Fri02212020

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் கலைஞரை விஞ்சிய விமல் வீரவன்ஸ! - செய்திக்கண்ணோட்டமும் 13-07-2010

கலைஞரை விஞ்சிய விமல் வீரவன்ஸ! - செய்திக்கண்ணோட்டமும் 13-07-2010

  • PDF

பேரினவாத ரசிகர்களுக்கான விமல் வீரனின் “சாகாவரை சாப்பிடாமைப் போர்”—(சின்னத்திரை நாடகம்)

ஐ.நா.முன்பாக வெறும் 50-மணிநேரக் காட்சியுடன் நிறைவெய்தியது!

சாப்பிடாமைப் ‘போர் ஆட்டம்”

கலைஞரை விஞ்சிய விமல் வீரவன்ஸ!

 

“மகிந்த பானம்” அருந்த–தித்திப்பாக முடிவுற்றது.

அண்மைக் காலங்களில்-(இலங்கைப் பிரச்சினையில்) “சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்”  என ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்களில் யாராவது இறந்திருக்கின்றார்களா? நாம் இப்பேர்ப்பட்ட “தியாகிகளை” நாம் சாகும்படி கேட்கவில்லை. ஆனால் “சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்” எனத் தலைப்பிட்டு, அதை அசிங்கப்படுத்தாமல், உண்ணாவிரதப் போரை, அதற்குரிய “அர்த்தபுஷ்டியில்” அர்த்தப்படுத்தி போராடப் பழகுங்கள். இப்போ தமிழ்-சிங்கள அரசியலாளர்களுக்கு எதற்கெடுத்தாலும்  சாகும்வரை உண்ணாவிரதப் போராட்ட வாய்ப்பாடும், வழிமுறையும். ஓர் கைகண்ட ஒளடதம் ஆகியுள்ளது.

 

விமல் வீரவன்ஸ உண்ணாவிரதம் இருக்கப் புறப்பட்ட 50-மணித்தியாலங்களுக்குள் தான் ஓர் சராசரி அரசியல்வாதி அல்ல என்பதை, அவரின் பல கோமாளித்தன நடிப்புக்களும், நடவடிக்கைகளும்-அறிக்கைகளும் சுட்டிநிற்கின்றன. படுக்கையில் இருந்த வண்ணம் “இத்தியாகி” யான விமல் வீரவன்ஸ அமைச்சர் பதவியில் இருந்து விலகிக்கொள்வதாக, தன் எஜமான் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் தெரிவித்துள்ளார். தாய் நாட்டுக்காக தான் நடத்தும் போராட்டத்திற்கு தடையாக இருக்குமானால் தான் கைவிட வேண்டியது அமைச்சர் பதவியையே அன்றி போராட்டத்தை அல்ல என ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள பதவி விலக்கல் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இக்கடிதத்தை கண்ணுற்ற உடனே இவரின் எஜமானரும், இச் சின்னத்திரையின் இயக்குனருமான மகிந்தா, அதிர்ந்தே போனார். வந்தார் மேடைக்கு, வேண்டர்ம் ராஜினாமா-அதை நான் ஏற்க மாட்டேன் என்றிட்டு, கொடுத்தார் மடியில் வைத்து மகிந்தபானம். இதை இந்த ‘வீரர்’ அருந்திட்ட-தித்திப்பில், இவரின் “தாய்நாடடிற்கான ‘தியாகப்’ போராட்டமும், போச்சு, மந்திரிப் பதவி விலகலும் போச்சு! என்னே தாய்நாட்டு சுதந்திர தாகம்! ஏன்னே எஜமான்-விசுவாச-அடிமை அரசியல்! எனக்குத் தெரிந்தவரையில், கலைஞருக்கு அடுத்த வேடிக்கையான- அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர். அவரின் உண்ணாவிரதப் போர் 120-நிமிடம். இவரின் ‘சாகாவரை சாப்பிடாமைப் போர் ஆட்டம்’ 3,000 நிமிடங்கள்.  இப்படிச் சர்வலோகமும் ‘அதிரும்படியான’ போரை ஆரம்பித்து, அதை தன் எஜமான் சொன்னால் தான் விடுவேன் இன்னொரு விடுகை.! இந்த விடுகையில் விட்ட கோரிக்கை கேளீர்.

1. ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணவர்கள் குழு எந்த காரணத்தை கொண்டும் இலங்கைக்குள் அனுமதிக்கப்படமாட்டாது.

2. அந்த குழு தொடர்பில் விசாரணை நடத்த இலங்கையில் உள்ளநாட்டு நிபுணர்கள் குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும்.

3. எந்த நிபந்தனைகளுக்கும் உடன்பட்டு குழுவை விசாரணை மேற்கொள்ள அனுமதிக்க கூடாது.

4. ஐக்கிய நாடுகள் சபையுடன் பேசி, நிபுணர்கள் குழுவை நீக்க வேண்டும். என்பதுவே அந்த நிபந்தனைகளாகும்.

இக்கோமாளியாருக்கு இக்கோரிக்கைகளை வைக்க, இப்படியோர்; “போர் ஆட்டம்” தேவையோ? இத் ‘தாய்நாட்டுப் போர்ப் பிரகடனக் கோரிக்கைகளை, ‘மந்தி’(ரி)கள் சபைக் கூட்டத்தில், அல்லது பாராளுமன்றத்தில் பிரகடனம் செய்தால், அதை தங்கள் எஜமான் மனமுவந்து எற்காரோ? பொத்தாம் பொதுவாகப் பார்த்தால், உங்கள் சின்னத் திரைக் கூடாக, தாங்கள் போர்க் குறற்வாளிகள் தான் என்பதனையும், அதை மறைக்க, மகிந்தா மறைந்திருந்து, இவ் ’வீரனை’ இயக்க, இவரோ எம்.ஜி.ஆர்.பாணியில் பலதும் பத்தையும் பண்ணியுள்ளார். இந்தப் பண்ணல்கள்-பின்னல்களால், உங்களின் ஓட்டை ஒடிசல்கள்-பல பத்தும் பாரிலுலகிற்கு பரந்து சென்றுள்ளது. இதனால் இவர்களை விசாரிக்க நிபுணர் குழு அத்தியாவசியம் தேவையென ஊர் உலகம் முடிவிற்கு வந்துள்ளது!.  இத்தோடு இவ் விமல் வீரவன்ச ஓட்டை ஒடிசல்கள் பற்றிய நம்நாட்டுத் தவைர்கள்-செய்தியாளர்கள் சொல்வதையும் செவிகளில் போடுவோம்.!

அரசின் ஆதரவுடனும்  ஆசிர்வாதத்துடனுமே ஐ.நாவின் கொழும்பு  அலுவலகம் மீதான முற்றுகை அமைச்சர்  விமல் வீரவன்ஸ தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்கும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டனர். அப்போது அமைச்சர் விமல் வீரவன்ஸ் வீதியில் நின்றவாறு பாதுகாப்பமைச்சுச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவுடன் தொலைபேசியில் பேசி விட்டு அத்தொலைபேசியை பொலிஸ் அதிகாரி ஒருவரிடம் கையளித்தார். பாதுகாப்பமைச்சுச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆர்பாட்டக்காரர்களை கலைக்கும் நடவடிக்கையை உடனடியாக விட்டு விட்டு கலைந்து செல்லுங்கள் என்று அந்த அதிகாரிக்கு அத்தொலைபேசியில் உத்தரவிட்டிருக்கின்றார். அந்த பொலிஸ் அதிகாரிக்கும் பாதுகாப்பமைச்சுச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலை வெளிப்படுத்தி நிற்கும் ஆடியோ ஒன்று எமக்கு கிடைத்துள்ளது.

இந்த உரையாடல் சிங்கள மொழியில் அமைந்துள்ளது. அதன் தமிழ் வடிவத்தை எழுத்தில் தருகின்றோம்.

