07.08.1986ம் ஆண்டு புலிகள் ராக்கிங் செய்ததாக கூறி, மூன்று மாணவர்கள் மேல் தாக்குதலை நடத்தினர். இதையடுத்து விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஒரு தன்னெழுச்சியான போராட்டம் தொடங்கியது. இது முன் வைத்த கோரிக்கை சமூகம் சார்ந்து நின்று போராடுவதற்கு பதில், உணர்ச்சிவசப்பட்டதாக எழுந்தது.

இந்தப் போராட்டத்தை சமூகம் சார்ந்ததாக நெறிப்படுத்தவும், தன்னியல்பான இதன் போக்கை இல்லாததாக்கி அதை ஸ்தாபனமயப்படுத்தவும், பல்கலைக்கழகத்தில் இருந்த முன்னேறிய புரட்சிகர அரசியல் பிரிவு எடுத்துக்கொண்ட தீவிர முயற்சியின் விளைவுதான் மாணவர் அமைப்புக்குழு. இப்படி அமைப்புக்குழுவின் தோற்றம் புரட்சிகர அரசியல்பிரிவின் முன்முயற்சியால் உருவானது.

இந்தச் அமைப்புக் குழு புலிச்சார்பு மாணவர் அமைப்பு குழுவுக்கு பதிலாக, போட்டியாக உருவாக்கப்பட்டது. இரண்டு அமைப்புக்கள் நிலவின. புலிச்சார்பு மாணவர் குழுவில் இருந்து அதிருப்தி கொண்டவர்கள், இதை  உருவாக்கவில்லை. மாறாக பல்கலைக்கழகத்தில் அரசியல் ரீதியாக முன்னேறிய பிரிவின் தீவிர முயற்சியால் உருவாக்கப்பட்டது.

இப்படி உருவான அமைப்புக்குழு, நடந்து கொண்டிருந்த தன்னியல்பான போராட்டத்தை அரசியல் ரீதியாக முடிவுக்கு கொண்டுவந்தது. அதை அவர்கள் தங்கள் 16.08.2010 துண்டுப்பிரசுரத்தில் தெளிவுபடுத்தியுள்ளனர். அதைக் குறித்து "உணர்ச்சி வசப்பட்ட நிலையில் தன்னிச்சையாகவே மாணவர்கள் கிளர்ந்தெழுந்து சில கோரிக்கைகளை .." வைத்தனர் என்பதை குறிப்பிட்டு, அதை அவர்கள் முடிவுக்கு கொண்டு வந்தனர். இப்படி உண்மை இருக்க, இந்த அமைப்புக்குழு இரண்டு மாதம் கழித்து நடத்திய விஜிதரன் போராட்டத்தை தன்னியல்பானது என்று திரிப்பது, குறுகிய அரசியல் உள்நோக்கம் கொண்டது. இதற்கு முன்னமே  தன்னியல்பை முடிவுக்கு கொண்டு வந்ததை, அமைப்புக் குழு அறிவித்து இருந்தது. முன்னைய போராட்டத்தில் இருந்த தன்னியல்பு கோசங்களை மாற்றி அமைத்தது. ராக்கிங் பற்றிய தன் அரசியல் நிலையையும் தெளிவுபடுத்தியது. அதில் "சரியான ஸ்தாபனமயப்படாத நிலையில் மாணவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தீர்க்கதரிசனமற்றவை.." என்று விமர்சித்து, அதைத் திருத்தியது. இப்படி தன்னை அமைப்பாக்கி கொண்டது என்பது, முன்னேறிய அரசியல் பிரிவின் துணையுடன்தான். இப்படி தன்னியல்பை துறந்து அரசியல் மயமாகியது.

உள்ளிருந்து நாம் நடத்திய போராட்டம் இன்றி, இவை எதுவும் நடந்துவிடவில்லை. இந்த நீண்டகால அரசியல் போராட்டத்தில் பங்கு பற்றாதவர்கள், போராட்டத்தின் பின் திடீரென அதில் இணைந்து பங்கு கொண்டவர்கள், தங்கள் தன்னியல்பை போராட்டத்தின் இயல்பாக காட்டுவது ஒரு அரசியல் திரிபு. அமைப்புக் குழு தன்னியல்பை முன் கூட்டியே முடிவுக்கு கொண்டு வந்ததை, தன் துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிட்டு அதை விமர்சித்து இருந்ததை இது மறுக்கின்றது. உண்மைக்கு புறம்பான திரிபு.        

