித்தெறியும் பிரபாகரன் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்(பாகம்18) : ஐயர் 19.இரண்டாகப் பிளவுறும் விடுதலைப் புலிகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம்19) : ஐயர்
20.புதிய பாதையின் தோற்றம் – ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம்20) : ஐயர்