பொலிஸ் அதிகாரி:- சேர் … உங்களுடன் கதைத்தாரென.. அமைச்சர் விமல் வீரவன்ஸ கூறுகின்றார்?

கோட்டா:- இந்த இடத்துக்கு பொலிஸை அனுப்ப வேண்டாம் என்று நான் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு இட்டிருந்தேனே?

பொலிஸ் அதிகாரி:-சேர் … பொலிஸ் மா அதிபர் தான் எங்களை இங்கு போக சொன்னார். ஆகவே தான் வந்திருக்கிறோம்.

கோட்டா:- இந்த இடத்தில் இருந்து பொலிஸார் உடனடியாக வாபஸ் பெற வேண்டும். ஒரு பொலிஸ் கூடமிஞ்சக் கூடாது.

பொலிஸ்அதிகாரி:-சரிசேர்.சரி

கோட்டா:- தேவை இல்லாத வேலை.ஏன் நீங்கள் இந்த ஆட்களை அடித்தீர்கள்?

பொலிஸ்அதிகாரி:-சரி சேர்.சரி

கோட்டா:- ஏன் நீங்கள் அடித்தீர்கள்? பொலிஸ் மா அதிபரை இன்றிலிருந்து வேலையில் இருந்து தூக்கி விடுவேன்.

பொலிஸ்அதிகாரி:-சரி சேர்.

கோட்டா:-எல்லாப் பொலிஸ்காரர்களும் இந்த இடத்தை விட்டு வெளியேறிச் செல்லுங்கள்.

பொலிஸ்அதிகாரி:-நல்லது சேர்.

கோட்டா:- ஒரு பொலிஸ் கூட மிஞ்சக் கூடாது.

அரசாங்கத்தின் தவறை மறைக்கவே விமல் தற்கொலைக் குண்டுதாரியானார்: தயாசிறி பா.உ.

அரசாங்கத்தின் தவறை மூடிமறைப்பதற்காக விமல் வீரவன்ஸ ஆடும் நாடகமே உண்ணாவிரத போராட்டமாகும். அதற்காக அவர் தற்கொலைக் குண்டுதாரியாகி விட்டார் என்று ஐ.தே.க. எம்.பி.யான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். ஐ.நா. அலுவலகம் முன்பாக தொவில் ஆடி வேலையில்லை (பேய் விரட்டும் சிங்கள ஆட்டம்)  இராஜதந்திரமே அவசியமானதாகும் என்பதை அரசாங்கத்திற்கு மீண்டும் அறிவுறுத்திக் கூற விரும்புகின்றேன் என்றும் அவர் சொன்னார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற குழு நிலை விவாதத்தின் இறுதி நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
அமைச்சர் விமல் வீரவன்ச சர்வதேச நாணய நிதியத்தின் அலுவலகம் முன்பாக உண்ணாவிரதத்தில் குதிக்க இருந்தார். அங்கேயே தற்கொலைத் தாக்குதல் நடத்தவிருந்தார். எனினும் உயர்மட்ட ஆலோசனையினால் ஐ.நா. வின் அலுவலகத்திற்கு முன்பாக படுத்துக் கொண்டார். ஆர்ப்பாட்டத்தை நகைச்சுவையாக எடுக்கமாட்டேன், அடக்குறைக்கு எதிராக குரல் கொடுப்பேன். எனினும் போராட்டம் எனும் பெயரில் உண்ணாவிரதத்தில் உடனடியாக குதிப்பதா? என்பது தான் எனது கேள்வியாகும்.

கோரிக்கையை முன் வைத்து பேச்சுவார்த்தை, கலந்துரையாடல், ஆர்ப்பாட்டம், சத்தியாக்கிரகம், அவற்றுக்கிடையே பேச்சுவார்த்தை என்பவற்றை முன்னெடுத்து இறுதியாகவே உண்ணாவிரதம் இருக்க வேண்டும்.