இந்த அமைப்புக் குழுவோ, மாணவர்கள் உள்ளடங்கிய ஒரு பகிரங்கக் கூட்டத்தில் தெரிவானது. நாவலன் மற்றும் தேசம்நெற் திரித்தது போல், அது 7 பேர் கொண்ட குழுவல்ல. மாறாக ஒவ்வொரு கல்வி பிரிவுக்கும், ஒவ்வொரு கல்வி ஆண்டுக்கும், இருவர் வீதம் (ஒருவர் என்றாலே பலர்) மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். பழைய புலி மாணவர் அமைப்பில் இருந்து அதிருப்தியுற்று இருந்தவர்கள், இதில் இணைக்கப்பட்டனர். இப்படி உருவான அமைப்புக் குழு முன்னேறிய பிரிவைக்கொண்டதல்ல. மாறாக அவர்களில் ஒரு சிலரையும் உள்ளடக்கியிருந்தது. இதைச்சுற்றியே முன்னேறிய பிரிவு இயங்கியது. இப்படித்தான் அமைப்புக்குழு உருவானதுடன், அதன் அரசியல் திசைவழி உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் முன்னேறிய பிரிவால் வழிநடத்தப்பட்டது.

இதற்கு ஏற்ற அரசியல் மற்றும் நெறிப்படுத்தலை, எனது போராட்டம் தான் தொடக்கியிருந்தது.    1985ம் ஆண்டு ராக்கிங் தொடர்பாக எனது அமைப்பு ஊடாக வெளியிட்ட துண்டுப்பிரசுரம், 1986 இல் வெளியிட்ட துண்டுப்பிரசுரத்தின் அடிப்படையில், ராக்கிங் பற்றிய நிலைப்பாட்டை அமைப்புக்குழு முன்னிறுத்தியது. இதைக் கொண்டு, புலிக்கு எதிராக இது எதிர்வினையாற்றியது. இதைப் பல்கலைக்கழக மாணவர் அமைப்புக் குழு 16.08.1986ம் ஆண்டு வெளியிட்ட தன் துண்டுபிரசுரத்தில் "எந்தவோர் பிரச்சனையையும் அளவு ரீதியாக அணுகி, ஆராய்தலே சரியான நடைமுறை ஆகும். இந்த வகையில் பல்கலைக்கழகங்களில் ஓர் பிரச்சனையாக இருந்துவரும் "ராக்கிங்" தொடர்பான பிரச்சனைக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஓர் முற்போக்கான தீர்வுக்கு முன்னின்று செயற்பட்டு வந்துள்ளார்கள். ஆரம்பத்தில் மாணவர்கள் மத்தியில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்து வந்திருப்பினும், இவ்வருடம் எல்லோரும் ஏகோபித்து இப்பிரச்சனைக்கு தீர்வுகாணும் வேலையில் ஈடுபட்டு இருந்தார்கள்" இப்படி 1985 இல் எனது அமைப்பின் மூலம் நான் நடத்திய போராட்டம், அதைத் தொடர்ந்து 1986 இல் நான் அமைப்பின் மாணவர் அமைப்பு மூலம் வெளியிட்ட துண்டுப்பிரசுரமும், அங்கு நான் முழுநேரமாக செய்த அரசியல் வேலை, ராக்கிங்குக்கு எதிரான குழுவை மட்டுமின்றி ஒரு முன்னேறிய அரசியல் பிரிவை அமைப்பாக்கியது. அவர்கள் கூறியது போல்  "எல்லோரையும்" ஒன்று இணைத்தது. இது 1985 இல் பல்கலைக்கழகத்தில் இல்லாத புதிய நிலைமையை 1986 இல் உருவாக்கியது. இங்கு அரசியல் அற்புதங்கள் மூலம் இது நடக்கவில்லை. தன்னெழுச்சியாக இந்த அரசியல் நிலையை மாணவர்கள் வந்தடையவில்லை. தன்னெழுச்சியான முடிவு தவறாக இருந்ததை, அமைப்புக்குழு விமர்சித்தது. அன்று மாணவர் அமைப்புக் குழு தெளிவுபடுத்தியது போல் ராக்கிங் தொடர்பாக ".. ஆரம்பத்தில் மாணவர்கள் மத்தியில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்து வந்திருப்பினும், இவ்வருடம் எல்லோரும்" ஓத்த முடிவுக்கு வந்தார்கள் என்று கூறும் உண்மை, எனது நிலைப்பாட்டை அனைவரும் ஏற்றுகொண்டனர் என்பதையே தெளிவுபடுத்துகின்றது. அரசியல் ரீதியாக எனது நிலை, அதாவது எனது அமைப்பின் நிலை மாணவர்களின் அரசியல் நிலையாகியது. ஒருவருடமாக நான் நடத்திய போராட்டத்தின் அரசியல் விளைவு இது. இதை மாணவர் அமைப்புக் குழு தெரிவு செய்யப்பட்ட அடுத்த கணமே, அமைப்புக்குழு இக்கருத்தை வெளியிட்டது. உண்மையில் இதன் பின் இருந்தவர்கள், முன்னேறிய அரசியல் பிரிவுதான்.