இறுதியில் மேற்கொள்ள வேண்டிய உண்ணாவிரதத்தை முதலிலேயே மேற்கொள்வது தான் எங்களுக்கு பிரச்சினையாக இருக்கின்றது. இது மக்களை ஏமாற்றும் அரசியல் நாடகமாகும்.உண்ணாவிரதம் இருக்கின்ற விமல் வீரவன்சவின் தலைமையிலான கட்சியின் பிரதியமைச்சர் ஒருவர் பாராளுமன்றத்தில் உணவகத்தில் இருப்பதைக் கண்டேன். கட்சி உறுப்பினரைக் கூட அமரச் செய்ய முடியாதவர் ஏன் உண்ணாவிரதத்தில் குதித்தார்? சிங்கள பௌத்தவாதிகளுக்கு யார் தலைவர் என்ற பிரச்சினை அரசாங்கத்திற்குள் இருக்கின்றது. ஹெல உறுமயவின் முயற்சி தோல்வி கண்டுள்ள நிலையில் அதற்கான முயற்சியாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது.

பட்டினி, விலையுயர்வு, வேலை வாய்ப்பின்மை உள்ளிட்ட விடயங்களுக்கு எதிராக மக்கள் கதைத்துக் கொண்டிருக்கின்ற நிலையில் சிங்கள பௌத்தவாதத்தை தூண்டி விட்டு அதற்கு தலைமை ஏற்பதற்கே இவர் முயற்சிக்கின்றார். உண்மையில் சர்வதேச நாணய நிதியத்திற்கு எதிராகவே விமல் வீரவன்ஸ தற்கொலைதாரியாக விருந்தார். அவரது இதயத்திலும் அதுவே இருக்கின்றது. எனினும்இ உயர்மட்ட அறிவுறுத்தலுக்கு அமையவே ஐ.நா. அலுவலகத்துக்கு முன் தற்கொலைதாரியாகி விட்டார்.  தற்கொலை குண்டுதாரிகளை பிரபாகரன் யாழ்ப்பாணத்திலிருந்து அனுப்புவது போல சர்வதேச நாணய நிதியத்திற்கு முன்னால் செல்ல வேண்டிய விமல் வீரவன்ஸ ஐ.நா.விற்கு முன்னால் படுத்துக் கொண்டார்.  இதுவா இராஜதந்திரம்?    தூதுவராலயங்கள் நாட்டின் தலைநகரமாகவே பார்க்கப்படுகின்றன. அவற்றுக்கு முன்பாக சென்றால் கைது செய்யப்படுவார்கள். எனினும், ஐ.நா. அலுவலகத்திற்கு முன்பாக தொவில் ஆடுகின்றனர். கடனை வழங்கி வாட்டுகின்றது என்பதனால் சர்வதேச நாணய நிதியத்தின் முன்பாக ஏன் போக முடியாது? போனால் நாம் வருவோம். இந்த நடவடிக்கையானது வெளிநாட்டு முதலீடுகளை பாதிக்கும்.

விமல்  தமிழர்களிடம் முழந்தாளிட்டு மன்னிப்புக்  கேட்க வேண்டும் : விக்ரமபாகு

விமல் வீரவன்ச தமிழ் மக்களின் முன் முழந்தாளிட்டு, வணங்கி, மன்னிப்புக் கோர வேண்டும். அம்மக்களுடன் இணைந்து அவர்கள் இலங்கையில் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமையை உறுதி செய்யுமாறு கோருவாராயின் அவரது உண்ணாவிரதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளலாம் என புதிய இடதுசாரி முன்னணித் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

விமல் வீரவன்சவின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக வீரகேசரி இணையத்தளத்துக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“விமல் வீரவன்ச அரங்கேற்றும் நாடகத்தின் உட்பொருள்தான் எமக்கு புரியவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு குறித்து விமல் வீரவன்ச ஏன் பயப்படுகின்றார் என்பது, எமக்கு அவர் மீதான சந்தேகத்தை மேலும் வலுப்பெறச் செய்கின்றது.

அரசாங்கத்துடன் இணைந்து இவர் முன்னெடுக்கும் திட்டங்கள் குறித்து மக்கள் கொதிப்படைந்துள்ளனர். இதனால் மக்களது கவனத்தைத் திசை திருப்பும் முகமாகவே இவ்வாறானதொரு நாடகத்தை அவர் அரங்கேற்றுகிறார்.

இது தமிழ் மக்களைக் காப்பாற்றும் எண்ணமல்ல. தன் மீது படிந்துள்ள சேற்றைக் கழுவும் செயற்பாடாகவே நாம் காண்கின்றோம்” எனத் தெரிவித்தார்.

ஐ.நா. வின் நிபுணர்கள் குழு தொடர்பில் அரசாங்கம் வீரவன்ஸவை அனுப்பி தீ வைக்கிறது: ரணில்

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை அமைத்துள்ள நிபுணர் குழுவை கலைப்பது தொடர்பில், அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையிடம் சென்று கோரிக்கை விடுத்திருக்கலாம். அதனை விடுத்து விமல் வீரவன்ஸவை  அனுப்பி தீ வைப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றஞ் சுமத்தியுள்ளார். விமல் வீரவன்ஸவின் உணவுத் தவிர்ப்புத் தொடர்பில் கருத்துரைத்த அவர்இ நாட்டில் வறுமைக்கு உள்ளான மக்கள் மூன்று வேளை உணவு உட்கொள்ளாமல், பட்டினியாக இருப்பதும் உணவுத் தவிர்ப்பே என குறிப்பிட்டார்.

இந்த நிலைக்கு அரசாங்கமே காரணம் என குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர், பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது,  தமது கட்சி,  ஜே.வி.பி. மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பன அவரை சந்திக்க கோரிக்கை விடுக்கப்பட்ட பொழுதிலும், அதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமல் மறுக்கப்பட்டது. இதன் போது, இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பிலான பிரச்சனை தொடர்பில் பான் கீ மூனைச் சந்திப்பதற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என தாம் கூறியபோதும் அது நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், தாம் அல்ல அரசாங்க கட்சியினரே, பான் கீ மூனுடன் நெருங்கிய ரீதியில் உறவு கொண்டாடியதாக ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

தமிழ் மக்களைப் பொறுத்த வரை மகிந்த அரசும்-ஐ.நா.வும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகளே! கடந்த வருடம் புலியும்-மகிந்தப்புலியும் மாபெரும் மனிதப் படுகொலைகளைச் செய்ய, அதில் மதில்மேல் பூனை போல் செயற்பட்டவர்கள் தான், பான் கீ மூனும் அவர்தம் சர்வதேசக் கூட்டாளிகளும்.  இன்றைய தேச-கால-வர்த்தமான நிலை இவர்களை “நிபுணர் குழு” என்ற ஒன்றிற்கூடாக சிலவற்றை சொல்ல வைக்கின்றது. இவை யாவும் சமகால ஏட்டுச் சுரைக்காயே! இது கண்டு சிதம்பர சக்கரத்தை கண்ட பேயாட்டம் மகிந்த-கோத்தபாய வெருண்டடிக்க, விமல் வீர வன்ஸ அதுகண்டு தானும் ‘கல்லாதவன் கற்ற கவி போல்’  எதை எதையோ சொல்லுது, செய்யுது! நீண்டகால நோக்கில் இவ் இருவரது சகலதும், (0) பூச்சியமே.

வெளி  உலகைக் காட்டுங்கள்’ – தமிழ் அரசியல்  கைதிகள் -உருக்கமான கோரிக்கை

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தம்மை விரைவில் விடுதலை செய்யுமாறு சமூக அமைப்புகளிடம் கோரிக்கை விடுத்துள்ள தமிழ் அரசியல் கைதிகள் “வெளி உலகைக் காட்டுங்கள்” என உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளனர். தமது விடுதலை தொடர்பாக மெகசின் தமிழ் அரசியல் கைதிகள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘1993 ஆம் ஆண்டுமுதல் 2010 ஆம் ஆண்டுவரை சிறைக் கம்பிகளுக்கிடையே 17 வருடங்கள் ஓடிவிட்டன. யாருமற்ற அநாதைகளாக இந்த சிறைக்குள் நித்தம் நித்தம் எமது உறவுகளைஇ எமது எதிர்காலத்தை நினைத்து நினைத்து வெந்துகொண்டிருக்கிறோம்.