இதையே 1985ம் ஆண்டு என்னுடன் பல்கலைக்கழகம் வந்த முதலாம் வருட மாணவர்கள் தமது துண்டுப்பிரசுரத்தில் "கடந்த வருடம் பல்கலைக்கழகத்துக்கு புதிய மாணவர்களாக வந்தோம். ராக்கிங்கை எதிர்த்து பதிய மாணவர்களே செயல்பட்டனர். இது உச்சக் கட்டத்தை அடைந்து மாணவர்கள் மத்தியில் போராட்டமாக வளர்ந்து வந்தது."  என்று நான் நடத்திய அந்த தொடர்சியான போராட்டத்தை, அதன் விளைவை அரசியல் ரீதியாக உறுதிசெய்துள்ளனர். இதை மறுக்க, விஜிதரன் போராட்டத்தில் தான் மாணவர் அமைப்புக் குழு உருவானதாக திரித்தவர்கள், விஜிதரன் போராட்டத்தை தன்னியல்பானதாக திரிக்கின்றனர். மொத்தத்தில் அரசியல் பொறுக்கித்தனத்தின் படுகேவலமான பக்கங்கள் இவை.                  

இக்கட்டுரை எழுத உதவிய மூலங்கள்

1. மக்களே சிந்தியுங்கள் உண்மை நிலையினை புரிந்து கொள்ளுங்கள்

2.மாணவர்களும் ராக்கிங்கும் விடுதலைப் புலிகளின் அறிக்கையும்

3. விடுதலைப்புலிகளின் ராக்கிங் வர்ணனையும் மாணவர்களின் நிலைப்பாடும்

தொடரும்

பி.இரயாகரன்
22.07.2010
 

10. முன்னேறிய பிரிவு நடத்திய போராட்டத்தை மறுக்கும் நாவலனின் புரட்டுகள் (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி 10)

9. புளட்டுக்கு எதிராக போராடி விலகிய மாணவர்கள் தான், போராட்டத்தின் முன்னோடிகள் (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி 09)

8. "தன்னெழுச்சியானது" என்று திரித்து சாமியாடும் பித்தலாட்ட அரசியல் (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி 08)

7. சமூக மாற்றத்தைக் கோராமல் சமூகத்தை திரிக்கும் பம்மாத்து அரசியல் (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி 07)     

6. போராடினால் மரணம், இதுதான் புலியின் மொழியாக நாம் தொடர்ந்து போராடினோம்; (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி 06)

5. ராக்கிங்கை அரசியல் ரீதியாக கைவிடுவதை தடுக்க, புலிகள் ஏவிய வன்முறை (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி 5)

4. ராக்கிங்கை அரசியல் ரீதியாக கைவிடுவதை தடுக்க, புலிகள் ஏவிய வன்முறை (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி 4)

3.  ராக்கிங் நிலைப்பாடு பல்கலைக்கழகத்தைப் பிளந்தது, புலிகளைத் தனிமைப்படுத்தியது (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி 3)

2. ராக்கிங்குக்கு எதிராக மாணவர்களை அணிதிரட்டுவதைத் தடுக்கவே, ராக்கிங்குக்கு எதிராக புலிகள் வன்முறையை ஏவினர் (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி - 2)

 1. விஜிதரனின் அரசியலை மறுப்பதன் மூலம், சமூக மாற்றத்துக்கான போராட்டத்தை மறுத்தல் (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி 1)