எந்தவித விசாரணைளும் இன்றி எத்தனையோ பேர் எதிர்காலத்தையும் குடும்பங்களையும் தொலைத்து சித்திரவதைப்படுகின்றோம். அரசாங்கத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு மறுவாழ்வும் அபிவிருத்தியும் வழங்கப்பட்டுள்ளன. ஆயுதமேந்திப் போராடிய விடுதலைப் புலிகளுக்கு புனர்வாழ்வு, கல்வித்திட்டம், திருமணம் ஏற்படுத்திக் கொடுக்கின்றது. அதை நினைத்து நாங்கள் சந்தோசமடைகிறோம். ஏனென்றால் எமக்கும் மாண்புமிகு ஜனாதிபதி இப்படியான சந்தர்ப்பத்தை வழங்குவார் என்று முழுநம்பிக்கையுடன் இருக்கின்றோம்.

இப்போது நாங்கள் உங்களிடம் கேட்பது என்னவென்றால் நீங்கள் மாண்புமிகு ஜனாதிபதியை சந்தித்து எமக்கான சுதந்திரமான விடுதலையை பெற்றுத்தாருங்கள். நாங்கள் கடந்த காலங்களில் பல உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தியிருந்தோம். எனினும் அவை பயனளிக்காமல் போய்விட்டன. அரசியல்வாதிகள் பலரும் எமக்காகக் குரல்கொடுத்திருந்தார்கள். அதிலும் பயன்கிடைக்கவில்லை.தற்போது நாங்கள் உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறோம். விடுதலைக்காக உதவுங்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்த-கோத்தபாயாக்கள்– பாருக்குள்ளே நல்ல போர்க் குற்றவாளிகள்! –நீங்களோ அவர்களின் சந்தேகப் பேர்வழிகள்! மனித உரிமை மீறலிலே-சர்வதேச சட்ட விரோதத்திலே- சரணடைவோரை—சண்டாளம் செய்வதிலே இவர்களே இன்றும் மாமன்னர்கள்! –நீங்கள் வெறும் பாமரர்கள்! –நீங்களோ வெளியுலகைக் காண  துடிக்கின்கின்றீர்கள்.!  வெளியுலகமோ இவர்களை சிறையில் காண துடிக்கின்றது! நீங்களோ, குற்றமற்றவர்கள் மன்றாடுகின்றீர்கள். இவர்களோ தேசிய-சர்வதேசக் குற்றவாளிகள்! திமிராக உலகை மிரட்டுகிறார்கள். மகிந்த-விமல்-சண்டித்தன அரசியல் நீண்டு நிலைக்காது! தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மீண்டும் வெல்லும்.


சிறுபான்மையினர் மீது ஏற்படுத்திய அநீதியே எமது பின்னடைவுக்குக் காரணம் : எஸ்.பி

வரலாற்று ரீதியாகப் பார்க்கும் போது, சிறுபான்மை மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதி காரணமாகவே நாடு பல்வேறு பின்னடைவுகளைச் சந்தித்தது என்பது புலனாகிறது. தொடர்ந்தும் அவ்வாறு நடைபெறாது தடுப்பதற்கான நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டுமென உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கா தெரிவித்தார். கண்டி விகாரமகாதேவி மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 1936ஆம் ஆண்டு நடைமுறையில் இருந்த டொனமூர் ஆட்சிகாலக் கவுன்ஸிலில் சிங்கள மக்கள் மட்டுமே அமைச்சரவை அந்தஸ்து பெற்றிருந்தனர். அதனால் ஏற்பட்ட அதிருப்தியின் வெளிப்பாடாகவே அன்று 50:50 அதிகாரம் தேவை என்ற கோரிக்கை எழுந்தது. அதேபோல் 1956 ல் தனிச் சிங்களச் சட்டம் காரணமாக இனக் கலவரம் ஒன்று வெடித்தது. 1972, 1978 திருத்தங்கள் உட்பட இன்னும் பல விடயங்கள் தொடர்பாக எழுந்த பிரச்சினைகள் இளைஞர் போராட்டமாக மாறி 30 வருட யுத்தமாக முடிவுற்றது.இதன் மூலம் நாம் சந்தித்த அனுபவங்கள் இன்னும் நீங்கவில்லை.

எனவே சிறுபான்மை மக்களின் உரிமைகள் பற்றியும் நாம் சிந்தித்து அநீதி ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.

மகிந்த அமைச்சரவையில் இவர் போன்றவர்கள் இருப்பதை அறிய, சிறியதொரு அகமகிழச்சி. அதுவும் பாடசாலை மாணவர்கள் மத்தியில், தேசிய இனப்பிரச்சினைக்கான சில வரலாற்றுச் சம்பவங்களை சொல்ல முற்பட்டது. இதை அரசு திட்டமிட்ட முறையில் சிங்கள மக்களுக்கு சொல்லத் தீர்மானித்தால், இனக்குரோதம், இனப்பிரச்சினைத் தீர்விற்கான சிக்கல்கள் இல்லாதொழியும். சாத்தியமாகுமா? பாரதத்தில் துரியோதன மந்திரிசபையில், பீஸ்மர்-துரோணர்-விதுரன் போன்ற ஆச்சார்pயர்கள் இருந்து, துரியோதன-துச்சாதனக்கு எவ்வளவு சொல்லியும், அதுகள் பாண்டவரை அழைத்து, சூதாடி-துகிலுரிய வைத்தனர். இதுபோன்றே மகிந்த-மந்திரி சபையில், கோத்தபாய-வீரவன்ச-மேர்வின்-போன்றதுகள் உள்ளவரை பேரினவாதப் பேயாட்டம் தொடரவே செய்யும்

யாழில் படை அதிகாரிகள் அரச உயர்  பதவிகளில்!  ஆளுநரின் காலில் விழுந்தார் அரச அதிபர்! தமிழ் மக்களின் தன்மானத்துக்கு சவால்! .

பாதுகாப்புத் துறையில் பணிபுரிந்த உயர் அதிகாரிகள் மீண்டும் அரச (சிவில்) சேவையில் உயர் பதவிகளில் நியமிக்கப்படுவதால் அரச அலுவல்களில் குளறுபடிகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டாகின்றன. இவ்வாறு நாடாளுமன்றத்தில் நேற்றைய அமர்வில் எடுத்துக் கூறப்பட்டது.

தமிழ் மக்களின் தன்மானத்துக்கு சவால் விடப்பட்டதும் உயரிய அரச பதவிக்கு மாசு உண்டாக்குவதுமான சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அது ஒரு அருவருப்பான செயற்பாட்டுக்கு முன்னுதாரணமாக விளங்கியதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் சபையில் கவலையும் கண்டனமும் தெரிவித்தார். அவர் அங்கு கூறியதாவது:

தற்போது பதவியில் இருக்கும் யாழ். அரச அதிபர் கே. கணேஸ் அவர்கள் 69 வயதானவர். ஒரு பொது வைபவத்தின் போது தற்போதைய வடமகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறியின் முன்னிலையில் ஓர் அற்பமான சலுகையை எதிர்பார்த்து அவரது காலில் வீழ்ந்தமை, அவர் இதுவரை காலமும் வகித்து வந்த உயரிய பதவிக்கு மாசு ஏற்படுத்தியுள்ளது.

மறு அறிவித்தல் வரை யாழ்.அரச அதிபராக கணேஷ்: பொது நிர்வாக அமைச்சு அறிவிப்பு

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுச் செயலாளரின் அறிவுறுத்தலுக்கமைய யாழ்.அரச அதிபராக கே.கணேஷ் மறு அறிவித்தல் வரை கடமையாற்றுவார். இந்த அறிவுறுத்தல் நேற்றுக் கிடைத்ததாக யாழ்.செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த ஜூன் 30 ஆம் திகதியுடன் அரச அதிபர் கே.கணேஷ் ஓய்வுபெறுவதாக இருந்ததையடுத்து யாழ்.அரச அதிபராக முல்லைத்தீவு அரச அதிபராக பணியாற்றிய திருமதி இமெல்டா சுகுமார் பொது நிர்வாக உள்நாட்டு அமைச்சால் நியமிக்கப்பட்டிருந்தார்.

ஜூலை முதலாம் திகதி இமெல்டா பதவியேற்க இருந்த நிலையில் முதல்நாள் இரவு பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளரிடம் இருந்து கிடைத்த அறிவுறுத்தலின் பேரில் அவர் பதவியேற்கவில்லை. இதே சமயம் யாழ்.அரச அதிபராக கே.கணேஷ் தொடர்ந்து அந்தப் பதவியை வகித்துவருகிறார். இமெல்டா சுகுமாருக்கு நேற்று மாலை வரை எந்த அறிவிப்பும் அமைச்சிலிருந்து கிடைக்காத நிலையில் யாழ்.அரச அதிபராக கே.கணேஷ் மறு அறிவித்தல் வரை கடமையாற்றுவார் என்ற அறிவிப்பு நேற்று வெளிவந்துள்ளது.

யாழ். அரசாங்க அதிபர் கே கணேஸ், முல்லைத்தீவு அரசாங்க அதிபரை பயமுறுத்தினார்

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கே. கணேஸ், முல்லைத்தீவு அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாரை பயமுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுமார் இரண்டு தடவைகளாக பதவி நீடிப்பை பெற்றிருந்த கே கணேஸ்இ கடந்த முதலாம் திகதியுடன் தமது பதவியில் இருந்து ஓய்வுபெற வேண்டியிருந்தது. இதனை முன்னிட்டு யாழ்ப்பாண செயலக பணியாளர்களும் அவருக்கு பிரியாவிடையை வழங்கினர்.

இந்தநிலையில், அவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உதவியுடன் மீண்டும் ஒருமுறை தமது பதவியை நீடித்துக்கொள்ள முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக அவர், தமக்கு பின்னர் யாழ்ப்பாண அரசாங்க அதிபராக செயற்படவுள்ள முல்லைத்தீவு அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாருக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணத்திற்கு நீர் வருவாயோ? வந்தால் என்ன நடக்கும் என தெரியுமோ? என கே கணேஸ், இமெல்டா சுகுமாருக்கு அச்சுறுத்தியுள்ளார். இந்த விடயத்தை முல்லைத்தீவு அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார், முக்கியமாக இடம் ஒன்றிடம் முறைப்பாடாக தெரிவித்துள்ளார். இமெல்டா சுகுமாரின் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் நிலைக்கான பதவி கடிதம் இன்னும் மாற்றப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டத்திலே பதவி பெறுவதற்காய், ஆளுநரின் காலில் விழுவதிலே தவறேதும் இல்லை எம் தலைவா! பதவியில் ஓய்வு பெறுவதென பிரியாவிடை தனை வைத்தாலும், டக்கிளஸின் உதவி கொண்டு இன்னொருமுறை பதவிதனை தொடர்வதிலும், தவறேதும் இல்லை எம்தலைவா! இதற்காய்– ஓய்வு வயதிலும் இன்னொரு பெண் அதிபரை பயமுறுத்தியதிலும் தவறேதும் இல்லை எம் தலைவா! உனை ஈன்ற தாய்நாடு இவையனைத்தையும் தப்பெனத் தெரிந்து செய்கையிலே –உன்னில் தவறேதும் இல்லை எம்தலைவா!

http://www.ndpfront.com/?p=7848

Last Updated on Thursday, 22 July 2010 07:00